Tuesday, April 24, 2012

நல்லதோர் வீணை!

     பக்கத்து வீட்டுப் பரிமளாவை ரொம்ப நாட்கள் கழித்து அன்று பார்த்தேன். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சகஜம் தான். ஒருவரையொருவர் பார்த்து புன்னகையுடன் நலம் விசாரித்துக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமையாதலால், பேச பொழுதிருந்தது! பேச்சின் இடையே, “உங்களுக்குத் தெரியுமா, லதாவுக்கு, அதாங்க, உங்க வீட்டுக்காரர் ஆஃபீசிலே வேலை பார்க்கிறாங்களே, அவங்களுக்கு மறு கல்யாணமாம்!” என்றார். இது எனக்குத் தெரியாத விஷயம். லதாவை இதே காலனியில் இருப்பவர் என்ற வகையிலும் என் மகனின் கிளாஸ்மேட்டின் அம்மா என்ற வகையிலும் எனக்குத் தெரியும் “அப்படியா! ரொம்ப நல்ல விஷயம்!” என்று பரிமளாவிடம் சொன்னேன். பேச்சு வேறு பகுதிகளில் திரும்பியது. எங்கள் சிறு அளவளாவல் முடிந்து, ஞாயிறின் மற்ற வேலைகளுக்குத் திரும்பினோம்.


     என் மனம் லதாவின் மறுமணம் குறித்து யோசிக்க ஆரம்பித்தது. விதவை விவாகத்துக்கு நான் ஆதரவானவள் தான். நான் வேலை பார்த்த பழைய அலுவலகத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது. படித்து முடிந்த கையோடு வேலைக்குச் சேர்ந்த போது, ஒழுங்காக எனக்கு சேலை கட்டக் கூடத் தெரியாது; வெறும் கழுத்தோடும், ரப்பர் வளையல்களோடும் அலுவலகம் சென்ற எனக்கு, புடவையை எப்படி ஒழுங்காகக் கட்டுவது, கழுத்துக்கு மெல்லிய செயின் போடவேண்டும் என்ற விஷயங்களை பானு என்ற பெண் தான் கற்றுக் கொடுத்தாள்(ர்). எனக்கு 4 அல்லது 5 வயது தான் மூத்தவராக இருந்ததால், என்னாலும் ஃப்ரீயாக அவரிடம் பழக முடிந்தது. அவரது வாழ்க்கைக் கதையைப் பின்னால் தெரிந்து கொண்டேன். மலேஷியாவில் வேலை பார்த்த அவரது தந்தை, இந்தியாவில் தம் மனைவி அவசரப்படுத்தியதால், பானுவை சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுத்தார். பானுவின் கணவர் வேலையில் இருந்த போது ஒரு சின்ன விபத்தில் மேலிருந்து கீழே விழுந்து அடிபட்டு மரணமடைந்தார். அப்போது தான் அவர்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதங்களாகி இருந்தன. பின்னர் கருணை அடிப்படையில் பானுவுக்கு வேலை கிடைத்தது. நான் வேலைக்குச் சேர்ந்த போது, பானு வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்களாயிருந்தன.


