Sunday, April 15, 2012

சுண்டைக்காய்!

சுண்டைக்காய் மேட்டரு.... சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம் - இப்படி நம் அன்றாட வாழ்வில் பேச்சில் உபயோகப்படுத்தும் சுண்டைக்காயைச் சமையலில் உபயோகிக்கலாமா?

 'அதான், எனக்குத் தெரியுமே! சுண்டைக்காய் விஷயம்!! - சுண்டை வத்தல், வத்தல் குழம்பு..', என்றெல்லாம் சொல்பவரா நீங்கள்?  என் அம்மா செய்யும் சுண்டை வதக்கல் இதோ! 

தேவையான பொருட்கள்:
நாட்டுச் சுண்டைக்காய் - 1/4 கிலோ (காம்புகளை நீக்கிக் கொள்ளவும்)
தாளிக்க - எண்ணை (வேண்டுமளவு)
கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு

வறுத்துப் பொடி செய்து கொள்வதற்கு:
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வத்தல் மிளகாய் - 4/5 தேவைக்கேற்ப
தனியா - 2 டீஸ்பூன்
எள்ளு- சிறிதளவு


உப்பு - தேவைக்கேற்ப
அப்புறம் அடுப்பு, பாத்திரங்கள், கரண்டி, லைட்டர்/தீப்பெட்டி, மிக்சி எட்செட்ரா


சுண்டைக்காய்களை நாலாகவோ அல்லது இளசாக இருந்தால் இரண்டாகவோ நறுக்கிக் கொள்ளவும்.  இந்த சமையலில் கஷ்டமான விஷயம் இது தான். நறுக்கும் போது விரலை வெட்டிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் சாமர்த்தியம்.  விரல்கள் விதைகள் ஒட்டி, சாறு ஒட்டி - கொஞ்சம் கஷ்டம் தான்!! :-)) சுண்டைக்காய் நறுக்கும் போது ரொம்ப சுலபமாக நறுக்க வந்தால் - அது அழுகி விட்டது; நறுக்கும் போதே கறுப்பாய் இருந்தால் - அது கெட்டுப் போய் விட்டது; இத்தகையவற்றைத் தூக்கிப் போட்டு விடவும்


சுண்டைக்காய் நறுக்கியவுடன் மிக விரைவில் பிரவுனாகி விடும்.  நோ ப்ராப்ளம்! கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அலம்பிக் கொள்ளவும்.  விதைகள் நீரில் தங்கும் - கொட்டி விடலாம்!!  

ஏற்றிய அடுப்பில் வெறும் வாணலியைப் போட்டு,  கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், எள்ளு இவற்றை  வறுத்து, ஆறியபின் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். பின்னர்,  வாணலியை திரும்பவும் ஏற்றிய அடுப்பில் வைத்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்துக் கொள்ளவும்.  நறுக்கி வைத்துள்ள சுண்டைக்காயைப் போட்டு வதக்க ஆரம்பிக்கவும். பாதி வதங்கிய பின்னர், வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து, வதக்கவும்.  நடுவில் மூடி போட்டு வைத்தால், சீக்கிரம் வதங்கும். இந்த ஸ்டேஜில் கமகமவென்று வாசனை பரவும்!! குட்டீஸ் வந்து எப்போது சாப்பிட வரலாம் என்று கேட்பார்கள்!! (எங்கள் வீட்டு நடப்பை வைத்துச் சொன்னேன்!)  நன்றாக சுருள வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.  சுண்டை வதக்கல் ரெடி! இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட சுவையோ சுவை!  தேவைப்பட்டால், நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளலாம்.  தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், இரண்டு நாட்கள் உபயோகிக்கலாம்.

நாட்டுச் சுண்டைக்காய் என்று எழுதியிருக்கிறேனே, என்ன என்று கேட்பவர்களுக்கு - சுண்டையில் நாட்டுச் சுண்டைக்காய், மலைச் சுண்டைக்காய் என்று இரு வகை உள்ளது.  வீடுகளில், தோட்டங்களில் வளர்வது நாட்டுச் சுண்டை.  மலையில் வளர்வது - யெஸ்! கரெக்ட்!! மலைச் சுண்டைக்காயில் வற்றல் போடுகிறோம்.  

