Wednesday, September 28, 2011

சுண்டல் - அடுப்பில்லாமலே!

ஈஸியான சுண்டல் செய்யலாமா? செய்ய அடுப்பே தேவையில்லை. ஒரே ஒரு விஷயம், இன்னிக்கு சாயங்காலம் சுண்டல் சாப்பிடணும்னா, நேத்திக்கே முடிவு செய்து கொஞ்சம் தயார் செய்துக்கணும்! ! அதாவது, பச்சைப் பயறு இருக்கில்லையா, (டவுட் இருந்ததுன்னா, கீழே படத்தைப் பார்க்கவும்), அதை 10-12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கணும்.

ஊறிய பின் தண்ணீரை வடித்து, ஒரு துணியில் கட்டி வைத்தால், 10-12 மணி நேரம் கழித்து முளை விட்டிருக்கும்.

இந்த முளை கட்டிய பயறு, உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இதை ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம்! இன்னும் சுவை வேணுமா, இத்துடன் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள் - கலந்து சாப்பிடுங்க! இன்னும் மாறுதலான சுவை தேவையா, கொஞ்சம் எலுமிச்சைச் சாறைக் கலந்துக்கோங்க!!

சுண்டல் எங்கேன்னு கேட்கறீங்களா,... இது தாங்க இயற்கைச் சுண்டல்! பழங்காலத்து முறைப்படி சுண்டல் வேணும்னா, கொஞ்சம் கடுகு, உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய் தாளித்துக் கொட்டி, லேசாக உப்பும், தேங்காயும் போட்டுச் சுண்டல் தயாரிக்கலாம்! ஆனால், இதற்கு அடுப்பு தேவைப்படும்!!

நாம் இப்போது அடுப்பை  உபயோகிக்காமல் சுண்டல் செய்யப் போறோம்! இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் தலைமுறைக்கு ஏற்ற சுண்டலா செய்யணும்னா, முளை கட்டிய பயறுடன், துருவிய காரட், நறுக்கிய தக்காளி, எலுமிச்சைச் சாறு, மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுப் பொடியுடன் கலந்தால், ஹெல்த்தி சுண்டல் தயார், அடுப்பில்லாமலே!  உங்கள் தேவைக்கேற்ப சிப்ஸ், குர்குரே,  கார்ன்ஃப்ளேக்ஸ் போன்றவை சேர்க்கலாம்!!

இந்த சுண்டலுக்கு இனனுமொரு அட்வான்ட்டேஜ் என்னன்னா, முளை கட்டிய பயறை ஃப்ரிட்ஜில் சில நாட்கள் வைத்து  உபயோகிக்கலாம்! திடீர் விருந்தாளிகளுக்கு ரெடி சுண்டல் கொடுத்து அசத்தலாம்!

(யாராவது அறிவுஜீவிகள் இதை சுண்டல் இல்லை, சாலட் என்று சொன்னால், சொல்லி விட்டுப் போகட்டும்!! After all, what is in a name, a sundal is a salad is a sundal....)!!

நன்றி: ஃபோட்டோக்களுக்கு

Monday, September 26, 2011

நானும் ஆசிரியராகப் போறேன்!

அன்புத் தோழமை உள்ளங்களே,

நான் 26 செப்டம்பர் முதல் ஒரு வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் பணியை ஏற்றிருக்கிறேன்.  உங்கள் மேலான ஆதரவை எதிர்நோக்குகிறேன்.
 

எனது அறிமுகப் பதிவுக்கான சுட்டி இதோ. (26.09.2011 முதல் நாள் - ஊருக்கு நல்லது சொல்ல..)


நன்றியுடன்,
மிடில் கிளாஸ் மாதவி

02.10.2011
பணியை முடித்து விட்டேன் - இதோ மற்ற சுட்டிகளும்:
27.09.2011 இரண்டாம் நாள்: சொல் புதிது...சுவை புதிது...பொருள் புதிது....
28.09.2011 மூன்றாம் நாள்: மண் பயனுற வேண்டும்!!
29.09.2011 நான்காம் நாள்: வானகமிங்கே தென்பட வேண்டும்!
30.09.2011 ஐந்தாம் நாள் : கனவு மெய்ப்பட வேண்டும்!
01.10.2011 ஆறாம் இடுகை: மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
      ,,           ஏழாம் இடுகை: புதிய கோணங்கி!
02.10.2011 ஏழாம் நாள்: வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

நன்றி

Saturday, September 24, 2011

பழையன புகுதலும்...?

