Friday, December 23, 2016

வெண்டைக்காய் புளி குத்தின கறி!

வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் 
வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்றால் பொடியாக நறுக்கி ஃப்ரை செய்தால் என் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்டஃப்ட் கறி என்றால் என் கணவருக்கும் பெரிய பையனுக்கும் மிகவும் பிடிக்கும். நேரம் இருப்பதைப் பொறுத்தும், வெண்டைக்காயின் தன்மையைப் பொறுத்தும் இன்ன மாதிரி செய்யலாம் என்று முடிவு செய்வேன்.
என் மாமியார் மிக அருமையாக சமைப்பார். ரசம் வைப்பதன் பேசிக் எல்லாம் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். என் கணவர் தம் அம்மா செய்யும் வெண்டைக்காய் புளி குத்தின (விட்ட) கறிமேது பற்றி சிலாகித்து (சொல்லாடலுக்கு நன்றி - கலைஞரின் ராமானுஜர்!!)  சொல்ல, அவரிடம் இந்தச் செய்முறையைக் கற்றுக் கொண்டேன். சாதாரணமாக வெண்டைக்காய் வதக்கும் போது, அளவு கம்மியாகி விடும்.  இந்த முறையில் அளவு அவ்வளவு குறைவதில்லை. இம்முறையில் புளித் தண்ணீரில் வெண்டைக்காயை வேக விட்டு செய்வதால் இந்தப் பெயர்.   மற்ற  வெண்டை கறிகளுக்கு நான் சிறிதளவு ஆம்சூர் பவுடர் போடுவேன். 
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் -  அரை கிலோ அல்லது தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு
வத்தல் மிளகாய் - 6
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
பெருங்காயத் தூள் - சிறிது
எண்ணை - தாளிக்க
மற்றபடி அடுப்பு, வாணலி, கரண்டி இத்யாதி.....
செய்முறை: வெண்டைக்காயை அலம்பி துணியில் துடைத்து வைத்துக் கொள்ளவும்.   ஒரு சின்னக் கொசுவத்தி: சின்ன வயதில், என் அப்பா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டிருந்த ஒரு முறை, என் அம்மா அப்பாவுக்குத் துணையாக அங்கேயே தங்கி இருந்தார்.  வெண்டைக்காய் தான் இருந்தது வீட்டில் சமைப்பதற்கு. அதற்கு முன் அம்மா என்னை சமையல் அறைக்குள் அனுமதித்ததே இல்லை - சமையலறை ஒரு ஆள் இருக்கும் அளவு தான் இருக்கும் என்ற முக்கியமான காரணமும் இருந்தது!! -  அம்மா என்னிடம் கொடுக்கும் காய்கறியை நறுக்கித் தரும் அளவு தான் அனுமதிக்கப் பட்டிருந்தேன் - இதனால் அப்போது சமைக்கும் போது, வெண்டைக்காயை நறுக்கிய பின் அலம்பி - இன்னமும் எனக்கு அந்த பிசினாக வந்த காட்சியை மறக்க முடியவில்லை!! கூட்டு கம் கறியாக அது பின்னர் பரிமளித்தது!! ஹாஸ்பிடலில் இருந்த அப்பாவுக்கு சாப்பிட ஈஸியாக இருந்தது!!!!

அதனால், வெண்டைக்காயை நன்றாக அலம்பி, நல்ல துணியால் ஈரம் போக துடைத்துக் கொள்ளவும்.  இந்த செய்முறையில் சிறிது ஈரம் இருந்தாலும் நோ ப்ராப்ளம்.


புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பின், வடிகட்டி புளித் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பு ஏற்றி, வாணலியை வைத்து, எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும். வெண்டைக்காயையும் புளித் தண்ணீரையும் விட்டுக் கொதிக்க விடவும். மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள் இப்போது போட்டுக் கொள்ளலாம்.

முக்கால் பதம் வெண்டை வெந்தவுடன் அடுப்பை அணைத்து, காயை வடிகட்டிக் கொள்ளவும்.
புளித் தண்ணீரை ஒட்ட வடிகட்டியபின், மீண்டும் ஏற்றிய அடுப்பில் - வாணலியில் இதை இட்டு, தேவையான உப்பும் போட்டு வதக்கவும்.  நான் இந்த நேரத்தில் மிளகாய் வற்றலை எடுத்து விடுவேன், இல்லையென்றால் சாப்பிடும் போது கடிபடும். (பிடித்தவர்கள் மிளகாயோடு பரிமாறலாம்) வெண்டைக்காய் பதமாக வெந்த பின் அடுப்பை அணைத்து விடலாம்.

