Saturday, September 24, 2011

பழையன புகுதலும்...?

சந்திரலேகா - பட விமர்சனம்

இந்தப் படத்தை இப்போது தான் ரசித்துப் பார்த்து விமர்சனம் எழுத முடிகிறது!  அந்த மதியப் பொழுதில், வ்யிற்றுக்கு தயிர் சாதமும் வத்தக் குழம்பும் ஈந்து கொண்டு, கண்ணுக்கும் செவிக்கும் உணவுக்காக, தொலைக்காட்சியைப் பார்த்தேன்.  எப்போதோ, இரவு நேரத்தில் தூக்கக் கலக்கத்துடன் பார்த்த, 'சந்திரலேகா!'.  ஏற்கெனவே, என் பள்ளி நாட்களில், உணவு இடைவேளையில் வீட்டுக்கு சாப்பிட நானும் என் தங்கையும் வரும் பொழுதுகளில், கச்சட்டியில் பிசைந்த தயிர் சாதம், குழம்புடன், கையில் அம்மா உணவு உருட்டிப் போட்ட பழைய மலரும் நினைவுகளில் இருந்தேனா, இந்த கறுப்பு- வெள்ளைத் திரைப்படத்தை ஆர்வமுடன் பார்க்கலானேன்! (அன்று பழைய பட எதிர்ப்பாளர்கள் கல்லூரி/பள்ளிக்குச் சென்று விட்டனர்!)  கறுப்பு- வெள்ளைப் படங்களைப் பொறுத்த வரை, இந்த இரு நிறங்களைத் தவிர, வெவ்வேறு ஷேடில் அமைந்த சாம்பல் வர்ணங்கள் தாம் இருக்கும்  நிறங்கள் - இந்திந்த நிறங்கள் இப்படித் திரையில் தெரியும் என்று அதற்கும் திட்டமிட்டே அந்தக் காலத்தில் படம் எடுத்திருக்கின்றனர் என்ற ஆச்சரியமும் எப்போதும் எனக்கு உண்டு!  கூடவே, படமெடுக்கும் நேரத்தில் நடித்தவர்களை நேரில் பார்த்திருந்தால் என்னென்ன வண்ண ஆடைகளில் தோற்றமளித்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்து சிரித்ததுமுண்டு!

சந்திரலேகா - 1948-ல், எனக்கு ஓரிரு மூன்று தலைமுறைக்கு(!) முன்னே வந்த படம்.  ஆனாலும், தொழில் நுட்பத்தில், வசனத்தில், நடிப்பில் என்று எல்லாத் தரப்பையுமே ரசிக்க முடிந்தது.  கதை என்று பார்த்தால், சந்திரலேகா(டி.ஆர்.ராஜகுமாரி)வை, அந்த நாட்டின் இளவரசன் வீரசிம்மனும்(எம்.கே.ராதா), அவன் தம்பி சசாங்கனும்(ரஞ்சன்) விரும்புகின்றனர்.  சந்திரலேகாவின் அன்போ, மூத்தவருக்குத் தான், அவன் தான் இளவரசர் என்று தெரியாமலே!  சசாங்கன், தன் பெற்றோரைச் சிறையில் தள்ளி, அண்ணனைக் குகையில் போட்டு அடைத்து, அரசைக் கைப்பற்றுகிறான்.  சந்திரலேகாவையும் சிறைப்பிடிக்க, அவள் சாமர்த்தியமாக தப்பி ஓடி விடுகிறாள்.  அப்படி ஒளியும் போது, வீரசிம்மனை (அவளுக்கு பாபா) அடைத்து வைப்பதைப் பார்த்து விடுகிறாள்.  அந்த வழியில் போன ஒரு சர்க்கஸ் குழுவின் துணையோடு, அவனை விடுவித்து, அந்த சர்க்கஸ் குழுவினரோடு செல்கிறாள். 

சர்க்கஸ் சாகசங்களை மிக அருமையாகப் படம் பிடித்துள்ளனர்.  சர்க்கஸ் குழுவில் என்.எஸ். கிருஷ்ணனும் இருக்கிறார்; டி.ஏ.மதுரமும் இருக்கிறார் - பின் நகைச்சுவைக்குக் கேட்பானேன்!  கணக்கு உதைத்த போது, கணக்கர், யானைக்கு அல்வா வாங்கிப் போட்டதாகவும் புலிக்கு புல் வாங்கியதாகவும் எழுதச் சொல்லி, இன்றைய கணக்காளர்களுக்கு பாடம் எடுக்கிறார்!! ஆனால், அப்படி கணக்கு எழுதக் கூடாது என்று அவருக்கே மதுரம் அம்மாள் பாடம் எடுத்து விட்டார்!