சந்திரலேகா - பட விமர்சனம்

இந்தப் படத்தை இப்போது தான் ரசித்துப் பார்த்து விமர்சனம் எழுத முடிகிறது!  அந்த மதியப் பொழுதில், வ்யிற்றுக்கு தயிர் சாதமும் வத்தக் குழம்பும் ஈந்து கொண்டு, கண்ணுக்கும் செவிக்கும் உணவுக்காக, தொலைக்காட்சியைப் பார்த்தேன்.  எப்போதோ, இரவு நேரத்தில் தூக்கக் கலக்கத்துடன் பார்த்த, 'சந்திரலேகா!'.  ஏற்கெனவே, என் பள்ளி நாட்களில், உணவு இடைவேளையில் வீட்டுக்கு சாப்பிட நானும் என் தங்கையும் வரும் பொழுதுகளில், கச்சட்டியில் பிசைந்த தயிர் சாதம், குழம்புடன், கையில் அம்மா உணவு உருட்டிப் போட்ட பழைய மலரும் நினைவுகளில் இருந்தேனா, இந்த கறுப்பு- வெள்ளைத் திரைப்படத்தை ஆர்வமுடன் பார்க்கலானேன்! (அன்று பழைய பட எதிர்ப்பாளர்கள் கல்லூரி/பள்ளிக்குச் சென்று விட்டனர்!)  கறுப்பு- வெள்ளைப் படங்களைப் பொறுத்த வரை, இந்த இரு நிறங்களைத் தவிர, வெவ்வேறு ஷேடில் அமைந்த சாம்பல் வர்ணங்கள் தாம் இருக்கும்  நிறங்கள் - இந்திந்த நிறங்கள் இப்படித் திரையில் தெரியும் என்று அதற்கும் திட்டமிட்டே அந்தக் காலத்தில் படம் எடுத்திருக்கின்றனர் என்ற ஆச்சரியமும் எப்போதும் எனக்கு உண்டு!  கூடவே, படமெடுக்கும் நேரத்தில் நடித்தவர்களை நேரில் பார்த்திருந்தால் என்னென்ன வண்ண ஆடைகளில் தோற்றமளித்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்து சிரித்ததுமுண்டு!

சந்திரலேகா - 1948-ல், எனக்கு ஓரிரு மூன்று தலைமுறைக்கு(!) முன்னே வந்த படம்.  ஆனாலும், தொழில் நுட்பத்தில், வசனத்தில், நடிப்பில் என்று எல்லாத் தரப்பையுமே ரசிக்க முடிந்தது.  கதை என்று பார்த்தால், சந்திரலேகா(டி.ஆர்.ராஜகுமாரி)வை, அந்த நாட்டின் இளவரசன் வீரசிம்மனும்(எம்.கே.ராதா), அவன் தம்பி சசாங்கனும்(ரஞ்சன்) விரும்புகின்றனர்.  சந்திரலேகாவின் அன்போ, மூத்தவருக்குத் தான், அவன் தான் இளவரசர் என்று தெரியாமலே!  சசாங்கன், தன் பெற்றோரைச் சிறையில் தள்ளி, அண்ணனைக் குகையில் போட்டு அடைத்து, அரசைக் கைப்பற்றுகிறான்.  சந்திரலேகாவையும் சிறைப்பிடிக்க, அவள் சாமர்த்தியமாக தப்பி ஓடி விடுகிறாள்.  அப்படி ஒளியும் போது, வீரசிம்மனை (அவளுக்கு பாபா) அடைத்து வைப்பதைப் பார்த்து விடுகிறாள்.  அந்த வழியில் போன ஒரு சர்க்கஸ் குழுவின் துணையோடு, அவனை விடுவித்து, அந்த சர்க்கஸ் குழுவினரோடு செல்கிறாள். 

சர்க்கஸ் சாகசங்களை மிக அருமையாகப் படம் பிடித்துள்ளனர்.  சர்க்கஸ் குழுவில் என்.எஸ். கிருஷ்ணனும் இருக்கிறார்; டி.ஏ.மதுரமும் இருக்கிறார் - பின் நகைச்சுவைக்குக் கேட்பானேன்!  கணக்கு உதைத்த போது, கணக்கர், யானைக்கு அல்வா வாங்கிப் போட்டதாகவும் புலிக்கு புல் வாங்கியதாகவும் எழுதச் சொல்லி, இன்றைய கணக்காளர்களுக்கு பாடம் எடுக்கிறார்!! ஆனால், அப்படி கணக்கு எழுதக் கூடாது என்று அவருக்கே மதுரம் அம்மாள் பாடம் எடுத்து விட்டார்!

கதை இன்னும் காடு, மலை தாண்டி, சந்திரலேகாவும் வீர்சிம்மனும் வில்லன்களுக்குத் தப்பும் போது, வேற்று மொழிப் பெண்கள் கூட்டத்தில் சேர்கின்றனர்.  அவர்கள் வேறு பாஷை பேசினாலும், அதற்கு மொழிபெயர்ப்போ, ஸப்-டைடிலோ வைக்காமல், சைகையிலேயும் பேச்சிலேயுமே புரிந்து கொள்ள வைத்திருக்கிறார்கள்! சபாஷ்!  சந்திரலேகா, வில்லன் பிடியில் மாட்டுகிறாள் - வீரசிம்மன் படைகளைத் தயார் செய்கிறான் - தம்பியை வென்று, பெற்றோரையும் சந்திரலேகாவையும் விடுவிக்க!

நான் ரசித்த இன்னொரு கதாபாத்திரத்தைச் சொல்ல வேண்டுமே -  அவர் சுந்தரிபாய் - ஆம், நாம் பிற்காலப் படங்களில் வில்லி சின்னம்மாவாகவோ, மாமியாராகவோ பார்த்தவர் தாம் - 'மழலைப்பட்டாளம்' என்ற படததிலும் வீட்டு ஓனர் மாமியாக வருவார் - இந்தப் படததில் சர்க்கஸ் பெண்ணாக வருகிறார்.  கதாநாயகியை, அரண்மனைச் சிறையில் பார்த்து, சசாங்கனைப் பிடித்ததாக நடித்து, தப்பிக்க வழியும் சொல்லிக் கொடுக்கும் கதாபாத்திரம்.  அருமையான நடிப்பு!  அந்தப் புகழ் பெற்ற முரசு நடனத்தை நடத்த வேண்டும் என்று சந்திரலேகா சசாங்கனைக் கேடக, பிரம்மாண்ட முரசு நடனம்!  முரசுகளிலிருந்து (Helen of Troy?) வீரர்கள் வந்து, சண்டை நடந்து, இறுதியில் சசாங்கன் வெல்லப்படுகிறான்!

