Monday, May 30, 2011

ஸ்..ஸ்...ஊறுகாய்!

புளி மிளகாய் - ஊறுகாய்
         வீட்டில் ஊறுகாய் எதுவும் இல்லை, தேவைப்படுகிறது எனில் இருக்கும் சாமான்களை வைத்தே இந்த ஊறுகாயைச் செய்யலாம்.  (இவையும் இல்லையென்றால் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்!)
தேவையான பொருட்கள்:
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 100 கிராம்
கடுகு-சிறிது
உளுத்தம்பருப்பு- சிறிது
வெந்தயம்-சிறிது
பெருங்காயப் பொடி - சிறிது
மஞ்சள் பொடி- சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணை/சமையல் எண்ணை - சிறிதளவு
அடுப்பு, தீக்குச்சி/லைட்டர் முதலியன

செய்முறை:

 • (1) முதலில் புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.
 • (2) ஒரு ஸ்பூன் வெந்தயத்தை (ஏற்றிய அடுப்பில்) வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
 • (3) பச்சை மிளகாய்களை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (அதன் விதைகள் விழுந்து விடும் - இவற்றை எறிந்து விடலாம் - இல்லையென்றால் ரொம்பக் காரமாகிவிடும். அப்படியும் மிளகாயில் ஒட்டியிருக்கும் விதைகள் போனாப் போகுது, இருந்துட்டுப் போகட்டும்!)
 • (4) புளி இதற்குள் ஊறியிருக்கும் - கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். (என்னது, புளி பேஸ்ட்டா, ஓகே, ஓகே, அப்போ முதல் ஸ்டெப்பை விட்டுடுங்க!)
 • (5) ஏற்றிய அடுப்பில் வாணலி/non-stick pan எதையாவது வைத்து, எண்ணையை விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொள்ளவும். 
 • (6)ப.மிளகாய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

 • (7) வதங்கியபின் புளியை(கரைத்ததை/பேஸ்டை) விட்டு, கொதிக்க விடவும். மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்
 • (8) கலவை கெட்டியானவுடன், பெருங்காயத் தூளும், வெந்தயப் பொடியையும் சேர்க்கவும்.
 • (9) அருமையான மணத்துடன், ஊறுகாய் கிட்டத்தட்ட திடப் பதத்துக்கு          வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்.


 • (10) ஊறுகாய் இஸ் ரெடி!!
 • தேவையானால், சிறிய வெல்லக்கட்டியை 8-வது ஸ்டெப்பிற்குப் பிறகு சேர்க்கலாம்.
 • ப.மிளகாயை நறுக்க நேரமில்லையானால், அதை அரைத்து உபயோகிக்கலாம்.  ஆனால், இது காரம் அதிகமாக இருக்கும்!
 • குடமிளகாயிலும் நான் செய்து பார்த்திருக்கிறேன், அதுவும் நன்றாக இருக்கும்!
 • ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்தால் 10 நாட்களுக்கு மேலும் கெடாமல் இருக்கும்!
டிஸ்கி: இந்த ஊறுகாய் திட உணவுகளுக்கு மட்டும் ஏற்றது - சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி, முதலியவற்றுக்கு.  இவற்றைத் தவிர சும்மா எல்லாம் சாப்பிட்டால், விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல!!

Thursday, May 26, 2011

சொந்த சரக்கில்லை!!...

சுட்ட குறுந்தகவல்களிலிருந்து:
[ஜாக்கிரதை! -ஊதிவிட்டுப் படிக்கவும்!! :-)]

மனைவி ஊருக்குச் சென்றிருந்தார்.  கணவர் தன் மனைவி மேல் இருக்கும் கோபத்தை சுதந்தரமாகக் காட்ட நினைத்து, மனைவியின் படத்தை வைத்து, தூரத்திலிருந்து அதன் மேல் டார்ட்ஸ்(darts) அடித்துக் கொண்டிருந்தார்.  எதுவும் சரியாகப் படத்தின் மேல் படவில்லை.  அப்போது மனைவியிடமிருந்து கைப்பேசி அழைப்பு - " என்ன செய்ஞ்சுட்டிருக்கீங்க?" என்று மனைவி கேட்க, 'உன்னை மிஸ் செய்ஞ்சுட்டிருக்கேன்" என்று கணவர் 'உண்மையாக' பதிலளித்தார்!!.