சுண்டைக்காய் கசக்கும் - இதில் என்ன பலன் என்று கேட்பவர்களுக்கு - சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்;  வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.  மெலும், அஜீரணக் கோளாறுகளை நீங்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.

முக்கியக் குறிப்பு: செய்து பார்த்து நல்லா இருந்தா, பாராட்டுகள் என் அம்மாவுக்கு!  அவர் சொல்லிக் கொடுத்த ரெசிபி தான் இது.  நல்லா வரவில்லையென்றால், நான் தான் சொல்வதில் எங்கோ தப்பு செய்திருக்கிறேன்.  :-)).  தாங்க்ஸ் அம்மா!

முக்கிய முக்கிய குறிப்பு: முன்னேயே சொல்ல விட்டுட்டேன் பாருங்க! சுண்டைக்காயின் இயல்பு கசப்பு. ஆனால், இந்த முறையில் செய்து சாப்பிட்டால், அவ்வளவு கசப்பு இருப்பதில்லை பாகற்காய் சாப்பிடாத என் மூத்த மகனும் இந்த சுண்டை வதக்கலை விரும்பிச் சாப்பிடுவான்.

32 comments:

பால கணேஷ் said...

சுண்டைக்காய் வத்தல் சின்ன வயசுல எங்கம்மா செஞ்சு கொடுத்தது சாப்ட்ருக்கேன். ‘வதககல’ புதுசா இருக்குங்க. செய்யச் சொல்லிச் சாப்பிட்டுப் பாக்கறேன். (மார்க்கெட்ல இப்பல்லாம் சுண்டைக்காய் கிடைக்குதான்னு ஒரு டவுட்டு!) புதுசா ஒரு விஷயம் சொன்னதுக்கு நன்றி!

நிரஞ்சனா said...

Hello! பாகல்காய் கசப்புன்னு நான் கம்மியா சாப்பிடறேன்னு மம்மி திட்டுவாங்க. இதுவும் கசக்கும்னு சொல்றீங்க. But, ஹெல்த்துக்கு நல்லதுன்னு சொல்லியிருக்கறதால நான் அவசியம் Try பண்றேன். Many Thanks!

ஸ்ரீராம். said...

ரொம்ப ஆரோக்கியமான ரெசிப்பி.கசப்பாக இருந்தால் இந்தக் காலத்தில் குழந்தைகள் எங்கே சாப்பிடுகிறார்கள்?! சுண்டைக்காய் போட்டு எது செய்தாலும் எனெக்கென்னவோ பிடிக்கும்.

Madhavan Srinivasagopalan said...

//முக்கியக் குறிப்பு: செய்து பார்த்து நல்லா இருந்தா, பாராட்டுகள் என் அம்மாவுக்கு! அவர் சொல்லிக் கொடுத்த ரெசிபி தான் இது. நல்லா வரவில்லையென்றால், நான் தான் சொல்வதில் எங்கோ தப்பு செய்திருக்கிறேன் //

:-)

middleclassmadhavi said...

@ கணேஷ்- /மார்க்கெட்ல இப்பல்லாம் சுண்டைக்காய் கிடைக்குதான்னு ஒரு டவுட்டு!/ - கிடைக்குதுங்க! உழவர் சந்தை எதுவும் பக்கத்தில் இருந்தால் ட்ரை செய்யவும்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ நிரஞ்சனா - /ஹெல்த்துக்கு நல்லதுன்னு சொல்லியிருக்கறதால நான் அவசியம் Try பண்றேன்/ Thanks to you too!

middleclassmadhavi said...

@ ஸ்ரீராம். - இந்த முறையில் சமைத்தால் அவ்வளவு கசப்பு தெரிவதில்லை - (ஒரு குறிப்பையும் இப்போது add செய்துள்ளேன்)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan - வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி!

Unknown said...

நல்ல சுண்டைக்காய் சமையல்

எங்க அம்மாவ செய்து தர சொல்ரேன்

அப்பாதுரை said...

