Tuesday, April 24, 2012

நல்லதோர் வீணை!

     பக்கத்து வீட்டுப் பரிமளாவை ரொம்ப நாட்கள் கழித்து அன்று பார்த்தேன். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சகஜம் தான். ஒருவரையொருவர் பார்த்து புன்னகையுடன் நலம் விசாரித்துக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமையாதலால், பேச பொழுதிருந்தது! பேச்சின் இடையே, “உங்களுக்குத் தெரியுமா, லதாவுக்கு, அதாங்க, உங்க வீட்டுக்காரர் ஆஃபீசிலே வேலை பார்க்கிறாங்களே, அவங்களுக்கு மறு கல்யாணமாம்!” என்றார். இது எனக்குத் தெரியாத விஷயம். லதாவை இதே காலனியில் இருப்பவர் என்ற வகையிலும் என் மகனின் கிளாஸ்மேட்டின் அம்மா என்ற வகையிலும் எனக்குத் தெரியும் “அப்படியா! ரொம்ப நல்ல விஷயம்!” என்று பரிமளாவிடம் சொன்னேன். பேச்சு வேறு பகுதிகளில் திரும்பியது. எங்கள் சிறு அளவளாவல் முடிந்து, ஞாயிறின் மற்ற வேலைகளுக்குத் திரும்பினோம்.


     என் மனம் லதாவின் மறுமணம் குறித்து யோசிக்க ஆரம்பித்தது. விதவை விவாகத்துக்கு நான் ஆதரவானவள் தான். நான் வேலை பார்த்த பழைய அலுவலகத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது. படித்து முடிந்த கையோடு வேலைக்குச் சேர்ந்த போது, ஒழுங்காக எனக்கு சேலை கட்டக் கூடத் தெரியாது; வெறும் கழுத்தோடும், ரப்பர் வளையல்களோடும் அலுவலகம் சென்ற எனக்கு, புடவையை எப்படி ஒழுங்காகக் கட்டுவது, கழுத்துக்கு மெல்லிய செயின் போடவேண்டும் என்ற விஷயங்களை பானு என்ற பெண் தான் கற்றுக் கொடுத்தாள்(ர்). எனக்கு 4 அல்லது 5 வயது தான் மூத்தவராக இருந்ததால், என்னாலும் ஃப்ரீயாக அவரிடம் பழக முடிந்தது. அவரது வாழ்க்கைக் கதையைப் பின்னால் தெரிந்து கொண்டேன். மலேஷியாவில் வேலை பார்த்த அவரது தந்தை, இந்தியாவில் தம் மனைவி அவசரப்படுத்தியதால், பானுவை சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுத்தார். பானுவின் கணவர் வேலையில் இருந்த போது ஒரு சின்ன விபத்தில் மேலிருந்து கீழே விழுந்து அடிபட்டு மரணமடைந்தார். அப்போது தான் அவர்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களாகி இருந்தன. பின்னர் கருணை அடிப்படையில் பானுவுக்கு வேலை கிடைத்தது. நான் வேலைக்குச் சேர்ந்த போது, பானு வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்களாயிருந்தன.


     பானு ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தார். வார விடுமுறை நாட்களில் தனது ஊருக்குச் சென்று வருவார். தாயாரும் தம்பியும் ஊரில் இருந்தனர். தம்பிக்கு வரன் பார்க்கலாமா என்று அம்மா யோசித்து வருவதாக என்னிடம் பானு கூறினார். நான் தயங்கியவாறே, “பானு, நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது?” என்று கேட்ட போது, “அப்பா, அம்மாவின் ஆதரவு இருக்கிறது. தம்பியும் என்னைக் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கு” என்றார். “அப்பா, அம்மா அவர்கள் காலம் முடியும் வரை பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மட்டும் தம் மகள் இப்படி தனியே நிற்பது பிடிக்குமா என்ன? உங்கள் தம்பி அவருக்கு கல்யாணம், குடும்பம் என்று வந்த பின் தம் குடும்பத்துக்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டியிருக்கும் – அதுவும் வெளியூர் வேறே..” என்று சொல்லிப் பார்த்தேன். முதலில் சரியாகப் பதில் சொல்லாத பானு, மறுபடி மறுபடி தொந்தரவு செய்ததில், இதே ஊரிலேயே இருக்கும், தன் சொந்தக்காரர் ஒருவர், தம்மை மறுமணம் செய்து கொள்வாயா எனக் கேட்டதாகவும் தான் மறுத்து விட்டதாகவும் கூறினார். இதற்குள் அலுவலக்த்தில் என் தரப்புக்கு இன்னும் சில சிநேகிதர்களைப் பிடித்திருந்தேன். அவர்களும் பானு குறிப்பிட்ட அந்த நபரைப் பற்றி விசாரித்து, நல்லவரே என்று தீர்ப்பும் சொல்லி விட்டனர்! பிறகென்ன, கரைப்பார் கரைக்க, கல்லும் கரைந்தது! தம் பெற்றோரிடம் பானு சொல்ல, பானுவின் அப்பா மலேஷியாவிலிருந்து விடுப்பில் வந்து கல்யாணத்தை நடத்தி விட்டுச் சென்றார்! என் வீட்டுக்கு வந்து, என் அப்பாவிடம், “உங்கள் மகள் தான் இந்தக் கல்யாணம் நடக்கக் காரணம். நல்லா வளர்த்திருக்கீங்க” என்று நன்றி சொல்லிப் போனார்!


