முஸ்கி: இது மின்னஞ்சலில் எனக்கு வந்த ஒரு கதையின் மொழிபெயர்ப்பு. நீங்கள் முன்பே படித்துக் கூட இருக்கலாம். 52 நாடுகளுக்கு இடையே, 16-18 வயதுக்குள்ளிருப்போருக்கு நடத்தப்பட்ட ஒரு கதைப் போட்டிக்கு, அமெண்டா சாங்க் (Amanda Chong of Raffles Girls' School (Secondary)) என்ற 15 வயதுப் பெண் கலந்து கொண்டு (ஆம், தன்னிலும் பெரியவர்களுடன் போட்டி போட்டுத்தான்), முதல் பரிசு பெற்றதாக, அனுப்பப்பட்ட கதை. சில சொற்களை மட்டும் இந்தியப் படுத்தியிருக்கிறேன்.
அவ்வளவு வேகத்திற்கு அவர் பழக்கபட்டவர் அல்லர்; நடுங்கும் கைகளால், காய்த்துப் போன தம் கைவிரல்கள் சீட்டின் மேல் படாதவாறு சீட் பெல்ட்டைப் போட்டுக் கொண்டார். ("வெள்ளை சீட்களில் விரல் கறைகள் பட்டால், நன்கு வெளியில் தெரியும்மா")
"ஃபைனான்ஸ்', 'லிக்விடேஷன்', 'அசெட்ஸ்', 'இன்வெஸ்ட்மெண்ட்ஸ்'...இப்படி பேசிக் கொண்டிருந்தவளின் குரல் புதிதாகவும் திருத்தமாகவும் இருந்தது.
அவருடைய பீ சூ, டிவியில் வரும் மேல்நாட்டுப் பெண்களைப் போலப் பேசுகிறாள்! அவள் அமெரிக்க உச்சரிப்போடு பேசுவதை முதிய பெண்மணி ரசிக்கவில்லை... "ப்ஸு" என்று தன் அதிருப்தியை வெளிப் படுத்தினார்.
மகள் "இதைக் கட்டாயம் ஒத்துக் கொள்ள மாட்டேன், நாம் இப்போது விற்க வேண்டும்" என்று பேசியவாறே ஆக்ஸிலேட்டரை இன்னும் அமிழ்த்தினாள்; அழகாக ப்யூட்டி பார்லரில் மேனிக்யூர் செய்யப்பட்ட கைவிரல்கள், ஸ்டியரிங் வீலை எரிச்சலுடன் அழுத்தின
"இதுக்கு மேல் என்னால் இதைப் பற்றி பேச முடியாது" என்று கைப்பேசியில் கத்தி விட்டு, அதை மூடி, பின்சீட்டை நோக்கி விட்டெறிந்தாள் மகள். முதிய பெண்மணியின் நெற்றியில் பட்டு, பின் அவர் மடியில் சப்தமின்றி அடைக்கலமானது கைப்பேசி. அவர் மெதுவாக அதை எடுத்துத் தன் மகளிடம் கொடுத்தார்.
பீ சூ அம்மாவை பின்பக்க கண்ணாடி மூலம் வெறித்துப் பார்த்தாள். அம்மா என்ன நினைக்கிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது சுருக்கம் விழுந்த முகம் எப்போதும் ஒரே தோற்றத்துடன் தான் தெரிகிறது!
கைப்பேசி மறுபடியும் ஒலிக்க ஆரம்பிக்கிறது, அங்கிருந்த கனத்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு. "ஹலோ பியஹ்ட்ரிஸ், ஆமாமா, எலைன் தான்"
மகள் ஆங்கிலத்திலேயே தொடர்ந்தாள், “ஓ நோ: இன்று லன்சுக்கு உன்னைச் சந்திக்க முடியாது. பழைய பஞ்சாங்கத்தை தினசரி பூஜை சமாச்சாரத்திற்கு அழைத்துப் போக வேண்டியிருக்கிறது!”
‘பழைய பஞ்சாங்கம்’ இது தன்னைத் தான் குறிக்கிறது என்று முதியவருக்கு நன்றாகத் தெரியும். அவர் மௌனமாக இருப்பதை வைத்து, அவர் மகள் இது அவருக்குப் புரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
பேச்சு இன்னும் தொடர்கிறது, “ஆமாமா, என் கார் சீட்ஸ் முழுக்க சாம்பிராணி, ஊதுபத்தி மணம் தான்!”
