Thursday, April 28, 2011

உயி..உயி..உயி..

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது!  
        'ண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'பம்மல் கே.சம்பந்தம்' இந்தப் படங்களில் ஒரு தாத்தாவைப் பார்ததிருப்பீர்கள்... இரு படங்களிலுமே இந்தத் தாத்தா உயிலை மாற்றாமல் கடைசி நிமிஷத்தில் 'உயி..உயி..உயி..' என்று என்ன சொல்கிறார் என மற்ற கதாபாத்திரங்களால் புரிந்து கொள்ள முடியாமலே இறந்து விடுவார்.
          ன் அப்பா சிறிதளவு பாரிச வாதத்தாலும் ஹை பிளட் பிரஷர் இன்ன பிற வியாதிகளாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.  அவரது இறப்பு எந்நேரமும் நடக்கலாம் என்று அவர் எதிர்பார்த்திருந்தார்.  இதற்கு எங்களை - அதாவது அவர் மனைவி மற்றும் இரு சிறு பெண்களை தயாரும் செய்தார் - வீட்டின் சேமிப்பு என்னென்ன, எங்கேயிருக்கின்றன, நகைகள் என்னென்ன, என்ன எடை என்ற லிஸ்ட் போட்டிருந்தார்.  (எங்களைப் படிக்க வைப்பதற்குள் இவை எல்லாம் போய்விட்டன - அப்பாவே தான் விற்றார்!!)  இறந்தவுடன் யார் யாருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற லிஸ்டும் தயாராக இருந்தது.  கொள்ளி போட உரிமையுள்ள ஆண்மகன் வர இயலாவிடில் என்னைக் கொள்ளி போடும்படியாகவும் சொல்லியிருந்தார்! ஒரு உயிலில் செய்ய வேண்டியதை வாய் மூலமாகவும் அட்டவணைகள் மூலமாகவும் அவர் செய்திருந்தார்.  அந்தப் பருவத்தில் இவை எனக்கு அதீதமாகப் பட்டன. இப்போது நியாயம் எனத் தோன்றுகிறது.
          நாளிதழ்கள், செய்திகள் பார்க்கும்போது ஒரு உண்மை புரியும், 'மனித வாழ்க்கை நிலையானது அல்ல' என்பது.  என்ன எப்படி எப்போது நடக்கும் எனத் தெரியாத இந்த ஆச்சரியமான உலகில், நாம் சம்பாதித்ததை 'கொண்டு' போக இயலாத போது, அது யாருக்குப் போக வேண்டும் என்று எழுதி வைப்பது அவசியம்.  நான் என்னுடைய இன்சூரன்ஸ் பாலிசியின் விவரங்கள், சேமிப்புப் பத்திர விவரங்கள் இவற்றை எழுதி பீரோவில் வைத்திருக்கிறேன். (திருடன் நொந்து விடுவான், பீரோவில் வேறு விலைமதிப்பான பொருட்கள் இல்லை!) இந்த 'சொத்து' விவரங்கள் என் குழந்தைகளுக்கும் தெரியும். 

         








 த்தகைய விவரங்களை உயிலாகவும் பதியலாம்.  உயிலாக அறியப்பட எழுதியவரின் கையெழுத்து, சாட்சிக் கையெழுத்துகள் முதலியன தேவை.  உயில் போன்ற எதுவும் இல்லையென்றால் வாரிசுரிமைச் சட்டதத்தின்படி சொத்துக்கள் பகிரப்படும்.  எல்லாவற்றையும் விட முக்கியமானது உயில் என்று ஒன்றை எழுதி வைத்தாலும் சரி, விவரங்களைக் குறித்து வைத்திருந்தாலும் சரி, அதை நிலைமைக்குத் தகுந்தவாறு அவ்வப்போது அப்டேட் / மாறுதல் செய்ய வேண்டும்.  இல்லையென்றால், முதல் பத்தியில் சொன்ன தாத்தா மாதிரி தான் ஆகும்!
          சொத்துக்கள் சுய சம்பாத்தியமாகவும் நிறையவும் இருந்தால் கட்டாயம் உயில் எழுதிப் பதிவு செய்யுங்கள்! விவரமாகப் பார்க்க இந்த லிங்க்கைப் பார்க்கவும்.  இது முதியோருக்கு மட்டுமல்ல,  எல்லாருக்கும் பொருந்தும் - மாறிவரும் கால கட்டத்துக்கேற்ப நாமும் முன் ஜாக்கிரதையாக இருப்போம்! நமது சம்பாத்தியம்/சொத்து நாம் போய்ச் சேரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சரியாகப் போய்ச் சேரவேண்டுமல்லவா?!!