அந்த முரசு நடனம் அனைவராலும் மறக்க முடியாதது - (அந்தத் தருணத்தில் பள்ளியிலிருந்த வந்த என் இளைய மகனை - இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான காட்சி பார் என்றவுடன் அவனும் ஆவலுடன் பார்த்தான்!)


ஆனால், இதை விட, சர்க்கஸில் 'நாட்டியக் குதிரை' பாட்டும் நடனமும் எனக்குப் பிடித்தது.  எவ்வளவு அழகான நடனம், பாட்டில் கிண்டல் எல்லாம் அமைந்திருக்கிறது பாருங்கள்! 'குதிரை'யின் கண்ணடிப்பைப் பார்க்க விட்டுவிடாதீர்கள்!



இந்தப் படத்தை எடுக்க 5 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன - சுதந்தரம் பெறுமுன்னே ஆரம்பித்து, பெற்ற பின்னர் வெளிவந்துள்ளது!  ஜெமினி ஃபிலிம்ஸில் திரு எஸ்.எஸ்.வாசன் முதல்முதலாகத் தயாரித்துள்ளார்.  பல சாதனைகளைப் படைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெறும் சர்க்கஸ், தயாரித்த 'ஜெமினி' பெயராலேயே அழைக்கப்பட்டது என்றால் பாருங்கள்! ஹெலிகாப்டரிலிருந்து படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் பறக்கவிடப்பட்டதாம் - படத்தின் வசூலோ, அந்தக் காலத்திலேயே 2 கோடி  ரூபாய்கள்! ட்ரம் டான்ஸ் எடுக்க மூன்று மாதங்கள் ஆனதாம் - பின்னே இவ்வளவு தூரம் சொல்லிவிட்டு அந்த முரசு ஆட்டத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா?

Sunday, September 11, 2011

கதம்பம்-8


நம்பிக்கை இந்தியர்கள்!

என் நண்பர் சொன்ன சம்பவம் இது.  அவர் டூரிஸ்ட் பேருந்துகளும் வாகனங்களும் நிறைய நிற்கும் இடத்தின் அருகே தான் தினமும் நகரப் பேருந்துக்காகக் காத்திருப்பார்.  அப்போது  'வாடிக்கை'யாக அங்கே நிற்கும் வாகனங்களிடம் 'மாமூல்' வாங்கும் ஒரு போலீஸையும் கவனித்திருக்கிறார். 

அன்று  மஹாராஷ்ட்ரா மாநில பேருந்து ஒன்றில் ஒரு போலீஸ்காரர் மாமூல் கேட்க, உள்ளிருந்து மூன்று, நான்கு பேர் இறங்கி வந்துள்ளனர்.  அவர்கள், 'அண்ணா ஹஸாரே ஜிந்தாபாத்!" என்று முழக்கமிட்டனராம்! பின்னர், ஹிந்தியில், 'ராம் லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.  நாடே அவருக்கு ஆதரவு தருகிறது!  நீ லஞ்சமா கேட்கிறாய்?' என்று எகிற,  லஞ்சம் கேட்டவர் எஸ்கேப்!

ஒரு விழிப்புணர்வோடு கிளம்பி விட்டது இந்தியா!


சகோதர உணர்வு எங்கே?

மேற்கண்ட சம்பவத்தில் சந்தோஷப்பட்ட சில நாளிலேயே, டில்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து சக இந்தியரைச் சாகடித்த துயர சம்பவம் வருத்தப்பட வைத்தது.

ராஜீவ் கொலை வழக்கில் அண்மையில் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஒற்றுமையாக அனைவரும் எதிர்க்க முக்கிய காரணம், அது நியாயமா, இல்லையா என்பதை விட, இருபது வருடங்களாக அவர்கள் சிறையில் வாடி விட்டனர்;  மனித உயிரை மனிதரே பறிக்கக் கூடாது என்பதினால் தானே! 

சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்களை, அதுவும் நியாயத்திற்காக நீதிமன்றம் வருபவர்களை, அதிகம் மக்கள் நடமாடும் தினமாகப் பார்த்து,  குண்டு வைத்து அவர்தம் உயிரினைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்?  இப்படிப்பட்ட தீவிரவாதச் செயலகளுக்கு எதிரான விழிப்புணர்வு வருவது எப்போது?  அதற்கும் யாராவது ஒரு முக்கியப் பிரமுகர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாதா?!

இன்று செப்டம்பர் 11ந் தேதி இந்தப் பதிவு - தீவிரவாதச் செயல்களத் தீர ஒழிக்க வகை செய்வோம்!

லீலைகள் புதிது!
குழந்தைகள் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே கடினம் தான்.  அதுவும் என் குழந்தைகள், "காக்கா ஏன் கறுப்பா இருக்கு?" என்று கேட்டு,  "அது வெயிலில் அலைவதினால்" என்று பதில் சொன்னால் ஒத்துக் கொள்ளும் ஸ்டேஜைத் தாண்டி விட்டனர்!  இருந்தாலும் வீட்டில் அடிக்கும் கூத்துகளால் தான் மற்ற வருத்தங்களைத் தாண்டி வாழ்க்கை இனிமையாகப் போகிறது.

என் இளைய மகன் சொன்னால் சொன்ன வேலையை மட்டும் சரியாகச் செய்வான்.  ஒரு விஷயத்தைக் கேட்டு வரச் சொன்னால், அதை மட்டும் கேட்டு வருவான்; கூடுதல் விவரங்கள் வராது!அவனை "நீ கம்ப்யூட்டர் மாதிரி!" என்று (வஞ்சப் புகழ்ச்சி அணியில்) சொல்வேன்!  