முதியவர் சுய பச்சாதாபத்தில் கையில் இருந்த பிளாஸ்டிக் பையை பிடித்தவாறே, உதட்டை இறுக மூடிக் கொண்டார். கார் மெதுவே கோயிலுக்கு முன் சென்று நின்றது. அந்தப் பழைய கோயிலின் நாளடைந்த கூரைக்கு முன் கார் கொஞ்சம் வினோதமாகவே தெரிந்தது.
“அம்மா, நான் வெளியே நிற்கிறேன், எனக்கு ஒரு முக்கியமான ஃபோன் கால் செய்ய வேண்டியுள்ளது” என்று சொன்னாள் அவள், உள்ளிருந்து வந்த ஊதுபத்தி புகை மணத்திற்கு முகம் சுளித்தவாறு.
‘ஆகாயத்திலிருக்கும் கடவுள்களே, என் மகளுக்கு இத்தனை வருடங்களாக கொடுக்கும் அதிர்ஷ்டத்துக்கு நன்றி! நான் வேண்டிக் கேட்டுக் கொண்டதை எல்லாம் நீங்கள் அவளுக்கு அளித்திருக்கிறீர்கள். ஒரு பெண் எதற்கெல்லாம் இந்த உலகத்தில் ஆசைப்படுவாளோ அத்தனையும் அவளிடத்தில் உள்ளன’.
‘அவளது கம்பெனி இப்போது முன்னணியில் உள்ளது – ஆண்கள் கூட அவள் சொல்வதைக் கேட்கிறார்கள்…. அவள் முழுமையான வாழ்க்கையை வாழ்கிறாள். கடவுள்களே, நீங்கள் மகிழ்ச்சியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அவளுக்குத் தந்திருக்கிறீர்கள். வெற்றியை அவள் அறுவடை செய்து கொண்டிருக்கும் போது வேர்களை அவள் மறந்து விட்டாலும் நீங்கள் அவள் மேல் கருணை கொள்ளுங்கள்’.
‘நீங்கள் காண்பதை நம்பாதீர்கள் – அவள் எனக்கு ஒரு நல்ல மகளாகத் தான் இருக்கிறாள்! எனக்கு அவள் வீட்டில் ஒரு பெரிய அறையைக் கொடுத்திருக்கிறாள், என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறாள். என் மேல் சமயத்தில் எரிந்து விழுகிறாள் என்றால், காரணம் அவளது சந்தோஷத்திற்கு நான் தடையாக இருப்பது தான். இளம் வயதுப் பெண் ஒரு வயதான தாய் தனக்கு இடைஞ்சலாக இருப்பதை விரும்புவதில்லை. இது என் தவறு தான்’.
முதியவர் அவர் கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் உதிரும் வரை பிரார்த்தனை செய்தார். இறுதியில் தலைவணங்கி, பாதி எரிந்திருந்த ஊதுபத்தியை, அருகிலிருந்த சாம்பல் பாத்திரத்தில் வைத்தார்.
மீண்டுமொருமுறை வணங்கினார். அவர் தம் மகளுக்காக 32 வருடங்களாகப் பிரார்த்தனை செய்து வருகிறார். அவருடைய வயிற்றில் குழந்தை இருந்த போது, கோயிலுக்கு வந்து அது ஒரு மகனாக இருக்க வேண்டும் என வேண்டினார்.
காலம் கனிந்தவுடன் பிள்ளைப் பேற்றில் ஒரு அழகிய மகவு கொழு கொழுவெனப் பிறந்தது –பெண் மகவு! வேலைக்குச் செல்லவோ, குடும்பப் பெயரைக் காக்கவோ உருப்படாத குழந்தை பெற்றதற்கு அவர் கணவர் அவரைப் போட்டு அடித்துத் துவைத்தார்!
அப்படியும் சரோங்கில் இடுப்பில் குழந்தையைக் கட்டிக் கொண்டு அவர் கோயிலுக்கு வந்து கொண்டுதானிருந்தார். தாம் விரும்பிய அனைத்தையும் தம் மகள் அடைய வேண்டுமென்று இறையருளை வேண்டியபடி இருந்தார்.
அவர் கணவர் அவரை விட்டுச் சென்று விட்டார். தம் மகள் ஒரு ஆண் மகனை அண்டியிருக்கக் கூடாது என்று வேண்டினார். ஒவ்வொரு நாளும், தம்மைப் போல படிப்பறிவில்லாமல், ஜடமாயில்லாமல், தம் மகள் ஒரு உயர்ந்த பெண்மணியாக வேண்டும் என பிரார்த்தித்தார்.