சூப்பர் லேசான புளிப்பு சுவையோடு கூடிய வெண்டைக்காய் புளி குத்தின கறி தயார்!!  

என் மாமியாரிடம் கற்றுக் கொண்டபின் முதல் முதலாக சமைத்த போது,  வேக வைத்த பின்  கரண்டியில் சிறிது எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். அவர் 'நாங்கள்ளாம் மஞ்சள் பொடியும் பெருங்காயமும் போடுவோம்' என்று சொன்ன பின் அதையும் சேர்த்தேன்!!  இப்போது எழுதின பிறகும் அதை முதலில் விட்டு விட்டு பின்னர் தான் சேர்த்தேன். :-))  மாமியார் தாம் கற்றுக் கொடுத்தது என்பதை மறக்காமல் அவருக்கு உடனே நினைவு படுத்தி விட்டேன் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன!!

Tuesday, December 6, 2016

புரட்சித் தலைவிக்கு அஞ்சலி!


நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அபிமானியும் இல்லை. அரசியலில் அவ்வளவு ஆர்வமும் இல்லை. ஆனாலும் என் மனதில் சோகத்தைக் கவிய வைத்தது இந்த மரணம்!!
புரட்சித் தலைவி என்ற பெயரை முதன்முதலில் கேட்ட போது என்ன புரட்சி செய்து விட்டு இந்தப் பட்டம் என்றே நினைத்தேன். புரட்சித் தலைவர் பட்டத்துக்குச் சமமாகக் கொடுக்கப்பட்டதே எனவும் நினைத்தேன்.  ஆனாலும் இந்தப் பட்டத்துக்கு தகுதியானவர் என்று தன் பல்வேறு தைரியமான விரைவான முடிவுகளாலும், அணுகுமுறையாலும், நீரூபித்திருக்கிறார்.  இனி ஒரு தலைவி இப்படி இருப்பாரா என்று சந்தேகம் தான்!  
கட்சி பாகுபாடின்றி அனைவராலும் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டப்பட்டவர். அரசியல் எல்லைகளைத் தாண்டி இன்று அனைவரும் இரங்கல் தெரிவிக்கும் போது மிக நெகிழ்வாக உணர்கிறேன் - அந்த வார்த்தைகளின் பின்புலத்தை ஆராய வேண்டாத அளவு! வரலாற்றில் சுவடு பதித்த ஒரு நபர் மறைந்தார்.  
குறைகளாகத் தெரிந்த பலதும் இப்போது சொல்வது சரியாய் இராது. இருந்தாலும், .. பதவியில் இருந்த போது அவர் காலில் மற்றவர் விழுந்ததும் கூனிக் குறுகி வணங்கியதும் தம் அரசாங்கம் செய்தது என்பதற்கு பதில் 'நான் செய்தேன்' என்றதும் அபசுரமாய்ப் பட்டது. ஆனாலும் இத்தனை பேரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவருக்கு இந்தக் கவசம் தேவைப்பட்டிருக்கலாம்.
இரும்பு மனிதராக இருந்து கடைசியில் எமனுடன் போராடி மீண்டும் வந்து திரும்பவும் சென்றார்!!  நாட்டின் முதல் குடிமகன் முதல் அனைவரையும் தமக்கு மரியாதை செய்ய வைத்த சரித்திர நாயகிக்கு ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் பெண்மணியின் வணக்கம்.  அஞ்சலி.

Saturday, November 12, 2016

ஐநூறு ரூபாயும், ஆயிரம் ரூபாயும் பின்னே ஞானும்!

ஒரு பதிவை ட்ராஃப்டில் சேமித்து வைத்து அதன் கதாநாயகனிடம் அபிப்ராயம் கேட்டு பிரசுரிக்கலாம் என்று 8ந் தேதி மாலை முடிவு செய்திருந்தேன்!! 8 மணிக்கு மோடி அவர்கள் என் பதிவின் முக்கியத்துவத்தை மூடி விட்டார்!! கைப்பேசியில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் என் கணவர், ந்யூஸைப் பார் எனவும்,  முதலில் நான் அந்தச் செய்தியை நம்பவில்லை! சானல் சானலாக மாற்றிப் பார்த்த பின் தான் நம்பினேன்! உடனே முகநூலில் ஸ்டேடஸ் போட்டு, வாட்ஸ் அப் குரூப்பில் ஏத்தியது எல்லாம் இங்கே வேண்டாத விஷயம்!!


