Saturday, June 25, 2011

மாவீரன் - திரைப்பட விமர்சனம்          
          ஒரு சரித்திர காலத் திரைப்படத்தை வெகு நாட்களுக்குப் பிறகு பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்துடன் படம் பார்க்கத் தயாரானேன். தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த படம் (தெலுங்கில் - மகதீரா); சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்த படம் என்ற கூடுதல் காரணங்களும் ஆர்வத்துக்கு காரணம்.

          ஆனாலும் கதை இவ்வளவு காமெடியாக இருக்கும் என நினைக்கவில்லை. காதில் முழம் முழமாகப் பூவைச் சுற்றப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தே படத்தைப் பார்க்கப் போனாலும், பூமாலைகள் நிறையக் கிடைத்தன!

         400 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறுநில மன்னனின் மகளுக்கும் வீரர் படைத்தலைவனான ராஜ பார்த்திபனுக்கும் இடையே நிறைவேறாத காதல், இக்காலத்தில் என்ன ஆகிறது, நிறைவேறியதா இல்லையா என்ற கதை. முற்காலத்தில் வந்த வில்லன் சேனாதிபதி, இக்காலத்தில் அரச வம்ச வாரிசாக வருகிறான்!! ஹீரோ, ஹீரோயின் கைவிரல்களை யதேச்சையாகத் தொட, அவனுக்கு முற்பிறப்பு ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. ஆனால் ஹீரோயினுக்கு கிளைமாக்ஸில் தான் முற்பிறப்பு ஞாபகம் வருகிறது!!! வில்லனுக்கு இடைவேளை சமயத்தில்!!! ஆனாலும், வில்லன் ஹீரோயினை மணம் முடிக்க எல்லா வில்லத்தனமும் வழக்கம் போலச் செய்கிறான் - ஹீரோயினை நெருங்கும் போது, (பழைய) காதலனின் ஆவி வந்து தடுப்பதாக உணர்கிறான் - அதான் அந்த காதலன் மறுபிறப்பு எடுத்துவிட்டானே, இது என்ன ஆவின்னு யாரையாவது கேட்கலாம்னு பார்த்தேன். அப்புறம் எல்லாரையும் போல நானும் மூளையைக் கழற்றி வைத்து விட்டேன்!

           முற்பிறப்புக் கதையின் ஷேர்கான் பாத்திரம் நல்ல படைப்பு. இப்பிறப்பில் அவன் ஒரு மீனவனாகப் பிறந்து அனுமாரின் வேலையைக் காமெடியுடன் செய்கிறான்.

           சண்டைக்காட்சிகள் நடக்கும் இடம் அழகாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்கிறது. பெரிய காலபைரவர் சிலை. மலைகள் மேல்பரப்பு சமதளமாக உள்ளது - இரண்டு மலைகளையும் இணைப்பது ஒரு பாதை. முற்பிறப்பு வீரன், தன்னந்தனியாளாக 100 பேரை வீழ்த்த சவாலை ஏற்கிறான். முக்காலேமூணுவாசி பேரை வீழ்த்திய பின், சோர்வுற்ற தருணத்தில் இரண்டு வீரர்கள் பாய்ந்து வருகின்றனர். உடனே நம் ஹீரோ, ஒரே ஈட்டியின் மூலம் இருவரையும் குத்திக் கொல்லும் காட்சி இருக்கிறதே... சொல்ல வார்த்தைகளே இல்லை!! என்னையறியாமல் நான் கைதட்டி, 'ஆஹா, விஜயகாந்தால் கூட முடியாத காரியம்' என்று வியந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் சிலர் சிரித்தனர், சிலர் முறைத்தனர்!!

          நான் ரசித்த இன்னொரு காட்சி, கிளைமாக்ஸில் இதே மலைத்தொடர் - இக்காலத்தில்.  இடையில் உள்ள மலைப்பாதை சண்டைக்கு நடுவில் துண்டாகி விடுகிறது.  ஹீரோ, ஹீரோயின், வில்லன் மட்டும் ஒரு பக்கம்!.  வில்லன் ஹீரோவை அடித்துப் போட்டுவிட்டு ஹீரோயினை தனக்கு துணைக்கு வந்த ஒரு ஹெலிகாப்டர் மூலம் கடத்தப் பார்க்கிறான். அப்போது நம் மீனவ நண்பன் தான் வந்த காரைப் பறக்க விட்டு, ஹெலிகாப்டரின் மேல் மோதி, வில்லனை வீழ்த்தி, ஹீரோ-ஹீரோயினைக் காப்பாற்றுகிறான். என்ன ஒரு டெக்னிக்!! என் வியப்பு இன்னும் அடங்கவேயில்லை!

          ஹீரோயினைப் பற்றிச் சொல்லவில்லையே என்பவர்களுக்காக - காஜல் அகர்வால் அழகான மெழுகு பொம்மையாக வந்து போகிறார். எப்போது தான் ஹீரோயின்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவார்களோ?!!

          கடைசியாக, இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதியதன் காரணம், உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒளிபரப்பபடும்போது இத்திரைப்படத்தைக் காணத் தவறி விடாதீர்கள் என்று சொல்லத்தான்!!


Sunday, June 19, 2011

சமமான கல்வி!!


இலாகா இல்லாத மந்திரிகள்!
காத்திருக்கும் பட்டியலில் அதிகாரிகள்!

புத்தகமில்லாத குழந்தைகள்!!