    லதாவின் விஷயமே வேறு. லதாவின் மகனுக்கு ஐந்து வயதான போது அவர் கணவர் இறந்து விட்டார். மிதமிஞ்சிய குடிப் பழக்கம் காரணமானது. லதா தற்சமயம் தம் பெற்றோர், உடன் பிறந்தோர் எனப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருந்தார். இப்போது அவர் மகன் விடலைப் பருவம் – டீன் ஏஜில் நுழைந்து கொண்டிருக்கிறான்! அவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?     ஞாயிறு மாலைப் பொழுது. கரண்ட் இல்லாத குடும்பப் பொழுதானது. அப்போது தயங்கியபடியே லதாவின் தந்தை வீட்டுக்குள் நுழைந்தார். “வாங்க” என்று வரவேற்று அமர வைத்தோம் “லதாவுக்கு கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணியிருக்கோம். அவளுக்கும் பின்னால் ஒரு ஆதரவு வேணும். பார்த்திருக்கும் வரன் தெரிந்தவர் தான். ஏற்கெனவே டிவோர்ஸ் ஆனவர். லதாவையும் பேரனையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களோடு தான் அவரும் இருப்பார். வரும் புதன் கிழமை வீட்டில் தான் கல்யாணம். கட்டாயம் வந்து கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று என் கணவரையும் என்னையும் அழைத்துச் சென்றார்!


                                                                *****


     திருமணம் நிறைவுற்றது. நாட்கள் பறந்தோடின. என் மகனிடம் அவனது கிளாஸ்மேட் எப்படி இருக்கிறான் என்று அவ்வப்போது கேட்பேன். அவ்வப்போது தென்படும் அந்தப் பையனின் முகத்தில் ஒரு தெளிவையும் நம்பிக்கையும் பார்ப்பதாக எனக்குள் தோன்றியது. இருந்தாலும் என் மனத்துக்குள் எழுந்த பயம் இருந்தது. லதாவை அவர் கணவர் அலுவலுகத்துக்கு டூ வீலரில் கொண்டு விடுவதைப் பார்த்த போதும் பயம் தீரவில்லை!


                                                             *****


     இன்று என் மகனின் பள்ளியில் மாலை 4.30 மணிக்குப் பெற்றோரை வரச் சொல்லியிருக்கின்றனர். என் கணவரின் அலுவலகத்தில் பெர்மிஷன் கிடைக்காது. நான் என் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் அனுமதி பெற்று, அந்த ‘பேரண்ட்ஸ் மீட்டிங்’க்குக்குச் சென்றேன். ஆடிட்டோரியத்தில் நடக்கும் மீட்டிங்கில் கிட்டத்தட்ட 500 பேராவது இருப்பார்கள். நான் தான் கடைசியோ?! நிகழ்ச்சியில் பிள்ளைகளை இந்த வயதில் பெற்றோர் எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளியின் நிர்வாகி விரிவாக எடுத்துரைத்தார். வழக்கம் போல் கரண்ட் இல்லாததால் அவர் மிகவும் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது. குழந்தைகளைத் தனியாக மாடியில் அமர வைத்திருந்தனர். ஒரு வழியாக வியர்வை சொட்டிய மீட்டிங் முடிந்து வெளியே வந்தேன். மாணவர் கூட்டத்தில் என் மகனைத் தேடிப் பிடித்து அவனுடன் நடந்தேன். மீட்டிங்கில் என்ன சொன்னார்கள் என்று அவன் கேட்க, சொல்லிக் கொண்டே வந்தேன். என் மகன் அவன் சைக்கிளைத் தள்ளியவாறே என்னுடன் வந்தான். அப்போது எங்களைத் தாண்டி ஒரு பைக் சென்றது. அதில் என் மகனின் கிளாஸ்மேட் – லதாவின் மகனைப் பின்னால் உட்கார வைத்து ஓட்டிச் சென்றார், பேரண்ட்ஸ் மீட்டிங்கை அட்டெண்ட் செய்த லதாவின் கணவர்.. இல்லையில்லை, அந்தப் பையனின் தந்தை!! என் மனம் இப்போது லேசானது. எங்களைப் பார்த்துச் சிரித்தவாறே கையாட்டிச் சென்ற அந்தப் பையனைப் பார்த்து நானும் சந்தோஷமாகச் சிரித்தேன்!

