Tuesday, January 25, 2011

குடியரசு தினம் - கொண்டாட்டம்!

முதலில் குடியரசு தின வாழ்த்துக்கள்
          உலகிலேயே பெரிய ஜனநாயக நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள்... 1930-ல் Declaration of Indian Independence ஐ இந்த நாளில் முழங்கியதை, அன்று முதல் சுதந்திரம் கிடைத்த வரை ஒவ்வொரு வருடமும் 26 ஜனவரியன்றே இந்திய சுதந்திர தினமாகக் கொண்டாடியதை நினைவில் நிறுத்த 1950-ம் வருடம் இதே நாளில் இந்தியா குடியரசானது. 
இந்த வருடம் இந்த விடுமுறை நாளை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள்?

          என்னைப் பொறுத்த மட்டில் எப்போதும் இத்தினத்தில் அலுவலகத்தில் அல்லது என் மகன்கள் பள்ளியில் நடக்கும் விழாவில் - கொடியேற்றம் முதல் பங்கு கொள்வேன்.  இல்லையென்றால், டி.வி. முன் தான்... . நான் இந்தியத் தொலைக்காட்சியிலேயே முதல் முறையாய் வழங்கும் எந்தத் திரைப்படத்தைப் பற்றியும் இங்கு சொல்ல வரவில்லை!.  Republic Day Parade-  ஐத் தான் சொல்கிறேன்.  பார்க்கும் கணந்தோறும் இந்தியராய்ப் பிறந்ததற்கு இறுமாப்பு எய்ய வைக்கும் நிகழ்ச்சி.

          நீங்களும் பார்ப்பீர்கள் என நினைக்கிறேன்.  நாட்டின் தலைநகரத்திலோ, மாநிலத் தலைநகரத்திலோ, வேறு எந்த இடத்திலோ  Republic Day Parade ஐ நேரடியாகப் பார்க்க முடிந்தால் இன்னும் சிறப்பு.  உங்கள் குழந்தைகளுக்கும் இந்த நாளின் சிறப்பை உணர்த்துங்கள்.   61 வருடம் கடந்து விட்டது.  காலம் காயங்களை மட்டுமல்ல, சில சமயம் வரலாற்றையும் மறக்க வைக்கிறது.  விடுமுறைக் கொண்டாட்டத்தோடு இந்த நாளைப் பற்றியும் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

          வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடும்பங்களுக்கும் தான் இந்த வேண்டுகோள்.  உங்கள் குழந்தைகள் இரட்டைக் கலாச்சாரத்தோடு, இரு நாடுகளின் சரித்திரங்களுடன் வளரட்டும். 

ஜெய் ஹிந்த்!

Sunday, January 23, 2011

கதம்பம் - 2

போலியோ சொட்டுமருந்து
ஐந்து வயதிற்குட்பட்ட உங்கள் குழ்ந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து அளித்து விட்டீர்களா? சமீபத்தில் ஏற்கெனவே கொடுத்திருந்தாலும் பரவாயில்லை, மீண்டும் கொடுங்கள்;  இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு வராது என டாக்டர் குழு ஒன்று பொதிகை டி.வி.யில் விளக்கமளித்தனர்.  சொட்டுமருந்து நிறம் மாறியிருந்தால் மட்டும் அதை உபயோகிக்காமல் பார்த்துக் கொள்ளூங்கள். 
நான் பள்ளிப் பருவத்தில் பார்த்த போலியோவால் பாதிக்கப்பட்ட பெண், இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறாள்.  இந்த அரக்கனை ஒழிக்க அக்கம்பக்கத்தில் இவ்வயதுக் குழந்தைகள் இருந்தாலும் போலியோ சொட்டுமருந்து போடும் நாள் இன்று என ஞாபகப்படுத்துங்கள்

மின்வெட்டு நேரம்...
மின்வெட்டு நேரம் - அப்போது தான் குடும்பம் முழுவதும் ஒரு இடத்தில் கூடிக் களிக்கின்றோம் இல்லையா? இந்த இன்பமான பொழுதுகளால் வருங்காலத்தில் முழுநேரமும் மின்சாரம் வந்தால் கூட வேண்டாம் என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது!
நேற்று  இத்தருணத்தில் பழுதான மின்சாதனங்களைச் சரி செய்கின்ற போது, வெளிச்சம் போதவில்லை; சைக்கிளைக் கொண்டுவந்து அதை ஸ்டாண்டில் வைத்து இயக்கி அதன் விளக்கு வெளிச்சத்தில் வேலையை முடிக்க உதவினர் என் மகன்கள்!  ஐடியாவிற்கு காப்பிரைட் இல்லை, நீங்களும் உபயோகிக்கலாம்!!

