Sunday, October 30, 2011

போட்டி!! (சவால் சிறுகதைப் போட்டி 2011)

குறிப்பு:- இது பரிசல், ஆதி மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்தும் சவால் சிறுகதைப்போட்டி-2011 க்கான போட்டிக் கதை. 

முரளியும் விஷ்ணுவும் நண்பர்கள். ஒரே ஹைடெக் அலுவலகத்தில் ஒன்றாகப் பணியுரியும் அவர்கள் ஒரே வீடெடுத்துத் தங்கியிருந்தார்கள். தற்சமயம் முரளியின் கவலை புதையல் போட்டியில் ஜெயிப்பது பற்றி. புகழ்பெற்ற கோரகிள் & கோ இம்முறை நடத்தும் புதையல் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இம்முறை போட்டியும் கடினமாக இருக்கும் என்று நிர்வாகம் சொல்லி விட்டது. வெல்பவர்களுக்கு பரிசு, குழுவாகப் பங்கு பெறும் இருவருக்கு ஜோடியுடன் அமெரிக்க சுற்றுலா - 10 நாட்கள் உணவு, தங்கும் வசதியுடன்! ஆசை யாரை விட்டது?! தவிரவும் முரளிக்கு வேறு காரணமும் இருந்தது!

சென்ற முறை இப்போட்டியில் வென்றவர்கள் சத்யப்பிரகாஷும் அவர் மகன் கோகுலும். அவர்கள் நகரத்தின் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சத்யப்பிரகாஷ், சுருக்கமாக, எஸ்.பி., ஒரு வியாபார காந்தம். (அதாங்க பிஸினஸ் மாக்னெட்); தம் பரந்த வியாபாரங்களில் தன் மகன் கோகுலுக்கும் மகள் ராஜீவிக்கும் உரிய ட்ரெய்னிங் கொடுத்துக் கொண்டிருந்தார். போட்டிப் பரிசான அமெரிக்க சுற்றுலா எல்லாம் அவர்களுக்கு இலவசமாய்த் தேவையில்லை என்றாலும், போட்டியில் தாங்களே ஜெயிக்க வேண்டும் என்ற கௌரவப் பிரச்னை அவர்களுக்கு இருந்தது.

முரளியும் ராஜீவியும் மேலாண்மைப் படிப்பின் போது அறிமுகமாகி, காதலிக்க ஆரம்பித்தனர். முரளி எஸ்.பி. குடும்பம் போல பரம்பரைப் பணக்காரன் இல்லை; அவனுக்கு படிப்பே மூலதனம். நல்ல புத்திசாலி! தன் இப்போதைய வேலையில் கை நிறையவும் பை நிறையவும் வங்கி கணக்கு நிறையவும் சம்பாத்தித்துக் கொண்டிருந்தான்!. சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அடுத்த வேலைக்குத் தாவவும் தயாராயிருந்தான்!  இந்தத் துறையில் இருக்கும் இளைஞர்களைப் போல, தானே ஒரு கம்பெனியைத் தொடங்க வேண்டும் என்பது அவன் எதிர்கால லட்சியம்!

ராஜீவியின் ஐடியா தான் புதையல் போட்டி 2011-ல் பங்கு பெற்று எப்படியாவது வெல்வது! எஸ்.பியிடம் பெண் கேட்பது சுலபமல்லவா?! இவ்விஷயத்தை முரளி தன் உயிர் நண்பன் விஷ்ணுவிடம் சொல்லித் தங்களுக்கு உதவுமாறு கேட்டான். புதையல் போட்டி நிர்வாகம், போட்டியை நடத்தும் பணியை ஜிம்மிக்ஸ் கம்பெனியிடம் விட்டிருந்தது. அதன் முக்கிய அதிகாரியைச் சந்திக்க முடிவு செய்தனர் நண்பர்கள்.

முன்னறிவிப்பில்லாமல் அப்போது அங்கு வந்த ராஜீவி, "முரளி, கோகுலுக்கு நம் விஷயம் தெரிந்து விட்டது. நீ என்னைக் கல்யாணம் செய்து கொண்டால், அப்பா உன்னை எங்கள் கம்பெனியிலேயே டைரக்டர் ஆக உன்னைப் போடலாம்; நீ தன் முன்னேற்றத்துக்குத் தடையாய் இருப்பாய் என நினைக்கிறான்! அவன் ஜிம்மிக்ஸ் கம்பெனியில் ஒருவரிடம் செல்ஃபோனில் பேசியதை நான் தற்செயலாய்க் கேட்டேன். அவன் செல்ஃபோனைக் கீழே வைத்து பாத்ரூம் சென்றவுடன், பேசிய நம்பரை நோட் செய்து எடுத்து வந்திருக்கிறேன், இந்தா" என்று படபடப்புடன் எண்ணைக் கொடுத்தாள்.

அந்த நம்பருக்குத் தன் கைப்பேசியிலிருந்து பேசினான் முரளி. எடுத்துப் பேசியவர் பெயரும் விஷ்ணு!! தன் கம்பெனியிலிருந்து பிஸினஸ் விஷயமாக நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறி, அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான்; ஏற்கெனவே நண்பன் விஷ்ணுவின் பெயர் செல்ஃபோனில் இருந்ததால், ஜிம்மிக்ஸ் விஷ்ணு என்று அவர் பெயரைத் தன் கைப்பேசியில் காப்பாற்றி, இல்லையில்லை, சேமித்துக் (save) கொண்டான்! அவர் அலுவலகப் பக்கத்திலிருக்கும் காஃபி ஷாப்புக்கு நண்பன் முரளி, ராஜீவி சகிதம் சென்றான்.