(பெண்ணீயவாதிகளுக்காக ஒரு அடிஷன்: மனைவி அந்தப் பக்கம், 'நான் உங்கள் ஃபோட்டாவை பக்கத்தில்தான் வைத்துக் கொண்டிருக்கிறேன் - உங்களை மிஸ் பண்ணலை!' என்றாள்!!)
***********************************************************************************
அமெரிக்காவில் ஒரு தந்தை தன் மகனிடம் அவன் திருமணம் செய்து கொள்ள, தான் ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.  மகன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள முடியாதென்றான்.  பெண்ணின் தந்தை பில் கேட்ஸ் என்று தந்தை சொல்லவும், மகன் ஒத்துக் கொண்டான்! 

பின்னர், தந்தை பில் கேட்ஸிடம் போய் அவர் மகளைத் தன் மகனுக்கு மணம் முடிக்கக் கேட்க, பில் கேட்ஸ் மறுத்தார்! 'மாப்பிள்ளை வேர்ல்ட் பாங்கின் CEO வாக இருந்தாற்கூடவா மறுப்பீர்கள்?' என இந்த வியாபாரத் தந்தை கேட்க, பில் கேட்ஸ் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்!

இந்தத் தந்தை அடுத்துச் சென்றது வேர்ல்ட் பாங்கின் தலைவரிடம்.  அவரிடம் தன் மகனுக்கு CEO வேலை கேட்டார் - தலைவர் மறுக்க, 'பில் கேட்ஸின் மாப்பிள்ளைக்கு இந்த வேலையைத் தர மாட்டீர்களா?' என்று தந்தை கேட்டார்! பிறகென்ன, வேலையும் கிடைத்தது!

இதற்குப் பெயர் தான் பிஸினஸாம்!
####################################################################
காதலி தன் காதலனிடம், 'என் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வாங்கியிருக்கிறீர்கள்?' எனக் கேட்டாள்; காதலன், 'அதோ, அங்கு செக்கச் செவேல்னு ஒரு BMW கார் நிற்குதில்லையா,..' என்று ஆரம்பித்தவுடன், காதலி, 'அடடா, உங்களுக்கு என் மேல் எத்தனை அன்பு!' என்று சொன்னாள்.  கலவரமடைந்த காதலன், 'அந்தக் கலரில் nail polish வாங்கியிருக்கேன்!' என்று கூறி முடித்தான்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மதிப்பெண்கள் குறைந்த மகனிடம் அப்பா காரணம் கேட்டார்; மகன்- 'ஒரு டீச்சர் எல்லா சப்ஜெக்டையும் நடத்த முடியாத போது, ஒரு ஸ்டூடண்ட்டை மட்டும் எல்லா சப்ஜெக்டையும் படிக்கச் சொல்வது என்ன நியாயம்?' என்று கேட்டான்!!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஒரு பள்ளியில் அனைவரும் இனி ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என ஆணையிடப்பட்டது.  அவ்வளவாக ஆங்கிலம் தெரியாத ஒரு பி.டி. மாஸ்டர் மாணவர்களிடம் பேசியதிலிருந்து:
1. There is no wind in the football
2. I talk, he talk, why you middle talk?
3. You rotate the ground 4 times
4. You go and understand the tree
5. Bring your parents with your mother and father
6. Why haircut not cut?
7. Stand in a straight circle
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
டிஸ்கி 1: மேலே உள்ள யாவும் கற்பனையே
டிஸ்கி 2: மேலே உள்ளவற்றை ஏற்கெனவே படித்திருந்தால், போனாப் போகுதுன்னு ஒரு ஸ்மைல் பண்ணிட்டு, மன்னிச்சு உட்டுடுங்க!!

Sunday, May 22, 2011

ச்சும்மா... காமெடிக்கு...

முஸ்கி: இந்தப் பதிவில் வரும் பதிவர்கள் அனைவரும் கற்பனையே.   யாராவது தன்னைக் குறிக்கிறது என்று கருதினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல!

பதிவர் 1008 -ன் பதிவு இது:

தொட்டதெல்லாம் தோல்வி! ஏன் பிறந்தேன் என்று நோகிறேன்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று யோசிக்கிறேன்... யோசித்த நேரத்தில் என் மானேஜர் வந்து ஏன் வேலை பார்க்கவில்லை என்று வைகிறார்..

பின்னூட்டங்கள்:
பதிவர் 1: வடை

பதிவர் 2: எனக்கு பஜ்ஜி

பதிவர் 1008:  @ ப.1 //வடை// வாங்க, வடை இந்தமுறை உங்களுக்கே!

பதிவர் 1008: @ ப.2 - //எனக்கு பஜ்ஜி// தாராளமா...