‘அவள் என்னைப் போல் இருக்கக் கூடாது’ எனத் தினமும் வேண்டும் போதே அவர் மகள் வளர்ந்து, அவரிடமிருந்து விலகிப் போவதையும் உணர்ந்தார். அவருக்குப் புரியாத பாஷையையும் அவள் பேச ஆரம்பித்திருந்தாள்…
அம்மாவின் மதிப்பை மகள் மறந்து விட்டாள். அவளது விருப்பங்கள் மின்மினி போல தோன்றி மறைவன – ஒரு நவீன பெண்மணிக்கானவை. அதிகாரம், செல்வம், பெரிய ஃபாஷன் பொடிக்ஸ்… இவை கிடைத்தும் இன்னும் அவளுக்கு நிறைவான சந்தோஷம் இல்லை. முதியவருக்கு இவற்றை விடக் குறைந்த அளவிலேயே மகிழ்வான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் எனத் தெரியும்.
அவர் மகள் இவ்வுலகை விட்டுப் போகும்போது, இவ்வுலகில் அவள் கொண்டாடியவை அனைத்தும் அவளுக்குத் துணை போகப் போவதில்லை! அவளைப் பற்றி அவள் ஒரு சிறந்த பெண்மணியாக இருந்தாள் என்று பேசிக் கொள்வார்கள் சில காலம் – பின் கால ஓட்டத்தில் அவளை மறந்து விடுவார்கள். காகிதத்தால் செய்த மாளிகைகளும் கார்களும் எரிந்தால் சாம்பல் மட்டுமே மிஞ்சுமே, அது போல!
ஆனால், அந்த மகளுக்கும் சில கடவுள்கள் உண்டு – செல்வம், வெற்றி, புகழ், அதிகாரம் – நாள்தோறும் இவற்றைத் தொழுது, இவற்றின் அடிமையாகவே வாழ்ந்தாள். ஒவ்வொரு நாளும் இந்தக் கடவுள்களின் தேடல் தான் – ஆனால் இவை நிம்மதியான பெருவாழ்வின் முன் ஒன்றும் இல்லை. அவரது மகள் விரும்பும் அனைத்தும் அவளுடைய வாழ்வின் ஜீவனையே உறிஞ்சி வெறும் உடலை மட்டும் விட்டுச் செல்வன.
ஊதுபத்தி சாம்பல் விழுந்து விட்டது. முதியவர் வெளியே வந்து, மகளை அடைந்தார். அவள் அப்போதும் கவலையுடனும் பதற்றத்துடனும் இருந்தாள். அவளது ஆசைகள் என்னும் விளைநிலத்தினூடே மகிழ்ச்சிச் செடியை வளர்க்க அதன் விதைகளைத் தேடுபவள் போல காட்சியளித்தாள்.
முதியவர் புரிந்ததாகத் தலையசைத்தார். பீ சூ சங்கடத்துடன் எச்சில் முழுங்கிக் கொண்டாள்.
முதியவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை – புருவத்தைக் கூட அசைக்கவில்லை!
இப்போது கையில் பிடித்துக் கொள்ள பிளாஸ்டிக் பையும் இல்லாததால், முதியவர் உதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டார். சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டார், ஏதோ தம்மை விரும்பாத மகளிடமிருந்து அது பாதுகாக்கும் என்பது போல. தொய்ந்து போன தோள்களோடு சீட்டில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, விரல்களால் சீட்டைத் தடவினார்.
எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யத் தான் வேண்டும்.
"நவீனப் பெண்ணின் விருப்பங்கள்"
அந்த முதிய பெண்மணி, ஒரு சின்ன மஜந்தா காரின் பின் ஸீட்டில் அமர்ந்து கொண்டு, சீறிப் பாயும் காரின் வேகத்தில் தன் ப்ளாஸ்டிக் பை பறக்காமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்.
அவர் மகள், பீ சூ, வெள்ளி நிறத்து அழகு கைப்பேசியில் அவருக்குப் புரியாத பாஷையில் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தாள்.
மகள், "ஸாரிம்மா" என்று மாண்டரின் மொழிக்கு மாறிப் பேசினாள். அமெரிக்க உச்சரிப்பு இப்போது இல்லை. "எனக்கு அமெரிக்காவில் ஒரு முக்கிய கிளையண்ட்... அதில் நிறைய பிரச்னைகள்....". முதியவர், புரிந்து கொண்டதாகத் தலையை ஆட்டினார். அவர் மகள், முக்கியமானவள், பெரிய வேலை செய்பவள்.
‘எலைன்’ முதியவர் அதை ரசிக்கவில்லை ‘நான் அவளுக்கு எலைன் என்று பெயர் சூட்டவில்லை’ மகள் ‘நெட்வொர்க்கிங்’கிற்கு எவ்வாறு ஆங்கிலப் பெயர் தான் ஒத்து வரும் என்றும் சைனீஸ் பெயர் எளிதாக மறந்து விடும் என்றும் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது.