கதை இன்னும் காடு, மலை தாண்டி, சந்திரலேகாவும் வீர்சிம்மனும் வில்லன்களுக்குத் தப்பும் போது, வேற்று மொழிப் பெண்கள் கூட்டத்தில் சேர்கின்றனர்.  அவர்கள் வேறு பாஷை பேசினாலும், அதற்கு மொழிபெயர்ப்போ, ஸப்-டைடிலோ வைக்காமல், சைகையிலேயும் பேச்சிலேயுமே புரிந்து கொள்ள வைத்திருக்கிறார்கள்! சபாஷ்!  சந்திரலேகா, வில்லன் பிடியில் மாட்டுகிறாள் - வீரசிம்மன் படைகளைத் தயார் செய்கிறான் - தம்பியை வென்று, பெற்றோரையும் சந்திரலேகாவையும் விடுவிக்க!

நான் ரசித்த இன்னொரு கதாபாத்திரத்தைச் சொல்ல வேண்டுமே -  அவர் சுந்தரிபாய் - ஆம், நாம் பிற்காலப் படங்களில் வில்லி சின்னம்மாவாகவோ, மாமியாராகவோ பார்த்தவர் தாம் - 'மழலைப்பட்டாளம்' என்ற படததிலும் வீட்டு ஓனர் மாமியாக வருவார் - இந்தப் படததில் சர்க்கஸ் பெண்ணாக வருகிறார்.  கதாநாயகியை, அரண்மனைச் சிறையில் பார்த்து, சசாங்கனைப் பிடித்ததாக நடித்து, தப்பிக்க வழியும் சொல்லிக் கொடுக்கும் கதாபாத்திரம்.  அருமையான நடிப்பு!  அந்தப் புகழ் பெற்ற முரசு நடனத்தை நடத்த வேண்டும் என்று சந்திரலேகா சசாங்கனைக் கேடக, பிரம்மாண்ட முரசு நடனம்!  முரசுகளிலிருந்து (Helen of Troy?) வீரர்கள் வந்து, சண்டை நடந்து, இறுதியில் சசாங்கன் வெல்லப்படுகிறான்!

அந்த முரசு நடனம் அனைவராலும் மறக்க முடியாதது - (அந்தத் தருணத்தில் பள்ளியிலிருந்த வந்த என் இளைய மகனை - இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான காட்சி பார் என்றவுடன் அவனும் ஆவலுடன் பார்த்தான்!)


ஆனால், இதை விட, சர்க்கஸில் 'நாட்டியக் குதிரை' பாட்டும் நடனமும் எனக்குப் பிடித்தது.  எவ்வளவு அழகான நடனம், பாட்டில் கிண்டல் எல்லாம் அமைந்திருக்கிறது பாருங்கள்! 'குதிரை'யின் கண்ணடிப்பைப் பார்க்க விட்டுவிடாதீர்கள்!



இந்தப் படத்தை எடுக்க 5 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன - சுதந்தரம் பெறுமுன்னே ஆரம்பித்து, பெற்ற பின்னர் வெளிவந்துள்ளது!  ஜெமினி ஃபிலிம்ஸில் திரு எஸ்.எஸ்.வாசன் முதல்முதலாகத் தயாரித்துள்ளார்.  பல சாதனைகளைப் படைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெறும் சர்க்கஸ், தயாரித்த 'ஜெமினி' பெயராலேயே அழைக்கப்பட்டது என்றால் பாருங்கள்! ஹெலிகாப்டரிலிருந்து படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் பறக்கவிடப்பட்டதாம் - படத்தின் வசூலோ, அந்தக் காலத்திலேயே 2 கோடி  ரூபாய்கள்! ட்ரம் டான்ஸ் எடுக்க மூன்று மாதங்கள் ஆனதாம் - பின்னே இவ்வளவு தூரம் சொல்லிவிட்டு அந்த முரசு ஆட்டத்தைப் பார்க்காமல் இருக்க முடியுமா?

26 comments:

Madhavan Srinivasagopalan said...

இருந்தாலும், நீங்க இந்தப் படத்தை இவ்ளோ சீக்கிரம் பாத்திருக்கவேணாம்..

தமிழ் உதயம் said...