ஜிம்மிக்ஸ் விஷ்ணு, அறை எண் 305-ல் கடவுள் பிரகாஷ்ராஜ் மாதிரி இருந்தார்! முரளி தன் காதல் கதையையும் போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தையும் அவரிடம் சொன்னான்! அவனையும் ராஜீவியையும் மாறி மாறிப் பார்த்த ஜிம்மிக்ஸ் விஷ்ணு, "உண்மையான காதலர்களை உலகமே காதலிக்கும்! உங்கள் காதலுக்கு நான் உதவத் தயார்! ஆக்சுவலாக, கோகுல் அவர்களும் என்னைத் தொடர்பு கொண்டார்!  என்னிடம் இந்தப் போட்டியில் தான் தான் ஜெயிக்க வேண்டும் என்றும், உங்கள் பெயரைச் சொல்லி, உங்களைத் தோற்கடித்துத் தன்னை ஜெயிக்க வைத்தால் ரூபாய் 25 லட்சம் தருவதாகவும் சொன்னார்! லஞ்சத்திற்கு நான் மயங்குகிறவன் இல்லை! ஆனாலும், நான் மாட்டேனென்றால், அவர் வேறு யார் மூலமாக முயற்சிக்கலாம் என்பதால், என் பதிலை யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்! நீங்கள் ஃபோனில் என்னிடம் பேசியவுடன் நான் உங்களைப் பார்க்க ஒப்புக் கொண்டதற்கு கோகுல் தான் முக்கிய காரணம்!" என்று புன்னகையுடன் சொன்னார்!

"சார், அப்போ நீங்க எங்களுக்கு உதவுகிறீர்கள்! கடவுளே நேரில் சொன்ன மாதிரி இருக்கு! புதையலுக்கான க்ளூவை மட்டும் சொல்லி விட்டால்..." என்று முரளி அவரைக் கேட்டான். "வெயிட், வெயிட்,  இதை நான் ஹேண்டில் செய்கிறேன். போட்டிக்கு நாலைந்து குறியீடுகள் கொண்ட க்ளூக்கள் இருக்கு! எதைக் கொடுப்போம் என்று கடைசியில் குலுக்கலில் தான் தீர்மானிப்போம்! என் கம்பெனிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன், ஆனால் எப்படியாவது உங்கள் காதலுக்கு உதவி செய்கிறேன்! என்னை நம்புங்கள்! " என்று சொன்ன ஜிம்மிக்ஸ் விஷ்ணு, "நம்மை ஒன்றாக யாராவது பார்த்தால் ஆபத்து, இங்கிருந்து கிளம்பலாம்! என்னிடம் இனி பேச வேண்டுமானால், இந்த நம்பரில் கூப்பிடுங்கள், ஆனால் இது எமர்ஜன்சிக்கு மட்டும் தான்! தேவையான தருணத்தில் நானே உங்களுக்கு இன்ஃபர்மேஷன் தருகிறேன், இதே நம்பரிலிருந்து." என்று ஒரு கைப்பேசி இலக்கத்தைக் கொடுத்தார்! முரளி, விஷ்ணு இவர்களின் தொடர்பு எண்களையும் விலாசத்தையும் வாங்கிச் சென்றார்! முரளி   ஏற்கெனவே வேறு 'விஷ்ணு'க்கள் அவன் கைப்பேசியில் ஸேவ் செய்யப்பட்டிருந்ததால்,  அவர் புதிதாகக் கொடுத்த கைப்பேசி இலக்கத்தை 'Vishnu informer' என்று தன் கைப்பேசியில் அடைக்கலப்படுத்தினான்!  

போட்டி நாளும் வந்து விட்டது!  போட்டிக்குச் சற்று முன் ராஜீவி முரளியிடம், "கோகுல் ரொம்ப சந்தோஷமாயிருக்கான்; என்னிடம், நீ தோற்கப் போவது உறுதி என்று சொல்லியிருக்கிறான். எனக்கென்னவோ...." என்று ஆரம்பித்ததும், முரளி, "நான் விஷ்ணு சாரை நம்புகிறேன்! என் நண்பன் விஷ்ணு எனக்கு எப்படி உதவி செய்வானோ, அப்படியே அவரும் கட்டாயம் செய்வார்! அதனால் தான் அவர் பேரும் அதே பேராய் அமைந்திருக்கு!" என்று சிரித்துக் கொண்டே சொன்னான்! ஆனால், அவரிடமிருந்து எந்த ஃபோனும் வரவில்லை! அவருடைய ஃபோன் நம்பர்களுக்குப் பேசினால், சுவிட்ச் ஆஃப் என்றே தகவல் வந்தது! நேரம் ஆகி விட்டதால், ராஜீவியிடம் விடை பெற்று போட்டிக்குச் சென்றனர், முரளியும் அவன் நண்பன் விஷ்ணுவும்!

