சமீபத்தில் ஒரு நாளிதழின் வரிகள் பற்றிய சந்தேகங்கள் கேட்கும் பகுதியில் ஒருவர் தாம் ஒரு சீனியர் சிட்டிசன் என்றும் பணத்தேவை காரணமாக, தாம் 20 வருடங்களாக வாழும் தம் சொந்த வீட்டை விற்றால், வருமான வரி கட்ட வேண்டுமா என்றும் கேட்டிருந்தார். பதிலளித்தவர் இதற்கு கேபிடல் கெயின்ஸ் என்ற வருமான வரி செலுத்த வேண்டி வரும் என்றும், அதற்குப் பதில் அவர் ரிவர்ஸ் மார்ட்கேஜ் செய்யலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.
நம் அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே இது பற்றி சொல்லியிருந்தாலும் இதைக் குறித்த தகவல்கள் இன்னும் நிறைய பேரைச் சென்றடையவில்லை.
முதலில் மார்ட்கேஜ் - அடமானம் என்றால் என்ன? நம்மில் பலர், கடன் வாங்கி வீட்டைக் கட்டியிருப்போம்/வாங்கியிருப்போம்; இல்லை, அதற்கான முயற்சியிலாவது இருப்போம்!! அப்படி வீட்டுக்காக கடன் வாங்கும் போது, கடன் கொடுக்கும் நிறுவனமோ, வங்கியோ, தம்மிடம் அடமானமாக அந்த வீட்டையோ அல்லது மனையினையோ வைத்துக் கொள்கிறார்கள். நாம் வட்டியும் முதலுமாக(!) திரும்பச் செலுத்துகிறோம்.
நகை அடமானம் எல்லாம் மணப்புரத்திலிருந்து கோவாபரேடிவ் பாங்க் வரை தரும் விளம்பரங்களினால் மற்றும் விளம்பரப் பலகைகளினால் தெரியும். இந்த மார்ட்கேஜ்களில் பல வகை இருக்கின்றன.
இம்மாதிரி அடமானம் வைக்கும் போது, சொத்தின் மீதான நம் உரிமை, கடனை அடைக்க அடைக்க, படிப்படியாக அதிகமாகும். கடனை முழுமையாக அடைக்கும் போதுதான் சொத்தின் மீதான உரிமை நமக்கு முழுமையாகத் திரும்ப வரும்.
ரிவர்ஸ் மார்ட்கேஜ் என்பது 60 வயது அதிகமானோருக்காக இந்தியாவிலும் நம் அரசு கொண்டு வந்திருக்கும் ஒரு திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டோர், அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டை வங்கிகளில் ரிவர்ஸ் மார்ட்கேஜில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். இம்முறையில், ஏற்கெனவே சொந்தமான சொத்தை அடமானம் வைத்து, பணத்தைப் பெறுகிறோம். அதான் ம்னாமடஅ!! (Reverse mortgage)
கணவர், மனைவி இருவர் பெயரிலும் வீடு இருந்தால், கணவர் 60 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும்; மனைவி வயது 58க்கு மேலிருந்தால போதும். அவர்கள் சேர்ந்து ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் முக்கிய பயன் என்னவென்றால், பணத்தேவைக்காக தாம் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்க வேண்டாம். வீட்டைக் காலி செய்யவும் வேண்டாம். விதிமுறைகட்கு உட்பட்டு, தேவையான பணத்தை ஒரே முறையாகவோ, இன்ஸ்டால்மென்ட்களிலோ தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். இந்தக் கடனை வாங்கியவர், வேண்ட் கடனை அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம். இல்லாவிடில், அதே வீட்டிலேயே தம் காலம் முடியும் வரை வாழலாம். ஒரு வேளை அவர் கடனை அடைக்காமல் இறந்து விட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகள் (legal heirs) கடனை வட்டியுடன் அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம். இல்லாவிடில், வீட்டை விற்றும் கடனை அடைக்கலாம். கடன் போக மிகுதி வாரிசுகளுக்குப் போகும். கடன் கொடுக்கும் போதே, வீட்டின் மதிப்பை வைத்துத் தான் கடன் கொடுப்பார்கள் என்பதால், நிச்சயமாக கடன் வீட்டு மதிப்பைத் தாண்டாது!!
