Monday, December 27, 2010

சின்னக் குறும்புகளும் கேள்விகளும்

இரு மகன்களில் பெரியவனுக்கு அரையாண்டு பரிட்சைகள் முடிந்துவிட்டன.  நேற்று இருவரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆகி விட்டனர்.  வீட்டில் இருந்த வாஷிங் சோப், காலாவதியான மாத்திரைகள், மண் போன்ற எதையும் விட்டுவிடாமல் Nova-7 (?) என்று ஒன்றைத் தயார் செய்து fridge freezer-ல் வைத்து ஆராய்ந்து வருகிறார்கள்.  Fridge வாங்கி 12 வருடங்கள் ஆகி விட்டன.  அதனால், வந்தவரை நஷ்டமும் புது ஃப்ரிட்ஜ் லாபம் என்று விட்டு விட்டேன்!!
ஏற்கெனவே http://middleclassmadhavi.blogspot.com/2010/10/blog-post_29.html மற்றும்
http://middleclassmadhavi.blogspot.com/2010/10/blog-post_27.html பதிவுகளில் என் மகன்கள் பற்றி எழுதியுள்ளேன்.  இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்துள்ளனர்.  இன்னும் 6 ஆண்டுகளுக்கு முன்னே, இருவரும் சிறு குழந்தைகளாக இருந்த போது பள்ளியிலிருந்து வந்து வீட்டில் தனியே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.  (நான் பணி முடிந்து திரும்பும் வரை.) பெரியவனே சின்னவனுக்கு வேண்டிய சகலத்தையும் செய்தான்.  இவர்கள் அன்பை விளக்க ஒரு பின்னோட்டம் -
இன்றைக்கு 4 ஆண்டுகளுக்கு முன்---வழக்கம் போல நான் என் குழந்தைகளுடன் அந்தி நேரத்தில் பக்கத்தில் இருந்த பூங்கா பக்கம் நடைப் பயிற்சி, கூடவே புது ஊரில் புது பள்ளியில் நடந்த அனுபவங்களை நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தோம்.  இருள் கவியத் தொடங்கியது.  வெளிச்சமும் சரியாக இல்லை. ஒரு பக்கம் மூத்த்வன், மறுபக்கம் இளையவன், நடுவே நான்.  திடீரெனக் கண்முன்னே ஒரு வெள்ளி நதி போல ஒரு உருவம்..  சின்னவன் அடுத்த அடி வைத்திருந்தால், அந்தப் பாம்பு மேல் தான்!  உள்ளுணர்வில், அவனைப் பிடித்து பின்னே இழுத்து விட்டேன்.  பாம்பு ஓடி விட்டது.  பெரியவன் அதிர்ச்சியுடன் என்னிடம் "ரொம்ப தாங்க்ஸ்மா, என் தம்பி உயிரைக் காப்பாற்றியதற்கு" என்றான்!!!. 

இம்மாதிரி நிகழ்ச்சிகள் நம் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும்.  (வயதான பின்பு ஞாபகத்தில் வைத்து மகிழ எனக்கு இந்தப் பதிவு உதவும்!! :-)) ) சில சமயம் இம்மாதிரி பேச்சுகளால் சங்கடம் வருவதும் உண்டு.  காலாண்டு தேர்வின் போது, சின்னவன் அறிவியல் இரண்டாம் தாள் சரியாக எழுதவில்லை என்றான்.  என் நாக்கில் சனி புகுந்து 'ஏன்  சரியாகப் படிக்கவில்லை' எனக் கேட்டு விட்டேன்.  (அறிவியல் அதுவும் இரண்டாம் தாள் எனக்கு வராது என அவனுக்குத் தெரியும் - இந்த சப்ஜெக்ட்டில்  சந்தேகம் இருந்தால் அவன் அப்பா தான் சொல்லித் தருவார்).  "இந்த வாரம் சனிக் கிழமை நீ என் பாடப் புத்தகத்தைப் படிக்கிறே, ஞாயிறு என் question paperக்கே ஆன்ஸர் பண்றே" என்று சொல்லி விட்டான்.  அந்த வார விடுமுறையில் விருந்தினர் வர, நான் தப்பித்தேன். 
இப்படி எல்லாம் பேசினாலும், உதவுவதில் மன்னர்கள் என் பிள்ளைகள்.  என் handbag-ல் இருந்து ஒரு பொருளைக் கொண்டு வரச் சொன்னால், பையையே கொண்ர்ந்து கொடுத்துவிட்டு, 'நான் ஹனுமார்' என்று ஹைக்கூ படிப்பார்கள். (தேடச் சோம்பல்?!!)
சரி, எனது இப்போதைய சங்கடத்துக்கு வருகிறேன் - 'கடுகை எண்ணையில் போட்டால், ஏன் வெடிக்கிறது? அதனுள்ளே வெடிபொருள் இருக்கா?' இது சின்னவனின் இப்போதைய கேள்வி.  சின்னவனின் பரிட்சைகள் முடிவதற்குள் யாரேனும் எனக்கு விடை சொல்கிறீர்களா?????