போட்டிக்கான க்ளூவைக் கொடுத்தனர். அந்தப் பெரிய மைதானத்தில், உலக வரைபட மாதிரியில் பல்வேறு நாடுகளும் அவற்றில் வித விதமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டிருந்தன. க்ளூவை வைத்துக் கொண்டு அவர்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு பொருளைக் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வர வேண்டும். இவர்களுக்கு உதவ உலக வரைபட அட்லாஸ், என்ஸைக்ளோப்பீடியா இவையும் கொடுக்கப்பட்டன (எப்படியும் செல்ஃபோனை வைத்துக் கண்டுபிடிக்கப் போகிறார்கள், தாமே கொடுத்து விடலாமே என்று)! தன் க்ளுவைப் பார்த்தான் முரளி! கையால் எழுதப்பட்ட அந்தத் துண்டு சீட்டில், SUU H2 6F என்று எழுதியிருந்தது! முரளியும் விஷ்ணுவும் ஆலோசித்தனர்! SUU என்றால் என்ன, H2 மற்றும் 6F எவற்றைக் குறிக்கிறது என்று! உலக வரைபடம் இருந்ததால், நாட்டைக் கண்டுபிடித்தால், அந்த நாட்டின் பிரபலமான பொருளைக் கண்டுபிடித்து விடலாம்!! யோசித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, H2 மற்றும் 6F உலக அட்லாஸில் அடையாளம் காண்பிக்க, வரைபடத்தை, A, B, C,... போன்ற எழுத்துக்களாலும், 1,2,3,... என்ற எண்களாலும் பிரித்திருப்பார்கள் என்று ஞாபகம் வந்தது!! அட்லஸில் அப்பெண்டிக்ஸ் H-ல் ஆரம்பித்த இண்டக்ஸில் H2 என்ற பக்கத்தில் பார்த்தனர்!! அதில் L-ல் ஆரம்பித்து நிறைய நாடுகளின் பெயர்ப் பட்டியல் இருந்தது! முதலில் இருந்த SUU முக்கிய க்ளூ என்று உணர்ந்தவுடன், இந்தப் பெயரை எங்கே கேட்டிருக்கிறோம் என்று இருவரும் விவாதித்தனர்!

சூ... என்ற பெயர் சைனாவில் வருமா இல்லை வேறு எங்கும் என்று யோசித்த போது Aung San Suu Kyi பெயர் நினைவுக்கு வந்தது! பர்மா என்ற மியான்மரில் வீட்டுச் சிறையிலே வைக்கப்பட்ட தலைவி, நோபல் அமைதிப் பரிசு, ஜவஹர்லால் நேரு பரிசு எனப் பல விருதுகளைப் பெற்றவர்!! "யுரேகா! நாம் மியான்மரைத் தான் தேட வேண்டும்!"

அவர்களுக்கு அளித்திருந்த அட்லஸில் மியான்மரில் 6 -F- கட்டத்தில் ரங்கூன் என்ற Yangon! உடனே மைதானத்தில் மியான்மர் நாட்டுப் பகுதிக்கு விரைந்தனர் அவர்கள்! அங்கே எதிர்கொண்டழைத்தன மூன்று ஸ்டால்கள்! அவற்றில் எதில் நுழைவது? கோவில் போன்ற ஒன்று, படகு வீடு போன்ற ஒன்று,கோவிலுமில்லாமல் மசூதியுமில்லாமல் ஒன்று! 

முரளி கையில் உள்ள என்சைக்ளோபீடியா உதவியுடன் சொன்னான், "நாம் மூன்றாவது ஸ்டாலில் தான் நுழைய வேண்டும்; ரங்கூனில் ஒரு பழங்காலப் புத்தரின் ஆலயம் இருக்கிறது - Shwe Dagon Pagoda – இது தான் அது" என்று! அந்த ஸ்டாலில் நுழைந்து 'வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்' என்ற குறிப்போடு இருந்த புத்தர் சிலையொன்றையும் கைப்பற்றினர்! 

 

             
போட்டி முடிந்த மணி ஒலித்த பின், பலரும் வெறுங்கையோடு வந்த போது ஒரு பொம்மைத் துப்பாக்கியோடு கோகுலும் வந்தான்!!

முரளியின் குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது! கோகுல் கடுகடுத்தபடியும், எஸ்.பி. புன்னகைத்தபடியும் வாழ்த்தினர்! முரளி பற்றிய தகவல்களைக் கேட்டறிந்த எஸ்.பி., தம் அலுவலகத்திற்கு வேலைக்கு வர முடியுமா என்று கேட்டார்! அருகே வந்த ராஜீவி, "உங்கள் மாப்பிள்ளையாக வரவும் அவர் ரெடி!" என்று சொன்னாள்!! முரளி, "சார், நானே உங்களிடம் நேரில் வந்து இது குறித்துச் சொல்லலாம் என்றிருந்தேன்! உங்களுக்குப் பிடித்த போட்டியில் வென்ற பின் சொல்லலாம் என்று தான்....! ஆனால், உங்கள் கம்பெனியில் வேலை செய்ய எனக்கு தற்போது விருப்பமில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள்! அதற்குப் பதிலாக என் சிறந்த பாதி - better half தான் அங்கு இருக்கப் போகிறாளே!!" என்று சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த கோகுலுக்கும் மகிழ்ச்சி! முரளிக்குக் கைகொடுத்து "கங்கிராட்ஸ் மாப்பிள்ளை" என்று தன் ஒப்புதலையும் குறிப்பாக வெளிப்படுத்தினான்!! முரளியின் பெற்றோரோடு அடுத்த ஞாயிறன்று பேச வருவதாக எஸ்.பி. சொன்னார்!! திருமணம், வெற்றிப் பரிசான அமெரிக்க ட்ரிப்பை ஹனிமூன் ட்ரிப்பாக இருக்கும் வண்ணம் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்!!