டிஸ்கி: தாத்தாவாக நடித்த 'உண்ணிகிருஷ்ணன் நம்பூத்ரி' படம்:

Thursday, April 21, 2011

தற்கொலையைத் தவிர்ப்போம்!


          குழந்தைகளின் தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க பெற்றோர் என்ன செய்யலாம் என்ற என் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளேன்.  குழந்தைகள் என்று இந்தப் பதிவில் சொல்லியிருப்பது சிறிய குழந்தைகளுக்கு மட்டுமன்றி வளர்ந்த குழந்தைகளுக்கும் பொருந்தும்.

           பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வெளிவர ஆரம்பித்து விட்டன.  பொதுத் தேர்வுகளின் முடிவு வரும் தேதியும் சொல்லப்பட்டு விட்டது.  குழந்தைகள் தேர்வு முடிவினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
          இது ஏன்?  பெற்றோர் தாம் நினைத்து செய்ய இயலாமல் போனதை, தம் குழந்தைகள் செய்ய வேண்டும் என நினைப்பது ஒரு முக்கிய காரணம்.  நான் பட்டப்படிப்பு முடித்தவுடன் (IAS தேர்வு முடிக்கும்வரை!) முதுகலைப் பட்டமும் அதற்கு மேலும் பெற்று ஆசிரியை ஆக விரும்பினேன்.  படிக்க நினைத்ததை படிக்க முடியாமல் போனது காலத்தின் கட்டாயம்.  (சிவில் சர்வீஸஸ் தேர்விலும்   வராமல் வேறு பணியில் ஈடுபட்டிருப்பது ஜனங்களின் நல்ல காலம்!)  இதற்காக என் குழந்தைகள் மேல் இந்த ஆசைகளைத் திணிப்பது நியாயமா?  அவர்களுக்கு எந்தத் துறையில் (படிப்பிலோ விளையாட்டிலோ) எந்த ஸப்ஜெக்டில் ஈடுபாடு உள்ளதோ அதில் அவர்களை வளர்த்து விட்டு அவனியில் முந்தியிருப்பச் செய்வது தான் பெற்றோரின் கடமை.  இதை விட்டு விட்டு மதிப்பெண் குறையக் கூடாது, ரேங்க்/கிரேட் குறையக் கூடாது என்று குழந்தைகளை வற்புறுத்தினால்... மனம் நொந்து தற்கொலை முடிவை அவர்கள் தேடிக் கொள்கிறார்கள்.
          தற்கொலை என்ற எண்ணம் வருவதற்கு தொலைக்காட்சி (ந்யூஸ் சானல் உட்பட), செய்தித் தாள்கள், சில வலைத்தளங்கள், ஏன் சில கம்ப்யூட்டர் கேம்ஸ் - எல்லாமே தூண்டுகோலாய் இருக்கின்றன.  குழந்தைகள் பார்க்கும்/படிக்கும் எல்லாவற்றையும் நாம் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.  மிகுந்த கட்டுப்பாடு கூடவும் கூடாது - அது வெறுப்பைத் தான் திணிக்கும்.  குழந்தைகள் கூடவே பெரியவர்கள் உட்கார்ந்து நேரம் செலவிடுவதும், செய்திகள்/நிகழ்ச்சிகள் பற்றி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இயன்றவரை உண்மையான பதிலைச் சொல்வதும் நல்லது.  அவர்களின் கவலைகளைப் புரிந்து கொண்டு அதற்கு தீர்வைச் சொன்னால் - என் அம்மா, அப்பாவைப் போல் உண்டா என்று நம் பேரக் குழந்தைகளிட்ம் கட்டாயம் சொல்வார்கள்!  Good touch, bad touch  பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.  அவர்கள் சொல்லும் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் செவிமடுப்பது அவசியம்.
