Thursday, March 31, 2011

கேள்விகளுக்கு விடைகள்

முந்தைய பதிவில் கேட்ட கேள்விகளின் விடைகளைப் பார்ப்போமா?

வெள்ளிக்கிழமை வெளியூர் புறப்பட்ட கௌபாய் ஜெய்சங்கர் - சனி, ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளியில் கிளம்பித் திங்களன்றே திரும்பிச் சென்றார்.  எப்படி?
கேள்வியிலேயே க்ளூ இருக்கிறது.  "கௌபாய் ஜெய்சங்கர்" - இவர் வெள்ளி என்ற தன் குதிரையில் போனார்! 

எண் 1050-ல் இரண்டில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தில்  ஐந்தில் ஒரு பாகத்தினோடு ஐந்தைக் கூட்டினால் வரும் எண் என்ன?
26. (1050 ÷ 2 = 525  ÷ 5 = 105  ÷ 5 = 21 + 5 = 26).

நாள் முழுவதும் பறக்கும் அது எங்குமே செல்வதில்லை; அது என்ன?
கொடி!

இது அடுத்தவரிடமிருந்து சுலபமாகப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இதை விட்டு எறிய முடியாது; அது என்ன?
ஜலதோஷம்!  ஜலதோஷத்தைத் தான் பிடிக்கும் என்போம் (catching cold).  அதாவது மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்திலும் மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களிலும் குணமாகும் common cold!

காலண்டரைத் திருடிய திருடனுக்கு எத்தனை மாதங்கள் கிடைத்தன?
திருடன் மாட்டிக் கொள்ளவில்லை - ஆகவே அவனுக்கு ஒரு வருடத்திற்கு எல்லாருக்கும் உள்ளது போல 12 மாதங்கள் தான் கிடைத்தன! (காலண்டர் - ஒருமை!)

கடலில் போய்க் கொண்டிருக்கும் ஒரு சிறிய கப்பலின் பக்கத்தில் ஒரு கயிற்றாலான ஏணி தொங்குகிறது - 10 படிகளும் அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு அடி வித்தியாசத்திலுமான ஏணி.  - ஏணியின் ஒரு படி மட்டும் நீருக்கு அடியில் இருக்கிறது.  அன்று இரவு பலத்த மழை பெய்கிறது.  இரண்டு மணி நேரத்தில் ஒரு அடி தண்ணீர் எழும்புகிறது என்றால், பாதி ஏணி வரை தண்ணீர் எப்போது வரும்? 
கப்பல் மிதக்கும், அதனுடன் கயிற்று ஏணியும் தான்!!  (நீர் மட்டம் ஏறும், ஆனாலும் கப்பல் மிதக்கும் போது, ஏணி முழுகாது.  அதனால் சிலர் குறிப்பிட்ட மாதிரி சுனாமி அல்லது மறைந்திருக்கும் ஐஸ்பெர்க் வந்தாலொழிய  கப்பல் முழுகாது,  கயிற்று ஏணியும் முழுகாது!)

பலர் ஆர்வத்தோடு பதில் சொன்னதற்கு நன்றி.  பதில்களை முடிந்தவரை சரியாகச் சொன்னவர்கள் - சரியான் பதில்களின் எண்ணிக்கை மற்றும் பின்னூட்டம் போட்ட வரிசையில் - மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன், கெக்கே பிக்குணி,   ஜெயதேவ் தாஸ், ப்ரியமுடன் வசந்த், மனம் திற்ந்து..(மதி), மனோ நாஞ்சில் மனோ, வை.கோபாலகிருஷ்ணன், எல்.கே., செங்கோவி, ராஜி.
வாழ்த்துக்கள்!!
அடுத்த முறை இந்த முறை போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்...

Tuesday, March 29, 2011

லாஜிக்?? மொக்கை??

ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் லாஜிகலான கேள்விகளைப் பார்ப்போமா? (டென்ஷன் ரிலீவர்!!) விடைகள் நேர் வழியில் யோசித்துச் சொல்லும்படியும் வரலாம், ரம்பமாக (மொக்கையாக)வும் இருக்கலாம்.  இந்த பாணியில் என் பழைய பதிவுகளை,  இங்கேயும்   இங்கேயும் தேவையானால் பார்த்துக் கொள்ளுங்கள்.  இருந்தாலும் உதாரணத்துக்கு இதோ இரு கேள்வி பதில்கள்:

கனமான மரப்பெட்டியில் மரத்தை வெட்டி எறியாமல் எப்படி வெயிட்டைக் குறைப்பது?
விடை: மரத்தில் ஓட்டைகள் போட்டுக் குறைக்கலாம்.

