Saturday, January 8, 2011

ஹாஸ்பிடல் - சிறுகதை

               ஹாஸ்பிடல் போவது பிரபுவிற்கு அறவே பிடிக்காது.  அவனுக்கு உடல்நிலை சரியில்லையென்றாலே போகப் பிடிக்காதபோது, துணைக்குக் கூடச் சென்று வெயிட்டிங்கில் இருப்பது வேப்பங்காய்.   சிறுவனாய் இருந்தபோதிலிருந்தே அவன் அப்பாவிற்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போய் ஹாஸ்பிடல் விஜயங்கள் - வாசங்கள் அரங்கேறியுள்ளன.  ஔவையாராலேயே கொடியது என சான்றளிக்கப்பட்ட வறுமை.  பணத்திற்கு வழிசெய்தல், உறவினர்களின் வருகை, அவர்கள் பேச்சு எல்லாம் கசப்பான நினைவுகளாக மனதில் தங்கி விட்டன.
             இப்போது பிரபுவின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டது.  ஆனால் இப்போது  தன் அம்மாவிற்காக அவன் ஹாஸ்பிடல் செல்ல வேண்டியுள்ளது.  பிரபுவின் அம்மாவிற்கு அவன் அப்பாவைச் சுற்றியே  உலகம், பிரபுவின் உலகமும் அப்பாவைச் சுற்றித்தான்.  அப்பா இந்த உலகை விட்டுச் சென்ற பின் பிரபுவும் அவன் அம்மாவும் தான், பிரபுவிற்கு கல்யாணத்துக்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
             அம்மாவுக்கு இப்போது் முடக்குவாத நோய்.  இதற்கு உண்டான சிறப்பு மருத்துவரிடம்  2 மாதத்திற்கு ஒரு முறை செக்கப் செய்து கொள்ள வேண்டும்.  இந்த சிறப்பு மருத்துவர். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரபுவின் ஊரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு வருவார். அவரிடம் அன்று மட்டும் 200 பேர் உடலைப் பரிசோதிப்பதற்காகக் காத்திருப்பார்கள்.
              அன்றும் அப்படித் தான், அம்மாவும் பிரபுவும் காத்திருந்தார்கள்.  அவர்கள் முறை வருவதற்கு எப்படியும் 2 மணிநேரம் ஆகும் எனத் தெரிந்தது.  அந்த காத்திருப்பு அறையில் வெவ்வேறு பிரிவுகளுக்கு வருபவர்கள் எல்லாரும் உட்கார்ந்திருப்பார்கள். பொழுதுபோகாமல், அக்கம்பக்கத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்.  அம்மா லேசாகக் கண்ணயர ஆரம்பித்தார். பக்கத்திலிருந்த ஒரு குடும்பம் பிரபுவின் கவனத்தைக் கவர்ந்தது.  நிறைய நகைகள் போட்ட ஒரு வயதான பெண்மணி, அவர் கணவர் போலத் தோன்றிய ஒருவரிடம், அதைச் செய்தாச்சா, இதைச் செய்தாச்சா, என்று அதிகாரமாகவும் சத்தமாகவும் கேட்டுக் கொண்டிருந்தார். 
               அந்த ஹாஸ்பிடல் சூழ்நிலையில் யாரும் இதை ரசிக்கவில்லை.
அவர்கள் அந்த ஹாஸ்பிடலுக்குப் புதியவர்கள் போலத் தெரிந்தது.  சாதாரணமாக பிரபு புதியவர்களுக்கு தேவைப்பட்ட உதவியைத் தானாகவே செய்வான்.  அன்று அந்தப் பெண்மணியின் செயல்களால், வெறுப்பாகி, வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்தான்.  ஆனால் அவனால் தன் காதுகளை மூட முடியவில்லை.
             இப்போது அந்தப் பெண்மணி தன் கணவரிடம், 'செல்லைக் கொஞ்சம் கொடுங்கள்' என்று கேட்டு விட்டு,  செல்ஃபோனில் பேச ஆரம்பித்தார்.  "டேய், நான் தான்டா அம்மா பேசறேன், ஆஸ்பத்திரியிலிருந்து தான் பேசறேன், ஒண்ணும் கவலைப் படாதே, உன் பையன இப்ப தான் பார்த்துட்டு வறேன், பாட்டி வந்திருக்கேன்னு சொன்னவுடன் கண்ணை லேசாகத் திறக்கப் பார்த்தான்ப்பா, எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.".. " என்ன, மருமகளா, பையனுக்கு அடிபட்டுடுச்சுன்னவுடனே பதறிப் போயிட்டாளே, பிரமை பிடிச்சா மாதிரி பையன் படுக்கைக்குப் பக்கமே தான் இருக்கா, ஐ.சி.யூ.வில் எங்களை வெளீயே போகச் சொல்லிட்டாங்க'...."என்ன, அப்பாவா, இங்க தான் இருக்கிறாரப்பா, என்ன சொல்லணுமோ எங்கிட்ட சொல்லு, இங்க ஆஸ்பத்திரிங்கறதுனால ரொம்ப சத்தம் போட முடியாது, அவசரத்தில் அவர் காது மெஷினை வீட்டிலேயே வைச்சிட்டார்"..."நான் பார்த்துக்கறேன்ப்பா, நீ அக்கரைச் சீமையிலே தனியாக உட்கார்ந்து கவலைப் படாதே, உனக்கு உடம்புக்கு வந்தால் நாங்க உடனே வந்து பார்க்கற தூரத்திலேயா இருக்கே?'.... "ஆங், நானா, சக்கர, பிரஷரு மாத்திரையெல்லாம் எடுத்துக்கறேன்ப்பா, நீ கவலைப்படாதே, .. இந்த ஊர் புதுசாயிருந்தாலும் ஆஸ்பத்திரியெல்லாம் புதிசாப்பா, எம்புட்டு வருஷமா அலைஞ்சு பழகிட்டேன், 2 மாசத்தில் நீ தான் அப்பாவோட 80-வது பிறந்த நாளைக்கு ஊருக்கு வருவையே, எங்களையெல்லாம் ஜம்முனு பார்க்கப் போறே" என்று பேசி முடித்தார்.  ஒரு செக்யூரிட்டி ஆள் வந்து, 'யாருங்க இங்க அந்தச் சின்ன பையனோட வந்திருகிறீங்க, ஒரு டவல் வேணும், உடம்பத் தொடச்சு விட' என்று வினவினார். 
              பிரபுவிற்கு இப்போது அந்தப் பெண்மணி மீது இரக்கம் வந்திருந்தது.  ஒரு அம்மாவின் பாசம் புரிந்தது.  தான் இனிமேல் தன் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு, அடச் சே, ஹாஸ்பிடலுக்கு கூட்டிவரச் சலித்துக் கொள்ளக் கூடாது என மனசுக்குள் தீர்மானம் செய்து கொண்டான்.  பக்கத்துக் கடைக்கு போய் அந்தப் பெண்மணிக்கு டவல் வாங்கிக் கொடுக்கலாம் என்று எழுந்தபோது, அந்தப் பெண்மணி சத்தமாகத் தன் கணவரிடம், 'பேரப்பய சட்ட, டவுசரு, துண்டு எல்லாம் வச்ச பையை எங்க வச்சீங்க?' என்று கேட்டு பையை வாங்கி உள்ளே சென்றார்.  பிரபுவின் அம்மாவின் டோக்கன் நம்பரைக் கூப்பிட்டார்கள்.