     பானு ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தார். வார விடுமுறை நாட்களில் தனது ஊருக்குச் சென்று வருவார். தாயாரும் தம்பியும் ஊரில் இருந்தனர். தம்பிக்கு வரன் பார்க்கலாமா என்று அம்மா யோசித்து வருவதாக என்னிடம் பானு கூறினார். நான் தயங்கியவாறே, “பானு, நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது?” என்று கேட்ட போது, “அப்பா, அம்மாவின் ஆதரவு இருக்கிறது. தம்பியும் என்னைக் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கு” என்றார். “அப்பா, அம்மா அவர்கள் காலம் முடியும் வரை பார்த்துக் கொள்வார்கள். அவர்களுக்கு மட்டும் தம் மகள் இப்படி தனியே நிற்பது பிடிக்குமா என்ன? உங்கள் தம்பி அவருக்கு கல்யாணம், குடும்பம் என்று வந்த பின் தம் குடும்பத்துக்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டியிருக்கும் – அதுவும் வெளியூர் வேறே..” என்று சொல்லிப் பார்த்தேன். முதலில் சரியாகப் பதில் சொல்லாத பானு, மறுபடி மறுபடி தொந்தரவு செய்ததில், இதே ஊரிலேயே இருக்கும், தன் சொந்தக்காரர் ஒருவர், தம்மை மறுமணம் செய்து கொள்வாயா எனக் கேட்டதாகவும் தான் மறுத்து விட்டதாகவும் கூறினார். இதற்குள் அலுவலக்த்தில் என் தரப்புக்கு இன்னும் சில சிநேகிதர்களைப் பிடித்திருந்தேன். அவர்களும் பானு குறிப்பிட்ட அந்த நபரைப் பற்றி விசாரித்து, நல்லவரே என்று தீர்ப்பும் சொல்லி விட்டனர்! பிறகென்ன, கரைப்பார் கரைக்க, கல்லும் கரைந்தது! தம் பெற்றோரிடம் பானு சொல்ல, பானுவின் அப்பா மலேஷியாவிலிருந்து விடுப்பில் வந்து கல்யாணத்தை நடத்தி விட்டுச் சென்றார்! என் வீட்டுக்கு வந்து, என் அப்பாவிடம், “உங்கள் மகள் தான் இந்தக் கல்யாணம் நடக்கக் காரணம். நல்லா வளர்த்திருக்கீங்க” என்று நன்றி சொல்லிப் போனார்!


    லதாவின் விஷயமே வேறு. லதாவின் மகனுக்கு ஐந்து வயதான போது அவர் கணவர் இறந்து விட்டார். மிதமிஞ்சிய குடிப் பழக்கம் காரணமானது. லதா தற்சமயம் தம் பெற்றோர், உடன் பிறந்தோர் எனப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் இருந்தார். இப்போது அவர் மகன் விடலைப் பருவம் – டீன் ஏஜில் நுழைந்து கொண்டிருக்கிறான்! அவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?     ஞாயிறு மாலைப் பொழுது. கரண்ட் இல்லாத குடும்பப் பொழுதானது. அப்போது தயங்கியபடியே லதாவின் தந்தை வீட்டுக்குள் நுழைந்தார். “வாங்க” என்று வரவேற்று அமர வைத்தோம் “லதாவுக்கு கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணியிருக்கோம். அவளுக்கும் பின்னால் ஒரு ஆதரவு வேணும். பார்த்திருக்கும் வரன் தெரிந்தவர் தான். ஏற்கெனவே டிவோர்ஸ் ஆனவர். லதாவையும் பேரனையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களோடு தான் அவரும் இருப்பார். வரும் புதன் கிழமை வீட்டில் தான் கல்யாணம். கட்டாயம் வந்து கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று என் கணவரையும் என்னையும் அழைத்துச் சென்றார்!


                                                                *****


     திருமணம் நிறைவுற்றது. நாட்கள் பறந்தோடின. என் மகனிடம் அவனது கிளாஸ்மேட் எப்படி இருக்கிறான் என்று அவ்வப்போது கேட்பேன். அவ்வப்போது தென்படும் அந்தப் பையனின் முகத்தில் ஒரு தெளிவையும் நம்பிக்கையும் பார்ப்பதாக எனக்குள் தோன்றியது. இருந்தாலும் என் மனத்துக்குள் எழுந்த பயம் இருந்தது. லதாவை அவர் கணவர் அலுவலுகத்துக்கு டூ வீலரில் கொண்டு விடுவதைப் பார்த்த போதும் பயம் தீரவில்லை!