தம் தங்குமிடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த முரளியும், விஷ்ணுவும், ஜிம்மிக்ஸ் விஷ்ணு ஒன்றும் உதவி செய்யாமலேயே வென்று விட்டதாகப் பேசிக் கொண்டிருந்தனர்!! ஆனாலும் கோகுல் ஏன் பொம்மைத் துப்பாக்கியுடன் வந்தான் என்றும் அவர்களுக்குப் புரியவில்லை! வீட்டில் நுழையும் போது கொரியரில் ஒரு கவர் வந்ததாக பக்கத்து ஃப்ளாட்டில் கொடுத்தனர். பிரித்த போது அதில் இரு துண்டுச் சீட்டுகள்:

Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம்
- விஷ்ணு

Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு


அவற்றை மேஜையில் வைத்து, புரிந்து கொள்ள முரளி முயற்சித்த போது, கைப்பேசி ஒலித்தது; Vishnu Informer கூப்பிடுவதாக அறிவித்தது கைப்பேசி! 

பேசிய ஜிம்மிக்ஸ்-கம்-இன்ஃபார்மர் விஷ்ணு, "கங்கிராட்ஸ், என் சீட்டுகளைப் பார்த்தீர்களா? போட்டிக்கு முன்பே உங்களிடம் கொடுக்க முயற்சித்தேன், முடியவில்லை!  அதான் கொடுத்தனுப்பினேன்!  கோகுலுக்கு உதவுவதாகச் சொல்லி, அவனுக்கு SUU என்பதை SW என்று - அதாவது எஸ் டபுள்யூ என்று படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன்! க்ளூவை மாற்றி விட்டேன்! அவனுக்கு போட்டி தொடங்கும் முன் கொடுத்த அந்தச் சீட்டையும் உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன், பாருங்க! SW என்றால் ஸ்வீடனா, ஸ்விட்சர்லாந்தா என்று குழம்பி கடைசியில் Smith Wesson பொம்மைத் துப்பாக்கியை பிடித்து வந்து விட்டான் கோகுல்! ஹா ஹா ஹா!" எனச் சிரித்து விட்டு, "முரளி, தயவு செய்து கல்யாண இன்விடேஷனை எனக்கு அனுப்பிடாதீங்க, அனுப்பினாலும் நான் வர முடியாது இல்லையா?!! கல்யாணப் பரிசை தான் நான் முன் கூட்டியே கொடுத்து விட்டேனே!! குட்-பை! God bless you!" என்று சொல்லி, முரளி நன்றி சொல்லக் கூட வாய்ப்பளிக்காமல் ஃபோனைத் துண்டித்தார்!

தனக்கும் ராஜீவிக்கும் பிறக்கப் போகும் முதல் குழந்தைக்கு, விஷ்ணு என்றோ, விஷ்ணுப்ரியா என்றோ தான் பெயர் வைக்கப் போவதாக முரளி முடிவு செய்து விட்டான்!! கைப்பேசியில் அந்தக் குழந்தையின் ஃபோன் நம்பரை ஸேவ் செய்யும் காலம் வரும் போது ஒரு வேளை - 'விஷ்ணு ஜுனியர்' என்று வைப்பானோ என்னவோ!!

Friday, October 28, 2011

ஏழாம் அறிவு - வேலாயுதம் - Assassin's creed!

ஏழாம் அறிவும் வேலாயுதமும் இப்போது ரிலீஸ் ஆன திரைப்படங்கள். Assassin's creed என்றால் என்ன என்று கேட்கும் என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு(!), அது ஒரு game - விளையாட்டு!. Assassins என்னும் பெரும் கொலைகாரர் பரம்பரை (creed)- யில் பிறந்து மிஞ்சியிருக்கும் சிலரில் ஒருவருக்கு, அவரது DNA இன்ன பிற அம்சங்கள் மூலம் அந்தக் காலத்துக்கே சென்று, பற்பல சாகசங்களைச் செய்யும் கணிணி - வீடியோ கேம் விளையாட்டு! Bleeding effects மூலம் தன் முன்னோரின் ஸ்கில்ஸை அவர் அடைவார்!  இதன் சமீபத்திய வெர்ஷன் - Brotherhood ஆகும்.  நவம்பரில் அடுத்ததாக Revelations வரப் போகிறது.  இந்த விளையாட்டுக்கு என் மகன்கள் இருவரும் ரசிகர்கள். அவர்கள் சொல்லி நான் இதைப் பற்றித் தெரிந்து கொண்டேன். முழுமையான விவரங்களுக்கு விக்கிபீடியாவில் பாருங்கள்!