Laughter is the best medicine! 
நடந்த சம்பவம் இது.  ஒருவர் மூக்கில் அறுவை சிகிச்சை முடிந்து ஹாஸ்பிடலில் பெட் ரெஸ்டில் இருந்தார்.  மூக்கில் முழுக்க பஞ்சு வைத்து அடைத்திருந்தது.  அவரைப் பார்க்க அலுவலகத்திலிருந்து ஒருத்தி வந்தார்.  நோயாளி படுத்திருந்ததால், அவர் மனைவியிடம் நலம் விசாரித்தார்.  மூக்கில் ஏன் அடைத்து வைத்திருக்கிறது என அவர் கேட்க, அந்த மனைவியும் காயம் ஆறவும் அதுவரை மூக்கால் மூச்சு விடக் கூடாது, வாயால் தான் விடவேண்டும் எனவும் கூறினார்.  வந்தவர், "அப்படின்னா, அவர் எப்படி சாப்பிடுவார்?" எனக் கேட்டு மனைவியை மயங்கி விழச் செய்தார்!!

Friday, January 21, 2011

மூன்று வார்த்தைகள்

என்னவருக்கு!
ஊரில் எல்லாரும் கேட்கிறார்கள்,
உங்களுடையது காதல் திருமணமாமே!
இடையூறுகளைத் தாண்டி நிகழ்ந்தது தான் நம் மணம்!
இத்தனை வருடங்களுக்குப் பிறகும்
இன்னும் நான் கேட்டதில்லை உங்களிடமிருந்து
அந்த மூன்று வார்த்தைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ!

ஏன் எனக்கு மட்டும்...ஒருவேளை மறந்திருப்பேனோ..
பின்னோக்கி ஓடவிட்டேன் நினைவுகளை.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு,
அரைகுறை நினைவுடன், பெருவலியுடன் நான்..
உமிழ்ந்ததை எடுத்துத் துடைத்தது உங்கள் கைகள்,
உற்றார் சுற்றார் உடனிருந்த போதும்;
அப்போதும் நான் கேட்கவில்லை அந்த வார்த்தைகளை..

விடுப்பிலுள்ளாயா இதைச் செய் அதைச் செய் என
விண்ணப்பங்கள் பல குவிந்தன, உங்களிடமிருந்தும் தான்!
சொன்ன வேலைகள் எதையும் செய்யாது,
சும்மா பதிவுலகில் பின்னூட்டமிட்டுவிட்டு
எந்த ஆணியைப் பிடுங்கியதாகச் சொல்லலாம்
என யோசித்திருந்தேன்..
மாலை நீங்கள் வரும்பொழுது -
தந்தீர்கள் ஒரு பெரிய நூலை
என் பொழுதுபோவதற்காக
என் ரசனைக்கு
நூலகத்தில் நீங்கள் எடுத்தது! இதைப் படி,
இரண்டாம் பாகம் இது முடித்தவுடன் என்றீர்கள்
இப்போதும் நான் கேட்கவில்லை அந்த வார்த்தைகளை..

இப்படி பல தருணங்கள்...ஆனாலும்
எப்போதும் நான் கேட்கவில்லை அந்த வார்த்தைகளை..

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை!!