வருமான வரிச் சட்டத்தில் ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு வரி விலக்கு உள்ளதாம் - இம்முறையில் வீட்டை வைத்து வாங்கும் பணத்துக்கு வரி கிடையாது. காபிடல் கெயின்ஸும் வராது.ஆகவே, சொந்த வீடிருந்தும் ஆதரவில்லா முதியவர்களிடம் இந்தத் திட்டம் பற்றிச் சொல்லுங்கள். பல வங்கிகளில் இந்தச் சேவை இருக்கிறது. அருகாமையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகினால் நல்லது. உதாரணத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இந்தச் சுட்டியைப் பாருங்கள்.
இந்தக் கட்டுரையின் நீதி என்னவென்றால், இது வரை இல்லாவிட்டால், உங்களுக்கென்று கட்டாயமாக சொந்தமாய் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளுங்கள்/ வாங்கிக் கொள்ளுங்கள்!
டிஸ்கி: மேலும் இத்திட்டத்தைப் பற்றிச் சொல்ல, வங்கிகளிலும் வருமான வரி சம்பந்தப்பட்ட துறையிலும் இருக்கும் பதிவர்களை அழைக்கிறேன்!
49 comments:
சரியா போச்சு...
பயனுள்ள பதிவு .ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ..
விஷயம் புரிந்தது நன்றி சகோ!
அருமையான, பயனுள்ள பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
முதியவர்களை முதியோர் இல்லத்தில் செர்ப்பவர்களுக்கு சரியான மரண அடி இந்த பதிவு நன்றி...!!!
மிகவும் பயனுள்ள பதிவு. அனைவரும் குறிப்பாக முதியோர்கள் அறிய வேண்டியது. vgk
ரிவர்ஸ் மார்ட்கேஜுன்னு ஏதோ சொல்றாங்களே ஒண்ணும் விளங்கலயேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்... நல்லா புரியமாதிரி அழகா சொல்லிருக்கீங்க.. என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் இது போல் நுணுக்கமான விஷயங்கள் எல்லாம் தமிழில் படித்தால் தான் நன்றாக இருக்கின்றது...
கடன் வீட்டு மதிப்பைத் தாண்டாது என்பது சரியல்ல என்று சொல்ல அனுமதியுங்கள்.
நிலவரத்தைப் பொறுத்தது.
சென்ற பத்து வருடங்களில் அமெரிக்க housing market சரிவில் இப்படி reverse mortgage எடுத்து வீட்டையும் தொலைத்து தெருவுக்கு வந்த retirees எக்கச்சக்கம்! பெற்றோர் தெருவுக்கு வந்தால் ஏதோ இந்த நாளில் பிள்ளைகள் கொஞ்சமாவது கவனிக்கிறார்கள் (இங்கேயும்). இன்னும் இருபது வருடங்களில் அதுவும் எதிர்பார்க்க முடியாது.
reverse mortgageல் பயனடைவது கடன் கொடுப்பவர்களும் அரசாங்கமும் மட்டுமே. நம்முடைய பணத்தை வங்கியில் போட்டு அதிலிருந்து வட்டிக்குக் கடன் வாங்குவது புத்திசாலித்தனமா?
வயதான காலத்தில் நிரந்தர வருமானம் இல்லாத சூழ்நிலையில் reverse mortgage மிகவும் ஆபத்தானது என்று நினைக்கிறேன். அதற்கு பதில் வீட்டை விற்று பாதிப் பணத்தில் வாழ முயற்சி செய்வது முதியோருக்கும் நல்லது - எங்கே அவர்களைப் பாதுகாக்க நேரிடுமோ என்று பயப்படும் இளையோருக்கும் நல்லது.