பதிவர் 1: இருங்க, படிச்சுட்டு வரேன்...

பதிவர் 1: பதிவு நல்லாயிருக்கு...

பதிவர் 3: தொடர வாழ்த்துக்கள்

பதிவர் 4: //ஏன் பிறந்தேன் என்று நோகிறேன்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று யோசிக்கிறேன்... // தத்துவம்! தொடர...

பதிவர் 6: nice...

பதிவர் 8: இன்று எம் பதிவில்... ஆணி பிடுங்குவது எப்படி?  http://www.பதிவர்8.////

பதிவர் 1008: @ ப.1 - //பதிவு நல்லாயிருக்கு...// நன்றி

பதிவர் 1008: @ ப.3 - //தொடர வாழ்த்துக்கள்// வாழ்த்துக்கு நன்றி

பதிவர் 1008: @ ப.4-  ////ஏன் பிறந்தேன் என்று நோகிறேன்.. வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று யோசிக்கிறேன்... // தத்துவம்! தொடர...//
கருத்துக்கு நன்றி

பதிவர் 1008: @ ப.6 - //nice// நன்றி

பதிவர் 10: இப்பத்தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.  மிக நன்றாக இருக்கிறது.  நீங்கள் எதற்கும் இவானோவ் இல்டிமிச் டாவின்ஸ்கி எழுதிய வொய் புத்தகத்தையும் படித்துப் பாருங்கள்...

பதிவர் 11: உங்கள் மானேஜர் செய்தது சரிதான்... இருந்தாலும் அன்பாகச் சொல்லியிருக்கலாம்! :-)

பதிவர் 12: வாழ்த்துக்கள்!

பதிவர் 13: :-))

பதிவர் 1008: @ ப.10 - கட்டாயம் புத்தகம் கிடைத்தவுடன் படிக்கிறேன், நன்றி

பதிவர் 1008: @ ப.11 - மானேஜருக்கு அன்பாகப் பேசவே தெரியாது..!! அவர் எப்பவுமே இப்படித் தான், அவரும் யோசிக்க மாட்டார், யோசிக்கவும் விட மாட்டார்!

 பதிவர் 1008: @ ப.12, 13 - நன்றி

பதிவர் 1008: இன்ட்லி,தமிழ் 10,.... எல்லாவற்றிலும் ஓட்டுப் போட்டவர்களுக்கு நன்றி!!

Dashboard மறைவில்... பதிவர் 5 பதிவைப் படித்தார்... இந்தப் பதிவர் நம் பதிவுக்கு எதுவும் கமெண்டே சமீபத்தில எழுதலை.. தான் எதற்கு எழுதணும்... அடுத்த பதிவுக்கு மவுஸை க்ளிக் செய்துவிட்டார்.
பதிவர் 7 லீவில் இருக்கிறார்...அவர் பதிவு எழுதுவார், மற்றவர் பதிவுக்கு பின்னூட்டம் எழுத நேரம் இருப்பதில்லை.... மற்ற  பதிவர்களுக்கு வெவ்வேறு வேலைகள்..
..........................
பதிவர் 1008 மட்டும் மாபெரும் குழப்பத்தில்... எதைத் தொடர்வது....... எதற்கு வாழ்த்து..........சரி, அடுத்த பதிவுக்கு யோசிப்போம்....

டிஸ்கி: மறுபடி முஸ்கியைப் படித்துப் பாருங்கள் ப்ளீஸ்!