                                                             *****


     இன்று என் மகனின் பள்ளியில் மாலை 4.30 மணிக்குப் பெற்றோரை வரச் சொல்லியிருக்கின்றனர். என் கணவரின் அலுவலகத்தில் பெர்மிஷன் கிடைக்காது. நான் என் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் அனுமதி பெற்று, அந்த ‘பேரண்ட்ஸ் மீட்டிங்’க்குக்குச் சென்றேன். ஆடிட்டோரியத்தில் நடக்கும் மீட்டிங்கில் கிட்டத்தட்ட 500 பேராவது இருப்பார்கள். நான் தான் கடைசியோ?! நிகழ்ச்சியில் பிள்ளைகளை இந்த வயதில் பெற்றோர் எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளியின் நிர்வாகி விரிவாக எடுத்துரைத்தார். வழக்கம் போல் கரண்ட் இல்லாததால் அவர் மிகவும் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது. குழந்தைகளைத் தனியாக மாடியில் அமர வைத்திருந்தனர். ஒரு வழியாக வியர்வை சொட்டிய மீட்டிங் முடிந்து வெளியே வந்தேன். மாணவர் கூட்டத்தில் என் மகனைத் தேடிப் பிடித்து அவனுடன் நடந்தேன். மீட்டிங்கில் என்ன சொன்னார்கள் என்று அவன் கேட்க, சொல்லிக் கொண்டே வந்தேன். என் மகன் அவன் சைக்கிளைத் தள்ளியவாறே என்னுடன் வந்தான். அப்போது எங்களைத் தாண்டி ஒரு பைக் சென்றது. அதில் என் மகனின் கிளாஸ்மேட் – லதாவின் மகனைப் பின்னால் உட்கார வைத்து ஓட்டிச் சென்றார், பேரண்ட்ஸ் மீட்டிங்கை அட்டெண்ட் செய்த லதாவின் கணவர்.. இல்லையில்லை, அந்தப் பையனின் தந்தை!! என் மனம் இப்போது லேசானது. எங்களைப் பார்த்துச் சிரித்தவாறே கையாட்டிச் சென்ற அந்தப் பையனைப் பார்த்து நானும் சந்தோஷமாகச் சிரித்தேன்!

டிஸ்கி: இந்தச் சிறுகதை 'வல்லமை' இதழில் 23.4.2012 அன்று பிரசுரமானது.  சுட்டி இதோ!

41 comments:

பால கணேஷ் said...

ஆஹா... இந்த மாதிரி நல்ல மனம் படைத்த மனிதர்களைப் பார்ப்பதரிது. பெற்றோர் மீட்டிற்கு அந்தப் பையனின் தந்தையாக பங்கெடுத்த பரந்த மனம் மிக அருமையானது. நலலதொரு சிறுகதை படித்த திருப்தி தந்தது நல்லதோர் வீணை. பிரமாதம்! உங்களுக்கு என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

நல்ல தலைப்பு. கற்பனையோ நிஜமோ மனதுக்கு நிறைவாய் இருந்தது.

Madhavan Srinivasagopalan said...

Nice story....

Yoga.S. said...

அருமை மாதவி!இப்படியும்,இப்போதும் மனிதாபிமானம் உள்ளவர்கள்,நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் என்பதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல தலைப்பு, நல்ல கதை, நல்ல அருமையான முடிவு. இப்படியும் சில நல்ல பரந்த மனம் கொண்ட நல்லவர்கள் இருப்பது மகிழ்ச்சியே.

[இதே போல எனக்குத் தெரிந்த ஒரு நல்ல பெண்.

சிறிய வயதில் திருமணமான ஒரே வருடத்தில் கணவனை ஓர் விபத்தில் இழந்தாள்.

கணவன் இறந்த ஒரு மாதம் கழித்து அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

த்ன் தாய் தந்தையுடன் இருந்து அதை வளர்த்தாள்.

கணவரின் அப்பா அம்மா இருவரும் குழந்தையைப்பார்க்கவும் வரவில்லை.

இவளையும் குழந்தையையும் அழைத்துக் கொள்ளவும் இல்லை.

அவர்களுக்கு அவர்கள் பிள்ளை இறந்து விட்டானே என்ற ஒரே வருத்தம் மட்டுமே.

அவள் பையனுக்கு ஓர் 10 வயது ஆகும் வரை மறுமணம் என்பது தள்ளிக்கொண்டே போனது.

படித்த பட்டதாரியான அவளுக்கு அவளின் இறந்து போன கணவன் அலுவலகத்தில் கருணை அடிப்படையில், அரசுத்துறையில் வேலையும் கிடைத்தது.

பிறகு ஒருவர் பெருந்தன்மையாக மணம் செய்துகொள்வதாகக் கூறி வந்து பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன.

நிச்சயதார்த்தத்திற்கு தேதியும் குறித்து விட்டனர். ஆனால் நிச்சய தார்த்தம் நடைபெறவில்லை.

பிள்ளை வீட்டாரும், அந்த பிள்ளையாண்டானும் போட்ட ஒரு சிறு கண்டிஷனை பெண் வீட்டார் ஏற்காமல், நிச்சயதார்த்தத்தையே நிறுத்தும்படி ஆகிவிட்டது.