ஏன் சிங்கம் பச்சை மாமிச(raw meat) த்தைச் சாப்பிடுகிறது?
விடை: அதற்கு சமைக்கத் தெரியாததால்!

இனி கேள்விகள்:
  1. வெள்ளிக்கிழமை வெளியூர் புறப்பட்ட கௌபாய் ஜெய்சங்கர் - சனி, ஞாயிறு ஊர் சுற்றிப் பார்த்து விட்டு வெள்ளியில் கிளம்பித் திங்களன்றே திரும்பிச் சென்றார்.  எப்படி?
  2. எண் 1050-ல் இரண்டில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தில்  ஐந்தில் ஒரு பாகத்தினோடு ஐந்தைக் கூட்டினால் வரும் எண் என்ன?
  3. நாள் முழுவதும் பறக்கும் அது எங்குமே செல்வதில்லை; அது என்ன?
  4. இது அடுத்தவரிடமிருந்து சுலபமாகப் பிடித்துக் கொள்ளலாம், ஆனால் இதை விட்டு எறிய முடியாது; அது என்ன?
  5. காலண்டரைத் திருடிய திருடனுக்கு எத்தனை மாதங்கள் கிடைத்தன?
  6. கடலில் போய்க் கொண்டிருக்கும் ஒரு சிறிய கப்பலின் பக்கத்தில் ஒரு கயிற்றாலான ஏணி தொங்குகிறது - 10 படிகளும் அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு அடி வித்தியாசத்திலுமான ஏணி.  - ஏணியின் ஒரு படி மட்டும் நீருக்கு அடியில் இருக்கிறது.  அன்று இரவு பலத்த மழை பெய்கிறது.  இரண்டு மணி நேரத்தில் ஒரு அடி தண்ணீர் எழும்புகிறது என்றால், பாதி ஏணி வரை தண்ணீர் எப்போது வரும்? 



இவற்றிற்கான விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.  இதற்காக பின்னூட்டங்கள் உடனே வெளியாகாமல் தடுக்கப்படுகின்றன!.  விடைகளைப் பின்னர் வெளியிடுகிறேன்.

