மாதங்களில் மார்கழியான இறைவன்... விடியற்காலையிலேயே எழுப்பும் பாடல்கள்... சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை கேட்கும் ஆந்திரக் கோயில்கள்...
தையிலே தைப்பூசம் - நடந்தே செல்லும் பக்தர்கள் கூட்டம். மாசி, பங்குனி என்று உற்சவங்களும், வெயிலில் வெறுங்காலுடனே கலசம் ஏந்திச் செல்லும் அன்பர்கள்..... பங்குனி, சித்திரைகளில் தேர்த்திருவிழாக்களும் மற்றைய இறை கல்யாண வைபோகங்களும்.... வருஷா வருஷம் நடக்கும் நிகழ்ச்சியானாலும் குவியும் மக்கள் கூட்டம்!
எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக பக்தி!!
என்னைப் பொறுத்தவரை இறைசக்தி உண்டென்று நம்புகிறேன். அந்த சக்தியை எந்த வடிவில் வேண்டுமானாலும் கும்பிடலாம். இறைவன்/இறைவி இந்த வடிவில் கும்பிட வேண்டும் என்பது அவரவர் விருப்பமே. என் ஆங்கிலோ-இந்தியத் தோழி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போகும் தோழியரைப் பார்த்து, "என்ன, சர்ச்சுக்கா?" என்று கேட்பார்; அவரைப் பொறுத்த வரை இறைவன் குடியிருக்கும் இடத்துக்கு சர்ச் என்று பெயர்!!
இறைசக்தியைக் குறித்த இந்த எண்ணங்கள் என் சிறு வயது முதலே தொடங்கி விட்டன. என் அண்ணா முறையாகும் கிருஷ்ணன் என்பவருடன் சின்ன வயதில் - பள்ளிப் பருவத்தில் - நடந்த சொற்போர் நினைவுக்கு வருகிறது. என் மேற்கண்ட அபிப்ராயத்தைச் சொன்னவுடன் அவர் அது எப்படி சாத்தியமாகும் என்று என்னைக் கேட்டார். நான், "நீங்கள் எனக்கு அண்ணன். உங்கள் மனைவிக்கு கணவர்; உங்கள் குழந்தைகளுக்கு தந்தை; மற்றும் உங்கள் சொந்தக்காரர்களுக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமா,... இப்படி! உங்கள் அலுவலகத்தோருக்கு மேலதிகாரி, ஊழியர்... ஆனால், நீங்கள் இத்தனை உருவங்களா, இல்லை, கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட ஒரே நபர். அப்படித் தான் கடவுளை எப்படி வணங்கினாலும் பரம்பொருள் ஒன்றே" என்று சொன்னேன்!
மேலே சொன்னதை வைத்து பக்தி சிரோன்மணியாக என்னை எண்ணிக் கொள்ளாதீர்கள்! பக்தி எந்த அளவிற்குப் போகிறது என்று அண்ணாந்து வியந்து எழுதும் பதிவே இது.
பட்டினத்தாரின் இந்தப் பாடலைப் பாருங்கள்:
வாளால் மகவரிந் தூட்டவல் லேன்அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல் லேன்அல்லன்; தொண்டுசெய்த
நாளாறில் கண் இடந்து அப்பவல் லேன்அல்லன்; நான்இனிச்சென்று
ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?
"சிவனடியார் கேட்டதற்காக, மகனையே வாளால் வெட்டிக் கொன்று பிள்ளைக்கறி அளித்த சிறுத்தொண்டர்; மனைவி சொன்ன சொல்லால், இளமையைத் துறந்து சத்தியம் செய்த திருநீலகண்டர்; ஆறே நாள் பழக்கத்தில் கண்ணையே பறித்து சிவனுக்கு வைத்த கண்ணப்ப நாயனார் - இவர்களின் செயல்களை என்னால் செய்ய இயலாது - நான்இனிச்சென்று
ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே?" பட்டினத்தாரே இப்படி வியந்தால், சாதாரண மனிதர் எம்மாத்திரம்?
இவ்வளவு பின்னால் செல்வானேன்? ஸ்ரீரங்கத்து கோயிலுக்குப் போன அனுபவம் நம்மில் அநேகருக்கு உண்டு. வானளாவ உயர்ந்து நிற்கும் தெற்கு ராஜகோபுரம் பற்றி பெருமையும் உண்டு. கோயிலின் கிழக்கு வாயிலில் வெள்ளைக் கோபுரம் என்று ஒரு கோபுரம் இருக்கிறது. பக்கத்து மண்டபத்து குதிரைச் சிற்பங்களும் மிகவும் பிரசித்தம். மற்ற கோபுரங்கள் வண்ண மயமாய் காணப்பட்டாலும் இந்தக் கோபுரம் எப்போதும் வெண்ணிறம் தான். ஸ்ரீவேணுகோபாலனின் 'திருவரங்கன் உலா' படித்திருப்போருக்கு காரணம் தெரிந்திருக்கும். 16, 17ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் - குறிப்பாக கோயில்களின் அளப்பரிய செல்வங்களைக் குறி வைத்து நடந்த ஒரு தாக்குதலின் போது, அரங்கனை படையெடுப்பிலிருந்து தப்புவிக்க எண்ணிய ஒரு ஆடல்மங்கை, ஆங்கிலேய தளபதியை மயக்கி, அவனை கோபுரத்திற்கு மேல் கூட்டிப் போய், அவனை அங்கிருந்து தள்ளிக் கொன்று, தானும் கோபுரத்தின் உச்சியிலிருந்து விழுந்து மடிந்தாள். அந்த பக்தை வெள்ளையம்மாளின் பெயராலேயே அந்த வெள்ளைக் கோபுரம் பக்தியின் அருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!!