நான் கேக்க நெனச்சதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு கரெக்டா நீங்களே பதிலும் சொல்லிட்டீங்க.. இத்தனை நாள் மலைச்சுண்டைக்காயை சாப்பிட்டிருக்கிறேன் என்பது தெரிஞ்சுக்கிட்டேன். இனிமே நாட்டுச் சுண்டைக்காயைத் தேடிகிட்டுப் போக வேண்டியது தான் :) பச்சைக் கலரில் சுண்டைக்காய் பார்த்ததேயில்லை. செய்முறையும் படமும் சாப்பிடத்தூண்டுவது உண்மைதான். (உங்க வீட்டு அட் ரெஸ் குடுங்க.. மெட் ராஸ் வரப்ப ஒரு பகெட் நாட்டு சுண்டைக்காயோட வரேன்.. நானே கட் பண்ணியும் தரேன் :)

அப்பாதுரை said...

பாகெட்னு சொல்ல வந்தேன்.. பகெட்னு விழுந்திடுச்சு.. ஹி.

r.v.saravanan said...

சுண்டைக்காய் வற்றல் சாப்பிடும் போது அதன் கசப்பு என்னை சாப்பிட விடாமல் செய்து விடும்


பகிவுக்கு நன்றி மாதவி

வை.கோபாலகிருஷ்ணன் said...

பச்சை சுண்டைக்காய்களை காம்பை நீக்கிவிட்டு, கத்தியால் இரண்டாக நறுக்கி விட்டு, சாம்பாரில் போட்டுப்பாருங்கள். சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். நானே வாங்கி வந்ஹு நானே நறுக்கித்தந்து விடுவேன். கத்தியால் அதை நறுக்கும்போது சமயத்தில் இங்குமங்கும் ஓடும். அவ்வாறு ஓடுவதைப் பிடிப்பது தான் கஷ்டம். நறுக்குவதும் கஷ்டம் தான். பொறுமை வேண்டும்.

சில பிஞ்சாக இருந்தால் நல்ல டேஸ்ட் ஆக இருக்கும். முற்றலாக இருந்தால் சாப்பிடும் போது தோலி தனியாக உரிந்து வந்து துப்பிக்கொண்டே இருக்க நேரிடும்.

சுண்டைக்காயை நன்றாக தாராளமாக எண்ணெய்விட்டு வதக்கி, இறுகலாக நல்ல காரசாரமும் ஏற்றி, ஊறுகாயாகப் போட்டு வைத்துக்கொண்டால், அதுக்கு ஈடு இணை ஏதும் கிடையாது. சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். என் பெரிய அக்கா இதை செய்வதில் மிகவும் எக்ஸ்பர்ட். எனக்காகவே தனியாக பிரியமாகக் கொடுத்தனுப்புவாள்.

நினைத்தாலே நாக்கில் ஜலம் ஊற்கிறது.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பச்சை சுண்டைக்காயை படிக்கணக்காக நிறைய வாங்கி வந்து தண்ணீரில் உப்புப்போட்டு வைத்து விட்டு, அதில் ஒரு இரும்புக்கரண்டியையையும் போட்டுவிட்டால் சீக்கரமாக கருத்து விடும்.

பிறகு அவ்வப்போது கொஞ்சமாக முழுசாகவே [நறுக்காமலேயே] எண்ணெயில் வதக்கி விட்டு சுடச்சுட தயிர்/மோர் சாதத்திற்கு சாப்பிட்டால் எவ்ளோ ஜோரா இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம் இது.


அதுபோல சுண்டைக்காய் வற்றலைப் போட்டு வற்றல் குழம்பு காரசாரமாக குறுகலாக வைத்து, உளுந்து அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அடடா, அருமையோ அருமை.

சுண்டைக்காய் விஷயம் தான்.
இருப்பினும் சூப்பர் டேஸ்ட் அது,
எந்த ரூபத்தில் சாப்பிட்டாலுமே.
;)))))
வாணலியில் வதக்கும்போது டப்பு டுப்பு எனு வெடிக்கும். கேப் வெடிப்பது போல. அதனால் ஒரு தட்டுபோட்டு மூடிவைத்து வதக்க வேண்டும்.

seenivasan ramakrishnan said...