டிஸ்கி: இந்தச் சிறுகதை 'வல்லமை' இதழில் 23.4.2012 அன்று பிரசுரமானது.  சுட்டி இதோ!

Sunday, April 15, 2012

சுண்டைக்காய்!

சுண்டைக்காய் மேட்டரு.... சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம் - இப்படி நம் அன்றாட வாழ்வில் பேச்சில் உபயோகப்படுத்தும் சுண்டைக்காயைச் சமையலில் உபயோகிக்கலாமா?

 'அதான், எனக்குத் தெரியுமே! சுண்டைக்காய் விஷயம்!! - சுண்டை வத்தல், வத்தல் குழம்பு..', என்றெல்லாம் சொல்பவரா நீங்கள்?  என் அம்மா செய்யும் சுண்டை வதக்கல் இதோ! 

தேவையான பொருட்கள்:
நாட்டுச் சுண்டைக்காய் - 1/4 கிலோ (காம்புகளை நீக்கிக் கொள்ளவும்)
தாளிக்க - எண்ணை (வேண்டுமளவு)
கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு

வறுத்துப் பொடி செய்து கொள்வதற்கு:
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வத்தல் மிளகாய் - 4/5 தேவைக்கேற்ப
தனியா - 2 டீஸ்பூன்
எள்ளு- சிறிதளவு


உப்பு - தேவைக்கேற்ப
அப்புறம் அடுப்பு, பாத்திரங்கள், கரண்டி, லைட்டர்/தீப்பெட்டி, மிக்சி எட்செட்ரா


சுண்டைக்காய்களை நாலாகவோ அல்லது இளசாக இருந்தால் இரண்டாகவோ நறுக்கிக் கொள்ளவும்.  இந்த சமையலில் கஷ்டமான விஷயம் இது தான். நறுக்கும் போது விரலை வெட்டிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் சாமர்த்தியம்.  விரல்கள் விதைகள் ஒட்டி, சாறு ஒட்டி - கொஞ்சம் கஷ்டம் தான்!! :-)) சுண்டைக்காய் நறுக்கும் போது ரொம்ப சுலபமாக நறுக்க வந்தால் - அது அழுகி விட்டது; நறுக்கும் போதே கறுப்பாய் இருந்தால் - அது கெட்டுப் போய் விட்டது; இத்தகையவற்றைத் தூக்கிப் போட்டு விடவும்


சுண்டைக்காய் நறுக்கியவுடன் மிக விரைவில் பிரவுனாகி விடும்.  நோ ப்ராப்ளம்! கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அலம்பிக் கொள்ளவும்.  விதைகள் நீரில் தங்கும் - கொட்டி விடலாம்!!  

ஏற்றிய அடுப்பில் வெறும் வாணலியைப் போட்டு,  கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், எள்ளு இவற்றை  வறுத்து, ஆறியபின் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். பின்னர்,  வாணலியை திரும்பவும் ஏற்றிய அடுப்பில் வைத்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்துக் கொள்ளவும்.  நறுக்கி வைத்துள்ள சுண்டைக்காயைப் போட்டு வதக்க ஆரம்பிக்கவும். பாதி வதங்கிய பின்னர், வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து, வதக்கவும்.  நடுவில் மூடி போட்டு வைத்தால், சீக்கிரம் வதங்கும். இந்த ஸ்டேஜில் கமகமவென்று வாசனை பரவும்!! குட்டீஸ் வந்து எப்போது சாப்பிட வரலாம் என்று கேட்பார்கள்!! (எங்கள் வீட்டு நடப்பை வைத்துச் சொன்னேன்!)  நன்றாக சுருள வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.  சுண்டை வதக்கல் ரெடி! இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட சுவையோ சுவை!  தேவைப்பட்டால், நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளலாம்.  தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், இரண்டு நாட்கள் உபயோகிக்கலாம்.