முதியவர் காரின் பின்பக்க சீட்டிலிருந்து இறங்கி, மெதுவாக கோயிலின் உள்ளே நுழைந்தார். பிஸினஸ் கோட்டு-சூட்டிலும் ஹைஹீல்ஸ் ஷூவிலும் இருந்த அவர் மகள் காரிலிருந்து இறங்கி, லிப்ஸ்டிக்கை சரி செய்தவாறே அவருடன் நடந்தாள்.
தத்தித் தடுமாறியவாறே முதியவர் கோயிலுக்குள் நுழைந்து ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தினார். தற்போது அவருக்கு மனனம் ஆகிவிட்ட தினசரி பிரார்த்தனையைக் கூற ஆரம்பித்தார்.
‘நீச்சல் குளத்தோடு பெரிய வீடு, சமையல் செய்யத் தெரியாது மற்றும் பிடிக்காது என்ற காரணத்தினால் சமையலுக்கும் மற்ற வேலைக்கும் ஆட்கள்; அவள் காதல் வாழ்க்கையும் நன்றாக அமைந்து விட்டது – ஒரு அழகான பணக்கார வாலிபன் * ‘மார்க்’குடன் அவளுக்கு திருமண உறுதி செய்யப்பட்டு விட்டது.’
மனதில் எண்ணியதை அடையும் இரும்புப் பெண்ணாக – ஆண்களின் மனதில் எண்ணியவுடனே மரியாதை தோன்றும் பெண்ணாக – வாயைத் திறந்தாலே வார்த்தை முத்துக்கள் உதிர மக்கள் காத்திருக்கும் பெண்ணாகத் தம் மகள் இருக்க வேண்டும் என விரும்பினார்.
தம் மகள் ஒரு அமைதியான பெண்ணிலிருந்து அவரையே எதிர்த்துப் பேசும் பெண்ணாக, அவரையே ‘கட்டுப்பெட்டி’ எனச் சொல்லும் பெண்ணாக மாறுவதைப் பார்த்தார். அவள் தன் அம்மாவை ‘மாடர்ன்’ ஆக இருக்க வேண்டும் என விரும்பினாள் – ‘மாடர்ன்’ என்ற வார்த்தையே புதிது – எவ்வளவு புதிது என்றால் அதற்கு சைனீஸில் வார்த்தையே இல்லாத அளவு புதிது!
மகள் இப்போது ரொம்பப் புத்திசாலி ஆகிவிட்டாள்! ஏன் தாம் அப்படி வேண்டினோம் என்று முதியவர் இப்போது வியந்தார்! அவரது பிரார்த்தனைகளுக்கு எல்லாக் கடவுள்களும் செவி சாய்த்து விட்டன! ஆனால் இந்த செல்வமும் வெற்றிகளும் அவர் மகளின் சுயத்தை அழித்து வேர்களை மூடி விட்டன – அவள் இப்போது முன்னோர்களின் மண்ணோடு பணத்தாள்களால் செய்த ஓரிகமி மூலம் மட்டும் ஒட்டப்பட்டவள் போல இருக்கிறாள்!...
இறந்த காலத்துக்கு திரும்பப் போய் தமது வேண்டுதல்களை எல்லாம் அழிக்க முடியாதா என முதியவர் ஏங்கினார். வாயிலுக்கு வெளியே அவர் மகள் கைப்பேசியில் முகத்தில் கோபமும் கவலையும் மாறி மாறித் தெரிய பேசிக் கொண்டிருந்தாள். உலகின் உச்சியில் இருப்பது நல்லதல்ல என்று முதியவர் நினைத்துக் கொண்டார் – வீழ்வதானால் ஒரே வழி தான் – கீழே!!
தமது பிளாஸ்டிக் பையிலிருந்து கோயிலின் பீடத்தின் மேல் பீ ஹூன் (bee hoon – அரிசியால் செய்யப்பட்ட சேமியா) பாக்கெட்டைப் பிரித்துப் பரப்பினார். அவர் மகள் அவர் பீங்கானால் செய்யப்பட்ட கடவுட்களை கும்பிடுவது பற்றி அடிக்கடி கேலி செய்வதுண்டு; இவ்வளவு தூரம் இந்தக் கடவுள்களை நம்பிக் கும்பிட்டால், உதவி தேவைப்பட்டால் பீங்கான் துண்டுகளா பறந்து வரும் என்பது அவளது வாதம்.
முதியவர் எரிந்து முடிந்து கொண்டிருக்கும் பத்தியையே பார்த்தார். எரிந்த சாம்பல் உதிரும் நிலையில் இருந்தது.