Assassin's creed கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தால், --- ஏழாம் அறிவு விமர்சனத்தைப் படித்தவர்களுக்குக் கட்டாயம் இப்படித் தோன்றும்!!  போதி தருமர் என்னும் தமிழர், இங்கிருந்து சீனா சென்று அங்கு அவர் சொல்லித் தரும் உடற்பயிற்சிக் கலையே குங்க்ஃபூ (உண்மை); அவரது வம்சாவழியில் வரும் சூர்யா, DNA இன்ன பிற சமாச்சாரம் மூலம் அழிந்த கலைகளை இக்காலத்துக்கு கொணரும் முயற்சி கதையில் ஒரு முக்கிய அம்சமாக வருகிறது.

வேலாயுதத்திற்கும் Assaassin's creed -க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், கீழே உள்ள படங்களைப் பாருங்கள்:


ஃபேஸ் புக்கில் இது குறித்து ஏற்கெனவே சிலர் படித்திருந்திருக்கலாம். வேலாயுதம் Azad என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பதை அறிந்திருப்பீர்கள்.  தமிழ்க் கதையில் காமெடி கலந்து, வெகு நாட்களுக்குப் பின் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக வந்திருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன.  Assassin's creed விளையாட்டிலிருந்து காட்சிகளை நகலெடுத்திருப்பது இளைய ரசிகர்களைக் கவர்வதற்காக இருக்கலாம்!  

தமிழ் சினிமாவில் கற்பனை வளங்கள் குறைந்து விட்டனவா?!!

Tuesday, October 25, 2011

தீபாவளி - சிறப்புப் பேட்டி!!

அந்தக் காலத்தில் என் அப்பா ஒவ்வொரு தீபாவளிக்கு முதல் நாளும், 'விடிந்தால் தீபாவளி, பௌர்ணமி நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்தது' என்று கடி ஜோக் அடித்துக் கொண்டிருப்பார்!   இப்படி எழுதிக் கொண்டிருந்த போது, சக பதிவர்களின் அன்றைய தீபாவளி - இன்றைய தீபாவளிப் பதிவுகள் பலவற்றைக் கண்டேன்.  சரி, தொலைக்காட்சி பாணியில் சிறப்புப் பேட்டி எடுக்கலாம் என்று கிளம்பி விட்டேன்!  கேள்விகளை எழுதித் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

அந்த முக்கியமான மனிதரிடம் பேட்டி வேண்டும் என்று கேட்டவுடன் ரொம்பவும் தான் அலட்டிக் கொண்டார்!  மிகவும் கெஞ்சிக் கேட்ட பின் ஐந்து நிமிட பேட்டிக்கு ஒத்துக் கொண்டார்!  இனி மினி பேட்டி:

கேள்வி 1: பேட்டியை ஆரம்பிக்கலாமா? உங்களைப் பற்றி...
பதில்:   'லோக க்ஷேமம் வஹாம்யகம்'!!  எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ இறைவன் அருளட்டும்!  

கேள்வி 2: தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
பதில்:    இப்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களில் விதவிதமான பட்டாசுகள் வந்து விட்டன.  வாண வேடிக்கைகளை, வானத்தில் பார்த்து மகிழ நன்றாகத் தான் இருக்கிறது.  தொலைக்காட்சி பார்ப்பதும் வெடிகளின் சத்தத்தில் கடினம் தான்; அதனால், புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து,   சுற்றம், சொந்தத்தோடு, இனிப்புகள் பரிமாறி, பண்டிகையைக் கொண்டாடுவோம்!!      

கேள்வி 3: ம்,... உங்கள் முதல் தீபாவளி நினைவுகளைச் சொல்லுங்கள்
பதில்:   தீபாவளி என்றால் குடும்பத் தலைவனுக்கு செலவுகள் தான் ஞாபகம் வரும்! குழந்தைகளுக்கு பட்டாசும் புத்தாடையும் ஞாபகம் வரும்!  

கேள்வி 4:  தலைதீபாவளி..?
பதில்:  எங்கள் குடும்பத்தில் அப்போது 8 குழந்தைகள்.  அப்பா ஐம்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கி, எல்லாருக்கும் பங்கு பிரிச்சுத் தருவார்! ஒரு சர வெடி, ஒரே ஒரு கலசம், சக்கரம், ஒத்தை வெடி பாக்கெட் என்று என் பங்குக்கு வருவதை சந்தோஷமாக வெடிப்பேன்.  எல்லாருடனும் சேர்ந்து வெடிகளை வெடித்து, ஜாலியாகப் பொழுது போகும். 

கேள்வி 5: இப்போதைய தீபாவளி.?
பதில்:  தலை தீபாவளியை மறக்க முடியுமா?  ஆமாம், அந்த தீபாவளிக்கு என் மனைவி பணியின் காரணமாக வெளியூரில் இருந்ததால், அந்த ஒரு நாள் மட்டும் வந்து போனாள்; சொந்தக்காரர்கள் அவளுக்கு முன்பே வந்திருந்தனர்!! 
 
கேள்வி 6: மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: வணக்கம்.  என்னைப் பற்றித் தெரியாதா என்ன? நான் என்ன பெரிய ஆளுன்னு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்?