          தற்கொலைகளுக்கு அடுத்த காரணமாக இருப்பது காதல்.  டீனேஜில் நுழையும் குழந்தைகளிடம் இது பற்றி பெற்றோர்கள் பேச வேண்டியது தற்போதைய காலகட்டத்தில் மிக இன்றியமையாதது.  காதலுக்கும் infatuationக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். 
          வளர்ந்து விட்ட குழந்தையா, அவர் காதலில் உண்மையும் அவர் தேர்ந்தெடுத்த துணை நல்லவராகவும் இருக்கிறாரா - காதலுக்கு பச்சைக் கொடி காட்டினால் தான் என்ன?  அந்தத் துணை நல்லவர் இல்லையென்றால் அதை மகனோ, மகளோ புரிந்து கொள்ளும்படி எடுத்துரைக்க வேண்டியதும் பெற்றோரின் கடமை தான்!
          எல்லாவற்றிற்கும் மேலே நம் குழந்தைகளின் நல்வாழ்வை விட -  அவர்கள் வாங்கும் மதிப்பெண்ணோ, காதல் திருமணத்தால் பாதிக்கப்படுமோ என்று நினைக்கும் குடும்ப கௌரவமோ முக்கியமில்லை என பெற்றோர் தெளிவதுடன், இந்த எண்ணத்தை குழந்தைகளுக்கும் உணர்த்த வேண்டும்.
         இவை தவிர கடன் தொல்லை, குடி - குடும்பத் தகராறு என்றும் தற்கொலைகளுக்கு காரணங்கள் இருக்கின்றன. இவை பெற்றோரின் பிரச்னைகள். இவற்றை பெற்றோர் தன்னம்பிக்கையுடன் தாமே களைய வேண்டும்-  குழந்தைப் பருவத்தை குழந்தையாகவே கழிக்க விடுங்கள்!
         என் வாழ்வில் நான் சந்தித்த அனுபவத்தைச் சொல்கிறேன்.  என் இளைய மகனுக்கு அப்போது 3 வயதிற்குள் தான்.  குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் என் அம்மா அப்போது வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், என் உறவினர் ஒருவர் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள என் வீட்டிலேயே வந்து தங்கியிருந்தார்.  அவருக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது புது அனுபவம்.  மூத்த மகன் பள்ளி சென்று விடுவான்; இளையவனைப் பார்த்துக் கொள்வது தான் கடினம்.  நானும் என் கணவரும் பணிக்குச் செல்லும் வேளைகளில் A.R.Rahman பாடல்கள், கார்ட்டூன் என்று பொழுதைக் கழித்த அவன், ஒரு நாள் நான் வீடு வந்தவுடன் "நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்றான்.  அதிர்ந்து போனேன் நான்! வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அப்படியா, நானும் துணைக்கு வருகிறேன்" என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு எங்கே போக வேண்டுமோ அங்கே கூட்டிப் போகச் சொன்னேன்.  அவன் தெருவைக் கடந்து எதிரே இருந்த வெட்டவெளிக்கு கூட்டிப் போனான்.  "இப்போ என்ன செய்யணும்?" என்று கேட்டேன்.  "ஒரு கல்லை எடுத்து நம் தலையில் நாமே போட்டுக் கொள்ளணும்" என்றான்!!  எனக்கு சிரிப்பு ஒருபுறம், நிம்மதி ஒரு புறம்.  "எல்லாம் சின்னக் கல்லாயிருக்கு, அழுக்காவும் இருக்கு; வா, வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் நாளைக்கு வரலாம்" என்று சொல்லி சமாளித்தேன்.  Enquiry commission  நடத்தியதில் சாட்சி சொன்ன மூத்த மகன், சின்னவன் பார்த்த 'the mask' கார்ட்டூனில் அந்த ஹீரோ பேசும் வசனம் அது எனத் தெளிவுபடுத்த, இது பற்றி தனி வகுப்பு என் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது!!