பலருக்கும் தெரியாத விஷயம் தான். இதற்காக நிறைய வாசித்து பகிர்ந்துள்ளீர்கள். நன்றி
நல்ல தகவல். ஆனால் இதற்கு பதில் பெற்றோர்களை பிள்ளைகளே கவனித்துக் கொள்ளலாம்.
நல்ல தகவல்கள்.நன்றி
நல்ல தகவல் பகிர்வு. அப்பாதுரையின் பின்னூட்டம் இன்னும் தகவல்களைப் பகிர்கிறது.
சொல்ல வரும் கருத்தை தலைப்பின் மூலம் சொல்லியிருக்கும் புதுமையைப் பாராட்ட மறந்து போனேன்! பாராட்டுகள்
பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்.
தலைப்ப முதலில் “மானாட“னு படிச்சேன்..
(என் கண்ணுக்கு அப்டித்தான் தெரிஞ்சது)..
முக்கியமான அனைவரும் அறிய வேன்டிய தகவல் பதிவு.பகிர்விற்கு நன்றி
@ suryajeeva - //சரியா போச்சு...// என்னாச்சு, உங்கள் வீட்டில் ஏற்கெனவே சொந்த வீடு வாங்கணும்னு பிரஷரா?
@ கோவை நேரம் - கருத்துக்கு நன்றி!!
@ விக்கியுலகம் - //விஷயம் புரிந்தது// உங்களுக்கும் நன்றி!
@ Rathnavel - //எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.// மிக்க நன்றி!!
@ MANO நாஞ்சில் மனோ - // முதியவர்களை முதியோர் இல்லத்தில் செர்ப்பவர்களுக்கு சரியான மரண அடி இந்த பதிவு // கருத்துக்கு நன்றி
@ வை.கோபாலகிருஷ்ணன் - //குறிப்பாக முதியோர்கள் அறிய வேண்டியது// கருத்துக்கு மிக்க நன்றி
@ ஸ்வர்ணரேக்கா - //தமிழில் படித்தால் தான் நன்றாக இருக்கின்றது... // :-)) கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!
@ அப்பாதுரை - உங்கள் கருத்துக்கும் விளக்கத்துக்கும் மிக்க நன்றி! 2007-ல் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கான்செப்ட், இன்னும் நிறைய பேரைச் சென்றடையட்டும் என்று இதை எழுதினேன். அதனால் தான் மேல் விவரங்களுக்கு மற்றவரையும் அழைத்தது!
சில வருடங்களுக்கு முன் சப்-ரெஜிஸ்டிரார் அலுவலகத்தில் நான் கண்ட காட்சி இது - ஒரு முதியவரைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தூக்கி வந்த பேரன் பெயரில் அவர் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டுமாம். முதியவர், சப்-ரெஜிஸ்டிரார் முன்பு, தனக்கு இந்த விஷயத்தில் ஒப்புதல் இல்லையென்றும், கட்டாயப்படுத்தியே அங்கு கூட்டி வந்ததாகவும் சொல்லி விட்டார்! கோபமடைந்த பேரன், அவரை அங்கேயே ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, கத்திக் கொண்டே வெளியேற ஆரம்பித்தான். கூடியிருந்தவர்கள் தான் அவனைக் கூப்பிட்டு, புத்திமதி சொல்லி, முதியவரைத் திரும்பக் கூப்பிட்டுப் போக வைத்தனர். அந்த அலுவலகத்தில் யாரும் இதைப் பெரிது படுத்தவேயில்லை. அவர்களுக்கு நாள்தோறும் இம்மாதிரி பார்த்து அலுத்து விட்டதாகக் கூறினார்கள்!