பேட்டி கொடுத்த முக்கிய நபர் என் கணவர்!  பதில் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று என் மேல் பரிதாபப்படும்முன் (!!)   என் கேள்விக் குறிப்புகளின் கீழே, பதில்களை நான் தான் மாற்றி எழுதி விட்டேன்!!  முதல் மற்றும் கடைசிக் கேள்விகளின் விடைகள் அப்படியே மாறி விட்டன. இரண்டாம் கேள்விக்கான பதில்   மூன்றில்,  மூன்றாம்   கேள்விக்கான பதில்   நான்கில்,   நான்காம் கேள்விக்கான பதில   ஐந்தில் , ஐந்தாம் கேள்விக்கான பதில்    இரண்டில் !!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! முடிந்த வரை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளியைக் கொண்டாடுவோம்!.  ராக்கெட் போன்ற வெடிகளை அதற்கான  உரிய இடத்தில் தகுந்த பாதுகாப்போடு வெடிப்போம்!   கீழே இருக்கும் வாணத்தை மட்டும் இங்கேயே விடலாம்!! :-))

Tuesday, October 18, 2011

கதம்பம் -9

சவால் - சிறுகதைப் போட்டி 2011 
இம்முறையும் சிறுகதைப் போட்டியை பரிசல்காரன்   சிலரோடு சேர்ந்து அறிவித்துள்ளார். விவரங்களை இந்த இரண்டு   சுட்டிகளிலும் பார்க்கவும். போட்டிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி, கடைசி நாளான 31-10-2011 க்குள் அனுப்புங்கள்! முன்பே இந்த அறிவிப்பைப் பார்க்காதவர்களுக்குத் தான் இந்த தகவல்!

இந்த தகவலை நான் இங்கு சொல்லக் காரணம் இருக்கிறது. 18-10-2010 அன்று தான் சவால் சிறுகதைப் போட்டி (2010 )க்காக நான் முதல் முதலாக இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். இந்த அனுபவத்தை இன்னொரு பதிவிலும் பகிர்ந்துள்ளேன்!! சிறுகதை ராஜா/ராணி களே, தூள் கிளப்புங்க!

3 முட்டாள்கள் - நண்பன்


பல நாட்களாகப் பார்க்க ஆசைப்பட்டு, தற்சமயம் தான் 3 இடியட்ஸ் ஹிந்தித் திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. மிகவும் ரசித்துப் பார்த்தோம் - தெரிந்த ஹிந்தியில் புரிந்த வரை! ஆமிர் கான், (நம்) மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் மற்றும் பலர் நடித்த படம். வீரு என்ற வைரஸ் ப்ரொஃபஸரிடம் ஆமிர்கான் பாத்திரம் (எந்தப் பெயரைச் சொல்வது? :-)) ) கேட்கும் கேள்வியிலிருந்து படத்துடன் ஒன்ற ஆரம்பித்து விட்டோம்! 

வைரஸ் அந்த இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு முதல் நாள் பேச்சில், 'இந்தப் பேனா மிகவும் அபூர்வம், விண்வெளியில் அஸ்ட்ரோநாட்ஸ் எழுதுவதற்கு எந்தப் பேனாவினாலும் இயலவில்லை, பல கோடிகள் செலவழித்து இந்தப் பேனாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எந்த மாணவன் மிகவும் திறமைசாலியோ அவனுக்கு இதை நான் தருவேன், உங்களில் யார் இந்தப் பேனாவை வாங்கப் போகிறீர்கள்?' என்று கேட்டவுடன், எல்லாரும் தான் என்று கை தூக்குகிறார்கள் -  கை தூக்கும் கான், 'ஏன் அவர்கள் பென்சிலில் எழுதவில்லை, இவ்வளவு கோடிகளை மிச்சம் பண்ணியிருக்கலாமே!' என்று வினா எழுப்பினார். ரசித்த காட்சி!

படத்தைப் பற்றி வேறொன்றும் சொல்லப் போவதில்லை - இந்தப் படம் நண்பன் என்ற பெயரில் இயக்குனர் சங்கர் எடுக்கப் போவதாகவும், அதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா நடிக்கப் போவதாகவும் செய்தி வந்திருந்ததாக ஞாபகம். அப்போது படத்தின் சஸ்பென்ஸ் உடையக் கூடாது இல்லையா, அதனால் தான் கதையைச் சொல்லவில்லை! ஆனாலும் ஆமிர் கான் ரோலில் விஜய்.....  ஹிந்திப் படத்தில் வில்லன் சதுர் ராமலிங்கம் என்ற பாண்டிச்சேரியில் படித்த ஹிந்தி தெரியாத காரக்டர் - நம்மைக் கிண்டலடிக்கிறார்களோ என்ற என் ஆதங்கம், தமிழ்ப் படத்தில் ஹிந்திக்காரர் வில்லனா என்று பார்க்கும் போது தீரலாம்!

பாப்பையும் ஆலிவ்வும் மற்றும் நானும்.. 


இந்த ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸில் Popeye and Olive கார்ட்டூனில், ஆலிவ் பாப்பையைக் கோவித்துக் கொள்கிறாள், 'நான் இன்று என் பிறந்த நாளுக்காக ஒன்றும் வாங்காதே என்று சொன்னேன் அல்லவா,' என்று; அவன் கேட்கிறான், 'ஆமாம், அதற்கென்ன' வென்று. அவளும், 'திரும்பத் திரும்ப சொன்னேனல்லவா, ஒன்றும் வாங்காதே என்று' என்று கேட்கிறாள். அவனும், 'ஆமாம், அதுதான் நான் ஒன்றும் வாங்கவில்லையே!' என்கிறான். ஆலிவ் கோபமாகக் கேட்கிறாள், 'அதான் நானும் கேட்கிறேன், ஏன் ஒன்றும் வாங்கவில்லை??' !!