இறைசக்தியே! என்னால் இவ்வளவு தூரம் பக்தி செலுத்த இயலுமா என்று தெரியவில்லை. தாயுமானவ சுவாமிகளின் 'நெஞ்சமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சன நீர்! பூசை கொள்ள வாராய் பராபரமே!' - இதுவே தாரக மந்திரமாகி விட்டது.
ஆனாலும், பக்தர்களை ஒரு வியப்புடனும் மரியாதையுடனும் பார்க்கிறேன். அவர்களின் பக்திக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!
30 comments:
//நெஞ்சமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சன நீர்! பூசை கொள்ள வாராய் பராபரமே!' //
வெகு அருமையாக இனிக்கும் வரிகளுடன் முடித்திருப்பது அருமை.
தொடரும்....
//குறிப்பாக கோயில்களின் அளப்பரிய செல்வங்களைக் குறி வைத்து நடந்த ஒரு தாக்குதலின் போது, அரங்கனை படையெடுப்பிலிருந்து தப்புவிக்க எண்ணிய ஒரு ஆடல்மங்கை, ஆங்கிலேய தளபதியை மயக்கி, அவனை கோபுரத்திற்கு மேல் கூட்டிப் போய், அவனை அங்கிருந்து தள்ளிக் கொன்று, தானும் கோபுரத்தின் உச்சியிலிருந்து விழுந்து மடிந்தாள். அந்த பக்தை வெள்ளையம்மாளின் பெயராலேயே அந்த வெள்ளைக் கோபுரம் பக்தியின் அருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!! //
வெகு அருமையான இந்தத்தகவலை அனைவரும் அறியச்செயதது பாராட்டுக்குரியது.
//
"சிவனடியார் கேட்டதற்காக, மகனையே வாளால் வெட்டிக் கொன்று பிள்ளைக்கறி அளித்த சிறுத்தொண்டர்; மனைவி சொன்ன சொல்லால், இளமையைத் துறந்து சத்தியம் செய்த திருநீலகண்டர்; ஆறே நாள் பழக்கத்தில் கண்ணையே பறித்து சிவனுக்கு வைத்த கண்ணப்ப நாயனார் - இவர்களின் செயல்களை என்னால் செய்ய இயலாது//
உங்களால் மட்டுமல்ல, யாராலும் செய்ய இயலாது என்பதே உண்மை.
// "நீங்கள் எனக்கு அண்ணன். உங்கள் மனைவிக்கு கணவர்; உங்கள் குழந்தைகளுக்கு தந்தை; மற்றும் உங்கள் சொந்தக்காரர்களுக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமா,... இப்படி! உங்கள் அலுவலகத்தோருக்கு மேலதிகாரி, ஊழியர்... ஆனால், நீங்கள் இத்தனை உருவங்களா, இல்லை, கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட ஒரே நபர். அப்படித் தான் கடவுளை எப்படி வணங்கினாலும் பரம்பொருள் ஒன்றே" என்று சொன்னேன்!
//
சிறு வயதிலேயே தங்களுக்கு சிறப்பாக சிந்திக்க முடிந்துள்ளது. மகிழ்ச்சியளிக்கிறது. ;)))))
//பக்தியென்னும் படிகளேறி....
//
தங்கமான தலைப்பும்,
ஒவ்வொருபடிகளிலும் எங்களையும் அழகாக ஏற்றிச்சென்ற நடையழகும்
படியேறியபின் பரம்பொருளை தரிஸிக்க வைத்த பக்குவமும் சூப்பரோ சூப்பர்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
நல்ல பக்திப் பதிவு; வாழ்த்துகள்!
வெள்ளையம்மாளின் பெயராலேயே அந்த வெள்ளைக் கோபுரம் பக்தியின் அருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!!
எத்தனை காலம் கடந்தாலும் நினைவூட்டும்படியான பக்தி.
பக்தி என்பது மனித நேயம் வளர்ப்பதுதான். கண்ணுக்குத் தெரியாத இறைவனின் மேல் வரும் பக்தி தெரிகிற மானிடரின் மேல் அன்பாய் பிரவகித்தால் பக்தி பூர்த்தி ஆகும்.
பக்தியென்னும் படிகளேறி.