நவீனப் பெண்கள்!...ஒரு பெருமூச்சுடன் எழுந்து, கிழக்கு நோக்கி வணங்கி, தமது தினசரி பிரார்த்தனையை முடித்தார். இக்காலப் பெண்கள் நிறைய ஆசைப்படுகிறார்கள் – அந்தத் தேடலில் தங்கள் ஆத்மாக்களையே இழக்கிறார்கள், அவர்கள் அறியாமலே! பிறகு அதைத் தேடுவதில் என்ன பயன்?
ஊதுபத்தி சாம்பல் விழுந்து விட்டது. முதியவர் வெளியே வந்து, மகளை அடைந்தார். அவள் அப்போதும் கவலையுடனும் பதற்றத்துடனும் இருந்தாள். அவளது ஆசைகள் என்னும் விளைநிலத்தினூடே மகிழ்ச்சிச் செடியை வளர்க்க அதன் விதைகளைத் தேடுபவள் போல காட்சியளித்தாள்.
மௌனமாகவே காரில் ஏறினர் இருவரும். மகள் ஹைவேயில், முன்பு போல் இல்லாமல் மெதுவாகவே காரைச் செலுத்தினாள்.
மகள் பேச ஆரம்பித்தாள், “அம்மா, இதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. ‘மார்க்’கும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். இந்தப் பெரிய வீட்டைக் காலி செய்து விடலாம் என்றிருக்கிறோம். இப்போது வீடு நல்ல விலைக்குப் போகும் – வாங்க ஒரு ஆளும் கிடைத்து விட்டார். ஏழு மில்லியன் விலை பேசியிருக்கிறோம். எங்களுக்கு ஒரு அப்பார்ட்மென்ட்டில் பென்ட்-ஹவுஸ் போதும் என்று தீர்மானித்திருக்கிறோம். ஆர்ச்சர்ட் ரோடில் சரியாக ஒரு வீட்டையும் பார்த்து விட்டோம். அந்த வீட்டில் நாங்கள் குடிபுகுந்த பின், வேலைக்காரியை நிறுத்தி விடலாம் என்றிருக்கிறோம்,… அப்போது தான் எங்களுக்குத் தாராளமாய் இடம் இருக்கும்….”
“வீட்டு வேலைகளைப் பார்க்க யாராவது ஒருவரை நியமித்துக் கொள்வோம். சாப்பாட்டிற்கு - வெளியேயும் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், வீட்டிலேயே இப்போது இருக்கும் வேலைக்காரியை அனுப்பிய பின், உன்னைப் பார்த்துக் கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள். நாங்களும் வேலைக்குப் போன பின் உனக்குத் தனியே இருக்க ரொம்பக் கஷ்டமாக இருக்கும். மேலும், அது சிறிய வீடு. அவ்வளவு இட வசதி இல்லை. நாங்கள் நிறைய யோசித்து, ஒரு ஹோமில் உன்னைச் சேர்ப்பது தான் உனக்கு நல்லது என முடிவு செய்திருக்கிறோம். ஹௌகங்க் அருகில் ஒரு நல்ல ஓல்ட் ஏஜ் ஹோம் இருக்கிறது – கிறிஸ்டியன் ஹோம், நல்லதாகவும் இருக்கிறது…..”
“நான் அங்கே போய்ப் பார்த்தேன். அங்கிருப்பவர் உன்னைச் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார். ஹோமைச் சுற்றித் தோட்டம் இருக்கிறது, உனக்கு கூடப் பேசிப் பழக நிறைய வயதானவர்கள் இருக்கிறார்கள்! உனக்கு அங்கே நேரமே போதாது, மிகவும் சந்தோஷமாக இருப்பாய்!” சொன்ன அவர் மகள், “நிச்சயம் அங்கே ரொம்ப சந்தோஷமாக இருப்பாய்!” என்று மறுபடி தனக்கே சொல்வது போல் சொல்லிக் கொண்டாள்.
“மா” – ரியர் வ்யூ கண்ணாடியில் அவர் மகள் அவரைப் பார்த்துக் கேட்டாள், “எல்லாம் சரியாம்மா?”
எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யத் தான் வேண்டும்.
“ஆமாம்” நினைத்ததை விட உரத்த குரலில் சொன்ன முதியவர், “உனக்கு எது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அது எனக்கு சரி தான்” என்றார்.