படித்துச் சிரித்த எனக்கு பயமாகவும் உள்ளது. என் மாமியார், அம்மா இருவருமே இந்தத் தீபாவளிக்கு தங்களுக்கு புதுப் புடவை ஏற்கெனவே இருப்பதால் வாங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள் (தனித் தனியாகத் தான்); நானும் வாங்கவில்லை  .......

Thursday, October 6, 2011

ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!

     அது ஒரு ஞாயிறு மதியம். அப்பா ராஜா, அம்மா தேவி, மகன் ஆனந்த், மகள் ஆர்த்தி நால்வரும் மதிய உணவு முடிந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். நடுவில் தொலைகாட்சிப் பெட்டியும் பேச்சுக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருந்தது. ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயினோடு திடீர் ம்யூஸிக்கோடு வெளிநாட்டுக் காட்சிகள் வர, ஆர்த்தி "பாட்டு வரப் போகுது!" என்று தன் ஞானத்தை வெளிப்படுத்தினாள். ஆனந்த், " அப்பா, சானல் மாத்துங்க!" என்றான்.

     ராஜா, "ஏன்ப்பா, உன் வயசுப் பசங்க SS Music, Sun Music அது இதுன்னு தான பார்க்கறாங்க, நீ ஏன் மாத்தச் சொல்றே?" என்றவாறே டைம்ஸ் நவ்விற்கு சானலை மாற்ற, ஆர்த்தி, "அப்பா, அவன் எமினம் பாட்டெல்லாம் ஐபாடில டவுன்லோட் செய்து கேட்டுட்டுத் தான் இருக்கான்!" என்று போட்டுக் கொடுத்தாள்! ஆனந்த சட்டென்று, "அப்பா, நம்ம சினிமால தான் மரத்தச் சுற்றி, மலையைச் சுற்றி பாட்டு வருது, நிஜ வாழ்க்கையில யாராவது டூயட் பாடுவாங்களா?" என்றான். தேவி உடனே, "ஆமாங்க, நாம டூயட் பாடியிருக்கோமா என்ன, அதுவும் வெளிநாட்டுக்குப் போய்?" என்றாள்!

     ராஜா, "குட்டீஸ், இசையை எந்த மொழில வேணும்னாலும் ரசிங்க, தப்பில்லை; ஆனந்த், நம் நாட்டில் இயல், இசை, நாடகம்னு இருந்தது. இயலும் இசையும் நாடகத்தில் கலந்தது, இந்த நாடகத்திலருந்து தான் நம் நாட்டில் சினிமா வந்தது. அதனால தான் இன்னமும் நம் சினிமால பாட்டு" என்று விளக்கினான். தேவி, "அவனுக்கு விளக்கம் சரி, என் கேள்விக்கென்ன பதில்?" என்று கடைசிப் பகுதியைப் பாட்டாகவே கேட்டாள்!

     ஆர்த்தி, "அம்மா, அப்பாவை ஏன் சண்டைக்கு இழுக்கறே, நாங்க ரண்டு பேரும் சண்டை போட்டா மட்டும் திட்டறே?" என்று கேட்க, "ம், இப்போ என் பெண் கேள்விக்கென்ன பதில்?" என்று சிரித்துக் கொண்டே ராஜா தேவியைக் கேட்டான். தேவி, "ஆர்த்திக்குட்டி, இது சண்டையில்லம்மா, சும்மா விளயாட்டு வம்பு. ரண்டு பேர் இருந்தா கருத்து வேறுபாடு வரத்தான் வரும், சண்டை -ஆர்க்யுமென்ட் வரும். ஆனால், ஒருத்தரொருத்தர் கருத்தைத் தெரிந்த பிறகு, ஒருத்தர் மற்றவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இத நீங்க செய்யாத போது தான் நான் திட்டறேன்!" என்றாள்.

     ஆனந்த், "ஆர்த்தி எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டேன்றாள், நானே விட்டுக் கொடுக்கணுமா? நான் மட்டும் உங்கள் பிள்ளயில்லயா?" என்று முறையிட, தேவி, "விட்டுக் கொடுக்கறதில எப்பவும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி தான் இருக்கணும் - ரண்டு பேரும் விட்டுத் தரணும்! ஆர்த்தி, இனி உன் அண்ணன்கிட்டயிருந்து இந்த மாதிரி புகார் வரக் கூடாது, சரியா?" என்று சொல்ல, ஆர்த்தி சரியென்று தலையாட்டினாள். ஆனந்த், "ஹை, அம்மா, அதனாலத் தான் எங்களுக்கு அடிக்கடி ஃபிஃப்டி-ஃபிஃப்டி பிஸ்கெட் வாங்கித் தரயா?" என்று கேட்க, "குறும்பு!" என்று சொன்னபடி அவன் காதைத் திருகிய தேவி, "என் குழந்தைங்க ரண்டும் ஜெம்ஸ்னுட்டு அடிக்கடி ஜெம்ஸும் வாங்கித் தரேனே" என்று தன் பங்குக்குக் 'கடி'க்க, 'ரம்பம்!" என்று சொன்னபடி எல்லாரும் சிரித்தனர்.

