Friday, October 29, 2010

ஏன் என்ற கேள்வி?

சின்னவனின் சின்ன வயதுக் கேள்விகள் -
கடிகாரத்தில் ஏன் 13-வது முள் இல்லை?
நடக்கும் போது வலது கால் ஏன் முன்னாடி வருது?
மூடியிருக்கும் மொட்டுக்குள் இவ்வளவு வாசனை எப்படி வந்தது?
இன்னும் இந்த ஏன்-கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்போது இன்னும் யோசித்துச் சொல்லும் வகையில் உள்ளன கேள்விகள். (பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவர் என்னை KBC நிகழ்ச்சிக்குப் போகச் சொல்லும் அளவுக்கு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறாராக்கும்!)

Wednesday, October 27, 2010

புது மொழிகள்

'தோளுக்கு மிஞ்சினால் தோழன்' பழமொழி தெரியும். என்னை விட உயர்ந்த என் மகனின் புது மொழி - 'தலைக்கு மிஞ்சினால் தலைவன்'

Tuesday, October 26, 2010

விஜிலன்ஸ் வீக் - நினைவு கூர்கிறேன்

இந்த வாரம் விஜிலன்ஸ் அவேர்னஸ் வாரம்.  வருடம் முழுக்க நேர்மையாக இருப்பவர்களுக்கு இதைப் பற்றி நினைவு கூரத் தேவையில்லை.  நான் இங்கு சொல்லப் போவது இதைப் பற்றி இல்லை.  இப்படி வாழ வேண்டும் என்று எனக்குத் தூண்டுகோலாய் இருந்தவர் பற்றி நினைவு கூர்கிறேன.

படித்துக் கொண்டிருந்த எனக்கு பணியில் சேர அழைப்பு.  இதற்கு நான் குறிப்பிட்ட ஒரு  மாஜிஸ்ட்ரேட்டிடம் certificate வாங்கி அனுப்பச் சொல்லியிருந்தது.  எனக்கு கூட வர பொறுப்பான பெரியவர் யாரும் வரும் நிலையில் இல்லை.  நானும் என் தோழியும் Court campusக்குச் சென்றோம்.  ஒரு வக்கீல் குமாஸ்தா உதவ முன்வந்தார்.  எனது certificateல் கையெழுத்து வாங்க அந்த குமாஸ்தா எங்களை வெளியே நிற்க வைத்து விட்டு  ஒரு ஒரு இடமாக போய் வெளியே வந்து உதட்டைப் பிதுக்கியது தான் நடந்தது.   அவருடன் அந்த கோர்ட் முழுக்க அலைந்தது தான் மிச்சம்.  2,3 மணி நேரமானது.  களைத்துப் போனோம்.என்ன செய்வது எனப் புரியவில்லை.  அப்போது வக்கீல் உடையணிந்த ஒருவர் வந்து என்னிடம் என்ன விஷயம் என ஆங்கிலத்தில் கேட்டார்.  நானும் விடையளித்து என்னிடம் இருந்த formsஐக் காட்டினேன்.  அவர் எங்களை உடன் வரப் பணித்து ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் chamberக்குக் கூட்டிச் சென்றார்.  மாஜிஸ்ட்ரேட்டிடம் எனக்கு வந்த கடிதத்தைக் காட்டி, எங்கள் சிரமத்தை விளக்கினார்.  கொஞ்ச நேரம் அவருடன் உரையாடி விட்டு, என்னிடம் வக்கீல் சொன்னார் 'இந்த ஃபார்ம்-ல் குறிப்பிட்டுள்ள பதவி இப்போது கிடையாது. இந்த மாஜிஸ்ட்ரேட் அதற்கு equal rank தான். இவர் உனக்கு உதவுவார்' என்று.  அந்த மாஜிஸ்ட்ரேட்டிடம் கையெழுத்து வாங்கினேன்.  நன்றி கூறி வெளியே வந்தோம்.