Thursday, March 24, 2011

இந்தியா தோற்காது! - கிரிக்கெட்டும் நானும்

          கூடப் பிறந்த சகோதரர்கள் இல்லாத, லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு முதல்முதலாக கிரிக்கெட்டில் ஆர்வம் வரக் காரணம் - தெருக்களில் நிம்மதியாக நடமாட முடியாமல் 30 அடிக்கு 30 அடி வெவ்வேறு குழுக்கள் அமைத்து விளையாடுகிறார்களே, அப்படியென்ன இருக்கிறது இந்த விளையாட்டில்  என்ற சந்தேகம் தான்!  இதனுடன் ஆங்கிலத்தில் வந்த கிரிக்கெட் -ஜென்டில்மென்ஸ் கேம் என்ற பாடமும்.
          கிரிக்கெட்டை எனக்குப் புரிய வைக்கும் விதமாக வந்தது - வானொலியில் தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி!  படிக்கும் காலத்தில் - அதுவும் பொங்கல் விடுமுறையில் - திருவாளர்கள் அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி, வல்லுனர் மணி இவர்கள் வர்ணனை கேட்டே கிரிக்கெட் தெரிந்து கொண்டேன்!  'சற்று அளவு குறைவாக வந்த பந்து', 'வீசும் கை விக்கெட்டின் மேல் வர' இவை போன்ற அருமையான phrases.  தமிழ் கொஞ்சி விளையாடும் - முதல் இருவரிடமும்.  தமிழ் கெஞ்சும், வாஸ்தவமாகவே கொஞ்சிப் பேசும் வல்லுனரிடம்.  இதன் பிறகு தொலைக்காட்சியுடன் வர்ணனை என்று என் சிற்றறிவு கொஞ்சம் வளர்ந்தது!
           என் கணவர், மகன்களின் புண்ணியத்தில் இப்போது அதிகம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கிறேன்.  நேற்றைய நட்சத்திரங்களின் இன்றைய வர்ணனை முன்பு போல அவ்வளவு ரசிக்கவில்லை - visuals ன் முக்கியத்துவத்தினால்!.  மற்ற நாடுகள் விளையாடும் போது இடியட் பாக்ஸின் பக்கம் எட்டிப் பார்க்காத நான், இந்தியா விளையாடும் போது மட்டும் மிக்க ஆர்வத்துடன் பார்ப்பேன்.  மற்ற அணியின் பிரபல ஆட்டக்காரர்களின் பெயர்கள் மட்டுமே தெரியும் எனக்கு, இந்திய வீரர்களை அடையாளம் காண இயலும்! 
          பதிவுலகிலும், தொலைக்காட்சியிலும் யார் எவ்வளவு ரன் அடித்தால்/அடிக்காமலிருந்தால் வெற்றி வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியைப் பார்க்கிறேன்.  அடிக்கடி குறுக்கிடும் வார்த்தைகள் - இப்படியிருந்தால் இந்தியா ஜெயிக்கும் - இல்லை, தோற்கும்!
          எனக்குத் தமிழில், ஆங்கிலத்தில் மற்றும் உலகின் எந்த மொழியிலும் பிடிக்காத வார்த்தைகள் 'இந்தியா தோற்று விடும்"!   இதற்கு வாய்ப்பே இல்லை!  இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!
          இந்தியன் டீம் ஜெயிக்க நம் கிரிக்கெட்டர்கள்  டீம் ஸ்பிரிட்டுடன், கடைசி ஓவர் வரை நம்பிக்கை இழக்காமல் விளையாடினால் போதும்.  எண்ணங்களின் சக்தியைப் பற்றி படித்திருப்பீர்கள்! இந்தியன் டீம் கட்டாயம் ஜெயிக்கும் என நம்புங்கள்! Keep your fingers crossed!
          இந்தியா எப்போதும் ஜெயிக்கும்! ஜெய் ஹிந்த்! 



Saturday, March 19, 2011

கதம்பம் -4

விக்கிலீக்ஸ்...
          விக்கிலீக்ஸ் செய்திகள் பற்றி நாளிதழில் பார்த்திருப்பீர்கள்.  தேர்தல் சமயங்களில் தமிழகத்தில் ஒரு கட்சியில் நாளிதழ்களில் உள்ளே 5000 ரூபாயை கவரில்- கூட கட்சிச் சின்னத்துடன் வோடர்ஸ் லிஸ்ட் நம்பருடன் தருவார்களாம்.  இன்னொரு கட்சியில் என்ன உதவி கேட்டாலும் வேட்பாளரின் மகன் உடனடியாகச் செய்வாராம்.  நாட்டில் மற்றொரு கட்சியிலோ மக்களுக்கு நேரடியாகக் கொடுக்காமல், அவர்களுக்கு கிணறு வெட்டணுமா, சமுதாயக் கூடம் கட்டணுமா என்று பார்த்துப் பார்த்து செய்வார்களாம்.  இந்தத் தகவல்களெல்லாம் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்களே அமெரிக்கத் தூதரகத்து ஆட்களுக்குச் சொன்னதாக விக்கிக் கசிவுகளிலிருந்து 'தி இந்து' நாளிதழ் வெளியிட்டிருக்கிறது!