சுண்டைக்காய்களை நாலாகவோ அல்லது இளசாக இருந்தால் இரண்டாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

அம்மியில் வைத்து லேசாக தட்டுவோம்..

சின்னக்குழவி அல்லது மத்தால் ஒரு தட்டு தட்டி தண்ணீரில் கழுவினால் விதைகள் தனியாக வந்துவிடும்.. விதைகள் அகற்றிவிட்டால் கசப்பு தெரியாது..

seenivasan ramakrishnan said...

சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம்..

சளி இருமலைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு..

seenivasan ramakrishnan said...

சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம்..

சளி இருமலைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு..

ரிஷபன் said...

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்; வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். மெலும், அஜீரணக் கோளாறுகளை நீங்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது

Very good information ! Thanks

அப்பாதுரை said...

vgk ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்காரு.. அவர் வீட்டுக்கும் ஒரு விசிட் அடிச்சிற வேண்டியதுதான் சுண்டைக்காய் பகெட்டோட.. பாக்கெட்டோட.

மனோ சாமிநாதன் said...

சுண்டைக்காய் வதக்கல் அருமை மாதவி! அதப்பற்றி எழுதிய விதம் இன்னும் அருமை!

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிக மிக சத்தான சுண்டைக்காயில் சுவையான செய்முறை. மிக்க நன்றி மாதவி.

middleclassmadhavi said...

@ வைரை சதீஷ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! சுண்டைக்காயை நறுக்கிக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்! :-))

middleclassmadhavi said...

@ அப்பாதுரை - பக்கெட்டோ, பாகெட்டோ, நீங்கள் கொண்டு வருவதற்குள் சுண்டைக்காய் முற்றிப் போய்விட வாய்ப்பிருக்கிறது! நீங்கள் எங்கள் ஊர் வரும் பட்சத்தில் நானே வாங்கி, நறுக்கி, செய்து தருகிறேன்!! :-)) வைகோ அவர்களது வலைப்பூவில் சாப்பாடு பற்றிய பதிவு எழுதியிருப்பார் பாருங்கள், படித்தாலே சாப்பிட்ட திருப்தி வந்து விடும்!!

middleclassmadhavi said...

@ r.v.saravanan - இந்த முறையில் அவ்வளவு கசப்பு இருக்காது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - தங்கள் வருகைக்கும் 'சுவை'யான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி!

middleclassmadhavi said...

@ seenivasan ramakrishnan - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அம்மியில் தட்டினால், சுண்டைக்காய் உருண்டு ஓடி விடுகிறது - என்னிடம் இருப்பது சின்ன அம்மி வேறு! :-)
/சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம்..சளி இருமலைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு.. / தகவல்களுக்கு நன்றி!

middleclassmadhavi said...

@ ரிஷபன் -
@ மனோ சாமிநாதன்-
@ புவனேஸ்வரி ராமநாதன் -
- உங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் மனமார்ந்த நன்றி!

கோமதி அரசு said...

மாதவி, பச்சை சுண்டைக்காய் உங்கள் செய்முறை மாதிரியே எல்லாம் செய்து தேங்காய் கொஞ்சம் வறுத்து சேர்த்து மிக்ஸியில் அரைத்து அந்த துவையலை சூடான சாதத்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
திரு வை.கோ அவர்கள் சொல்வது போல் பிஞ்சு சுண்டைக்காய் சாம்பார் நன்றாக இருக்கும்.

உங்கள் செய்முறையில் செய்துப் பார்க்கிறேன்.

ஸ்ரீராம். said...

அடேடே... என் கமெண்ட் ஏற்கெனவே இருக்கே... நினைவு படுத்தியதற்கு நன்றி.

ADHI VENKAT said...

அன்புடையீர்,

வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரத்தில் தங்களது வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள். எனது வலைப்பூக்களைக் காண அழைக்கிறேன்.
http://drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கசப்பு இல்லாமல் டேஸ்டா இருக்கும்னு சொல்றீங்க...
செய்து சாப்பிட்டுப் பார்க்கிறோம்...
நன்றி!