இந்த வாக்கியத்தையே திருப்பி இன்னொரு நாள் சொன்னவுடன் இதை ஏன் சொல்கிறேன் எனக் கேட்டான்;  'கம்ப்யூட்டர் கொடுத்த கமாண்ட்ஸ் மட்டும் சரியாகச் செய்யும்.  ப்ரொகிராமில் இல்லாத கட்டளைகளைச் செய்யாது.  நீ நான் சொன்ன வேலைகளை மட்டும் செய்கிறாய்!' என்று சொன்னேன்.  'அப்போ தவறு ப்ரொகிராம் செய்தவர் மேல் தான்!' என்று சொல்லிவிட்டான்!

இன்னொரு நாள், நான் காலை நேர அவசரத்தில் வேலைகளைச் செய்து கொண்டே அவனிடம், 'கொஞ்சம் ந்யூஸ்பேப்பரில் ஹெட்லைன்ஸ் படிச்சுச் சொல்லு!' என்று கேட்டேன்.  அவனும் சில தகவல்களை படித்துச் சொன்னான்.  எட்டிப் பார்த்த போது நாளிதழின் மேல் பக்கம் உள்ளவற்றை மட்டும் சொல்லியிருந்தான் - 'ஏன் கீழே உள்ளதைச் சொல்லவில்லை?' என்று கேட்டதற்கு, 'ஹெட்டர்(Header) பக்கம் இருப்பவற்றைச் சொல்லிட்டேன்; நீ ஃபுட்லைன்ஸ் படிக்கச் சொல்லி எங்கிட்ட கேட்கலை, அதனால் நான் ஃபுட்டர்(footer) பக்கம் போகலை!  நான் தான் கம்ப்யூட்டராச்சே!' என்றான்!! நான் என்ன சொல்ல?!!


Friday, September 2, 2011

காலம் மாறிப் போச்சு... கண்ணீர்..?

முஸ்கி: இது மின்னஞ்சலில் எனக்கு வந்த ஒரு கதையின் மொழிபெயர்ப்பு.  நீங்கள் முன்பே படித்துக் கூட இருக்கலாம்.  52 நாடுகளுக்கு இடையே, 16-18 வயதுக்குள்ளிருப்போருக்கு நடத்தப்பட்ட ஒரு கதைப் போட்டிக்கு, அமெண்டா சாங்க் (Amanda Chong of Raffles Girls' School (Secondary)) என்ற 15 வயதுப் பெண் கலந்து கொண்டு (ஆம், தன்னிலும் பெரியவர்களுடன் போட்டி போட்டுத்தான்), முதல் பரிசு பெற்றதாக, அனுப்பப்பட்ட கதை.  சில சொற்களை மட்டும் இந்தியப் படுத்தியிருக்கிறேன்.


"நவீனப் பெண்ணின் விருப்பங்கள்"

அந்த முதிய பெண்மணி, ஒரு சின்ன மஜந்தா காரின் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டு, சீறிப் பாயும் காரின் வேகத்தில் தன் ப்ளாஸ்டிக் பை பறக்காமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்.

 அவ்வளவு வேகத்திற்கு அவர் பழக்கபட்டவர் அல்லர்; நடுங்கும் கைகளால், காய்த்துப் போன தம் கைவிரல்கள் சீட்டின் மேல் படாதவாறு சீட் பெல்ட்டைப் போட்டுக் கொண்டார்.  ("வெள்ளை சீட்களில் விரல் கறைகள் பட்டால், நன்கு வெளியில் தெரியும்மா")


அவர் மகள், பீ சூ, வெள்ளி நிறத்து அழகு கைப்பேசியில் அவருக்குப் புரியாத பாஷையில் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தாள்.

 "ஃபைனான்ஸ்', 'லிக்விடேஷன்', 'அசெட்ஸ்', 'இன்வெஸ்ட்மெண்ட்ஸ்'...இப்படி பேசிக் கொண்டிருந்தவளின் குரல் புதிதாகவும் திருத்தமாகவும்  இருந்தது. 

 அவருடைய பீ சூ, டிவியில் வரும் மேல்நாட்டுப் பெண்களைப் போலப் பேசுகிறாள்!  அவள் அமெரிக்க உச்சரிப்போடு பேசுவதை முதிய பெண்மணி ரசிக்கவில்லை... "ப்ஸு" என்று தன் அதிருப்தியை வெளிப் படுத்தினார்.

 மகள் "இதைக் கட்டாயம் ஒத்துக் கொள்ள மாட்டேன், நாம் இப்போது விற்க வேண்டும்" என்று பேசியவாறே ஆக்ஸிலேட்டரை இன்னும் அமிழ்த்தினாள்; அழகாக ப்யூட்டி பார்லரில் மேனிக்யூர் செய்யப்பட்ட கைவிரல்கள், ஸ்டியரிங் வீலை எரிச்சலுடன் அழுத்தின

 "இதுக்கு மேல் என்னால் இதைப் பற்றி பேச முடியாது" என்று கைப்பேசியில் கத்தி விட்டு, அதை மூடி, பின்சீட்டை நோக்கி விட்டெறிந்தாள் மகள்.  முதிய பெண்மணியின் நெற்றியில் பட்டு, பின் அவர் மடியில் சப்தமின்றி அடைக்கலமானது கைப்பேசி.  அவர் மெதுவாக அதை எடுத்துத் தன் மகளிடம் கொடுத்தார்.