Monday, January 17, 2011

கதம்பம்

காணும் பொங்கலன்று இந்தப் பதிவு! காண வந்தோருக்கு வந்தனம்!!!
உங்களுக்காக ஒரு ம்ம்!
டி.வி. பொங்கல்
பொங்கல் விடுமுறைக்கு டி.வி. யை நம்பினோர் ஏமாற்றப்பட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.  எல்லா சேனல்களிலும் பட்டிமன்றம், பேச்சு மன்றம், ஏதேனும் ஒரு நடிகருடன் ஒரு ஊரில் பொங்கல்.. இது போலவே இருந்தன.  போட்ட திரைப்பட வரிசையில் ஆதவன், அயன், மதராசப் பட்டினம் தான் பார்க்கும்படி இருந்தன.  சுறா... சொல்லவே வருத்தமாக இருக்கு .. விஜய் விசிறியான என் இரண்டாவது மகன் படம் ஆரம்பித்து 20 நிமிடத்தில் வாக்-அவுட் (நான் 10 நிமிடத்தில்)!!
இவை தாம் இப்படி என்றால், மகர விளக்கு ஜோதி காண்பிப்பதிலும் 5, 6 சேனல்களுக்கு இடையே போட்டி.  ஒவ்வொன்றிலும் தனித்தனியே வெவ்வேறு நேரத்தில் ஜோதி தெரிந்தது  காமெடி.  இதன்பின் நிகழ்ந்த விபத்துக்களும் உயிரிழப்புகளும் ட்ராஜெடி.:((((.
மொத்தத்தில் டி.வி. பொங்கலில் இனிப்பில்லை, சுகர்-ஃப்ரீயுமில்லை!!

மாயச் சுழல்
இன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி.  இன்ஜினியரிங் காலேஜ்களில் ஃபீஸ் உயரப் போகிறதாம்.  இதற்குச் சொல்லப்படும் காரணம், 6-வது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி பிரின்ஸிபல், ப்ரொஃபெஸர்கள், லெக்சரர்கள் இவர்களுக்கு சம்பளம் உயர்த்தியதால், நிதி நிலையைச் சமாளிக்க மாணவர்களின் பயிற்சிக் கட்டணத்தை உயர்த்த வேண்டுமாம்!  6 -வது சம்பளக் கமிஷன், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தினை நிர்ணயம் செய்ய நிறுவப்பட்டது.   மாணவர்களின் கட்டணம் கூட்டப் பட்டால், பெற்றோரின் சுமை அதிகமாகும்.  இந்த கூடுதல் சுமையைச் சமாளிக்க அரிசி, புளி, மிளகாய், காய்கறி, முதலியன விலைகள் உயரும்.  விலைவாசி உயர்ந்தால், சம்பளம் உயரும்.  மறுபடி...எல்லாம் உயரும்.  இந்த மாயச் சுழல் - vicious circle -லில் இருந்து வெளிவருவது எப்படி? ஏதாவது ஒரு இடத்தில் சுழற்சிக்குத தடை ஏற்படுத்த வேண்டும்.  பூனைக்கு யார் மணி கட்டுவது?

ரசித்த ஜோக்
சோவின் பேட்டி வழக்கம் போல ரசிக்கும்படி இருந்தது.  (தினமலரில் வெளியானபடி) கடைசியில் சொன்ன ஜோக்:  ஒருவன் குளத்திலிருந்து மீன் பிடித்து வந்தான்; சமைக்க மனைவியிடம் கொடுத்த போது அவள் வெங்காயம், மற்ற சாமான்கள் விலை காரணமாக அதைச் சமைக்க இயலாது எனவும், மீனை மறுபடி குளத்திலேயே விட்டுவிடும்படியும் கூறினாள்.  அவனும் அப்படியே மீனைக் குளத்தில் விட்டுவிட்டான்.  அது துள்ளி உள்ளே சென்று, தன் துணை மீன்களிடம் தான்  'கலைஞர் உயிர் காக்கும் திட்டத்தில்' பிழைத்து வந்ததாகக் கூறுகிறது!!.   சோ சொன்னாராம், 'நல்ல வேளை, மீன் சொன்னது கலைஞருக்குத் தெரியாது, தெரிந்திருந்தால், மீன்களை விட்டுத் தனக்கு பாராட்டு விழா நடத்தச் சொல்லியிருப்பார்' என்று. 

