Friday, December 23, 2016

வெண்டைக்காய் புளி குத்தின கறி!

வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் 
வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்றால் பொடியாக நறுக்கி ஃப்ரை செய்தால் என் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்டஃப்ட் கறி என்றால் என் கணவருக்கும் பெரிய பையனுக்கும் மிகவும் பிடிக்கும். நேரம் இருப்பதைப் பொறுத்தும், வெண்டைக்காயின் தன்மையைப் பொறுத்தும் இன்ன மாதிரி செய்யலாம் என்று முடிவு செய்வேன்.
என் மாமியார் மிக அருமையாக சமைப்பார். ரசம் வைப்பதன் பேசிக் எல்லாம் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். என் கணவர் தம் அம்மா செய்யும் வெண்டைக்காய் புளி குத்தின (விட்ட) கறிமேது பற்றி சிலாகித்து (சொல்லாடலுக்கு நன்றி - கலைஞரின் ராமானுஜர்!!)  சொல்ல, அவரிடம் இந்தச் செய்முறையைக் கற்றுக் கொண்டேன். சாதாரணமாக வெண்டைக்காய் வதக்கும் போது, அளவு கம்மியாகி விடும்.  இந்த முறையில் அளவு அவ்வளவு குறைவதில்லை. இம்முறையில் புளித் தண்ணீரில் வெண்டைக்காயை வேக விட்டு செய்வதால் இந்தப் பெயர்.   மற்ற  வெண்டை கறிகளுக்கு நான் சிறிதளவு ஆம்சூர் பவுடர் போடுவேன். 
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் -  அரை கிலோ அல்லது தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு
வத்தல் மிளகாய் - 6
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
பெருங்காயத் தூள் - சிறிது
எண்ணை - தாளிக்க
மற்றபடி அடுப்பு, வாணலி, கரண்டி இத்யாதி.....
செய்முறை: வெண்டைக்காயை அலம்பி துணியில் துடைத்து வைத்துக் கொள்ளவும்.   ஒரு சின்னக் கொசுவத்தி: சின்ன வயதில், என் அப்பா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டிருந்த ஒரு முறை, என் அம்மா அப்பாவுக்குத் துணையாக அங்கேயே தங்கி இருந்தார்.  வெண்டைக்காய் தான் இருந்தது வீட்டில் சமைப்பதற்கு. அதற்கு முன் அம்மா என்னை சமையல் அறைக்குள் அனுமதித்ததே இல்லை - சமையலறை ஒரு ஆள் இருக்கும் அளவு தான் இருக்கும் என்ற முக்கியமான காரணமும் இருந்தது!! -  அம்மா என்னிடம் கொடுக்கும் காய்கறியை நறுக்கித் தரும் அளவு தான் அனுமதிக்கப் பட்டிருந்தேன் - இதனால் அப்போது சமைக்கும் போது, வெண்டைக்காயை நறுக்கிய பின் அலம்பி - இன்னமும் எனக்கு அந்த பிசினாக வந்த காட்சியை மறக்க முடியவில்லை!! கூட்டு கம் கறியாக அது பின்னர் பரிமளித்தது!! ஹாஸ்பிடலில் இருந்த அப்பாவுக்கு சாப்பிட ஈஸியாக இருந்தது!!!!

அதனால், வெண்டைக்காயை நன்றாக அலம்பி, நல்ல துணியால் ஈரம் போக துடைத்துக் கொள்ளவும்.  இந்த செய்முறையில் சிறிது ஈரம் இருந்தாலும் நோ ப்ராப்ளம்.


புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பின், வடிகட்டி புளித் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பு ஏற்றி, வாணலியை வைத்து, எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும். வெண்டைக்காயையும் புளித் தண்ணீரையும் விட்டுக் கொதிக்க விடவும். மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள் இப்போது போட்டுக் கொள்ளலாம்.

