Thursday, March 1, 2012

கதம்பம்-10


இஞ்சினியரிங் அட்மிஷனா...?

      ப்ளஸ் டூ பரீட்சைகள் இதோ 8ந் தேதி ஆரம்பிக்கப் போகின்றன.  பிள்ளை/பெண்ணுக்கு இஞ்சினியரிங் அட்மிஷன் கிடைக்க வேண்டுமே என்று ஏங்கும் பெற்றோரா நீங்கள்?  சென்ற வருடம் என் மூத்த மகனுக்கு நான் பட்ட கவலையிலிருந்து... இந்தத் தகவலைப் பகிரலாம் என்று தோன்றியது. 

     ப்ளஸ் டூ பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினால், கவுன்சிலிங்கிலேயே வேண்டிய கல்லூரியைத் தேர்வு செய்து விடலாம்.  தவிரவும் AIEEE,  இதர டீம்ட் யூனிவர்சிடிகள் நடத்தும் தேர்வுகளும் இருக்கவே இருக்கின்றன.  குழந்தைகள் எவ்வளவு தான் படித்தாலும், மதிப்பெண்கள் எடுப்பதில் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.  தலைவலியோ வயிற்று வலியோ பரிட்சை சமயததில் வந்தால், மதிப்பெண் குறைவுக்கு யாரைக் காரணமாய்க் காட்ட முடியும்?  இஞ்சினியரிங் சீட்டுகள் வேண்டிய அளவு உள்ளன.  கட்டாயம் சீட் நிச்சயம்.  கேள்வி - விரும்பிய கல்லூரியில் சீட் கிடைக்குமா?

     போன வருடத்து மதிப்பெண் - கட் ஆஃப் மார்க்குக்கு நீங்கள் விரும்பிய இடத்தில் இஞ்சினியரிங் சீட் கிடைக்குமா என்று பாருங்கள்.  இல்லையேல், பெரிய தன்னாட்சிக் கல்லூரிகளில் - பல்கலைகளில் NRI seat என்று உள்ளன.  இவற்றில் சேர்வதற்கு மாணவனோ மாணவியோ NRI ஆக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை - பெற்றோர் வெளிநாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை..  அவர்களின் இரத்த சம்பந்தமான உறவினர் வெளிநாட்டில் இருந்தால் போதும்.  ஸ்பான்சர்ஷிப்புக்கான ஆவணங்களுடன் கட்ட வேண்டிய ஃபீஸ் மட்டும் டாலரில் வெளிநாட்டிலிருந்து உறவினரிடமிருந்து வர வேண்டும்.  தேவைப்பட்டால் உங்களுக்கு வேண்டிய கல்லூரிகளில் இடம் வாங்க இந்த முறையையும் பின்பற்றலாம்.   (உறவினரிடம் கொடுக்கல்/ வாங்கல் விவகாரங்களைப் பேசிக் கொள்ளுங்கள்!!)  நீங்கள் விரும்பிய கல்லூரி/பல்கலைக்கழகத்தின் வலைத் தளததில் இதற்கான தகவல்களைப் பெறலாம்.



தாய்ப்பாசம்:

இது 'தினத்தந்தி' திருச்சி பதிப்பில் வந்த செய்தி.  பெரிதாக்கிப் படித்திட படத்தில் சொடுக்கிடுங்கள்.

மி்ன்சாரத் தடை:  ஐயோடெக்ஸ் விலையில்லாமல் கிடைக்குமா?

     இரவு முழுதும் விட்டு விட்டு மின்சாரத் தடை.  காலையில் பாதி சமையலுக்குள் - காலை ஆறு மணிக்கே மறுபடி மின்சாரத் தடை.   குழம்பு செய்ய வறுத்து வைத்திருந்தவற்றை அரைக்க முடியவில்லை.  மற்ற வேலைகளை முடித்து எட்டேகால் மணி வரை பொறுத்துப் பார்த்தும் மின்சாரம் வருவதாய்த்  தெரியவில்லை.  வேறு வழியில்லாமல், நான் வைத்திருக்கும் சின்ன அம்மியில் அரைத்தேன்.  சமையலை முடித்தாயிற்று.  சாப்பிடும் போது என் கணவரிடம், சுவை வித்தியாசமாய் தோன்றப் போகிறதே என்ற ஆதங்கத்தில், அம்மியில் அரைத்துச் செய்த குழம்பு என்று சொல்லி விட்டுப் பரிமாறினேன்.  சுவைத்துப் பார்த்த அவர், இனிமேல் அம்மியிலேயே அரைத்துச் செய்யச் சொன்னார்!! :-((.  இதற்காக மின் தடைக்கு நன்றி வேறு!! :-((((
     என் கேள்வியெல்லாம் - பழக்கமில்லாமல் அம்மி - ஆட்டுரலை உபயோகப்படுத்தினால் வரும் தோள்/கை வலிக்கு ஐயோடெக்ஸை இந்த அரசாங்கம் 'விலையில்லாமல்' வழங்குமா????