Thursday, January 13, 2011

தமிழ்ப் பண்டிகைக்கு இங்கிலீஷ் பாயசம், காரட் கீர்

பண்டிகைக் காலத்தை இனிப்புடன் கொண்டாடலாம்!  (சமையல் பிடிக்காதவர்கள் மேலே தொடர்வது அவர்கள் சொந்த ரிஸ்க் - ரஸ்க்)
பொங்கல் தமிழர் திருநாள் - இதை இங்கிலிஷ் காய்கறி - காரட்-டைப் பலி கொடுத்து ஒரு கீர் செய்யலாமா?
தேவையான பொருட்கள் : காரட், சர்க்கரை (அல்லது) சுகர்-ஃப்ரீ(diet sugar), பால், தண்ணீர், மிக்ஸி,  பாத்திரங்கள், கரண்டி, அடுப்பு, தீக்குச்சி (அல்லது) லைட்டர், நீங்கள் (செய்வதற்கு)......... (E. & O E) :-))
காரட்டைச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். இதனை குக்கரில் சாதம் வைக்கும்போதோ அல்லது தனியாக ஒரு பாத்திரத்திலோ, ஏற்றிய அடுப்பில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.  குக்கரில் வேக வைப்பதானால், தண்ணீர் விடத் தேவையில்லை; ஸ்டீமிலேயே வெந்து விடும்.  தனியே வேக வைக்கும்போது தண்ணீரைக் கொஞ்சமாக விட வேண்டும். காரட் ஆறியபிறகு வேக வைத்தத் தண்ணீரை வீணாக்காமல் காரட்டுடன் மிக்ஸியில் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.  தேவையான அளவு பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்.  பால் பொங்கியவுடன், அடுப்பின் தீயை மிதமாக எரிய விட்டு, அரைத்த விழுதைக் கலக்கவும்.  2 நிமிஷம் கொதித்தவுடன்,  தேவைபட்ட அளவு சர்க்கரை (அல்லது) சுகர்-ஃப்ரீயைச் சேர்த்து, 2 நிமிஷங்கள் கொதித்தபின், அடுப்பை அணைத்து விடலாம்.  இந்த காரட் கீருக்கு, தேவைப்பட்டால், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்க்கலாம்.  இந்தப் பானத்தை/ பாயசத்தை/ kheer ஐச் சூடாகவோ, ஃபிரிட்ஜில் குளிர வைத்த பிறகோ குடிக்கலாம். செய்வதற்கு மிகக் குறைந்த நேரமே தேவைப்படும், சத்தான பானம்.
 குழந்தைகளை காரட் சாப்பிட வைக்க ஈஸியான வழி.  (என் குழந்தைகளுக்குப் பிடிக்கும்!!) முக்கியக் குறிப்பு: குழந்தைகளுக்கு செய்வதற்கு சுகர்-ஃப்ரீ/ diet sugar வேண்டாம்
டிஸ்கி: 'ஏற்றிய அடுப்பில்' - இதெல்லாம் ஓவர்ன்னு எனக்கே தெரியுது,  ஒரு ப்ரிகாஷன் தான்:-))

பொங்கல் வாழ்த்துக்கள்!!