         


Sunday, April 10, 2011

கதம்பம்-5

சாதித்த அண்ணா ஹசாரே:

          ஆம், அவர் அன்னா இல்லை, அண்ணா ஹசாரே தான்.  அவர் இயற்பெயர் Kisan Bapat Baburao Hazare (Marathi: किसन बापट बाबुराव हजारे).  தமிழில் பெரிய சகோதரரை அண்ணா என்று அழைப்பது போலத் தான் - மஹாராஷ்டிரர்களால் மரியாதையுடன் 'அண்ணா' ஹசாரே என்று அழைக்கப்படுகிறார்!   விக்கிபீடியாவில் இந்த லிங்கில் அவரைப் பற்றிப் படிக்கலாம்.  சகோதரி asiya omar  சொன்னது போல் அவர் வாழ்க்கை திரைப்படமாக வந்த 'உன்னால் முடியும் தம்பி' போலத் தான்! ஆனால் இவரது வாழ்க்கை இன்னும் சாதனைகள் நிறைந்தது.
          படிக்க இயலாமல் விட்டவர், சிற்சிறு வேலைகள் செய்தவர், செய்த தவறுக்கு பயந்து  இராணுவத்தில் சேர்ந்தவர், - 1965-ல் தமது 25ஆவது வயதில் இந்தோ-பாக் யுத்தத்தின் ஒரு பகுதியில் உயிர் தப்பிய ஒரே வீரர்.  பிறகு தாம் உயிர் தப்பியதிற்கு காரணம் ஏதோ உள்ளது எனத் தெளிந்து தம் பூர்விக கிராமமான Ralegan Siddhi (மஹாராட்ஷ்ட்ரா) யில் மதுவை ஒழித்து நீர் வளங்களிலும் விவசாயத் தேவைகளிலும் தன்னிறைவு பெறச் செய்தார்.  20 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கிராமத்தில் மதுவோ, சிகரெட், பீடி முதலியனவோ விற்கப்படுவதில்லை!  மேலும் இவர் தமது உண்ணா நோன்பினை ஆதாரமாக வைத்தே தம் மாநிலத்தில் Right to Information Act ஐக் கொணர மூலகாரணமாகச் செயல்பட்டவர்; பின்னர் இது இந்தியா முழுவதும் சட்டமாக்கப்பட்டது.  பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை வாங்கியவர்.
          தமது 72ஆவது வயதில் இவரது தற்போதைய சாதனையான ஜன் லோக்பால் பில் பற்றி பல பதிவர்களும் எழுதி விட்டனர்.  அதனால் நான் அதற்குள் போகப் போவதில்லை. 
          அண்ணா என்று அழைக்கப்படுவது சரிதானே?!!

ஓட்டு(VOTE) போடுவதற்கு முன்:
          எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்.  நீங்கள் ஏற்கெனவே படித்திருந்தால் ஸ்கிப் செய்யலாம்:

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.
இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...
குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??

இந்த அஞ்சலில் இதற்கு மேலும் ஒரு கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்யப்பட்டுள்ளதை நான் சேர்க்கவில்லை.  இலவசம் என்ற பெயரில் நம் வரிப்பணத்தை செலவழிக்கப் போகும் எல்லாக் கட்சியினருக்கும் மேலே சொன்னது பொருந்தும்.  குஜராத்தை ஆளும் கட்சிக்கும் நான் ஆதரவு கொடுக்கச் சொல்லவில்லை!
          கட்டாயம் ஓட்டுப் போடுங்கள்.  வேட்பாளர்களில் உங்கள் தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் எனச் சிந்தித்து ஓட்டுப் போடுங்கள்.  ஓட்டுப் போட விருப்பமில்லையென்றாலும் அதைப் பதிவு செய்யுங்கள். நம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்!