     மாலையானதும் குழந்தைகள் விளையாடிவிட்டு, ஹோம்வொர்க் செய்ய, தம் அறைக்குச் சென்றனர். ராஜா, இசையுலகில் உலவ, கணிணிக்குச் சென்றான். வீட்டு வேலைகளை முடித்த தேவி அயர்வுடன், திரும்பத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தாள். சானல் சர்ஃபிங்கில் மசாலாப் படங்களில் மாறுபட்டுத் தெரிந்த அந்த படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். குழந்தைகள் இரவு உணவு உண்டு, மிச்ச ஹோம்வொர்க் எழுத்து வேலையை அங்கேயே முடிப்பதாகச் சொல்லி எழுத ஆரம்பித்தனர்.
    ராஜா, "குழந்தைங்க சாப்பிட்டாச்சா?" என்று கேட்டபடி சாப்பிட வர, ராஜாவும் தேவியும் சாப்பிட ஆரம்பித்தனர். "என்ன சினிமா பார்க்கறே?" என்று ராஜா கேட்க, தேவி, "ஏதோ மதுரை டு தேனின்னு பஸ் ரூட் போட்டு படம்; வித்தியாசமா இருக்கு" என்று ரிமோட்டில் தன் உரிமையை நிலைநாட்டினாள்!. சாப்பிட்டு முடித்தாயிற்று.

    ஒரு பாட்டு ஓட ஆரம்பிக்க, தேவி, "இந்த ட்யூன் தெரிஞ்சா மாதிரி இருக்கே, ம்...." என்றவள், "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" என்று பாட ஆரம்பித்தாள். ராஜா, "இல்லை, இது 'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க'ங்கற பாட்டு, நீ சொல்ற பாட்டு இல்ல!" என்றான்!
 
     "என் அப்பா பாடி நான் கேட்டிருக்கேன், நான் சொன்ன பாட்டுத் தான், M K தியாகராஜ பாகவதர் பாடினது" என்றாள். ராஜாவோ, "இது MGR பாட்டு, மதுரை வீரன் படம்" என்று சொல்ல, அங்கு ஒரு கருத்து வேறுபாடு - சண்டையானது. திரையில் பாடல் முடிவுக்கு வந்தது, "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே"என்ற வரிகளோடு! தேவியின் கொண்டாட்டத்தைக் கேட்க வேண்டுமா! ராஜாவோ தான் சொன்ன பாட்டு சரி தான் என்றும், இந்தப் பாடல் முடிந்தது வேண்டுமானால் - தேவி சொன்ன பாட்டில் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான்!

    குழந்தைகள் பெற்றோரிடம் வந்து, "அம்மா, எங்களை சண்டையில் விட்டுத் தரச் சொன்னியே, இப்ப நீ விட்டுத் தாம்மா! அப்பா, நீயும் தான்ப்பா" என்று கேட்க, தேவி "விட்டுத் தரதில ஃபிஃப்டி-ஃபிஃப்டி வேணாமா?" என்று சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர, சண்டை ஒருவழியாக ஓய்ந்தது.

     தேவி அடுத்த நாள் ராஜா, குழந்தைகள் கிளம்பி அலுவலகம், பள்ளி என்று சென்றபின் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கணிணியில் வலைத் தளங்களில் தங்கள் பிரச்னைக்குரிய பாடல்கள் பற்றியத் தகவல்களைத் தேட ஆரம்பித்தாள்.

     1939-ல் வெளியான 'திருநீலகண்டர்' படத்தில் M K தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே". இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறாக இருந்தது.

     இசை மேதை திரு G.ராமனாதன் அவர்கள் M K தியாகராஜ பாகவதரின் தீவிர அபிமானி. அவர் இந்தப் பாடலின் இசையில் கவரப்பட்டு, தான் இசையமைத்த M G R நடித்த மதுரைவீரன்(1956-ல் வெளியானது) படத்தில் இதே ட்யூனில் "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க" என்று TMSஐயும் ஜிக்கியையும் பாட வைத்தார்!

    தேவிக்குத் திகைப்பு - ஜெயித்தது யார், - இருவரும் ஆளுக்கு ஒரு பாடல் - அவரவருக்குத் தெரிந்ததைச் சொன்னோம், இருவரும் சரி!, ஜெயிச்சதிலயும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!! ராஜாவுக்குக் கைப்பேசியில் விவரத்தைச் சொல்ல, ராஜா, "அப்போ, நான் ஆஃபிஸ் விட்டு வரும்போது ஸ்வீட் காரம் வாங்கி வரவா, ஜெயிச்சதுக்கும் தோத்ததுக்கும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!" என்றான்!!
குறிப்பு: பாடல்கள் இதோ:

1. 'மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி' படத்தில் இவர்களுக்குப் பிரச்னையான பாடல் 'கலகலக்கும் எங்க காலேஜ்..'(கடைசி வரிகள் சினிமாவில்):


2.  "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" பாடல்:




3. "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க" பாடலுக்கு: 


வீடியோவில் பார்க்க http://www.youtube.com/watch?v=VdDyCcros6g

டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு - பெயரிலேயே காரணம் இருக்கு!  உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி!
Thank You Graphics, Scraps and CommentsOrkut Scraps - Butterfly