Saturday, January 8, 2011

ஹாஸ்பிடல் - சிறுகதை

               ஹாஸ்பிடல் போவது பிரபுவிற்கு அறவே பிடிக்காது.  அவனுக்கு உடல்நிலை சரியில்லையென்றாலே போகப் பிடிக்காதபோது, துணைக்குக் கூடச் சென்று வெயிட்டிங்கில் இருப்பது வேப்பங்காய்.   சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே அவன் அப்பாவிற்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போய் ஹாஸ்பிடல் விஜயங்கள் - வாசங்கள் அரங்கேறியுள்ளன.  ஔவையாராலேயே கொடியது என சான்றளிக்கப்பட்ட வறுமை.  பணத்திற்கு வழிசெய்தல், உறவினர்களின் வருகை, அவர்கள் பேச்சு எல்லாம் கசப்பான நினைவுகளாக மனதில் தங்கி விட்டன.
             இப்போது பிரபுவின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டது.  ஆனால் இப்போது  தன் அம்மாவிற்காக அவன் ஹாஸ்பிடல் செல்ல வேண்டியுள்ளது.  பிரபுவின் அம்மாவிற்கு அவன் அப்பாவைச் சுற்றியே  உலகம், பிரபுவின் உலகமும் அப்பாவைச் சுற்றித்தான்.  அப்பா இந்த உலகை விட்டுச் சென்ற பின் பிரபுவும் அவன் அம்மாவும் தான், பிரபுவிற்கு கல்யாணத்துக்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
             அம்மாவுக்கு இப்போது் முடக்குவாத நோய்.  இதற்கு உண்டான சிறப்பு மருத்துவரிடம்  2 மாதத்திற்கு ஒரு முறை செக்கப் செய்து கொள்ள வேண்டும்.  இந்த சிறப்பு மருத்துவர். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரபுவின் ஊரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு வருவார். அவரிடம் அன்று மட்டும் 200 பேர் உடலைப் பரிசோதிப்பதற்காகக் காத்திருப்பார்கள்.
              அன்றும் அப்படித் தான், அம்மாவும் பிரபுவும் காத்திருந்தார்கள்.  அவர்கள் முறை வருவதற்கு எப்படியும் 2 மணிநேரம் ஆகும் எனத் தெரிந்தது.  அந்த காத்திருப்பு அறையில் வெவ்வேறு பிரிவுகளுக்கு வருபவர்கள் எல்லாரும் உட்கார்ந்திருப்பார்கள். பொழுதுபோகாமல், அக்கம்பக்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்.  அம்மா லேசாகக் கண்ணயர ஆரம்பித்தார். பக்கத்திலிருந்த ஒரு குடும்பம் பிரபுவின் கவனத்தைக் கவர்ந்தது.  நிறைய நகைகள் போட்ட ஒரு வயதான பெண்மணி, அவர் கணவர் போலத் தோன்றிய ஒருவரிடம், அதைச் செய்தாச்சா, இதைச் செய்தாச்சா, என்று அதிகாரமாகவும் சத்தமாகவும் கேட்டுக் கொண்டிருந்தார். 
               அந்த ஹாஸ்பிடல் சூழ்நிலையில் யாரும் இதை ரசிக்கவில்லை.
அவர்கள் அந்த ஹாஸ்பிடலுக்குப் புதியவர்கள் போலத் தெரிந்தது.  சாதாரணமாக பிரபு புதியவர்களுக்கு தேவைப்பட்ட உதவியைத் தானாகவே செய்வான்.  அன்று அந்தப் பெண்மணியின் செயல்களால், வெறுப்பாகி, வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்தான்.  ஆனால் அவனால் தன் காதுகளை மூட முடியவில்லை.
             இப்போது அந்தப் பெண்மணி தன் கணவரிடம், 'செல்லைக் கொஞ்சம் கொடுங்கள்' என்று கேட்டு விட்டு,  செல்ஃபோனில் பேச ஆரம்பித்தார்.  "டேய், நான் தான்டா அம்மா பேசறேன், ஆஸ்பத்திரியிலிருந்து தான் பேசறேன், ஒண்ணும் கவலைப் படாதே, உன் பையன இப்ப தான் பார்த்துட்டு வறேன், பாட்டி வந்திருக்கேன்னு சொன்னவுடன் கண்ணை லேசாகத் திறக்கப் பார்த்தான்ப்பா, எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.".. " என்ன, மருமகளா, பையனுக்கு அடிபட்டுடுச்சுன்னவுடனே பதறிப் போயிட்டாளே, பிரமை பிடிச்சா மாதிரி பையன் படுக்கைக்குப் பக்கமே தான் இருக்கா, ஐ.சி.யூ.வில் எங்களை வெளீயே போகச் சொல்லிட்டாங்க'...."என்ன, அப்பாவா, இங்க தான் இருக்கிறாரப்பா, என்ன சொல்லணுமோ எங்கிட்ட சொல்லு, இங்க ஆஸ்பத்திரிங்கறதுனால ரொம்ப சத்தம் போட முடியாது, அவசரத்தில் அவர் காது மெஷினை வீட்டிலேயே வைச்சிட்டார்"..."நான் பார்த்துக்கறேன்ப்பா, நீ அக்கரைச் சீமையிலே தனியாக உட்கார்ந்து கவலைப் படாதே, உனக்கு உடம்புக்கு வந்தால் நாங்க உடனே வந்து பார்க்கற தூரத்திலேயா இருக்கே?'.... "ஆங், நானா, சக்கர, பிரஷரு மாத்திரையெல்லாம் எடுத்துக்கறேன்ப்பா, நீ கவலைப்படாதே, .. இந்த ஊர் புதுசாயிருந்தாலும் ஆஸ்பத்திரியெல்லாம் புதிசாப்பா, எம்புட்டு வருஷமா அலைஞ்சு பழகிட்டேன், 2 மாசத்தில் நீ தான் அப்பாவோட 80-வது பிறந்த நாளைக்கு ஊருக்கு வருவையே, எங்களையெல்லாம் ஜம்முனு பார்க்கப் போறே" என்று பேசி முடித்தார்.  ஒரு செக்யூரிட்டி ஆள் வந்து, 'யாருங்க இங்க அந்தச் சின்ன பையனோட வந்திருகிறீங்க, ஒரு டவல் வேணும், உடம்பத் தொடச்சு விட' என்று வினவினார். 
              பிரபுவிற்கு இப்போது அந்தப் பெண்மணி மீது இரக்கம் வந்திருந்தது.  ஒரு அம்மாவின் பாசம் புரிந்தது.  தான் இனிமேல் தன் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு, அடச் சே, ஹாஸ்பிடலுக்கு கூட்டிவரச் சலித்துக் கொள்ளக் கூடாது என மனசுக்குள் தீர்மானம் செய்து கொண்டான்.  பக்கத்துக் கடைக்கு போய் அந்தப் பெண்மணிக்கு டவல் வாங்கிக் கொடுக்கலாம் என்று எழுந்தபோது, அந்தப் பெண்மணி சத்தமாகத் தன் கணவரிடம், 'பேரப்பய சட்ட, டவுசரு, துண்டு எல்லாம் வச்ச பையை எங்க வச்சீங்க?' என்று கேட்டு பையை வாங்கி உள்ளே சென்றார்.  பிரபுவின் அம்மாவின் டோக்கன் நம்பரைக் கூப்பிட்டார்கள்.