சில நாட்கள் முன்னால்,  Arthkranti அமைப்பைச் சார்ந்த Sri Anil Bokil பிரதமரைப் பார்க்க 9 நிமிடம் கிடைக்கப் பெற்றவர், 2 மணி நேரம் கறுப்புப் பண ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார்!!  இதில் பெரிய தொகை ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்குவதும் அடக்கம்!!
அரசாங்கம் சில மாதங்களாக எடுத்து வரும் ஒவ்வொரு திட்டமும்  இந்த முடிவு நோக்கியே பயணப்பட்டதாகவும், வங்கிகளின் பண இருப்பு, பரிமாற்றம் பற்றி எப்படி தகவல்கள் நவீன தொழில்நுட்ப உதவியோடு உடனடியாய் பரிமாற்றப் பட்டன என்பதை எல்லாம் முகநூல், ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டோம்! 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் காட்சியையும் டிவி சானல்கள் போட்டுக் காட்டின!
டிவி சானல்களின் சில நேர்முக உரையாடல்கள் மூலம் புதிய சிந்தனைகளையும் அறிய முடிந்தது!! 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரயில்வே, ஏர்லைன்ஸ் ரிசர்வேஷனுக்கு உபயோகிக்கலாம் என்றவுடன்,  நேரடி ரிசர்வேஷன் பல மடங்கு உயர்ந்து விட்டதாம்!! வெயிட்டிங் லிஸ்ட் எவ்வளவாயிருந்தாலும்!! பின்னர் கான்ஸல் செய்து செல்லத்தக்க ரூபாய்த் தாள்களாக வாங்கலாம் என்பது சிலரின் மாஸ்டர் பிளான்!! அரசாங்கமோ, கான்ஸல் செய்தால் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைப்போம் என்று விட்டதாம்!! 'வல்லவனுக்கு வல்லவன்!'


9ந் தேதி நான் என் அம்மாவுடன் டாக்டரிடம் செக் அப் செய்ய வேண்டும்! அவர் மாதக் கணக்கில் மருந்து எழுதித் தருவதால், நிறைய பணம் தேவைப்படும்! எங்களுடைய வீட்டில்  ஏடிம்மில் எடுத்து வைத்திருந்ததில் கைவசம் 500ம் 1000மும் தாமிருந்தன.  அந்த மருத்துவமனை மருந்தகத்தில் டெபிட் கார்டு, நெட் பாங்கிங், பேடிம்   வசதி எதுவும் இல்லை! டாக்டர் எழுதித் தரும் மருந்துகளோ அந்த மருந்தகத்தில் தான் கிடைக்கும்! டாக்டர் ஃபீஸும் தரணும்!! குழப்பத்தில் அன்று நான் மருத்துவமனைக்குச் செல்லவில்லை!! அடுத்த நாள் என்ன தான் நடக்குமென்று பார்ப்போம் - மாத்திரை மருந்து கைவசம் தீர்ந்து விட்டது வேற -  என்று கிளம்பி விட்டோம்!! பழகின இடம் என்பதால் எல்லா இடத்திலும் 500 ரூபாய்த் தாள்கள் வாங்கிக் கொண்டனர் - ஒரு கண்டிஷனோடு - 300 ரூபாய்க்கு மேல் என்றால் 500 ரூபாயும், 800 ரூபாய்க்கு மேல் என்றால் 1000 ரூபாயும் பெற்றுக் கொள்ளப்பட்டது!! சில்லறைப் பிரச்னைக்காக இந்த கண்டிஷன்!! சில வயதானவர்கள் பல மாதங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை   500, 1000  ரூபாய்த் தாள்களைக் கொடுத்து வாங்கிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது! பாவம், அவர்கள் பணத்தை மாற்ற க்யூவில் போய் நிற்க இயலாதவர்களாகவோ,  வங்கிக்கு அனுப்ப வேறு ஆட்கள் இல்லாதவர்களாகவோ இருக்கலாம்!
பக்கத்து மளிகைக் கடையிலும் 500 ரூபாய் வாங்கிக் கொண்டனர்! அதை அவர்கள் தங்கள் கடையின்   வங்கி நடப்புக் கணக்கில் விற்பனை என்று போட முடியுமல்லவா!! ஆக, நடுத்தர மக்களிடையே அவேர்னஸ் இருப்பதையே பார்த்தேன்!!
நான் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சின்ன தொகையை 'எமர்ஜன்ஸி ஃபன்ட்' என்று சாமிக்கு நேர்ந்து விட்டதைப் போல் தனியாக வைத்திருப்பேன் - (கணக்கில் வந்த தொகை தான் - வீட்டின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்) - இதில் சில 1000, 500, 100, காயின்ஸ் என்று பல்வேறு டினாமினேஷனில் வைத்திருப்பேன்.  100 ரூபாய்த் தாள்கள் 20 இருந்தன - இது தான் இந்த எமர்ஜன்ஸியில் எங்களுக்கு உதவுகிறது.  தற்சமயம் செல்லாத  பெரிய நோட்டுகளை மாற்றி வைக்க வேண்டும் - பிற்கால எமர்ஜன்ஸிக்கு.
நான் பிறகு எவ்வளவு பணம் மாற்றினேன் என்று கேட்கிறீர்களா!! கும்பலில் போய் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது என் அப்பா எனக்கு எடுத்த பால பாடம்!! போக மாட்டேனே!! இன்னும் ஒரு வாரமாவது ஆகும்!! காய்கறி, பூ வாங்குவது தவிர எல்லாம் ஆன்லைன் தான்!!
உங்கள்  அனுபவத்தையும் பகிருங்களேன்!!