          இது போக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சாதகமாக வோட்டுப் போட பீரோ நிறைய பணம் வைத்து, அமெரிக்காவிற்கு உழைப்பவர்களுக்குக் காண்பிப்பார்களாம். எனக்கு வரும் சந்தேகங்கள்:
  • ஒரு நாளிதழில் ரூபாய் 5000 என்றால், 2/3 நாளிதழ்கள் வாங்கும் வீட்டிற்கு எவ்வளவு? (!!) ஒரே வீட்டில் வெவ்வேறு agents-டமிருந்து பேப்பர்கள் வாங்கினால் எப்படிக் கணக்கு வைத்துக் கொள்வார்கள்?
  • ஒரு வீட்டில் ஒரு வாக்காளர் இருந்தாலும் டஜன் வாக்காளர்கள் இருந்தாலும் கவரில் ஒரே அமவுண்ட் தானா?
  • நாளிதழே வாங்காதவரை எப்படி 'கவர்' செய்வார்கள்?
  • உதவிகள் தேர்தல் சமயத்தில் மட்டும் செய்தால் மக்கள் அடிக்கடி தேர்தல் வர வேண்டும் என விரும்பிப் பிரார்த்திக்க மாட்டார்களா?!!(கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் ஜாஸ்தி!!)
Jokes apart, என்னுடைய முக்கிய சந்தேகம், இப்படி மூன்றாம் மனிதர்களிடம் தம் ரகசியங்களைப் பெரிய மனிதர்களே சொல்லியிருக்கிறார்களே - அதாவது நாலாவது தூணான பத்திரிகைத் துறை, போட்டித் தொலைக்காட்சிகள் இவர்களால் கண்டுபிடிக்க இயலாமல் போன செய்திகளைச் சொல்லியிருக்கிறார்களே - இவர்களை இப்படி உண்மை விளம்பிகளாக்க பெரிய அண்ணனால் எப்படி முடிந்தது?  பின்னணியைக் கொஞ்சம் யோசித்தால்... எந்த அளவுக்கு ஊழல் போகிறதோ அதைக் கண்டுபிடித்து தம் நாட்டுக்கு உதவிக் கொள்ள பெரிய அண்ணன் அதற்கும் மேல் போகும் போலிருக்கிறது!
(முக்கியக் குறிப்பு - நான் ஊழலை எந்த வகையிலும் இங்கோ, எங்குமோ, எப்போதுமோ நியாயப்படுத்தவில்லை.)

வடை போச்சே!!
          சில வருடங்களுக்கு முன் என் அலுவலகத் தோழியின் அனுபவம் இது.  அவருக்குத் திருமணமான புதிது. கணவருக்குத் தொலைவில் அலுவலகம் என்பதால் அவர் விடியற்காலையிலேயே புறப்பட்டுச் சென்று விடுவார் - தன்னுடைய காலை, மதிய உணவுகளைத் தன் அலுவலக காண்டீனிலேயே பார்த்துக் கொள்வார். தோழியும் அப்படியே.  இரவு உணவும் வெளியிலிருந்து தான்- கணவரே வாங்கி வந்து விடுவார். தோழிக்கு சமைக்கவே வாய்ப்பில்லை! 
         
          ஒரு நாள் தன் கணவருக்கு surprise கொடுக்க, அவருக்குப் பிடித்த மெதுவடையைத் தான் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  எனவே, மெதுவடை செய்வது எப்படி என்று  அலுவலகத் தோழிகளிடமும் காண்டீன் சமையற்காரரிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  மாலை வீட்டிற்குச் சென்றவுடன் வேண்டிய சாமான்களை ஊறப் போட்டார்.  கணவர் வர இரவு 10 மணியாகிவிடும், வடை சூடாக இருக்க 9.30 மணிக்கு மேல் போட்டால் போதும் என முடிவு செய்து அதற்கேற்ப மாவையும் அரைத்தார்.    அடுப்பில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வடை போடப் போகும் போது தான் வடையின் நடுவில் எப்படி ஓட்டை போடுவது என்று கற்றுக் கொள்ளவில்லையே என்று ஞாபகம் வந்து, குழம்பி விட்டார்.  எப்படி யோசித்தாலும் அவரால் கண்டுபிடிக்கவும் இயலவில்லை; யாரையேனும் ஃபோன் செய்து கேட்கலாமென்றால் வெட்கம், இரவு 10 மணியாகிவிட்டது வேறு.  அலுவலக வேலைகளை ஊதித் தள்ளும் அவருக்கு வடையின் நடுவில் ஓட்டை போடத் தெரியாததால், அந்த மாவை அட்ஜஸ்ட் செய்து அடுத்த நாள் கணவருக்கு போதிய முன்னறிவிப்புடன் தோசையாக்கி விட்டார்! மொத்தத்தில் வடை போச்சு!       