ரிவர்ஸ் மார்ட்கேஜில் அந்த வீட்டிலேயே அவர்கள் காலம் வரை வாழ முடிகிறது இல்லையா? இந்தியாவில் ரியல் எஸ்டேட் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. வீட்டினை விற்றால் அவர்கள் இருக்க வேறு வாடகை வீடு தேடணும் - வயது முதிர்ந்த நோய்வாய்ப்பட்ட அப்பாவுடன் வீடு வாடகைக்குக் கிடைக்க அலைந்த அனுபவம் எனக்கே இருக்கிறது. (இறப்பு என்பது எங்கேயும் எப்போதும் வரலாம் என்று தெரியாத அஞ்ஞானிகள்!)
மீண்டும் உங்களுக்கு நன்றி!
@ மோகன் குமார் - //பலருக்கும் தெரியாத விஷயம் தான். இதற்காக நிறைய வாசித்து பகிர்ந்துள்ளீர்கள்// தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
@ Prabu Krishna - //இதற்கு பதில் பெற்றோர்களை பிள்ளைகளே கவனித்துக் கொள்ளலாம். // கவனித்தால் நல்லது - இதற்குத் தேவையில்லை! கவனிக்காத பிள்ளைகளோ இல்லை குழந்தைகளே இல்லாதவர்களோ இதனால் பயனடையலாம் இல்லையா?....
@ விச்சு - // நல்ல தகவல்கள்.நன்றி // உங்களுக்கும் நன்றி!
@ ஸ்ரீராம். - //அப்பாதுரையின் பின்னூட்டம் இன்னும் தகவல்களைப் பகிர்கிறது. // ஆம்;
// சொல்ல வரும் கருத்தை தலைப்பின் மூலம் சொல்லியிருக்கும் புதுமையைப் பாராட்ட மறந்து போனேன்! பாராட்டுகள் // :-) நன்றி
@ இந்திரா - கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
@ raji - கருத்துக்களுக்கு மிக்க நன்றி
ம்னாமடஅ!! (Reverse mortgage)/
தலைப்பு புதுமை.
கருத்து அருமை!
பாராட்டுக்கள்..
அன்புள்ள மாதவி வணக்கம்.
சிறிது காலம் வலைப்பக்கம் வர இயலாமல் போய்விட்டது. அதனால் தாங்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு
நன்றி சொல்ல சற்று தாமதம் ஆகிவிட்டது. மன்னிக்கவும். மீண்டும்
நன்றி.
தவறா நினைக்காதீங்க.. reverse mortgageஐ விட வீட்டை விற்று அந்தப் பணத்தில் பாதியில் வாழ்க்கையை நடத்திக்கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால் அவங்க அவங்க நிலமைக்கு எது ஒத்து வருதோ அதைத் தான் செய்யணும். நீங்க சொல்லியிருக்கும் செய்தி அவசியம் தேவையான செய்தி தான்.
நீங்க பார்த்த காட்சி படிச்சாலே நெஞ்சை உருக்குது.
பெரு நகரங்களில் வேண்டுமானால் ஏறுமுகமாக இருக்கலாம்.. எல்லா இடங்களிலும் அப்படித் தானா?
அருமையான அவசியமான பதிவு.
நீங்கள் பார்த்த காட்சிகள் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
பயனுள்ள பதிவு
thanks to you and also to அப்பாதுரை
மாதவி / அப்பாதுரை
ஒரு குருட்டுக் கணக்கு போட்டுப் பார்த்தேன்.
1980 களில் ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கிய வீட்டை இன்று ஐம்பது லட்ச ரூபாய்க்கு விற்பதாக வைத்துக்கொள்வோம்.
விற்ற பணத்தில் 25 லட்ச ரூபாய்க்கு ஒரு புது வீடு வாங்குகிறார்.
அவர் வரியாகக் காட்டவேண்டியது கிட்டத்தட்ட ரூபாய் நாலே கால் லட்சம் (உங்களுக்கு விவரங்கள் வேண்டுமெனில் excel sheet அனுப்புகிறேன்).
ஆகப் புதுவீடு
கையில் இருபது லட்சத்திற்கும் கொஞ்சம் கூடுதலாய்ப் பணம்.