முக்கால் பதம் வெண்டை வெந்தவுடன் அடுப்பை அணைத்து, காயை வடிகட்டிக் கொள்ளவும்.
புளித் தண்ணீரை ஒட்ட வடிகட்டியபின், மீண்டும் ஏற்றிய அடுப்பில் - வாணலியில் இதை இட்டு, தேவையான உப்பும் போட்டு வதக்கவும்.  நான் இந்த நேரத்தில் மிளகாய் வற்றலை எடுத்து விடுவேன், இல்லையென்றால் சாப்பிடும் போது கடிபடும். (பிடித்தவர்கள் மிளகாயோடு பரிமாறலாம்) வெண்டைக்காய் பதமாக வெந்த பின் அடுப்பை அணைத்து விடலாம்.

சூப்பர் லேசான புளிப்பு சுவையோடு கூடிய வெண்டைக்காய் புளி குத்தின கறி தயார்!!  

என் மாமியாரிடம் கற்றுக் கொண்டபின் முதல் முதலாக சமைத்த போது,  வேக வைத்த பின்  கரண்டியில் சிறிது எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். அவர் 'நாங்கள்ளாம் மஞ்சள் பொடியும் பெருங்காயமும் போடுவோம்' என்று சொன்ன பின் அதையும் சேர்த்தேன்!!  இப்போது எழுதின பிறகும் அதை முதலில் விட்டு விட்டு பின்னர் தான் சேர்த்தேன். :-))  மாமியார் தாம் கற்றுக் கொடுத்தது என்பதை மறக்காமல் அவருக்கு உடனே நினைவு படுத்தி விட்டேன் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன!!

Tuesday, December 6, 2016

புரட்சித் தலைவிக்கு அஞ்சலி!


நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அபிமானியும் இல்லை. அரசியலில் அவ்வளவு ஆர்வமும் இல்லை. ஆனாலும் என் மனதில் சோகத்தைக் கவிய வைத்தது இந்த மரணம்!!
புரட்சித் தலைவி என்ற பெயரை முதன்முதலில் கேட்ட போது என்ன புரட்சி செய்து விட்டு இந்தப் பட்டம் என்றே நினைத்தேன். புரட்சித் தலைவர் பட்டத்துக்குச் சமமாகக் கொடுக்கப்பட்டதே எனவும் நினைத்தேன்.  ஆனாலும் இந்தப் பட்டத்துக்கு தகுதியானவர் என்று தன் பல்வேறு தைரியமான விரைவான முடிவுகளாலும், அணுகுமுறையாலும், நீரூபித்திருக்கிறார்.  இனி ஒரு தலைவி இப்படி இருப்பாரா என்று சந்தேகம் தான்!  
கட்சி பாகுபாடின்றி அனைவராலும் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டப்பட்டவர். அரசியல் எல்லைகளைத் தாண்டி இன்று அனைவரும் இரங்கல் தெரிவிக்கும் போது மிக நெகிழ்வாக உணர்கிறேன் - அந்த வார்த்தைகளின் பின்புலத்தை ஆராய வேண்டாத அளவு! வரலாற்றில் சுவடு பதித்த ஒரு நபர் மறைந்தார்.  
குறைகளாகத் தெரிந்த பலதும் இப்போது சொல்வது சரியாய் இராது. இருந்தாலும், .. பதவியில் இருந்த போது அவர் காலில் மற்றவர் விழுந்ததும் கூனிக் குறுகி வணங்கியதும் தம் அரசாங்கம் செய்தது என்பதற்கு பதில் 'நான் செய்தேன்' என்றதும் அபசுரமாய்ப் பட்டது. ஆனாலும் இத்தனை பேரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவருக்கு இந்தக் கவசம் தேவைப்பட்டிருக்கலாம்.
இரும்பு மனிதராக இருந்து கடைசியில் எமனுடன் போராடி மீண்டும் வந்து திரும்பவும் சென்றார்!!  நாட்டின் முதல் குடிமகன் முதல் அனைவரையும் தமக்கு மரியாதை செய்ய வைத்த சரித்திர நாயகிக்கு ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் பெண்மணியின் வணக்கம்.  அஞ்சலி.