Thursday, May 19, 2011

கதம்பம்-6

ஸ்ரீரங்கத்து தேவதைக்கு...
          ஸ்ரீரங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு வாழ்த்துக்கள்.  நான் வளர்ந்த - உங்கள் தொகுதியான ஸ்ரீரங்கத்திற்காக சில யோசனைகள்:
 • உங்கள் பணிச்சுமையில் உங்களுக்கு தொகுதியை கவனிக்க நேரம் ஒதுக்குவது கடினம்.  இந்தப் பணிக்காக  உங்கள் பிரதிநிதியாக தொகுதியில் ஒருவரை நியமிக்கலாம்.  (தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற போடப்போவது போல)
 • போக்குவரத்து அதிகரித்த இந்த நாளில், அம்மா மண்டபம் சாலையில் டூரிஸ்ட் பஸ்கள், வேன்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த சாலை பேருந்துகள் செல்லும் சாலையாகவும் முக்கிய சாலையாகவும் இருப்பதால், நிறுத்தப்பட்ட வாகனங்கள் கிளம்பும்போது, போக்குவரத்துக்கு மிகுந்த இடைஞ்சலாகவும், விபத்துகள் நடக்க வாய்ப்புத் தருவதாகவும் உள்ளது. பக்தர்களும் கோயிலுக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது.  மாற்று ஏற்பாடாக மேலூர் சாலையிலோ, ஒருபுறம் மதில் சுவர்கள் உள்ள உத்தர வீதிகளிலோ வாகனங்கள் நிறுத்த வழி செய்யப்பட்டால், பக்தர்களுக்கும் நடக்க வேண்டிய தூரம் மிச்சமாகும், போக்குவரத்தும் சீராகும்.
 • திருச்சியில் தனியார் பேருந்துகள் அதிகம் - அதனால், பேருந்துகளுக்கிடையே போட்டியும் அதிகம்.  பஸ் நிறுத்தங்களுக்கிடையே மிகக் குறைந்த இடைவெளி தான் -  (உ-ம்) - ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாப், மங்கம்மா நகர், ரங்க பவனம்; திருச்சியில்- கோட்டைக்கருகே, சிங்காரத் தோப்பு, ராஜா-பார்க், மரக்கடை-பாஸ்போர்ட் ஆஃபீஸ் - இது போல குறைந்த தூரத்தில் அமைந்த நிறுத்தங்களை முறைப்படுத்தி, மேலும் நிறுத்தங்களில் மட்டும் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று வகைப்படுத்தினாலே போக்குவரத்து நெரிசல்- Traffic jam - குறையும்.
 • மற்றபடி, ஸ்ரீரங்கத்திற்கு பாதாள சாக்கடை முழுமையாக வரவும், சாலைகள் மேம்படவும், கோயில் பகுதியை சுத்தமாக வைக்கவும் வழி செய்ய வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நிலம் - அடிமனை பிரச்னையும் தீர்வு வேண்டி காத்திருக்கிறது!
உள்ளூரிலிருந்து உலகச் செய்திக்கு...

         ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொன்ற செய்தியை ஒரு சானலில் ஒபாமா என்று அறிவித்ததைப் பார்த்திருப்பீர்கள்!  நானும் அன்று வாய் தவறி, ஒபாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தான் (கூகிளில் பார்த்து) என் குழந்தைகளிடம் உளறினேன்.
          The Audacity of Hope -Thoughts on Reclaiming the American Dream -என்ற பாரக் ஒபாமா எழுதிய புத்தகத்தை சமீபத்தில் புரட்ட நேரிட்டது.  இந்தப் புத்தகத்தில் தான் அரசியலில் நுழைந்ததை எல்லாம் ஒபாமா விளக்கியிருக்கிறார்.
          புத்தகம் 2006-ம் ஆண்டில் பிரசுரமானது (அதாவது ஒபாமா ஜனாதிபதி ரேஸில் நுழைவதற்கு முன்பே). இதில் சொன்ன ஒரு விஷயம்-
செப்டம்பர் 2001(ட்வின் டவர் நிகழ்வு)க்கு பிறகு ஒபாமாவின் நண்பர், ஒபாமாவிடம்  - 'உன் பெயர் தான் உனக்கு எதிரி - ஏன் தெரியுமல்லவா?' என்று கேட்டாராம். இது ஒபாமா அவ்வளவாக அறியப்படாத நேரம் - ஆனால் ஒபாமா தீவிர அரசியலில் இறங்க இருந்த நேரம்!  ஒசாமா பின் லேடனுடன் சம்பந்தம் வருகிற ஒபாமா என்ற பெயரினால் தன்னை மக்கள் விரும்புவது கடினம் என்று சொல்லி, பெயரை முன்னமேயே - தீவிர அரசியலில் வரும் முன்னமே - மாற்றியிருக்க வேண்டும் என்றும் கமெண்ட் அடித்துள்ளார்!           
          இப்படித் தான் நடக்க வேண்டும் என்ற விதி!!
 
கண்டுபிடிப்பேன்!!
        
           ஒரு 5 வயது சிறுவனிடம் நீ மேலே படித்து என்ன ஆகப் போகிறாய் என (வழக்கம் போல) வம்பிழுத்துக் கொண்டிருந்தேன்.  அவன் தான் ஒரு பெரிய ஸயன்டிஸ்ட் ஆவேன் என்றான்.  'ஆகா, நீ நிறைய புது சாதனங்களைக் கண்டுபிடிப்பாய் அல்லவா?' என்று கேட்டேன்.  'நிச்சயமாக;  நேத்து கூட காணாமல் போன என் அப்பாவின் வாட்சை நான் தான் கண்டுபிடித்துக் கொடுத்தேன்' என்றான் பெருமையுடன்!