இதை வைத்துக்கொண்டு சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்துகொள்ளலாம்.
This allows you to diversify.
நிற்க, RM – இல் என்ன நடக்கிறது?
மொத்தமாகவோ மாதா மாதமாகவோ பணம் கைக்கு வருகிறது. திருப்பித் தர வேண்டிய அவசியமில்லை. பணம் வாங்கியவரின் காலம் முடிந்ததும் வீடு வங்கியின் கைக்கு மாறுகிறது.
Your entire equity is your home. You don’t have options to diversify.
பிரதான வித்தியாசம் என்ன? விற்பதாக இருந்தால் உங்கள் ஆயுட் காலத்திலேயே வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டைக் காலி செய்ய நேரிடும். ஆர் எம் - இல் அவருடைய காலத்திற்குப் பிறகு.
சரி, ஆர்எம் எப்போது நல்லது?
ஆர் எம் ஒரு கடன். எந்த ரூபத்தில் இருந்தாலும் கடன் நல்லதுக்கில்லை. No lunch is free!
எனக்கு அறுபது வயதாகிவிட்டது. எனக்கு இன்னும் இரண்டு வருடங்களில் ஒரு பெரிய தொகை வரவேண்டி இருக்கிறது (பி பிஎப் இத்யாதி). என் வீட்டைச் செப்பனிட வேண்டும் அல்லது எனக்கு இப்போதிருக்கும் வருமானம் போதவில்லை. இன்னும் ஒரு சில வருடங்களில் நிலைமை மாறிவிடும். இது போன்ற சூழ்நிலைகளில் ஒரு stop gap arrangment ஆக ஆர் எம் நல்ல ஆப்ஷன். ஏனென்றால் வாங்கிய கடனைத் திருப்பித் தரவேண்டும் என்று வங்கி உங்களைத் தொல்லை படுத்தாது! பணம் கைக்கு வந்ததும் தரலாம்.
ஆர் எம்மின் பெரிய பிரச்சனையும் இதுவே. கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி, அதன்மீது வட்டி இப்படியே போய்க்கொண்டிருக்கும்.
குறிப்பு: இது சம்பந்தமாக இப்போதைக்கு எனக்குத் தோன்றுபவை இவை. இன்னும் நிறைய refer செய்து, நண்பர்களிடம் ஆலோசித்து முடிந்தால் விரிவாக வேறொரு சமயம் எழுதுகிறேன்.
நீங்கள் சொல்லும் ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் உதாரணத்திற்கு ஆர் எம் தீர்வு கிடையாது. பணம் பெரியவர் கைக்கு வரும். பையன் கவனித்துக் கொள்வானா? வீட்டைப் பெரியவர் தனக்குப் பிடித்த வகையில் விற்பதும் தீர்வு கிடையாது. பணம் கைக்கு வரும். பையன் கவனித்துக் கொள்வானா?
வயதான காலத்தில் வருமானம் குறைந்துவிடும். பெரிய வீடுகளில் வசிப்பது நடைமுறையில் சிரமம். பராமரிப்புச் செலவுகள் மென்னியைப் பிடிக்கும். ஆர் எம்மில் கிடைக்கும் பணம் பெரும்பாலும் அதற்கே செலவாகலாம்.
மாதவி, வருமான வரி சம்பந்தமான பாடங்களை மீள் நோக்கு செய்ய வைத்தமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்:-)
பயனுள்ள கருத்துக்கள் கோபி... excellent view (இதையே குருட்டாம் போக்குன்றீங்களே?)
நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்..நன்றி..
அடமானத்தைத் திருப்பிப்போட்டு, தமிழுக்குப் புதிய வார்த்தையை அளித்த அக்காவுக்கு நன்றி..!
@ இராஜராஜேஸ்வரி - கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!