கண்டிஷன்: நிச்சயதார்த்தத்தன்று பிள்ளை வீட்டு உறவினர் பலரும், ஊர்பேர் பலரும் வருவார்களாம்.

அவர்கள் கண்ணில் அந்தப்பெண்ணின் 10 வயது பையனைப் படாமல், வேறு எங்காவது அனுப்பி மறைத்து வைக்க வேண்டுமாம்.

அவன் அங்கு இருந்தால் பிறரின் அனாவசிய பேச்சுக்கு இடம் அளிக்குமாம்.

இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்]

கதையோ, உண்மை நிகழ்ச்சியோ, இருப்பினும் நல்லதொரு பகிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

அப்பாதுரை said...

"அப்பா" என்ற முறையில் கடமையைச் செய்திருக்கிறார். உங்கள் மனமும் நிறைவானது.. சந்தோஷம்.
கழுத்தில் மெல்லிய சங்கிலி ஏன் போட வேண்டும்? என்ன காரணம்..?

புவனேஸ்வரி ராமநாதன் said...

தலைப்புக்கேற்றார்போல் நல்ல ஒரு வீணைக் கச்சேரி கேட்டது போல் இருந்தது உங்கள் கதை. உலகில் அன்றாடம் கேள்விப்படும் மோசமான விஷயங்களைக் கேட்டு அச்சப்படும்
மனதிற்கு இது போன்ற நல்ல இதயம் கொண்ட மனிதர்களைப்
பற்றி படிக்கும் போது மனம் சாந்தம் அடைகிறது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மாதவி.

middleclassmadhavi said...

@ கணேஷ் - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்!

middleclassmadhavi said...

@ ஸ்ரீராம்.- /கற்பனையோ நிஜமோ மனதுக்கு நிறைவாய் இருந்தது./ - நன்றி!

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan -/Nice story..../ - thanks.

middleclassmadhavi said...

@ Yoga.S.FR - //இப்படியும்,இப்போதும் மனிதாபிமானம் உள்ளவர்கள்,நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் என்பதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.// வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - //கண்டிஷன்: நிச்சயதார்த்தத்தன்று பிள்ளை வீட்டு உறவினர் பலரும், ஊர்பேர் பலரும் வருவார்களாம். அவர்கள் கண்ணில் அந்தப்பெண்ணின் 10 வயது பையனைப் படாமல், வேறு எங்காவது அனுப்பி மறைத்து வைக்க வேண்டுமாம். அவன் அங்கு இருந்தால் பிறரின் அனாவசிய பேச்சுக்கு இடம் அளிக்குமாம். // கொடுமை!

பரந்த மனம் கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்! அவர்களை அடையாளம் கண்டு கொள்வது அவரவர் அதிர்ஷ்டம்!

middleclassmadhavi said...

@ அப்பாதுரை -//கழுத்தில் மெல்லிய சங்கிலி ஏன் போட வேண்டும்? என்ன காரணம்..?// இந்தக் கதையில் விவரிக்கப்படும் கால கட்டத்தில் கன்னி /சுமங்கலிப் பெண்கள் வெற்றுக் கழுத்துடன் இருக்கக் கூடாது என்ற நடப்பு இருந்தது!! :-))

middleclassmadhavi said...

@ புவனேஸ்வரி ராமநாதன்- //இது போன்ற நல்ல இதயம் கொண்ட மனிதர்களைப்
பற்றி படிக்கும் போது மனம் சாந்தம் அடைகிறது//. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி!

r.v.saravanan said...

மனதில் நிறைவை தரும் சிறுகதை

சாந்தி மாரியப்பன் said...

கதை ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துகள்.

Unknown said...

அருமை.... அருமை....

இராஜராஜேஸ்வரி said...

நிறைவான கதை..

வல்லமை பிரசுரத்திற்கு வாழ்த்துகள்..

ஸாதிகா said...

அருமையானதொரு தலைப்பில் மிக அருமையான சிறுகதை.

ராஜி said...

நல்லதொரு சிறுகதையை வாசிக்க தந்தமைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதவி. உலகம் நல்ல முறையிலும் மாறுகிறாது என்று தெரிய மகிழ்ச்சி. சந்தோஷமான பகிர்வுக்கும் மிகவும் நன்தி

Matangi Mawley said...