ஜோக்:
         இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளின் தொலைக்காட்சி சானல்களைப் பாருங்கள் - 'ஞாபகம் வருதே' - சக்கை போடு போடுகிறது!  அன்றும் இன்றும் என்று பழைய கூட்டணிப் பேச்சும் இன்றைய பேச்சும்!  இதைத் தவிர ஜோக் வேண்டுமா?!!         
          சரி, கற்பனை செய்து பாருங்கள்.  ஏப்ரல் 13 நம் கடமை முடிந்து விடும்.  ரிசல்ட் தெரியும் வரை - அந்த நீண்ட ஒரு மாத இடைவெளியில் -தலைவர்களின்/வேட்பாளர்களின்  நிலை என்னவாக இருக்கும்?!!

Thursday, April 7, 2011

தங்கமான தருணங்கள் (Golden memories)

சொன்னதும் செய்ததும்:
 'இந்தியா தோற்காது- கிரிக்கெட்டும் நானும்'- பதிவில்- //இந்தியன் டீம் வேண்டுமானால் தோற்குமே தவிர, இந்தியா என்றும் தோற்காது!
இந்தியன் டீம் ஜெயிக்க நம் கிரிக்கெட்டர்கள் டீம் ஸ்பிரிட்டுடன், கடைசி ஓவர் வரை நம்பிக்கை இழக்காமல் விளையாடினால் போதும். எண்ணங்களின் சக்தியைப் பற்றி படித்திருப்பீர்கள்! இந்தியன் டீம் கட்டாயம் ஜெயிக்கும் என நம்புங்கள்!//  என எழுதியிருந்தேன்.  இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது!  யாராவது தீவிர கிரிக்கெட் ரசிகர்களிடம் மாட்டிக் கொள்வோமோ என்று!  நம் வீரர்களின் திற்மையாலும் நம்பிக்கையாலும் கோப்பையை வென்று விட்டோம்!
          இனி IPL - இவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது எனினும் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பொழுது போகும்!
        
பார்த்ததும் கேட்டதும்:
          உலகக் கோப்பை கிரிக்கெட் மாட்ச் மழை முடிந்தாலும் தூவானம் விடாதது போல - பல தொலைக்காட்சி  சானல்களில் பார்த்ததும் கேட்டதும்:
  • தோனி கோப்பை வாங்கிய மறு நாள் கோப்பையுடன் புகைப்படம் எடுப்பதற்கும் ஜனாதிபதியின் தேனீர் விருந்துக்கும் போன போதும் 'dhoni's clean sweep' என்று அவர் மொட்டை போட்டுக் கொண்டதைப் பற்றி headlines! இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் கருதி முடி காணிக்கையை தள்ளிப் போடாமல் உடனே நிறைவேற்றிய நேர்மை எனக்குப் பிடித்திருந்தது!
  • யூசுப் பதான் பற்றி அவர் கோச் பேசும் போது பதான் சகோதரர்கள் ஸ்டேடியத்தில் வேலை பார்த்தது பற்றி சொல்லி விட்டு - இது பற்றி பதான் சகோதரர்களே சொல்லிக் கொள்வார்கள், தாங்கள் கடந்து வந்த பாதையை மறக்காதவர்கள் என்றார் பெருமையுடன்!
பல்ப் - வாங்கியதும் கொடுத்ததும்:
         உலகக்கோப்பை இறுதிக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமானவுடன் என் இளைய மகன் (என் பாசத்திற்குரிய எதிரி!!) என்னிடம் 'இன்று போட்டி முடியும் போது நீ அழுவியா, சிரிப்பியா?' என்றான்.  நான் அழுவேன் என்று பதில் சொன்னேன்.  வென்றால் நெகிழ்வில் அழுகை! தோற்றால் இயலாமையில் அழுகை!  என் மகனோ (அதான் எதிரி) 'இந்தியன் டீம்(!) தோத்துடும், நான் சிரிப்பேன்'  என்றான்.  போட்டி முடிந்தவுடன் இரண்டு பேரும் பல்ப் வாங்கினோம்! நான் சிரித்துக் கொண்டே அழுது கொண்டிருந்தேன், என் மகனும் சிரித்துக் கொண்டேயிருந்தான்!!