வக்கீல் என்னைத் தனியே அழைத்து, 'என் பெயர் சொல்லி யாரும் பணம் கேட்டால் கொடுக்காதே.  அந்த் குமாஸ்தா உன்னுடன் காலை முதல் அலைந்ததாகச் சொல்கிறாய்.  அவருக்கு மட்டும் 20  ரூபாய் கொடு.  அவரே எனக்குத் தர வேண்டும் எனச் சொல்லிக் கேட்டாலும் தராதே' என்று சொன்னார்.  எனக்கு இருந்த களைப்பில் அந்த மனித தெய்வத்தின் பெயரைக் கூடக் கேட்கத் தோன்றவில்லை.  நன்றி மட்டும் சொன்னதாக நினைவு.

ஆனால், இந்த சம்பவத்தை மட்டும் நான் மறக்கவில்லை.  என்னைப் போல பலருக்கும் வழிகாட்டியாக விளங்க அந்த வக்கீல் பல்லாண்டு வாழ   என்றென்றும்  என் ப்ரார்த்தனை உண்டு.

Monday, October 18, 2010

சவால் -short story competition - பரிசல்காரன்- 'சவாலே சமாளி'

எனக்குப் பிடிக்காத வேலையை வேறு வழியில்லாமல் மும்பைக்குச் சென்றிருந்த எனது மனைவியின் உத்தரவின் பேரில் செய்து கொண்டிருக்கிறேன். நான் கவனித்த போது டாக்டர் அந்தப் பெண்ணிடம், "காமினி, உங்கள் நலத்திற்குத் தான் சொல்கிறேன், கொஞ்சம் பொறுமையாக ட்ரீட்மென்ட் முடியும்வரை ஒத்துழையுங்கள்" என்று சொல்லிவிட்டு, ஏதேதோ உபகரணங்களை சரிபார்த்தார். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
இது என்ன, பயங்கரமாக இருக்கே, என் வேலை இத்தருணத்தில் என்ன என்று கேட்பதற்காக நான் அந்த இடத்தில் இருந்து எனது மனைவிக்கு கைபேசியில் அழைத்தேன். தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதை ஒரு பெண்மணி சொன்னார். சரி, காமினிக்கு என்ன நடக்கிறது என்று பாப்போம் என நானே முடிவு செய்து செயல்படுத்தினேன்.
காமினியை வழியில் ஒரு ஆள் தடுத்து நிறுத்தினான். "சிவா, புரியாமல் தடுக்காதே, நமது பிரச்சனையை பின்னாடி தீர்த்துக்கலாம், உன் பாஸ் பற்றி முழுக்கத் தெரியாமல் எந்த தப்பு முடிவுக்கும் வராதே" என்றால் காமினி. “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
திடீர் என்று எனது கைபேசியில் அழைப்பு. அங்கிருந்து சற்றே தள்ளிச் சென்று பேசினால், எனது மனைவி! "என்னங்க, சொன்னது ஞாபகம் இருக்கா? என்ன செய்துகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டாள். "நீ சொன்ன சீரியலைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், விளம்பர இடைவேளையிலேயே போன் செய்தேன், நீ தான் கிடைக்கவில்லை" என்றேன். "சரி, சரி, பூராத்தையும் பார்த்து பிறகு சொல்லுங்கள்" என்று சொல்லி கைபேசியை அணைத்தாள் என் தர்ம பத்தினி. அங்கு தொலைக்காட்சிப் பெட்டியில்,
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன் என்று பெயர் அட்டை தாங்கிய நபர். "நீ நம் 'ரா' அமைப்புக்குத் தகுந்த ஆள் தான்" என்று அவர் சொன்னதோடு அன்றைய எபிசோடு முடிந்தது. நடுவில் நான் பார்க்காத பகுதியை நான் எப்படி இட்டு நிரப்பப் போகிறேன் என் மனைவியிடம்?