Such a nice read! Choice of title is very good!
It felt very good to read the story!

raji said...

ஒரு இடைவெளிக்குப் பின் பதிவுலகம் பக்கம் வருவதால் இப்பொழுதுதான் படித்தேன்.

கதையாக இருப்பினும் நிகழ்வாக இருப்பினும் அதை தந்த விதம் நன்றாக
இருக்கிறது

வயது வந்த பிள்ளைகளை வைத்துக் கொண்டு மறுமணம் செய்து கொள்பவர்கள் நிலைமை பற்றி கவலைப்படும் மன நிலை நன்றாக வெளிப்பட்டிருக்கின்றது.பகிர்விற்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

எல் கே said...

அருமையா இருக்கு

காரஞ்சன் சிந்தனைகள் said...

மேடம்! தங்களின் சுண்டைக்காய் வதக்கல் இன்று வலைச்சரத்தில் பிரபலமாகப் பேசப்படுகிறது! வந்து பாருங்களேன்!
http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_18.html

கௌதமன் said...

அடுத்த பதிவு எப்போ?

சாதாரணமானவள் said...

Nice story

sury siva said...

எங்கள் ப்ளாக் என்னும் வலைப்பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்து
அது என்ன மிடில் க்ளாஸ் , லோயரா, அப்பரா, இல்லை அதுக்கும் மேலா, அப்படின்னு பார்க்கலாம் என்று இங்கே வந்தேன். கதையைப் பார்த்தாலே படிச்சாலே நம்ம வர்க்கம்தான். புரிஞ்சுகிட்டேன்.

நௌ கமிங் டு யுவர் ஸ்டோரி,

இந்த மறு விவாகம் என்பதே இரண்டு பேருக்குமே ம்யுசுவல்லி பெனிஃபிட்டிங்.
ஆக இருக்கும் பட்சத்தில் ஒரு அளவிற்கு வரவேற்கத்தக்கதே.

இருப்பினும் இருவரில் ஒருவர் எதையோ எதிர்பார்த்து இந்த மறு திருமணத்திற்கு
ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் தான் சீக்கிரமே சிக்கல் துவங்குகிறது.

என்னைக் கேட்டால் எந்த ஒரு திருமணமும், முதல் திருமணமோ அல்லது மறு திருமணமோ
ஷுட் பி பேஸ்டு ஆன் அன்கன்டிஷனல் லவ். அன்ட் ஆல்ஸோ எ வில் டு சாக்ரிஃபைஸ்.

இந்தக் கதையில் அது நிறையவே இருக்கிறது.
நிஜத்தில் நடப்பது அரிது.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

சிவகுமாரன் said...

மனதை தொட்ட கதை.
பாராடுக்கள்.

Asiya Omar said...

மிக நல்ல கதை மாதவி.இன்று உங்கள் வலைப்பக்கம் வந்ததில் இந்த மனம் நிறைவான கதையை வாசிக்க முடிந்தது.

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரமாவது பதிவுக்கு வந்து வாழ்த்தியதற்கு மனம் நிறைந்த
இனிய நன்றிகள்...!

இராஜராஜேஸ்வரி said...

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்..!

KParthasarathi said...

ரிஷபன் கதையை படிக்கும் பொழுது உங்கள் வலைப்பூவை பார்த்தேன்.கதை நன்றாக உள்ளது.
இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லையா?

பால கணேஷ் said...

ரொம்ப ரொம்ப லாங் கேப் ஆயிடுச்சு போலயே MCM Madam! அடுத்த பகிர்வு எப்போ? Waiting eagerly!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :

அன்பின் பூ - இரண்டாம் நாள்

yathavan64@gmail.com said...


அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (06/06/2015) ,
தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: :
http://blogintamil.blogspot.fr/2015/06/5.html#comment-form

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு

www.kuzhalinnisai.blogspot.com
France.

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ளம் கொண்ட சகோதரி மிடில் கிளாஸ் மாதவி அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (06.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/6.html


பூந்தளிர் said...

நல்லதோர் வீணை நல்ல கருத்துக்கலள் சொல்லும் அருமையான கதை.
நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

புதிய‌ தமிழன் திரட்டி (http://www.tamiln.in)