நாட்டுச் சுண்டைக்காய் என்று எழுதியிருக்கிறேனே, என்ன என்று கேட்பவர்களுக்கு - சுண்டையில் நாட்டுச் சுண்டைக்காய், மலைச் சுண்டைக்காய் என்று இரு வகை உள்ளது.  வீடுகளில், தோட்டங்களில் வளர்வது நாட்டுச் சுண்டை.  மலையில் வளர்வது - யெஸ்! கரெக்ட்!! மலைச் சுண்டைக்காயில் வற்றல் போடுகிறோம்.  

சுண்டைக்காய் கசக்கும் - இதில் என்ன பலன் என்று கேட்பவர்களுக்கு - சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்;  வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.  மெலும், அஜீரணக் கோளாறுகளை நீங்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.

முக்கியக் குறிப்பு: செய்து பார்த்து நல்லா இருந்தா, பாராட்டுகள் என் அம்மாவுக்கு!  அவர் சொல்லிக் கொடுத்த ரெசிபி தான் இது.  நல்லா வரவில்லையென்றால், நான் தான் சொல்வதில் எங்கோ தப்பு செய்திருக்கிறேன்.  :-)).  தாங்க்ஸ் அம்மா!

முக்கிய முக்கிய குறிப்பு: முன்னேயே சொல்ல விட்டுட்டேன் பாருங்க! சுண்டைக்காயின் இயல்பு கசப்பு. ஆனால், இந்த முறையில் செய்து சாப்பிட்டால், அவ்வளவு கசப்பு இருப்பதில்லை பாகற்காய் சாப்பிடாத என் மூத்த மகனும் இந்த சுண்டை வதக்கலை விரும்பிச் சாப்பிடுவான்.

Thursday, April 12, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

'நந்தன' வருடத்தில் நல்லதே நடக்கட்டும்!!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு/ சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!

Sunday, April 1, 2012

பக்தியென்னும் படிகளேறி....


மாதங்களில் மார்கழியான இறைவன்... விடியற்காலையிலேயே எழுப்பும் பாடல்கள்... சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை கேட்கும் ஆந்திரக் கோயில்கள்...
தையிலே தைப்பூசம் - நடந்தே செல்லும் பக்தர்கள் கூட்டம்.  மாசி, பங்குனி என்று உற்சவங்களும், வெயிலில் வெறுங்காலுடனே கலசம் ஏந்திச் செல்லும் அன்பர்கள்..... பங்குனி, சித்திரைகளில் தேர்த்திருவிழாக்களும் மற்றைய இறை கல்யாண வைபோகங்களும்.... வருஷா வருஷம் நடக்கும் நிகழ்ச்சியானாலும் குவியும் மக்கள் கூட்டம்!

எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக பக்தி!!

என்னைப் பொறுத்தவரை இறைசக்தி உண்டென்று நம்புகிறேன்.  அந்த சக்தியை எந்த வடிவில் வேண்டுமானாலும் கும்பிடலாம். இறைவன்/இறைவி இந்த வடிவில் கும்பிட வேண்டும் என்பது அவரவர் விருப்பமே. என் ஆங்கிலோ-இந்தியத் தோழி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போகும் தோழியரைப் பார்த்து, "என்ன, சர்ச்சுக்கா?" என்று கேட்பார்; அவரைப் பொறுத்த வரை இறைவன் குடியிருக்கும் இடத்துக்கு சர்ச் என்று பெயர்!!