மகள், "ஸாரிம்மா" என்று மாண்டரின் மொழிக்கு மாறிப் பேசினாள்.  அமெரிக்க உச்சரிப்பு இப்போது இல்லை.  "எனக்கு அமெரிக்காவில் ஒரு முக்கிய கிளையண்ட்... அதில் நிறைய பிரச்னைகள்....".  முதியவர், புரிந்து கொண்டதாகத் தலையை ஆட்டினார்.  அவர் மகள், முக்கியமானவள், பெரிய வேலை செய்பவள்.

 பீ சூ அம்மாவை பின்பக்க கண்ணாடி மூலம் வெறித்துப் பார்த்தாள்.  அம்மா என்ன நினைக்கிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவரது சுருக்கம் விழுந்த முகம் எப்போதும் ஒரே தோற்றத்துடன் தான் தெரிகிறது!

 கைப்பேசி மறுபடியும் ஒலிக்க ஆரம்பிக்கிறது, அங்கிருந்த கனத்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு.  "ஹலோ பியஹ்ட்ரிஸ், ஆமாமா, எலைன் தான்"

‘எலைன்’ முதியவர் அதை ரசிக்கவில்லை  ‘நான் அவளுக்கு எலைன் என்று பெயர் சூட்டவில்லை’  மகள் ‘நெட்வொர்க்கிங்’கிற்கு எவ்வாறு ஆங்கிலப் பெயர் தான் ஒத்து வரும் என்றும் சைனீஸ் பெயர் எளிதாக மறந்து விடும் என்றும் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது.

 மகள் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தாள், “ஓ நோ: இன்று லன்சுக்கு உன்னைச் சந்திக்க முடியாது. பழைய பஞ்சாங்கத்தை தினசரி பூஜை சமாச்சாரத்திற்கு அழைத்துப் போக வேண்டியிருக்கிறது!”

 ‘பழைய பஞ்சாங்கம்’  இது தன்னைத் தான் குறிக்கிறது என்று முதியவருக்கு நன்றாகத் தெரியும்.  அவர் மௌனமாக இருப்பதை வைத்து, அவர் மகள் இது அவருக்குப் புரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

 பேச்சு இன்னும் தொடர்கிறது, “ஆமாமா, என் கார் சீட்ஸ் முழுக்க சாம்பிராணி, ஊதுபத்தி மணம் தான்!”

 முதியவர் சுய பச்சாதாபத்தில் கையில் இருந்த பிளாஸ்டிக் பையை பிடித்தவாறே, உதட்டை இறுக மூடிக் கொண்டார்.  கார் மெதுவே கோயிலுக்கு முன் சென்று நின்றது.  அந்தப் பழைய கோயிலின் நாளடைந்த கூரைக்கு முன் கார் கொஞ்சம் வினோதமாகவே தெரிந்தது.


முதியவர் காரின் பின்பக்க சீட்டிலிருந்து இறங்கி, மெதுவாக கோயிலின் உள்ளே நுழைந்தார். பிஸினஸ் கோட்டு-சூட்டிலும் ஹைஹீல்ஸ் ஷூவிலும் இருந்த அவர் மகள் காரிலிருந்து இறங்கி, லிப்ஸ்டிக்கை சரி செய்தவாறே அவருடன் நடந்தாள்.

 “அம்மா, நான் வெளியே நிற்கிறேன், எனக்கு ஒரு முக்கியமான ஃபோன் கால் செய்ய வேண்டியுள்ளது” என்று சொன்னாள் அவள், உள்ளிருந்து வந்த ஊதுபத்தி புகை மணத்திற்கு முகம் சுளித்தவாறு.


தத்தித் தடுமாறியவாறே முதியவர் கோயிலுக்குள் நுழைந்து ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தினார்.  தற்போது அவருக்கு மனனம் ஆகிவிட்ட தினசரி பிரார்த்தனையைக் கூற ஆரம்பித்தார்.

 ‘ஆகாயத்திலிருக்கும் கடவுள்களே, என் மகளுக்கு இத்தனை வருடங்களாக கொடுக்கும் அதிர்ஷ்டத்துக்கு நன்றி!  நான் வேண்டிக் கேட்டுக் கொண்டதை எல்லாம் நீங்கள் அவளுக்கு அளித்திருக்கிறீர்கள்.  ஒரு பெண் எதற்கெல்லாம் இந்த உலகத்தில் ஆசைப்படுவாளோ அத்தனையும் அவளிடத்தில் உள்ளன’.

‘நீச்சல் குளத்தோடு பெரிய வீடு, சமையல் செய்யத் தெரியாது மற்றும் பிடிக்காது என்ற காரணத்தினால் சமையலுக்கும் மற்ற வேலைக்கும் ஆட்கள்; அவள் காதல் வாழ்க்கையும் நன்றாக அமைந்து விட்டது – ஒரு அழகான பணக்கார வாலிபன் * ‘மார்க்’குடன் அவளுக்கு திருமண உறுதி செய்யப்பட்டு விட்டது.’

 ‘அவளது கம்பெனி இப்போது முன்னணியில் உள்ளது – ஆண்கள் கூட அவள் சொல்வதைக் கேட்கிறார்கள்….  அவள் முழுமையான வாழ்க்கையை வாழ்கிறாள்.  கடவுள்களே, நீங்கள் மகிழ்ச்சியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவளுக்குத் தந்திருக்கிறீர்கள்.  வெற்றியை அவள் அறுவடை செய்து கொண்டிருக்கும் போது வேர்களை அவள் மறந்து விட்டாலும் நீங்கள் அவள் மேல் கருணை கொள்ளுங்கள்’.