“இது உனக்காகத் தான், அம்மா. நீ அங்கே ரொம்ப சந்தோஷமாய் இருப்பாய். நீ நாளைக்கே அங்கு போகலாம். வேலைக்காரியை விட்டு உன் சாமான்களை எல்லாம் ஏற்கெனவே பாக் பண்ணச் சொல்லிட்டேன்”
எலைன் வெற்றியுடன் புன்னகைத்துக் கொண்டாள் – செய்ய வேண்டிய வேலைகளில் ஒன்று முடிந்து விட்டது!
அதே புன்னகையுடன் எலைன், “எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்” என்று சொன்னாள். அவளுக்கு விடுதலை கிடைத்த மாதிரி இருந்தது. ஒரு வேளை, அவள் அம்மாவை அனுப்பி விட்டால் அவளுக்கு சந்தோஷம் கிடைக்குமோ என்னவோ….
அவள் ஆழ்ந்து யோசித்திருக்கிறாள் – இது தான் மகிழ்ச்சிக்கான அவள் தேடலில் தடைக்கல்லாக இருந்திருக்கிறது. இப்போது அது சரியாகி, அவள் மகிழ்ச்சியாயிருக்கிறாள். ஒரு நவீனப் பெண்ணுக்கு என்ன வேண்டுமோ – பணம், அந்தஸ்து, வேலை, காதல், அதிகாரம், இப்போது சுதந்திரமும் அவளுக்குக் கிட்டி விட்டன ஆம், அவள் அம்மாவும் அவர் கட்டுப்பெட்டித்தனமும் இல்லாத சுதந்திரம்…..
ஆம், அவளுக்கு விடுதலை கிடைத்து விட்டது. அவள் கைப்பேசி அடித்தது. எடுத்து, வந்த மெசேஜைப் பார்த்ததும், மகிழ்ச்சியில் முகம் பூரித்தது. “ஸ்டாக் 10% அதிகரித்திருக்கிறது”
இப்போது தான் அவளுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது! வாழ்க்கையின் அர்த்தத்தை, கைப்பேசியின் வெளிச்சத்தில் கண்டுபிடிக்க முயலும் அவளுக்கு, பின்சீட்டில் இருந்த முதிய தாய் கண்ணுக்கே தெரியவில்லை, அவரின் கண்ணீரும் தெரியவில்லை.
###################################################################
டிஸ்கி: இதைப் பார்த்து நெகிழ்ந்து, சில நாட்கள் முயன்று மொழி மாற்றம் செய்துள்ளேன். இது நவீனப் பெண்களுக்கு மட்டுமல்ல, இந்தத் தலைமுறைக்கே பொருந்துமோ என நினைக்கத் தோன்றுகிறது.
எனக்கு வந்த மின்னஞ்சலில், இதனால்- குழந்தைகளுக்குத் தேவையான கல்வியும் பிறவும் வழங்கிய பிறகு, உங்கள் ஓய்வு காலத்துக்கு வேண்டியதையும் சேமியுங்கள்; உங்கள் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் உங்களைக் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.. அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை இருக்கிறது; உங்களை அவர்கள் கவனித்துக் கொண்டால் அது இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு என எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவுரையுடன் முடிகிறது.
36 comments:
பகிர்வுக்கு நன்றி சகோ!
யாருக்காக நாம் வாழ்ந்தோமோ - அவர்களே நம்மை நிராகரிப்பது கொடுமை. வாழ்ந்ததற்கே அர்த்தமில்லாமல் போகிறது.
ஒரு நல்ல கதையை மிக அழகாக மொழிபெயர்த்து
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
உண்மையில் மிகச் சிற்ந்த கதையென
தேர்ந்தெடுக்கத் தக்க அனைத்து அம்சங்களும்
இந்தக் கதையில் இருப்பது சிறப்பு
இறுதியாக நீங்கள் சொல்லி இருக்கிற அறிவுரை
உண்மையில் இன்றைய நிலையில் அவசியம்
அனைவரும் உணர்ந்து தெளியவேண்டியதே
தரமான பதிவைத் தந்தமைக்கு மீண்டும் ஒருமுறை
நன்றி கூறி..வாழ்த்துக்களுடன்
இன்றைய நடைமுறை அதுதான். தந்தை காலமானதும் அவர் உபயோகித்த அலுமினியத் தட்டைத் தூக்கிப் போட நினைக்கும் மகனிடம் அவர் மகன் 'வேண்டாம்...அது உனக்கு ஒரு நாள் உதவும்' என்று சொன்னது, காதலி கேட்டதால் தாயின் இருதயத்தை அறுத்து எடுத்துச் செல்லும் மகன் கல்லில் தடுக்கிக் கொள்ளும்போது கையிலிருந்த தாயின் இதயம் 'பார்த்து மகனே...'என்று சொன்னது என்று நம்மூரிலும் இது போன்ற நெகிழ்ச்சிக் கதைகள் நிறைய உண்டே...எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் மட்டுமே முடிகின்றன!