Saturday, January 1, 2011

புது வருடம்! யாருக்கு?

புது வருடம் 2011 - இதை ஏன் கொண்டாட வேண்டும்?
"வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவிற்குத் தெரியாது"  பூமி சுழன்று 365/366 நாட்கள் முடிந்து விட்டது என்று அதற்குத் தெரியுமா?  அப்படியென்றால், அந்தக் கணக்கு அதற்கு என்றிலிருந்து ஆரம்பம்? ரோமன் காலண்டரிலிருந்தா?  ஜுலியஸ் சீசர் கணக்கு போட்ட நாளிலிருந்தா?  தமிழ் பேசும் நாம் ஏன் இந்த ஆங்கிலக் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும்?

சரி, உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்கள்.. தமிழ்த் தேதிங்க..., நக்ஷத்திரம் மட்டும் இல்லை, தமிழ் மாதம், தமிழ் வருடம் எல்லாம்  சொல்லுங்க.  உங்கள் கல்யாணத் தேதி..(இதே மாதிரி) தெரியுமா? எல்லா நாட்களையும் ஆங்கிலத் தேதிகளோடு தான் தொடர்பு படுத்திப் பார்க்கிறோம்.  ஆங்கிலேயர்கள் ஏற்ப்படுத்திய கல்வி முறையையும் அலுவல் முறையையும் பின்பற்றும் வரையும், ஒரு இந்திய மொழியை இந்தியப் பொது மொழியாக ஏற்க முடியாத வரையும் இப்படித்தான் இருக்கும்

இப்போதைய இளைய தலைமுறை தமிழ் மாதம், வருடம் பற்றி அறியுமா?  எனவே, எனது தீர்வு.. ஆங்கிலப் புத்தாண்டும் கொண்டாடுவோம் - தமிழர் வழியில் - விருந்துடன் வாழ்த்துப் பெறுவோம்.  இந்த வருடத்தில் வரும் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். 2011 சந்தோஷத்துடன் நினைவில் நிற்கும் வருஷமாக அமைய வாழ்த்துக்கள்.  உங்கள் வாழ்த்துக்களும் தேவை..

எல்லாம் சரி, இந்தப் பதிவை ஏன் நேற்றே போடவில்லை எனக் கேட்பவர்களுக்கு - நான் ஆங்கில முறையில் இந்தப் புத்தாண்டைக் கொண்டாடவில்லை.!!!