நானும் சில தினங்களுக்கு முன்பாக K tvயில் விரும்பி பார்த்தேன். முழு படத்தையும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அந்த காலத்தில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பார்கள்.

SURYAJEEVA said...

ஏன் இந்த கொலை வெறி

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan - நீங்கள் இவ்வளவு விரைவில் கருத்து சொன்னதுக்கு நன்றி! இப்போத் தான் படத்தை பார்க்க முடிந்தது!! :-))

middleclassmadhavi said...

@ தமிழ் உதயம் - //அந்த காலத்தில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பார்கள்/
இந்தப் படத்தை எடுக்க நிறைய செலவு செய்தார்களாம் - ஆனால் பின்னர் இந்தப் படம் இந்தியிலும் ஏன் ஆங்கிலத்திலும் கூட வெளியிடப்பட்டதாம்!!

middleclassmadhavi said...

@ suryajeeva - /ஏன் இந்த கொலை வெறி / அப்படி ஒன்றுமில்லையே! உண்மையிலேயே ரசித்தேனுங்க! எப்படியோ, உங்களை என் வலைப்பூவில் கருத்து சொல்ல வைத்து விட்டதே?! :-))

MANO நாஞ்சில் மனோ said...

ஏ யப்பா எத்துனை வருஷம் பின்னால் போயிட்டீங்களே, அருமையான விமர்சனம்....!!!

settaikkaran said...

சமீபத்தில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டபோது நானும் பார்த்தேன்.

//அவர் சுந்தரிபாய் - ஆம், நாம் பிற்காலப் படங்களில் வில்லி சின்னம்மாவாகவோ, மாமியாராகவோ பார்த்தவர் தாம்//

சுந்தரிபாய் ’கொஞ்சும் சலங்கை" "ஔவையார்’ போன்ற படங்களை இயக்கிய கொத்தமங்கலம் சுப்புவின் மனைவியாவார். ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் லட்சுமியின் அம்மாவாக வந்து தூள் கிளப்புவார். ’தினத்தந்தி’யில் வாசித்தேன்.

அப்பாதுரை said...

இந்தப் படத்தைப் பார்த்ததில்லை.
இந்தியாவின் முதல் பிரம்மாண்டப் படம் என்பார்கள்.
விமரிசனம் சுவையாக இருக்கிறது. முதல் வரிகளின் வத்தக்குழம்பும்.
இந்தப் படம் டிவிடியில் வந்திருக்கிறதோ?

அப்பாதுரை said...

சுந்தரிபாய் விவரத்துக்கு நன்றி சேட்டைக்காரன்.
சில நேரங்களில் படத்தில் அவர் நடிப்பு அற்புதம்.

ஸ்ரீராம். said...

எம் கே ராதா அந்தக் காலத்தில் சம்பந்த முதலியார் போல நாடக உலகில் புகழ் பெற்றிருந்த எம். கந்தசாமி முதலியாரின் மகன். இவர் நடித்த பாசவலை சூப்பர் ஹிட்!
டி ஆர் ராஜா குமாரி ரஞ்சன் கையிலிருந்து அவர் தூக்கும்போது நழுவி நழுவி கீழே விழும் காட்சி எந்த அளவு ரசிக்கப் பட்டதோ அந்த அளவு கலாசாரக் கேடு என்று எதிர்ப்பும் இருந்ததாம். இதே டி ஆர் ஆர் இன்னொரு படத்தில் எம் கே டி பாகவதருக்கு 'பறக்கும் முத்தம்' தருவதும், எம் கே டி கன்னடிப்பதும் கூட மிகப் பெரிய சர்ச்சை ஆண் நாள் அந்தக் காலம். இப்போது என்ன மாதிரி காட்சிகள் திரையில் நாம் பார்க்கிறோம்?!
வில்லனாக நடித்த ரஞ்சன் வெளிநாட்டில் படித்தவர். பல்கலை வல்லுநர். அவர் இரண்டு நாயைக் கையில் பிடித்த படி வரும் காட்சி அந்நாளில் ஹிட்!

வேதாள உலகம் பார்த்திருக்கீங்களோ?!

இராஜராஜேஸ்வரி said...

இந்தப் படத்தை இப்போது தான் ரசித்துப் பார்த்து விமர்சனம் எழுத முடிகிறது! //

சிறுவயதில் புரியாமல் பார்த்ததற்கும் சமீபத்தில் தியேட்டரில் சென்று பார்த்ததற்கும் வித்தியாசத்தை எண்ணிச் சிரித்துகொண்டிருந்தேன்.

