Saturday, November 12, 2016

ஐநூறு ரூபாயும், ஆயிரம் ரூபாயும் பின்னே ஞானும்!

ஒரு பதிவை ட்ராஃப்டில் சேமித்து வைத்து அதன் கதாநாயகனிடம் அபிப்ராயம் கேட்டு பிரசுரிக்கலாம் என்று 8ந் தேதி மாலை முடிவு செய்திருந்தேன்!! 8 மணிக்கு மோடி அவர்கள் என் பதிவின் முக்கியத்துவத்தை மூடி விட்டார்!! கைப்பேசியில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் என் கணவர், ந்யூஸைப் பார் எனவும்,  முதலில் நான் அந்தச் செய்தியை நம்பவில்லை! சானல் சானலாக மாற்றிப் பார்த்த பின் தான் நம்பினேன்! உடனே முகநூலில் ஸ்டேடஸ் போட்டு, வாட்ஸ் அப் குரூப்பில் ஏத்தியது எல்லாம் இங்கே வேண்டாத விஷயம்!!


சில நாட்கள் முன்னால்,  Arthkranti அமைப்பைச் சார்ந்த Sri Anil Bokil பிரதமரைப் பார்க்க 9 நிமிடம் கிடைக்கப் பெற்றவர், 2 மணி நேரம் கறுப்புப் பண ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார்!!  இதில் பெரிய தொகை ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்குவதும் அடக்கம்!!
அரசாங்கம் சில மாதங்களாக எடுத்து வரும் ஒவ்வொரு திட்டமும்  இந்த முடிவு நோக்கியே பயணப்பட்டதாகவும், வங்கிகளின் பண இருப்பு, பரிமாற்றம் பற்றி எப்படி தகவல்கள் நவீன தொழில்நுட்ப உதவியோடு உடனடியாய் பரிமாற்றப் பட்டன என்பதை எல்லாம் முகநூல், ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம்! 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் காட்சியையும் டிவி சானல்கள் போட்டுக் காட்டின!
டிவி சானல்களின் சில நேர்முக உரையாடல்கள் மூலம் புதிய சிந்தனைகளையும் அறிய முடிந்தது!! 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரயில்வே, ஏர்லைன்ஸ் ரிசர்வேஷனுக்கு உபயோகிக்கலாம் என்றவுடன்,  நேரடி ரிசர்வேஷன் பல மடங்கு உயர்ந்து விட்டதாம்!! வெயிட்டிங் லிஸ்ட் எவ்வளவாயிருந்தாலும்!! பின்னர் கான்ஸல் செய்து செல்லத்தக்க ரூபாய்த் தாள்களாக வாங்கலாம் என்பது சிலரின் மாஸ்டர் பிளான்!! அரசாங்கமோ, கான்ஸல் செய்தால் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைப்போம் என்று விட்டதாம்!! 'வல்லவனுக்கு வல்லவன்!'


9ந் தேதி நான் என் அம்மாவுடன் டாக்டரிடம் செக் அப் செய்ய வேண்டும்! அவர் மாதக் கணக்கில் மருந்து எழுதித் தருவதால், நிறைய பணம் தேவைப்படும்! எங்களுடைய வீட்டில்  ஏடிம்மில் எடுத்து வைத்திருந்ததில் கைவசம் 500ம் 1000மும் தாமிருந்தன.  அந்த மருத்துவமனை மருந்தகத்தில் டெபிட் கார்டு, நெட் பாங்கிங், பேடிம்   வசதி எதுவும் இல்லை! டாக்டர் எழுதித் தரும் மருந்துகளோ அந்த மருந்தகத்தில் தான் கிடைக்கும்! டாக்டர் ஃபீஸும் தரணும்!! குழப்பத்தில் அன்று நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை!! அடுத்த நாள் என்ன தான் நடக்குமென்று பார்ப்போம் - மாத்திரை மருந்து கைவசம் தீர்ந்து விட்டது வேற -  என்று கிளம்பி விட்டோம்!! பழகின இடம் என்பதால் எல்லா இடத்திலும் 500 ரூபாய்த் தாள்கள் வாங்கிக் கொண்டனர் - ஒரு கண்டிஷனோடு - 300 ரூபாய்க்கு மேல் என்றால் 500 ரூபாயும், 800 ரூபாய்க்கு மேல் என்றால் 1000 ரூபாயும் பெற்றுக் கொள்ளப்பட்டது!! சில்லறைப் பிரச்னைக்காக இந்த கண்டிஷன்!! சில வயதானவர்கள் பல மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை   500, 1000  ரூபாய்த் தாள்களைக் கொடுத்து வாங்கிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது! பாவம், அவர்கள் பணத்தை மாற்ற க்யூவில் போய் நிற்க இயலாதவர்களாகவோ,  வங்கிக்கு அனுப்ப வேறு ஆட்கள் இல்லாதவர்களாகவோ இருக்கலாம்!
பக்கத்து மளிகைக் கடையிலும் 500 ரூபாய் வாங்கிக் கொண்டனர்! அதை அவர்கள் தங்கள் கடையின்   வங்கி நடப்புக் கணக்கில் விற்பனை என்று போட முடியுமல்லவா!! ஆக, நடுத்தர மக்களிடையே அவேர்னஸ் இருப்பதையே பார்த்தேன்!!
நான் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சின்ன தொகையை 'எமர்ஜன்ஸி ஃபன்ட்' என்று சாமிக்கு நேர்ந்து விட்டதைப் போல் தனியாக வைத்திருப்பேன் - (கணக்கில் வந்த தொகை தான் - வீட்டின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்) - இதில் சில 1000, 500, 100, காயின்ஸ் என்று பல்வேறு டினாமினேஷனில் வைத்திருப்பேன்.  100 ரூபாய்த் தாள்கள் 20 இருந்தன - இது தான் இந்த எமர்ஜன்ஸியில் எங்களுக்கு உதவுகிறது.  தற்சமயம் செல்லாத  பெரிய நோட்டுகளை மாற்றி வைக்க வேண்டும் - பிற்கால எமர்ஜன்ஸிக்கு.
நான் பிறகு எவ்வளவு பணம் மாற்றினேன் என்று கேட்கிறீர்களா!! கும்பலில் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது என் அப்பா எனக்கு எடுத்த பால பாடம்!! போக மாட்டேனே!! இன்னும் ஒரு வாரமாவது ஆகும்!! காய்கறி, பூ வாங்குவது தவிர எல்லாம் ஆன்லைன் தான்!!
உங்கள்  அனுபவத்தையும் பகிருங்களேன்!!