 ‘நீங்கள் காண்பதை நம்பாதீர்கள் – அவள் எனக்கு ஒரு நல்ல மகளாகத் தான் இருக்கிறாள்! எனக்கு அவள் வீட்டில் ஒரு பெரிய அறையைக் கொடுத்திருக்கிறாள், என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறாள்.  என் மேல் சமயத்தில் எரிந்து விழுகிறாள் என்றால், காரணம் அவளது சந்தோஷத்திற்கு நான் தடையாக இருப்பது தான்.  இளம் வயதுப் பெண் ஒரு வயதான தாய் தனக்கு இடைஞ்சலாக இருப்பதை விரும்புவதில்லை.  இது என் தவறு தான்’.

 முதியவர் அவர் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் உதிரும் வரை பிரார்த்தனை செய்தார்.  இறுதியில் தலைவணங்கி, பாதி எரிந்திருந்த ஊதுபத்தியை, அருகிலிருந்த சாம்பல் பாத்திரத்தில் வைத்தார்.

 மீண்டுமொருமுறை வணங்கினார்.  அவர் தம் மகளுக்காக 32 வருடங்களாகப் பிரார்த்தனை செய்து வருகிறார்.  அவருடைய வயிற்றில் குழந்தை இருந்த போது, கோயிலுக்கு வந்து அது ஒரு மகனாக இருக்க வேண்டும் என வேண்டினார்.

 காலம் கனிந்தவுடன் பிள்ளைப் பேற்றில் ஒரு அழகிய மகவு கொழு கொழுவெனப் பிறந்தது –பெண் மகவு!  வேலைக்குச் செல்லவோ, குடும்பப் பெயரைக் காக்கவோ உருப்படாத குழந்தை பெற்றதற்கு அவர் கணவர் அவரைப் போட்டு அடித்துத் துவைத்தார்!

 அப்படியும் சரோங்கில் இடுப்பில் குழந்தையைக் கட்டிக் கொண்டு அவர் கோயிலுக்கு வந்து கொண்டுதானிருந்தார்.  தாம் விரும்பிய அனைத்தையும் தம் மகள் அடைய வேண்டுமென்று இறையருளை வேண்டியபடி இருந்தார்.

 அவர் கணவர் அவரை விட்டுச் சென்று விட்டார்.  தம் மகள் ஒரு ஆண் மகனை அண்டியிருக்கக் கூடாது என்று வேண்டினார்.  ஒவ்வொரு நாளும், தம்மைப் போல படிப்பறிவில்லாமல், ஜடமாயில்லாமல், தம் மகள் ஒரு உயர்ந்த பெண்மணியாக வேண்டும் என பிரார்த்தித்தார். 

மனதில் எண்ணியதை அடையும் இரும்புப் பெண்ணாக – ஆண்களின் மனதில் எண்ணியவுடனே மரியாதை தோன்றும் பெண்ணாக – வாயைத் திறந்தாலே வார்த்தை முத்துக்கள் உதிர மக்கள் காத்திருக்கும் பெண்ணாகத் தம் மகள் இருக்க வேண்டும் என விரும்பினார்.

 ‘அவள் என்னைப் போல் இருக்கக் கூடாது’ எனத் தினமும் வேண்டும் போதே அவர் மகள் வளர்ந்து, அவரிடமிருந்து விலகிப் போவதையும் உணர்ந்தார். அவருக்குப் புரியாத பாஷையையும் அவள் பேச ஆரம்பித்திருந்தாள்…

தம் மகள் ஒரு அமைதியான பெண்ணிலிருந்து அவரையே எதிர்த்துப் பேசும் பெண்ணாக, அவரையே ‘கட்டுப்பெட்டி’ எனச் சொல்லும் பெண்ணாக மாறுவதைப் பார்த்தார்.  அவள் தன் அம்மாவை ‘மாடர்ன்’ ஆக இருக்க வேண்டும் என விரும்பினாள் – ‘மாடர்ன்’ என்ற வார்த்தையே புதிது – எவ்வளவு புதிது என்றால் அதற்கு சைனீஸில் வார்த்தையே இல்லாத அளவு புதிது!

மகள் இப்போது ரொம்பப் புத்திசாலி ஆகிவிட்டாள்!  ஏன் தாம் அப்படி வேண்டினோம் என்று முதியவர் இப்போது வியந்தார்!  அவரது பிரார்த்தனைகளுக்கு எல்லாக் கடவுள்களும் செவி சாய்த்து விட்டன!  ஆனால் இந்த செல்வமும் வெற்றிகளும் அவர் மகளின் சுயத்தை அழித்து வேர்களை மூடி விட்டன – அவள் இப்போது முன்னோர்களின் மண்ணோடு  பணத்தாள்களால் செய்த ஓரிகமி மூலம் மட்டும் ஒட்டப்பட்டவள் போல இருக்கிறாள்!...

 அம்மாவின் மதிப்பை மகள் மறந்து விட்டாள்.  அவளது விருப்பங்கள் மின்மினி போல தோன்றி மறைவன – ஒரு நவீன பெண்மணிக்கானவை.  அதிகாரம், செல்வம், பெரிய ஃபாஷன் பொடிக்ஸ்… இவை கிடைத்தும் இன்னும் அவளுக்கு நிறைவான சந்தோஷம் இல்லை.  முதியவருக்கு இவற்றை விடக் குறைந்த அளவிலேயே மகிழ்வான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் எனத் தெரியும்.