Monday, October 10, 2016

வந்துட்டேன்!!

உள்ளே வரலாமா வேண்டாமா என்றிருந்தேன்.  என்னை வம்பிழுத்து வர வைத்து விட்டது ஒரு ஃபேஸ்புக் பதிவு,  சூடான ஜோக்ஸ் என்ற பதிவில் எனது ஜோக் ஒன்றைத் தன் குட்டிக் கதையாக ஒருவர் முகநூலில் போட, தெரிந்தவர் பார்க்க நேர்ந்தது. அதில் ‘மற்றொருவர்’ என்று நான் தொடங்கியிருப்பதை ‘ஒருவர்’ என்று மாற்றியதைத் தவிர, அனைத்தும் காப்பி பேஸ்ட்!! இங்கிருந்து எடுத்தது என்று போடவில்லை! பரவாயில்லை, இணையத்திலிருந்து என்றாவது போடலாமில்லையா, அதுவுமில்லை.  இது இங்கிருந்து சுடப்பட்டது என்று தெரிந்தவர் முகநூலில் கமென்ட் போட, இல்லை, இது வாட்ஸ் அப்பில் வந்தது என்கிறாராம் அந்த நபர்!! (அதையும் அவர் முன்பு பகிரவில்லை என்பது வேறு விஷயம்!!) அவ்வளவு ஃபேமஸ் ஆகிவிட்டதா என் எழுத்து?!!

அதனால், இதனால் அறிவிப்பது என்னவென்றால், எனது வலைப்பூவிலிருந்து ஏதேனும் பகிரும் போது, ஒரு வார்த்தை இங்கிருந்து எடுத்தது என்று சொல்லுங்கள்.

இத்தனை நாளாக வலைப்பூக்களை விளிம்பில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.  சில சமயம், சொந்த ஊருக்கு வந்து, சமயமும் இருந்தால், கமென்டினேன்.  வாழ்க்கையின் போராட்டமான நாட்களைக் கழித்தேன்.  என் குடும்பத்துக்கு நான் யார் என்றும், எனக்கு என் குடும்பத்தையும் புரிய வைத்த நாட்கள்.  இதற்கும் மேல், சில மனித மனங்களின் வன்மத்தையும் வக்ரத்தையும் போட்டு வந்த வேஷத்தையும், பல மனிதர்களின் சக மனித நேயத்தையும் புரிந்து கொள்ள வைத்த நாட்கள்!! இதில் முன்பின் தெரியாத மனிதர்களும் அடக்கம்!!

என்ன கேட்கிறீர்கள்? என்னவாயிற்று? எங்கே போயிருந்தேன் என்றா? சொல்லத் தான் போகிறேன், அவ்வப்போது பகிர்கிறேன். 


நட்புக்கள் அனைவரும் நலமென்று நம்புகிறேன். தொடரும் வலைப்பூக்களின் பதிவுகளனைத்தும் படித்தேன்.  நான் படிப்பதற்குள் நாள் பல கடந்திருந்ததால், கருத்துரை எழுதுவது இயலவில்லை.  இனி அட்டென்டன்ஸ் சரியாக இருக்கும்!! ஓகே?