Sunday, December 12, 2010

மேலும் மொக்கை / லாஜிக்

ஆங்கில எழுத்துக்கள் பற்றிய சில கேள்விகள்: (முன்பே பாபுலர் ஆகியிருந்தாலும் 'வரலாற்றில் பதி'வதற்காக)
1.வரிசையில் நிற்கும் எழுத்து Q; சூடான பானம் பருகும் எழுத்து T.  எப்பவும் கூலாக இருக்கும் எழுத்து எது?
2.எப்ப அடிபட்டாலும் சிகிச்சைக்குக் கவலைப்பட வேண்டாத எழுத்துகள் எவை?
இனி ஆங்கில எழுத்துகள்/வார்த்தைகள் கொண்டு தமிழ்/ஆங்கில பதில்கள் கொண்ட கேள்விகள்:
அ) உலகிலேயே உங்களை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் நகரம்(city) எது?
ஆ) அலைகள் இருந்தும் தண்ணீர் இல்லாத கடல்(சி) எது?
மூன்றாவது வகைக் கேள்விகள்
i) 50 கோழிகள் இருந்த கோழிப் பண்ணையில் இரண்டைத் தவிர மற்றவை இறந்துவிட்டன.  எத்தனை கோழிகள் உயிரோடு இருந்தன?
ii) உங்கள் ஒரு கையில் 4 ஆப்பிள்களும் 3 ஆரஞ்சுகளும் மற்றொரு கையில் 3 ஆப்பிள்களும் 4 ஆரஞ்சுகளும் இருந்தால், உங்களிடம் எவை இருக்கும்?
பதில்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, December 8, 2010

ஜஸ்ட் லாஜிக்/ ஜஸ்ட் மொக்கை

இந்தக் கேள்விகளுக்கு விடைகள் தெரியுமா?
1. பத்தொன்பதிலிருந்து ஒன்றை எடுத்து இருபது ஆக்க முடியுமா?
2.இரு கதவுகள்ஒன்று சொர்க்கத்துக்கும் ஒன்று நரகத்துக்கும் வாசல்.  காவல் காப்பவர்களில் ஒருவர் பொய் மட்டுமே சொல்வார்; ஒருவர் உண்மை மட்டுமே சொல்வார்.  இரு காவலர்களிடமும் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்கலாம்.  சொர்க்கத்துக்கு போகும் வழியை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
3.Chess Board-ல் எத்தனை சதுரங்கள் உள்ளன?
4.1-லிருந்து 100 வரை எத்தனை 8-கள் உள்ளன?
5.ஒரு கேள்வியை எத்தனை முறை ஒரு நாளில் கேட்டாலும் வெவ்வேறு பதில் வரும்.  ஆனால் எல்லா பதிலும் சரியாக இருக்கும்.  அது என்ன?
6.ஞாயிறு, செவ்வாய், வெள்ளி இவற்றை உபயோகிக்காமல் தொடர்ந்து 3 நாட்களைச் சொல்லவும்?
விடைகளை நாளை வெளியிடுகிறேன்.