மனதைக் கனக்கச் செய்யும் கதை..அது சொல்லும் செய்தி சுட்டெரிக்கும் உண்மை.
//எனக்கு வந்த மின்னஞ்சலில், இதனால்- குழந்தைகளுக்குத் தேவையான கல்வியும் பிறவும் வழங்கிய பிறகு, உங்கள் ஓய்வு காலத்துக்கு வேண்டியதையும் சேமியுங்கள்; உங்கள் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் உங்களைக் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.. அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை இருக்கிறது; உங்களை அவர்கள் கவனித்துக் கொண்டால் அது இறைவன் உங்களுக்குத் தரும் பரிசு என எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவுரையுடன் முடிகிறது.//
உண்மைதான் நம் சமூகத்தில் ஆண்கள் செய்வதை பெண்கள் செய்வதாக விளக்கி உள்ளது கதை.
பதினைந்து வயது பெண் எழுதி உள்ளது மிகுந்த ஆச்சர்யம்....
முதலில் மொழிபெயர்ப்புக்கு ஒரு சபாஷ்! அது எவ்வளவு கடினம் என்பதை அனைவரும் அறிவர். இவ்வளவு முயன்று ஒரு அருமையான பகிர்வை அளித்தமைக்கு பாராட்டுக்கள்! :-)
//இப்போது தான் அவளுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது! வாழ்க்கையின் அர்த்தத்தை, கைப்பேசியின் வெளிச்சத்தில் கண்டுபிடிக்க முயலும் அவளுக்கு, பின்சீட்டில் இருந்த முதிய தாய் கண்ணுக்கே தெரியவில்லை, அவரின் கண்ணீரும் தெரியவில்லை.//
எந்த நாடானலும் சரி, சிலர் வயதான பெற்றோர்களை இப்படித்தான் ஒதுக்கிவிடுகிறார்கள்.
மனதை நெகிழ வைக்கும் கதை.அழகான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் மாதவி..
பகிர்வுக்கு நன்றி மாதவி
//உங்கள் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் உங்களைக் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்காதீர்கள்.. அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை இருக்கிறது; //
நூற்றுக்கு நூறு உண்மை தான், மேடம்.
மிகவும் நல்ல பதிவு.
பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மீண்டும் வருவேன் vgk
எவ்வளவு தங்களை பாதித்திருந்தால், இவ்வளவு முயன்று மொழி பெயர்ப்பு செய்திருப்பீர்கள் என்று புரிகிறது
டிஸ்கியில் நீங்கள் சொன்ன, வை. கோபாலகிருஷ்ணன் சார் மேற்கோள் காட்டிய வரிகள் தான் என்னையும் பாதித்தது
//அவர் மகள் இவ்வுலகை விட்டுப் போகும்போது, இவ்வுலகில் அவள் கொண்டாடியவை அனைத்தும் அவளுக்குத் துணை போகப் போவதில்லை! அவளைப் பற்றி அவள் ஒரு சிறந்த பெண்மணியாக இருந்தாள் என்று பேசிக் கொள்வார்கள் சில காலம் – பின் கால ஓட்டத்தில் அவளை மறந்து விடுவார்கள்.//
உண்மை தான். எதுவும் சாஸ்வதம் இல்லாதது என்பதை அனைவருமே உணர வேண்டும்.
நல்லதொரு மொழியாக்கம். சிந்திக்க வைக்கும் பதிவு. நம் தாய் தந்தையர் மீது ஓரளவுக்காவது பாசமும் அன்பும் வைத்து அவர்களை மதித்து நடந்தால் தான், நமக்கு நம் குழந்தைகள் மூலம் அதுபோன்ற மதிப்பு ஓரளவுக்காவது கிடைக்க வாய்ப்பு உண்டு.
பகிர்வுக்கு நன்றிகள். voted. vgk
நல்ல பகிர்வை தந்தமைக்கு மிக்க நன்றி மாதவி.
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
அதே உயிரோட்டத்தோட மொழி பெயர்த்திருக்கீங்க :-)
ம்ம்.. நிஜம். இன்று உலகெங்கும் பரவியிருக்கும் என்.ஆர்.ஐ.க்களின் பெற்றோர்களும் முன்பு அதைத்தானே வேண்டியிருப்பார்கள். ஆனால், இப்போது பிரிவுத் துயரில் வாடுவதும் அவர்கள்தானே? என் மனதிலும் சில மாதங்களாக ஒரு நெருடல் என் மகனகளின் எதிர்காலம் குறித்து..