19 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

அழகா சொல்லியிருக்கீங்க.

middleclassmadhavi said...

@ புவனேஸ்வரி ராமநாதன் - வருகைக்கும் பாராட்டுக்கும் thanks

எல் கே said...

நேர்த்தியான நடை

middleclassmadhavi said...

@ எல் கே - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்

ஜீ... said...

நல்லாயிருக்கு!

middleclassmadhavi said...

@ஜீ - வருகைக்கும் பாராட்டுக்கும் தன்யவாத்!

சௌந்தர் said...

அம்மாவை மகன் புரிந்து கொள்ளும் கதை. நல்ல முயற்ச்சி

கெக்கே பிக்குணி said...

மாதவி, கதை நல்லாயிருக்கு. பிரபுவின் புண்ணியம், அம்மாவோட இருக்கத் தெரிந்தது....

//அந்தப் பெண்மணி சத்தமாகத் தன் கணவரிடம், 'பேரப்பய சட்ட, டவுசரு, துண்டு எல்லாம் வச்ச பையை எங்க வச்சீங்க?' என்று கேட்டு பையை வாங்கி உள்ளே சென்றார்// அய்யோ பாவம், பெண்மணியின் கணவர்:)

வாழ்த்துகள், இன்னும் அடிச்சு ஆடுறதுக்கு!

பாரத்... பாரதி... said...

நல்லா எழுதுறீங்க.. வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... said...

//பணிக்குச் செல்லும் ஒரு மிடில் க்ளாஸ் பெண்மணி. காதலொருவனைக் கைப்பிடித்து, ஒருவருக்கொருவர் காரியத்தில் கைகொடுத்துக் கொள்கிறோம். ///
ரசனையான அறிமுகம்..

Madhavan Srinivasagopalan said...

கதை ஒக்கே..

//இனிமேல் தன் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு, அடச் சே, ஹாஸ்பிடலுக்கு //

'அடச் ச்சே' - why, இதான் புரியலே

middleclassmadhavi said...

@ சௌந்தர் - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

@கெக்கெ பிக்குணி - //அப்பா இந்த உலகை விட்டுச் சென்ற பின் பிரபுவும் அவன் அம்மாவும் தான்// - இருவர் மட்டும் உள்ள குடும்பத்தில் தாயை விட்டு மகன் ஏன் பிரிந்து செல்ல நினைக்க வேண்டும்? வாழ்த்துகளுக்கு நன்றி

@ பாரத்....பாரதி - உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. எனக்குப் பிடித்த முண்டாசுக்கவிஞனின் வரிகளை கொஞ்சம் மாற்றி அறிமுகத்தில் வைத்துள்ளேன். அதை நீங்கள் பாராட்டுவதற்கு நன்றி

@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - கதையில ஹாஸ்பிடல் - ஆஸ்பத்திரி எங்க வருதுன்னு பார்த்தால் அடச்சேக்கு அர்த்... ஸாரி, இது உங்களுக்கே தெரியும், சும்மா கேட்டிருப்பீங்க!!! உங்களுக்கு ரொம்ப வம்பும் பொறுமையும் ஐயா,
அங்கே நான் கொடுத்த பின்னூட்டத்துக்கு பதிலாக ஒவ்வொரு போஸ்டுக்கும் போய் கமெண்ட் எழுதியிருக்கீங்க. ரொம்ப நன்றி

பாரத்... பாரதி... said...

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

விக்கி உலகம் said...

நல்லா எழுதுறீங்க..........

middleclassmadhavi said...

@ விக்கி உலகம் - வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

ரிஷபன் said...

அழகான புரிதல்

middleclassmadhavi said...

@ ரிஷபன் - பாராட்டுக்கு மிக்க நன்றி

Gopi Ramamoorthy said...

அட, இப்போதான் பாக்கிறேன் இந்தக் கதையை. நல்லா இருக்கு

middleclassmadhavi said...

@ கோபி - பாராட்டுக்கு நன்றி