இறைசக்தியைக் குறித்த இந்த எண்ணங்கள் என் சிறு வயது முதலே தொடங்கி விட்டன.  என் அண்ணா முறையாகும் கிருஷ்ணன் என்பவருடன் சின்ன வயதில் - பள்ளிப் பருவத்தில் - நடந்த சொற்போர் நினைவுக்கு வருகிறது.  என் மேற்கண்ட அபிப்ராயத்தைச் சொன்னவுடன் அவர் அது எப்படி சாத்தியமாகும் என்று என்னைக் கேட்டார். நான், "நீங்கள் எனக்கு அண்ணன்.  உங்கள் மனைவிக்கு கணவர்; உங்கள் குழந்தைகளுக்கு தந்தை; மற்றும் உங்கள் சொந்தக்காரர்களுக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமா,... இப்படி! உங்கள் அலுவலகத்தோருக்கு மேலதிகாரி, ஊழியர்... ஆனால், நீங்கள்  இத்தனை உருவங்களா, இல்லை, கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட ஒரே நபர். அப்படித் தான் கடவுளை எப்படி வணங்கினாலும் பரம்பொருள் ஒன்றே" என்று சொன்னேன்! 

மேலே சொன்னதை வைத்து பக்தி சிரோன்மணியாக என்னை எண்ணிக் கொள்ளாதீர்கள்! பக்தி எந்த அளவிற்குப் போகிறது என்று அண்ணாந்து வியந்து எழுதும் பதிவே இது.

பட்டினத்தாரின் இந்தப் பாடலைப் பாருங்கள்:

வாளால் மகவரிந் தூட்டவல் லேன்அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல் லேன்அல்லன்; தொண்டுசெய்த
 நாளாறில் கண் இடந்து அப்பவல் லேன்அல்லன்; நான்இனிச்சென்று
ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?

"சிவனடியார் கேட்டதற்காக, மகனையே வாளால் வெட்டிக் கொன்று பிள்ளைக்கறி அளித்த சிறுத்தொண்டர்; மனைவி சொன்ன சொல்லால், இளமையைத் துறந்து சத்தியம் செய்த திருநீலகண்டர்; ஆறே நாள் பழக்கத்தில் கண்ணையே பறித்து சிவனுக்கு வைத்த கண்ணப்ப நாயனார் - இவர்களின் செயல்களை என்னால் செய்ய இயலாது - நான்இனிச்சென்று
ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?" பட்டினத்தாரே இப்படி வியந்தால், சாதாரண மனிதர் எம்மாத்திரம்?

இவ்வளவு பின்னால் செல்வானேன்? ஸ்ரீரங்கத்து கோயிலுக்குப் போன அனுபவம் நம்மில் அநேகருக்கு உண்டு.  வானளாவ உயர்ந்து நிற்கும் தெற்கு ராஜகோபுரம் பற்றி பெருமையும் உண்டு.  கோயிலின் கிழக்கு வாயிலில் வெள்ளைக் கோபுரம் என்று ஒரு கோபுரம் இருக்கிறது. பக்கத்து மண்டபத்து குதிரைச் சிற்பங்களும் மிகவும் பிரசித்தம்.  மற்ற கோபுரங்கள் வண்ண மயமாய் காணப்பட்டாலும் இந்தக் கோபுரம் எப்போதும் வெண்ணிறம் தான்.  ஸ்ரீவேணுகோபாலனின் 'திருவரங்கன் உலா' படித்திருப்போருக்கு காரணம் தெரிந்திருக்கும்.  16, 17ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் - குறிப்பாக கோயில்களின் அளப்பரிய செல்வங்களைக் குறி வைத்து நடந்த ஒரு தாக்குதலின் போது, அரங்கனை படையெடுப்பிலிருந்து தப்புவிக்க எண்ணிய ஒரு ஆடல்மங்கை, ஆங்கிலேய தளபதியை மயக்கி, அவனை கோபுரத்திற்கு மேல் கூட்டிப் போய், அவனை அங்கிருந்து தள்ளிக் கொன்று, தானும் கோபுரத்தின் உச்சியிலிருந்து விழுந்து மடிந்தாள்.  அந்த பக்தை வெள்ளையம்மாளின் பெயராலேயே அந்த வெள்ளைக் கோபுரம் பக்தியின் அருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!!  
இறைசக்தியே!  என்னால் இவ்வளவு தூரம் பக்தி செலுத்த இயலுமா என்று தெரியவில்லை.  தாயுமானவ சுவாமிகளின் 'நெஞ்சமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சன நீர்! பூசை கொள்ள வாராய் பராபரமே!' - இதுவே தாரக மந்திரமாகி விட்டது.  
ஆனாலும், பக்தர்களை ஒரு வியப்புடனும் மரியாதையுடனும் பார்க்கிறேன்.  அவர்களின் பக்திக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!