 அவர் மகள் இவ்வுலகை விட்டுப் போகும்போது, இவ்வுலகில் அவள் கொண்டாடியவை அனைத்தும் அவளுக்குத் துணை போகப் போவதில்லை! அவளைப் பற்றி அவள் ஒரு சிறந்த பெண்மணியாக இருந்தாள் என்று பேசிக் கொள்வார்கள் சில காலம் – பின் கால ஓட்டத்தில் அவளை மறந்து விடுவார்கள். காகிதத்தால் செய்த மாளிகைகளும் கார்களும் எரிந்தால் சாம்பல் மட்டுமே மிஞ்சுமே, அது போல!

இறந்த காலத்துக்கு திரும்பப் போய் தமது வேண்டுதல்களை எல்லாம் அழிக்க முடியாதா என முதியவர் ஏங்கினார்.  வாயிலுக்கு வெளியே அவர் மகள் கைப்பேசியில் முகத்தில் கோபமும் கவலையும் மாறி மாறித் தெரிய பேசிக் கொண்டிருந்தாள்.  உலகின் உச்சியில் இருப்பது நல்லதல்ல என்று முதியவர் நினைத்துக் கொண்டார் – வீழ்வதானால் ஒரே வழி தான் – கீழே!!

தமது பிளாஸ்டிக் பையிலிருந்து கோயிலின் பீடத்தின் மேல் பீ ஹூன் (bee hoon – அரிசியால் செய்யப்பட்ட சேமியா) பாக்கெட்டைப் பிரித்துப் பரப்பினார்.  அவர் மகள் அவர் பீங்கானால் செய்யப்பட்ட கடவுட்களை கும்பிடுவது பற்றி அடிக்கடி கேலி செய்வதுண்டு;  இவ்வளவு தூரம் இந்தக் கடவுள்களை நம்பிக் கும்பிட்டால், உதவி தேவைப்பட்டால் பீங்கான் துண்டுகளா பறந்து வரும் என்பது அவளது வாதம்.

 ஆனால், அந்த மகளுக்கும் சில கடவுள்கள் உண்டு – செல்வம், வெற்றி, புகழ், அதிகாரம் – நாள்தோறும் இவற்றைத் தொழுது, இவற்றின் அடிமையாகவே வாழ்ந்தாள்.  ஒவ்வொரு நாளும் இந்தக் கடவுள்களின் தேடல் தான் – ஆனால் இவை நிம்மதியான பெருவாழ்வின் முன் ஒன்றும் இல்லை.  அவரது மகள் விரும்பும் அனைத்தும் அவளுடைய வாழ்வின் ஜீவனையே உறிஞ்சி வெறும் உடலை மட்டும் விட்டுச் செல்வன. 

முதியவர் எரிந்து முடிந்து கொண்டிருக்கும் பத்தியையே பார்த்தார்.  எரிந்த சாம்பல் உதிரும் நிலையில் இருந்தது.


நவீனப் பெண்கள்!...ஒரு பெருமூச்சுடன் எழுந்து, கிழக்கு நோக்கி வணங்கி, தமது தினசரி பிரார்த்தனையை முடித்தார்.  இக்காலப் பெண்கள் நிறைய ஆசைப்படுகிறார்கள் – அந்தத் தேடலில் தங்கள் ஆத்மாக்களையே இழக்கிறார்கள், அவர்கள் அறியாமலே!  பிறகு அதைத் தேடுவதில் என்ன பயன்?

ஊதுபத்தி சாம்பல் விழுந்து விட்டது.  முதியவர் வெளியே வந்து, மகளை அடைந்தார்.  அவள் அப்போதும் கவலையுடனும் பதற்றத்துடனும் இருந்தாள். அவளது ஆசைகள் என்னும் விளைநிலத்தினூடே மகிழ்ச்சிச் செடியை வளர்க்க அதன் விதைகளைத் தேடுபவள் போல காட்சியளித்தாள்.

மௌனமாகவே காரில் ஏறினர் இருவரும். மகள் ஹைவேயில், முன்பு போல் இல்லாமல் மெதுவாகவே காரைச் செலுத்தினாள்.

மகள் பேச ஆரம்பித்தாள், “அம்மா, இதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை.  ‘மார்க்’கும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.  இந்தப் பெரிய வீட்டைக் காலி செய்து விடலாம் என்றிருக்கிறோம்.  இப்போது வீடு நல்ல விலைக்குப் போகும் – வாங்க ஒரு ஆளும் கிடைத்து விட்டார்.  ஏழு மில்லியன் விலை பேசியிருக்கிறோம்.  எங்களுக்கு ஒரு அப்பார்ட்மென்ட்டில் பென்ட்-ஹவுஸ் போதும் என்று தீர்மானித்திருக்கிறோம்.  ஆர்ச்சர்ட் ரோடில் சரியாக ஒரு வீட்டையும் பார்த்து விட்டோம்.  அந்த வீட்டில் நாங்கள் குடிபுகுந்த பின், வேலைக்காரியை நிறுத்தி விடலாம் என்றிருக்கிறோம்,… அப்போது தான் எங்களுக்குத் தாராளமாய் இடம் இருக்கும்….”

 முதியவர் புரிந்ததாகத் தலையசைத்தார்.  பீ சூ சங்கடத்துடன் எச்சில் முழுங்கிக் கொண்டாள்.