25 - எண்ணின் மகிமைகள்
           25 என்னும் எண் கால் செஞ்சுரி; 5-ன் வர்க்கம்(square);  3 மற்றும் 4 இவற்றின் வர்க்கங்களைக் கூட்டி வர்க்கமூலம்(square root) எடுத்தால் 25, அதாவது  32 +  42= 52.  (நிறைய பிதாகரஸ் தியரி கணக்குகளில் வரும்!)
          முதல் 5 ஒற்றைப்படை எண்களைக் கூட்டினால், 25. (1 + 3 + 5 + 7 + 9).  3,4,5,6,7 என்ற அடுத்தடுத்த எண்களைக் கூட்டினாலும் 25!  25ன் powers எல்லாமே 25-ல் தான் முடியும்!  25-ன் பெருமைகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!

         வேறொன்றுமில்லை.. இது என் 25-வது இடுகை!  உங்கள் ஆதரவுக்கும் ஆசிகளுக்கும் நன்றி!

        

Tuesday, March 15, 2011

முதல் சிறுகதை அனுபவம்


     நண்பர் பார்வையாளன் இப்படி ஒரு பதிவைக் கேட்டதால், முதல் சிறுகதை - சவால் சிறுகதைப் போட்டிக்காக 'சவாலே சமாளி'  - எழுதிய அனுபவம் இங்கே.
(மைன்ட் வாய்ஸ்(#) : ரொம்ப தான் சிறுகதை எழுதிக் கிழிச்ச மாதிரி!! ம்க்கும்!)

     எனது முந்தைய இடுகையில் வலைப்பூ தொடங்கி சிறுகதை அனுப்பியதை எல்லாம் சொல்லியிருக்கிறேன் (மைன்ட் வாய்ஸ் - சுய புராணம் தாங்கலை!....). என் நலன் விரும்பி என்னை போட்டிக்குச் சிறுகதை எழுதச் சொல்லிக் கட்டாயப் படுத்தியதாகச் சொன்னேன் - அவர் மேலும் சொன்ன ஒரு வாக்கியம் தான் என்னை எப்பாடு பட்டாவது கதையை போட்டிக்கு அனுப்ப வேண்டும் எனத் தூண்டியது!  அவர் என்னை அப்படி என்ன சொன்னார் தெரியுமா?!!  'நீ எழுதுவாய் என்றுதான் நான் போட்டிக்குச் சிறுகதை அனுப்பவில்லை!! '   (மைன்ட் வாய்ஸ் - இது அவர் தன் மேலே வைத்திருந்த self confidence - இதைப் போய் பாராட்டுன்னு....)

     நான் போட்டிக்கான விதிமுறைகளைப் படித்தேன்.  கொடுக்கப்பட்ட மூன்று வாக்கியங்களை கதையின் போக்கில் வரிசை மாறாமல் கொண்டு வர வேண்டும்.  காமினி என்ற காரக்டரைக் கெட்டவராகக் காண்பிக்கக் கூடாது, வாக்கியங்கள் பயன்படுத்துவது ஃபிளாஷ்பாக்கோ, கனவு சீனாகவோ இருக்கக் கூடாது.  October 15ம் தேதி- இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு போட்டிக்கான டெட்லைன். (மைன்ட் வாய்ஸ் - இதெல்லாம் சக பதிவர்களுக்கே தெரியும்....)  கதை எழுத உட்கார்ந்தது October 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு மேலே-    (மைன்ட் வாய்ஸ் - ராகு காலம் ஆரம்பிச்சிடுச்சி....)
     எனக்கோ வலைப்பூ தொடங்கியிருந்தாலும் அதில் எழுதத் தெரியாது;  தமிழில் தனியாகத் தட்டச்சு செய்தும் பழக்கமில்லை.  சரி, மின்னஞ்சலிலேயே முயற்சிப்போம் என்று தொடங்கினேன்.  கதைக்குக் கரு?  சரி, ஃபிளாஷ்பாக்கோ, கனவு சீனாகவோ இருக்கக் கூடாது என்றால் ஏன் இது ஒரு தொலைக்காட்சி ஸீரியலில் வரக் கூடாது என்று மனதிற்குள் ஒரு வில்லச் சிரிப்போடு சாவிப்பலகையில்,  ஸாரி, கீபோர்டில் தட்ட ஆரம்பித்தேன்!. முன்பே சொன்ன மாதிரி 11.16 க்கு அனுப்பி விட்டேன்.  (மைன்ட் வாய்ஸ் - edit எல்லாம் பண்ணத் தெரியலைன்னு நேரடியாகச் சொல்றது தானே...)