ஓரங்கட்டிய மாரல் ஸயின்ஸும்
இங்கிலீஷ் தமிழ் இலக்கணமும்
கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு
கடன் போகும் பி.டி. பீரியடும்

முன்னுக்கு வந்தன!
சமச் சீரானது கல்வி!!
 
கொண்டாடும் குழந்தைகள்! - உள்ளுக்குள்ளே
உண்டா இதற்கும் பரிட்சை என்னும் ஐயத்துடன்!!

Tuesday, June 7, 2011

மொக்கை...

நிறைய பதிவுகளில் 'மொக்கை' என்று tag போடுவது என் வழக்கம்.  (சில சமயம் தலைப்பிலும் போடுவேன்!!) இதை எட்டிப் பார்த்துவிட்டு என் இளைய மகனும் 'அம்மா உண்மைய இங்காவது ஒத்துக்கறார்'ன்னு சந்தோஷப்படுவான்!! இந்த 'மொக்கை'ங்கற வார்த்தையோட அர்த்தம் என்னன்னு ஆராய்ச்சி பண்ணலாம்னு இறங்கினேன்.  சாதாரணமாக அறுவை என்ற பொருளில் நான் இந்த சொல்லை உபயோகிப்பேன்! இவ்வார்த்தை எப்படி வந்தது என்று வேரைப்(root) பார்க்கலாம் என யோசித்தேன்.

எதைத் தேடுவதானாலும் முதலில் கூகிளாண்டவர் தான்!

கூகிளாண்டவர் சொல்படி 'மொக்கை என்றால் என்ன' என்கிற ஆராய்ச்சி கி.பி.2007 லேயே பதிவுலகில் ஆரம்பித்திருக்கிறது! இதை வைத்து 'கிறளெ'ல்லாம் எழுதியிருக்கிறார்கள்!


ஒரு online tamil dictionaryயில் மொக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்த்த போது, "மன்னிக்கவும். நீங்கள் தேடிய சொல் இல்லை. உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்டது. விரைவில் இந்த வார்த்தைக்கான பொருள் பட்டியலில் சேர்க்கப்படும்" என்று சொல்லப்பட்டது. சரி, நம்மாலான தமிழ்த்தொண்டு என்று அடுத்த தேடலுக்குத் தாவினேன்!

மற்றொரு அகராதியில் 'மொக்கை' என்பதற்கு "ignominy, shame, disgrace, வெட்கம். 2.bulkiness, பருமை; 3. a notch in a knife; 4. bluntness of an iron style " இவ்வாறு பொருள் தந்திருந்தனர்.

வேறொரு தமிழ் அகராதியில் இந்த வார்த்தைக்கு, "கூரின்மை; பருமை; மரத்துண்டு; அவமானம்; தாழ்வு; மதிப்பு; முகம்" என்று அர்த்தம் போடப்பட்டிருந்தது!!

படித்த எனக்கு அவமானமாக இருந்தது!!  பதிவுலகில் நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கு இந்த அர்த்தம் வராதே! அறுவை, அர்த்தம் இல்லாத பதிவு போன்று தானே வரும்!??  எப்படித் தான் இந்த அர்த்தம் வந்திருக்கும்? சரி, மேலும் தமிழ்த்தொண்டுக்குத் தயாரானேன்!!
பெரிய மகனுடன் தமிழ் இலக்கணத்தைப் படித்தது நினைவுக்கு வந்தது; ஆகா, வார்த்தையைப் பிரித்துப் பொருள் பார்க்கலாமே!

மொக்கை = மொ+க்+கை!

இதில் ஈற்றுப் பகுதியில் இருக்கும் கை என்றால் கை! நடுவில் ஒற்று இரட்டித்துள்ளது! மொ என்றால்...??

மொ = ம்+ஒ; ம் என்றால் ஆம் என்பதன் மரூஉ. ஒப்புதல் எனக் கொள்ளலாம்! அப்போ, மொக்கை என்றால், கை இருக்குன்னு ஒத்துக் கொள்வதா??!! அப்படியென்றால், புழக்கத்தில் இருக்கும் அர்த்தத்தை வைத்துப் பார்த்தால், கை இருந்தாலே அறுத்துத் தள்ளலாம்!!!!

ஆமாமாம், கையை வைத்துத் தானே இதையெல்லாம் தட்டச்சினேன்!!

எப்படியோ, மொக்கைக்கு என்ன அர்த்தம் எத்தனை அகராதிகளில் சொன்னாலும் இப்போது ஒரே அர்த்தமாகிவிட்டது!  நாற்றம் என்ற நல்ல வாசனையான சொல் இப்போது துர்நாற்றத்தை மட்டும் குறிப்பது போல!!

 ஆக மொத்தத்தில், அர்த்தமே இல்லாமல் எழுதினால் அதன் பெயர் மொக்கையாம்!  ஐயையோ! நான் இங்கே அகராதியில் இருந்தெல்லாம் வேற அர்த்தம் போட்டுட்டேனே? அப்போ இது மொக்கை இல்லையா?!! :-((


டிஸ்கி: இந்தப் பதிவை எழுத உதவிய பல பதிவுலக துரோணர்களுக்கு இந்த ஏகலைவளின் நன்றிகள்.  இதற்காக என் கட்டைவிரலை எல்லாம் கேட்காதீர்கள்!.  அப்புறம்ஸ்பேஸ்பாரைத்தட்டமுடியாமல்இப்படிஎழுதவேண்டியிருக்கும்!!!!