“வீட்டு வேலைகளைப் பார்க்க யாராவது ஒருவரை நியமித்துக் கொள்வோம்.  சாப்பாட்டிற்கு - வெளியேயும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.  ஆனால், வீட்டிலேயே இப்போது இருக்கும் வேலைக்காரியை அனுப்பிய பின், உன்னைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள்.  நாங்களும் வேலைக்குப் போன பின் உனக்குத் தனியே இருக்க ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.  மேலும், அது சிறிய வீடு.  அவ்வளவு இட வசதி இல்லை.  நாங்கள் நிறைய யோசித்து, ஒரு ஹோமில் உன்னைச் சேர்ப்பது தான் உனக்கு நல்லது என முடிவு செய்திருக்கிறோம்.  ஹௌகங்க் அருகில் ஒரு நல்ல ஓல்ட் ஏஜ் ஹோம் இருக்கிறது – கிறிஸ்டியன் ஹோம், நல்லதாகவும் இருக்கிறது…..”

 முதியவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை – புருவத்தைக் கூட அசைக்கவில்லை!

“நான் அங்கே போய்ப் பார்த்தேன்.  அங்கிருப்பவர் உன்னைச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார்.   ஹோமைச் சுற்றித் தோட்டம் இருக்கிறது, உனக்கு கூடப் பேசிப் பழக நிறைய வயதானவர்கள் இருக்கிறார்கள்!  உனக்கு அங்கே நேரமே போதாது, மிகவும் சந்தோஷமாக இருப்பாய்!” சொன்ன அவர் மகள், “நிச்சயம் அங்கே ரொம்ப சந்தோஷமாக இருப்பாய்!” என்று மறுபடி தனக்கே சொல்வது போல் சொல்லிக் கொண்டாள்.

 இப்போது கையில் பிடித்துக் கொள்ள பிளாஸ்டிக் பையும் இல்லாததால், முதியவர் உதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டார்.  சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டார், ஏதோ தம்மை விரும்பாத மகளிடமிருந்து அது பாதுகாக்கும் என்பது போல.  தொய்ந்து போன தோள்களோடு சீட்டில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, விரல்களால் சீட்டைத் தடவினார்.   

“மா” – ரியர் வ்யூ கண்ணாடியில் அவர் மகள் அவரைப் பார்த்துக் கேட்டாள், “எல்லாம் சரியாம்மா?”

எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யத் தான் வேண்டும்.

“ஆமாம்” நினைத்ததை விட உரத்த குரலில் சொன்ன முதியவர், “உனக்கு எது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அது எனக்கு சரி தான்” என்றார்.

“இது உனக்காகத் தான், அம்மா.  நீ அங்கே ரொம்ப சந்தோஷமாய் இருப்பாய்.  நீ நாளைக்கே அங்கு போகலாம்.  வேலைக்காரியை விட்டு உன் சாமான்களை எல்லாம் ஏற்கெனவே பாக் பண்ணச் சொல்லிட்டேன்”

எலைன் வெற்றியுடன் புன்னகைத்துக் கொண்டாள் – செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்று முடிந்து விட்டது!

அதே புன்னகையுடன் எலைன், “எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்” என்று சொன்னாள்.  அவளுக்கு விடுதலை கிடைத்த மாதிரி இருந்தது.  ஒரு வேளை, அவள் அம்மாவை அனுப்பி விட்டால் அவளுக்கு சந்தோஷம் கிடைக்குமோ என்னவோ….

அவள் ஆழ்ந்து யோசித்திருக்கிறாள் – இது தான் மகிழ்ச்சிக்கான அவள் தேடலில் தடைக்கல்லாக இருந்திருக்கிறது.  இப்போது அது சரியாகி,  அவள் மகிழ்ச்சியாயிருக்கிறாள்.  ஒரு நவீனப் பெண்ணுக்கு என்ன வேண்டுமோ – பணம், அந்தஸ்து, வேலை, காதல், அதிகாரம், இப்போது சுதந்திரமும் அவளுக்குக் கிட்டி விட்டன  ஆம், அவள் அம்மாவும் அவர் கட்டுப்பெட்டித்தனமும் இல்லாத சுதந்திரம்…..

ஆம், அவளுக்கு விடுதலை கிடைத்து விட்டது.  அவள் கைப்பேசி அடித்தது.  எடுத்து, வந்த மெசேஜைப் பார்த்ததும், மகிழ்ச்சியில் முகம் பூரித்தது.  “ஸ்டாக் 10% அதிகரித்திருக்கிறது”

இப்போது தான் அவளுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது!  வாழ்க்கையின் அர்த்தத்தை, கைப்பேசியின் வெளிச்சத்தில் கண்டுபிடிக்க முயலும் அவளுக்கு, பின்சீட்டில் இருந்த முதிய தாய் கண்ணுக்கே தெரியவில்லை, அவரின் கண்ணீரும் தெரியவில்லை.

###################################################################

டிஸ்கி:  இதைப் பார்த்து நெகிழ்ந்து, சில நாட்கள் முயன்று மொழி மாற்றம் செய்துள்ளேன்.  இது நவீனப் பெண்களுக்கு மட்டுமல்ல,  இந்தத் தலைமுறைக்கே பொருந்துமோ என நினைக்கத் தோன்றுகிறது.

எனக்கு வந்த மின்னஞ்சலில், இதனால்- குழந்தைகளுக்குத் தேவையான கல்வியும் பிறவும் வழங்கிய பிறகு, உங்கள் ஓய்வு காலத்துக்கு வேண்டியதையும் சேமியுங்கள்; உங்கள் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் உங்களைக் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.. அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை இருக்கிறது; உங்களை அவர்கள் கவனித்துக் கொண்டால் அது இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு என எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவுரையுடன் முடிகிறது.