      அனுப்பிய கதை போட்டியில் ஏற்கப்பட்டது,  இந்த வாசகங்களோடு - "இவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார்..."  பின்னர் முன்பே சொன்ன மாதிரி கதையை வலைப்பூவில் முதல் (authorised)இடுகையாகத் தட்டுத் தடுமாறி வெளியிட்டேன்.
     கதையைப் படித்திருப்பீர்கள்
(மைன்ட் வாய்ஸ்- என்ன கொடுமை பார்வையாளன் சார் இது.... ).  கதைக்கு நீதிபதியின் விமர்சனம் கீழே:  
78. சவாலே சமாளி – மிடில்கிளாஸ் மாதவி
மனைவிக்காக வீட்டில் சீரியல் பார்க்கும் கணவன். சீரியலில் வருவதாக, போட்டிக்கான வரிகள். மொத்த கதையுமே ஒரு பக்கக் கதையின் அளவில் பாதிதான் என்பதே இதை சீரியஸ் முயற்சியாக நினைக்க வைக்கவில்லை.

 தீர்ப்புக்கு   எனது பின்னுரை:

முதலில் ஒரு ஷொட்டு - நான் சீரியசாக எழுதவில்லை என்று சொன்னதற்கு - நான் காமெடியாக எழுதத் தான் முயற்சி செய்தேன்!:)). ...ஆனாலும் ஒரு வருத்தம்- சீரியலில் அந்த 3 வாக்கியங்கள் வந்தாலும், அந்தக் கதைக்கும் ஒரு தொடர்ச்சியும் முடிவும் இருந்ததாக நினைக்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத் தூண்டியமைக்கு நன்றி.   

டிஸ்கி - நன்றி பார்வையாளன்.  (மைன்ட் வாய்ஸ் - ம்... மத்தவங்க என்ன சொல்லப் போறாங்களோ,.. பாவம்..)

(#) மைன்ட் வாய்ஸ் - ஆமாம்; நீங்க நினைக்கிற பதிவர்கிட்டேருந்து தான் காப்பி - காப்பி அடிப்பது ஒருவரைப் புகழறதாகத் தானே அர்த்தம்!! - Imitation is the best form of flattery! - Thanks சொன்னா - Any Time Madhaviன்னு அவங்க பெரிய மனசோட சொல்லிடுவாங்க!

Tuesday, March 8, 2011

மிடில் கிளாஸ் மாதவி - ஏன்?

முன்னுரை: பெயர்க் காரணத்தை விளக்கித் தொடர் பதிவு போட கோபி ராமமூர்த்தி அழைத்தமையால், இந்த விளக்கக் கட்டுரை.

பொருள் விளக்கம்:
பெற்றோர்:  என் சொந்தப் பெயர் மாதவி இல்லை.  வலைப்பூவிற்கான பெயர் தான் மிடில் கிளாஸ் மாதவி.  அதனால், மிடில் கிளாஸ் மாதவி பெயரைப் பெற்றவர்(!) என்றால் அவர் நான் தான்!

பிறப்பு: என் நலன் விரும்பி ஒருவரிடம் ஒருநாள் பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, எழுத்தாளராக விரும்பிய என் நிறைவேறாத ஆசையைப் பற்றிச் சொன்னேன்.  அவர்தான் என்னிடம் Blog-களைப் பற்றிச் சொல்லி, என்னையும் ஒரு வலைப்பூவைத் தொடங்கச் சொல்லி, எழுதிப் பார்க்கச் சொன்னார்.  அவர் கொடுத்த (அசட்டு) தைரியத்தில் ப்ளாக்கராகலாம் என்று முடிவு செய்தேன்.  இந்த வலைப்பூவைத் தொடங்கினேன்.  (என் நலன் விரும்பி யாரென்று (உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லையாயினும்) அவர் நலன் கருதி நான் சொல்லப் போவதில்லை!!)