தங்கள் பகிர்வு மிகக் கவர்ந்தது. பாராட்டுக்கள்..

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் அருமையான விமர்சனம் மாதவி! எல்லோரும் புதுப்படத்தை நோக்கிப் போகையில் நீங்கள் பழைய படத்தை மனம் கவரும் வகையில் விமர்சித்திருக்கிறீர்கள்!

RAMA RAVI (RAMVI) said...

உங்க விமர்சனம நன்றாக இருக்கு. அருமையான படம். அந்த முறசு காட்சி எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை.இப்ப அந்த மாதிரி படங்கள் எல்லாம் மிக அபூர்வம்.

ஸ்வர்ணரேக்கா said...

கை குடுங்க.. நானும் இந்த முறை தான் முழுப்படமும் பார்த்தேன்.. ரசிக்கவும் செய்தேன்.. உங்களைப் போலவே...அதிலும் சஷாங்கன் அவரை தொட வருகையில் நழுவி விழும் காட்சிகளில் சிரித்து மாளவில்லை..

middleclassmadhavi said...

@ MANO நாஞ்சில் மனோ - /ஏ யப்பா எத்துனை வருஷம் பின்னால் போயிட்டீங்களே/ இப்போத் தான் படததை முழுமையாக பார்க்கக் கிடைத்தது!

நன்றி

middleclassmadhavi said...

@ சேட்டைக்காரன் - தகவல்களுக்கு நன்றி!
// ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் லட்சுமியின் அம்மாவாக வந்து தூள் கிளப்புவார்// நான் இன்னும் இந்த திரைப்படத்தைப் பார்க்கவில்லை :-( பார்க்க முயற்சிக்கிறேன்

middleclassmadhavi said...

@ அப்பாதுரை - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

/இந்தப் படம் டிவிடியில் வந்திருக்கிறதோ/ தெரியவில்லை. ஆனால், வலைகளில் ஆன்லைன் பார்க்க இயலும் எனத் தெரிகிறது.

middleclassmadhavi said...

@ ஸ்ரீராம் - பல புதிய தகவல்களுக்கு நன்றி!

/வேதாள உலகம் பார்த்திருக்கீங்களோ?! / இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளை 'சிரிப்பொலி'யில் பார்த்திருக்கிறேன். டி.ஆர்.மகாராஜன், சாரங்கபாணி நடிப்பை ரசித்திருக்கிறேன். முழு படமும் பார்த்ததில்லை :-(

middleclassmadhavi said...

@ இராஜராஜேஸ்வரி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தியேட்டரில் சென்று படம் பார்ப்பது எனக்கு மிக அபூர்வம். சின்ன வயதில் அப்பா அனுமதித்ததில்லை. இப்போது அப்படியே பழகி விட்டது - எப்போதாவது குடும்பத்தோடு ஊர்ப்பயணம் மாதிரி ப்ளான் போட்டுப் போனால்தான்!

middleclassmadhavi said...

@ மனோ சாமிநாதன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

middleclassmadhavi said...

@ RAMVI - ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி

middleclassmadhavi said...

@ ஸ்வர்ணரேக்கா - /அதிலும் சஷாங்கன் அவரை தொட வருகையில் நழுவி விழும் காட்சிகளில் சிரித்து மாளவில்லை.. / ஆம். ஸ்ரீராம் எழுதய கருத்தையும் பாருங்கள். காலம் மாறிவிட்டது!!

கோகுல் said...

புதிய முயற்சி!
நானும் இது போல சிந்திப்பேன்!
தமிழ் சினிமாவின் சிறந்த பழைய படங்களை
யாராவது அறிமுகப்படுத்தமாட்டார்களா?என ஏங்கியதுண்டு!

@அப்பாதுரை டி.வி.டியில் படம் உள்ளது.நானே வைத்திருக்கிறேன்!

Unknown said...

காலம் மாறினாலும் இன்னும் ஈர்ப்புடையதாக இருப்பதே சந்திரலேகாவின் சாதனை. மிக ரசனையான விமர்சனத்திற்கும், வீடியோ இணைப்புகளுக்கும் நன்றிகள்.

raji said...

ஹை!மலரும் நினைவு! ரொம்ப நாளாச்சு நான் இந்த படம் பாத்து.நானும் முதல் தடவை டிவி ல தான் பாத்தேன்.அருமையான விமர்சனம் :-)