Sunday, August 14, 2011

கதம்பம்--7

தாய்க்கு ஒரு தாலாட்டு
         
முதலில் என் லீவ் லெட்டரும் மன்னிப்புகளும். என் அம்மாவுக்கு நான் ஒரு அம்மா போல சில காலம் பணி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், வலைப்பூவிற்கு அடிக்கடி வர முடியவில்லை. என் நண்பர்களின் பதிவுகளைப் படிக்கிறேனே ஒழிய, பின்னுரை எழுத நேரம் கிடைப்பதில்லை. கூடிய விரைவில் டைம் மானேஜ்மெண்ட் செய்யப் பழகிக் கொள்கிறேன்.
              
என் அம்மா சமீபத்தில் தான் தீர்த்த யாத்திரை சென்று வந்தார். அவர் ஒரு விந்தை மனிதர். என் அப்பா இருந்தவரை அவரே அம்மாவின் உலகம் - அப்பா சொல்லே அம்மாவுக்கு வேதவாக்கு. எப்போதும் இப்போதும் அம்மாவுக்கு ஏதேனும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர் 10 நாட்கள் முன் வீட்டில் கீழே விழுந்ததில் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு. இப்போதும் அவரால் முடிந்த வேலைகளை அவரே செய்து கொள்கிறார். அணில் செய்யும் உதவி போல நான் அவருக்கு உதவுகிறேன். அவருக்கு தலை வாரி பின்னி விடுவது தான் எனக்கு விநோதமாக இருக்கிறது!! 
என் அம்மா விரைவில் நலம் பெற பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பெயரில் என்ன இருக்கிறது?

ஆட்சி மாறும் போது முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்களை உடைப்பில் போடுவது வாடிக்கையாகி வருகிறது.  பழைய மழை நீர்ச் சேமிப்பு திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப் படவில்லை.  சமீபத்தில் சமச்சீர் கல்விக்காக உச்சத்தில் வாங்கிய குட்டும் மறக்க முடியாது.  கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்றொரு திட்டம் - இத்திட்டத்தை, கூட சிலபல  வசதிகளைச் சேர்த்து, புது காப்பீட்டுத் திட்டமாக கொணரப் போகிறோம் என்று தற்போது சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் காப்பீட்டுத் திட்டம், இந்தியா முழுதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.  இது மத்திய அரசாங்கத்தின் திட்டம் - மாநில அரசின் மூலம் அமல்படுத்தப் படுகிறது.  வேறெந்த மாநிலத்திலும் முதலமைச்சர் பெயரில் ஆரம்பிக்கப் படவில்லை!!  தமிழ்நாட்டில் தான் இப்படி! 

6, 7 மாதங்களுக்கு முந்தைய நிகழ்வு - பேருந்தில் வரும் வழியில், திருப்பத்தில் ஒரு கடை - அந்தக் கடையில்  'கலைஞர் டிவிக்கு ரிமோட் கிடைக்கும்' என்று எழுதியிருந்தனர். முதலில் கலைஞர் சானலுக்கு தனி ரிமோட்டோ என்று குழம்பினேன், பின்னர் தான் இது கலைஞர் அரசு தரும் இலவச டிவிக்கான ரிமோட் எனப் புரிந்தது!

புதிய அரசுக்கு ஒரு வேண்டுகோள் - உங்கள் புதிய திட்டங்களுக்கு பொதுவான பெயர்களை வையுங்கள். உங்கள் பெயரைத் தான் திட்டங்களுக்கு வைத்து ஞாபகப் படுத்த வேண்டும் என்பதல்ல - நல்ல திட்டங்களால் உங்கள் பெயர் நிச்சயம் நிலைக்கும்!!  பொதுப் பெயர்கள் அன்றி வேறு பெயர்கள் தான் வைக்க வேண்டுமென்றால் மக்களுக்கு நன்மைகள் செய்த, நேர்மையாக வாழ்ந்த தலைவர்களின் பெயரை, ஜாதி, இன, கட்சி வேறுபாடின்றி வைக்கலாமே?!

பேருந்தில் பேசாதே!

பேருந்தில் அனாவசிய விஷயங்கள் எதுவும் பேசக் கூடாது என்பது என் கொள்கை.  சிலரை நெடுநாள் கழித்து பேருந்தில் பார்க்க நேரிடும் போதும், முடிந்தவரை சொந்தத் தகவல்களை பேருந்தில் கத்திப் பேசுவதை தவிர்த்து விடுவேன்.
அன்றொரு நாள், கிட்டத்தட்ட ஏழெட்டு  வருடங்களுக்குப் பிறகு, பழைய தோழியைப் பேருந்தில் பார்த்தேன்.  அவர் எனக்குப் பின்னால் சீட்டில் அமர்ந்திருந்தார்.  பொது கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன்.  பஸ்ஸில் கூட்டமும் அதிகமாக ஆரம்பித்தது.  அப்போது அவர் என்னிடம், "உன் மகன் பெரியவனாகி விட்டானா?" என்று கேட்டார்.  அவன் ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்ததை மனதில் வைத்து "ஆமாமா" என்று மட்டும் பதில் சொன்னேன்.  "அப்புறம் கல்யாணத்தைப் பண்ணி வைத்து விட வேண்டியது தானே?" என்று அவர் சத்தமாகக் கேட்கவும் நொந்து போனேன்!!.