>>>
தலைப்பே ஆயிரம் கருத்துக்கள் சொல்லுதே! பக்தியென்னும் படிகளேறி அவன் தாள் பற்றினால் உலக பற்றிலிருந்து விடுபடலாம்
நல்ல பதிவு.
பதிவர்களில் பாதி பேர் கடவுள் மறுப்பாளர்கள். அவர்கள் இந்த பதிவுக்கு கருத்து சொல்ல உள்ளே வந்து விட்டால்,இரு புறமும் ஒவ்வொரு கருத்தை சொல்ல பிரளயமே நடக்கும்!
நல்ல தலைப்பு. கலி காலத்தில் கடவுளின் பெயரைச் சொன்னாலே புண்ணியமாம்.
உங்கள் சிறந்த எழுத்துகளில்இடுகைகளில் ஒன்று இது... சிந்தனையும் எழுத்தும் அருமை
மூல சக்தி ஒன்றே.. அவரவர் விருப்பத்திற்கேற்ப பல வடிவங்கள்
வரிக்கு வரி ஆமோதி்க்க வைக்கும் பதிவு. என்னுள்ளும் ஆழமான பக்தி இல்லையே... என்று பக்தி பூண்டவர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஸ்ரீரங்கம் கோபுரமும், வெள்ளையம்மாள் கதையும் மறக்க இயலாதவை. நினைவுபடுத்தியதற்கு நன்றி!
@ வை.கோபாலகிருஷ்ணன் - தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் நன்றிகள்
@ வை.கோபாலகிருஷ்ணன் - //சிறு வயதிலேயே தங்களுக்கு சிறப்பாக சிந்திக்க முடிந்துள்ளது. மகிழ்ச்சியளிக்கிறது.// இதற்குக் காரணம் என் தந்தை தான்.
@ kg gouthaman - வாழ்த்துகளுக்கு நன்றி
@ ரிஷபன் - //பக்தி என்பது மனித நேயம் வளர்ப்பதுதான். கண்ணுக்குத் தெரியாத இறைவனின் மேல் வரும் பக்தி தெரிகிற மானிடரின் மேல் அன்பாய் பிரவகித்தால் பக்தி பூர்த்தி ஆகும்.// மிகச் சரி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ராஜி- //தலைப்பே ஆயிரம் கருத்துக்கள் சொல்லுதே! பக்தியென்னும் படிகளேறி அவன் தாள் பற்றினால் உலக பற்றிலிருந்து விடுபடலாம்//
நீங்கள் முதல்முறையாக என் வலைப்பூவில் கருத்துரைக்கிறீர்கள் என நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ மோகன் குமார் - //பதிவர்களில் பாதி பேர் கடவுள் மறுப்பாளர்கள்// சிலர் கடவுள் இல்லை, இயற்கை என்றும் சொல்லலாம்; அதையே இறைசக்தி என்று நான் நினைக்கலாம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@ ஸ்ரீராம் - //கலி காலத்தில் கடவுளின் பெயரைச் சொன்னாலே புண்ணியமாம்.// எந்தப் பெயரிலும் சொல்லலாம்! :-)) நன்றி!
@ பார்வையாளன்- உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி!
@ எல் கே - //மூல சக்தி ஒன்றே.. அவரவர் விருப்பத்திற்கேற்ப பல வடிவங்கள் // ஆம்! தங்கள் வருகைக்கும் கருத்துரைத்தற்கும் மிக்க நன்றி!
@Rathnavel Natarajan - வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா!
@ கணேஷ் - //என்னுள்ளும் ஆழமான பக்தி இல்லையே... என்று பக்தி பூண்டவர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஸ்ரீரங்கம் கோபுரமும், வெள்ளையம்மாள் கதையும் மறக்க இயலாதவை. நினைவுபடுத்தியதற்கு நன்றி!// கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி!
தாயுமானவ சுவாமிகளின் 'நெஞ்சமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சன நீர்! பூசை கொள்ள வாராய் பராபரமே!' - இதுவே தாரக மந்திரமாகி விட்டது.
சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
வெள்ளைக் கோபுரம் பத்திப் படிச்சதலந்து போய்ப் பாக்கணும்னு தோணிட்டிருக்கு.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தா அதை நீங்க கொண்டாடுறதுல குறையே இல்லிங்க.
thanks for sharing,must read for all hindhus
@ இராஜராஜேஸ்வரி - ஆன்மிகப் பதிவுகளில் ஜொலிக்கும் நீங்கள் பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி!
@ அப்பாதுரை - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! எப்போது வெள்ளைக் கோபுரத்தைப் பார்த்தாலும் என் கண்கள் பனிக்கும்!
@ அன்பை தேடி,,,அன்பு - thanks for your comments. இந்துவாகப் பிறந்ததால் தெரிந்த இந்துப் பாடல்களையும் கோவில்களையும் சொன்னேன். மற்றபடி பாரதியாரின் வரிகளான
'ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்'
எனக்கு மிகவும் பிடிக்கும்!!
Post a Comment