@ புவனேஸ்வரி ராமநாதன் - நன்றியெல்லாம் எதுக்கு? நீங்கள் சீக்கிரம் உங்கள் வலைப்பூவில் எழுதுவதைத் தொடருங்கள். :-)
@ அப்பாதுரை - //ஆனால் அவங்க அவங்க நிலமைக்கு எது ஒத்து வருதோ அதைத் தான் செய்யணும்// இது இது இது தான் முக்கியம்.
கிராம வயல்களும் பிளாட் போடும் காலத்தில் ரியல் எஸ்டேட் தற்போது பெரு நகரங்களில் மட்டுமல்லாமல் எல்லா இடத்திலும் ஏறுமுகம் தான்!
@ கோமதி அரசு -//நீங்கள் பார்த்த காட்சிகள் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. // எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? :-(
@ Madhavan Srinivasagopalan - thanks also to Gopi :-)
@ Gopi Ramamoorthy - உங்கள் வருகைக்கும் விரிவான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி!! ரிவர்ஸ் மார்ட்கேஜின் சாதக பாதகங்களை இப்போது அனைவரும் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புவோம்.
நான் சொன்ன சம்பவத்தில் ஒரு விவரத்தை முன்பே குறிப்பிட விட்டுவிட்டேன்; பின்னுரை பதிவாகி விடக் கூடாதே என்று நீளம் கருதி; என் தவறு தான்! கத்திக் கொண்டே போன பேரன் சொன்னது இது தான்:"உன்னை யார் கவனிச்சுக்கறாங்கன்னு பார்க்கறேன்" etc. . ரி.மார்ட்கேஜில் அந்தப் பேரனின் பணத்தேவையை அந்த முதியவரால் பூர்த்தி செய்ய இயன்றிருக்கும். அவர் வாழும் காலம் வரை தலைக்கு மேல் ஒரு கூரையும் இருந்திருக்கும்! கடனை அடைப்பது பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லையே!!
நீங்கள் சொல்வது போல் பெரிய வீடு பராமரிப்புச் செலவு என்று யோசிப்பவர்கள் ஒரு போர்ஷனை வாடகைக்கும் விடலாம்! இதுவும் ஒரு வழியே!
வருமான வரி பற்றி நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன் - எக்செல் ஷீட்டெல்லாம் வேண்டாம்! எனக்குப் புரியுமோ என்னவோ?!! :-)) முடிந்த போது பதிவைப் போடுங்கள். நன்றி
@ செங்கோவி - //அடமானத்தைத் திருப்பிப்போட்டு, தமிழுக்குப் புதிய வார்த்தையை அளித்த அக்காவுக்கு நன்றி..!// ரிவர்ஸ் மார்ட்கேஜிற்கு என்ன அடமானம்னு போடுவது என்று தெரியாமல் கண்டுபிடித்த குறுக்கு (வழி) வார்த்தை அது!! :-))
ம்னமாடஅ - இந்தத் தலைப்பு எப்படி சரி வரும். இருக்கும் பொருளை வைத்து கடன் வாங்குவதைத்தானே அடமானம் என்று சொல்வோம். ஆக இதுவும் இருக்கும் வீட்டை வைத்துக் கடன் வாங்கும் அடமானம் தானே??
ன்டகடுட்வீ - இதுதானே சரியாக வரும்?
@ முகிலன் - தங்கள் முதல் வருகைக்கு நன்றி!
Reverse mortgage என்பது தான் திட்டத்தின் பெயர்! அதைத்தானே தலைப்பிலும் போட்டிருக்கிறேன்? Home loan இல்லையே?!! :-)) ஆறாவது பாராவைப் படித்தால் இன்னும் விவரங்கள் இருக்கும்!
மறுபடி நன்றி!
மிடில் கிளாஸ் மாதவி
வலைசரம் மூலம் உங்கள் தளம் அறிந்தேன் உங்களின் பதிவுகளும் பகிர்வுகளும் அருமை தொடர்ந்து எழுதுங்கள் எழுத்துலகில் பெண் நிலைப்பாடு காணுகையில் பெருமைதான் எனக்கு
Post a Comment