பெயர் சூட்டு விழா: என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரே குழப்பம்.  என் சொந்தப் பெயரைச் சொல்ல முடியாத சூழ்நிலை! (நல்ல வேளை! சொந்தப் பெயருக்குப் பின்னால் இன்னும் பெரிய சோகக் கதை இருக்கிறது!).  என் பெயரே எனக்கு் ஒரு அறிமுகமாக இருக்க வேண்டும் என எண்ணினேன்.
     எனக்குத் தமிழில் புலமையில்லை; கடின வார்த்தைப் பதங்களையெல்லாம் பிரயோகிக்கத் தெரியாது. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை- நான் நினைப்பதும் செய்வதும் சரியே எனும் ஹை கிளாஸ் மென்டாலிட்டியும் கிடையாது.  மோப்பக் குழையும் அனிச்சத்திலும் மென்மையாய் - சொல் பொறுக்காத, இடம், பொருள், ஏவலுக்குப் பயந்த - மிடில் கிளாஸ் மென்டாலிட்டி கொண்ட சாதாரணப் பெண்மணி.
     உலகில் அதிகப்பட்சமான ஜனங்கள் மிடில் கிளாஸ் தான்.  இந்த வர்க்கத்தில் உள்ள ஒரு சாதாரணமான பெண்மணி எனப் பொருள் கொள்ளும் வகையில் - 'மிடில் கிளாஸ் மாதவன்' படப் பெயரிலிருந்து 'மிடில் கிளாஸ் மாதவி' பெயரைப் பிடித்தேன்!. 

மிடில் கிளாஸ் மாதவி - இதில் மிடில் என்றால் நடு; கிளாஸ் என்றால் வகுப்பு என்று பதங்களைப் பிரித்துப் பார்க்காமல், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்றே கொள்ளல் வேண்டும்!!.  என் சொந்தப் பெயர் மாதவி இல்லையே,  நான் ரொம்பத் தவம் பண்ணியிருக்கேனா- 'மா'தவியா, இல்லை யாரையாவது ரொம்பத் தவிக்க விட்டேனான்னு கேட்கக் கூடாது! மேலே சொன்ன மாதிரி அது திரைப்படப் பெயரிலிருந்து எடுத்த பெயர்தான்!  ப்ளாகை மே 2010 இறுதியில் தொடங்கினாலும் எழுதும் தைரியம் வரவில்லை. வணக்கம் என்று மட்டும் போட்டு அழகு பார்த்தேன்!!

சவாலே சமாளிபரிசல்காரன் நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ளச் சொல்லி என் நலன் விரும்பி என்னைக் கட்டாயப் படுத்தினார்.  டெட்லைன் அக்டோபர் 15ந்தேதி 12 மணிக்கு என்றால் அதற்குச் சிறிது முன்னே 11.16க்கு என்னுடைய மின்னஞ்சல் மூலமாகவே ஒரு 'சிறு'கதையை போட்டிக்கு அனுப்பினேன்.  பெயர் வைக்க வேண்டுமென்று கூடத் தெரியவில்லை, பரிசல்தான் நினைவுபடுத்தி, பெயர் வைக்கச் சொன்னார்!  இதையே பின்னர் என் முதல் பதிவாக வலைப்பூவில் வெளியிட்டேன், நிறைய பிழைகளோடு!.  இதன் பின்னர் நடப்பது வரலாறு(?)!!
முடிவுரை: ஏற்கெனவே சில பின்னூட்டங்களில் மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன், கே.ஆர்.விஜயன், அப்பாவி தங்கமணி இவர்களோடு என் பெயரைப் பற்றி அளவளாவியுள்ளேன்!.   middleclassmadhavi என்று பெயரை ஆங்கிலத்திலேயே பதிவிட்ட என்னை, தமிழில் பெயர் மாற்றச் சொல்லி Philosophy Prabhakaran சொன்னதால் தமிழுக்கு மாறி விட்டேன்.   நான் பதிவிடும் விஷயங்களில் மட்டும் லோ கிளாஸ் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்!.:-))

நீதி: What is in a name?!

டிஸ்கி: 1.மகளிர் தின வாழ்த்துக்கள்.  ஆனாலும் இன்று ஸ்கூட்டி விளம்பரத்தில் வந்த வாசகம் தான் எனக்கு ரொம்பப் பிடித்தது - Why womens' day when we rule 24*7*365? !! :-)))

2.தொடர்பதிவுக்குப் பலரையும் திரு கோபி அழைத்து விட்டார்.  விடுபட்ட, விருப்பமுள்ள அனைவரும், தொடரலாம்!!