         

Tuesday, May 17, 2011

தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?

(கம்ப. குகப்படலம். 2405)
          பரதன் பெரும்படையுடன் வருவதைத் தூரத்திலே இருந்து பார்த்து, ராமனை எதிர்க்கத் தான் வருகிறானோ என்று நினைத்து குகன் சொல்வதாக இந்தக் கம்பராமாயணப் பாடல்.  சந்தத்திற்காக மனதிலே தங்கிய பாடல் - இதன் ஒரு வரியைத் தான் தலைப்பில் பார்த்திருப்பீர்கள்.
         இன்று நண்பர்கள் தினம் இல்லை.  ஆனாலும் என் நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு.
          சின்ன வயதில் நான் மிகுந்த தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன்.  குடும்ப சூழலும் எதிர்காலம் குறித்த பயமும் முக்கிய காரணங்கள்.  பள்ளியிலும் யாரோடும் நெருங்கிப் பழகவில்லை, கூட்டுக்குள் சுருங்கும் நத்தையாகவும் புத்தகப் புழுவாகவும் இருந்தேன். இதை மாற்றியது முதலில் பள்ளி இறுதி வகுப்பில் கிடைத்த ஒரு தோழி.  விளையாட்டாக அவள் கண்களை நான் பொத்தி யாரெனக் கேட்டபோது, அருகில் இருந்தவள், "அதான், நேத்து அவளோட ஃப்ரெண்டாக இருக்க ஆசைன்னு சொன்னியே" என்று க்ளூ கொடுத்தாள்.  பிறகு கேட்பானேன் - அந்தத் தோழி என் வாழ்க்கையில் முதல் நம்பிக்கைப் பூ;  அவள் குடும்பமும் என் குடும்பமும் பழகும் அளவு நண்பர்கள் ஆனோம்.

         மேலே படிக்கும்போது இருவரும் வெவ்வேறு துறைகளை மேற்கொண்டாலும் நட்பு தொடர்ந்தது.  ஆனாலும் ஒரு சின்னப் பிரிவு இருந்தது. 
         கல்லூரியில் நான் விரும்பிய பாடப்பிரிவு நான் விரும்பிய - என் குடுமபச் சூழலுக்கு ஒத்து வரக்கூடிய  கல்லூரியில் ரிசர்வேஷன் காரணமாகக் கிடைக்கவில்லை - வழிகாட்ட ஆளில்லாமல் மனம் நொந்து, தெரிந்தெடுத்த வேறு பிரிவில் என் கவனத்தைச் செலுத்தியிருந்தேன்.  புது அறிமுகங்களில் ஒருத்தி தன் காதலைப் பற்றியெல்லாம் என்னிடம் பகிர்ந்து கொண்டாள்.  ஒரு நாள், தான் எழுதியதாக ஒரு கவிதையை என்னிடம் கொடுத்தாள் - அவள் காதலனுக்கு எழுதிய கவிதை என்று  நினைத்து வாங்கிப் படித்தால், அது என் நட்பை விழைந்து எழுதிய கவிதை!  அன்று முதல் நாங்கள் இணைபிரியாத நண்பர்கள் ஆனோம் - எந்த அளவுக்கு என்றால் என் கல்யாணத்தில் மூன்றாம் முடிச்சு போட நாத்தனார் ஸ்தானத்தில்  அவள் நிற்கும் அளவுக்கு! அவளால் தான் எனக்கு ஓரளவாகவாவது என் மேலேயே நம்பிக்கையும் வாழ்க்கையை எதிர்நோக்கும் தைரியமும் வந்தது.

         இதையெல்லாம் கடந்து, குடும்பத்தில் இறங்கி, குழந்தைகள் ஓரளவு வளர்ந்து, என் எழுத்துக்கனவுகளுக்காக வலைப்பூவில் நான் எழுத ஆரம்பித்த பின் தான் எனக்கு இன்னும் confidence வந்திருக்கிறது.  போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் இடையே என் தன்னம்பிக்கை வளர்ந்திருப்பதை நான் நன்றாக உணர்கிறேன்.  இதற்கு என்னை ஊக்கப்படுத்தும் நீங்கள் தான் காரணம்.  உங்கள் அனைவருக்கும் நன்றி! 

Thursday, May 5, 2011

'பேசும்' படங்கள்

தமிழ் பேசும் படங்கள்(?)

இடம்: செம்மொழிப் பூங்கா, சென்னை