@ விக்கியுலகம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ தமிழ் உதயம் - //யாருக்காக நாம் வாழ்ந்தோமோ - அவர்களே நம்மை நிராகரிப்பது கொடுமை. வாழ்ந்ததற்கே அர்த்தமில்லாமல் போகிறது. // ஆம், ரொம்ப சரி!
@ Ramani - உங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றிகள்
@ ஸ்ரீராம் - //நம்மூரிலும் இது போன்ற நெகிழ்ச்சிக் கதைகள் நிறைய உண்டே...எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் மட்டுமே முடிகின்றன! // முதியவர் என்ன எதிர்பார்த்தார், எப்படி ஏமாந்தார் என்ற கதை தான்!!
தங்கள் கருத்துக்கு நன்றி!
@ செங்கோவி - //மனதைக் கனக்கச் செய்யும் கதை..அது சொல்லும் செய்தி சுட்டெரிக்கும் உண்மை. // நன்றி
@ Prabhu Krishna - //பதினைந்து வயது பெண் எழுதி உள்ளது மிகுந்த ஆச்சர்யம்.... // கதையினால் இந்தத் தலைமுறை மீது நம்பிக்கை குறைந்தாலும், கதையை எழுதியவர் 15 வயதுப் பெண் என்பது தான் கொஞ்சம் நம்பிக்கை வெளிச்சத்தைத் தருகிறது!
வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி
@ சேட்டைக்காரன் - //மொழிபெயர்ப்புக்கு ஒரு சபாஷ்!// ரொம்ப நன்றி சார்!
@ RAMVI - //மனதை நெகிழ வைக்கும் கதை.அழகான மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள் மாதவி.. // thanks!
@ r.v.saravanan - thanks
@ வை.கோபாலகிருஷ்ணன் - உங்கள் விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
//நல்லதொரு மொழியாக்கம். சிந்திக்க வைக்கும் பதிவு. நம் தாய் தந்தையர் மீது ஓரளவுக்காவது பாசமும் அன்பும் வைத்து அவர்களை மதித்து நடந்தால் தான், நமக்கு நம் குழந்தைகள் மூலம் அதுபோன்ற மதிப்பு ஓரளவுக்காவது கிடைக்க வாய்ப்பு உண்டு.// மிக்க சரி!
மறுபடி நன்றிகள்
@ மோகன் குமார் - உண்மையிலேயே, பணிச் சுமை காரணமாக எனக்குக் கிடைத்த நேரத்தில் மொழி பெயர்ப்பு செய்தேன்! முழுதும் செய்ய சில நாட்களாகி விட்டன!
வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி
@ raji - /நல்ல பகிர்வை தந்தமைக்கு மிக்க நன்றி மாதவி.
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு / நன்றி ராஜி.
@ ஜெய்லானி - /அதே உயிரோட்டத்தோட மொழி பெயர்த்திருக்கீங்க :-) / ஒரிஜினல் படித்தீர்களா? :-)) கருத்துக்கு நன்றி!
@ ஹுஸைனம்மா - /இன்று உலகெங்கும் பரவியிருக்கும் என்.ஆர்.ஐ.க்களின் பெற்றோர்களும் முன்பு அதைத்தானே வேண்டியிருப்பார்கள். ஆனால், இப்போது பிரிவுத் துயரில் வாடுவதும் அவர்கள்தானே? என் மனதிலும் சில மாதங்களாக ஒரு நெருடல் என் மகனகளின் எதிர்காலம் குறித்து.. / உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்! என் மகன்கள் (இப்போது படித்துக் கொண்டிருக்கிறார்கள்) எதிர்காலத்தில் எங்கு பணிபுரிவார்களோ என்று நானும் யோசிக்கிறேன்.
எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லையெனில் ஏமாற்றமும் இருக்காது!! (என் கணவர் அடிக்கடி சொல்லும் அறிவுரை!)
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
அவள் இப்போது முன்னோர்களின் மண்ணோடு பணத்தாள்களால் செய்த ஓரிகமி மூலம் மட்டும் ஒட்டப்பட்டவள் போல இருக்கிறாள்!...
அழ்கான உதாரணம்.
யதார்த்த உண்மைகள்.
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்வதைதைத் தவிர வேறு வழியேதுமில்லை.
எந்த நாடாய்.. எந்த மண்ணாய் இருந்தால் என்ன?
மனிதரில் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்..
நிராகரிப்பின் வலியை மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கிறீர்கள்.. தாயின் புலம்பலைச் சொல்லாமல் சொல்லிய விதம் கதையின் ஹைலைட்.
//அந்த மகளுக்கும் சில கடவுள்கள் உண்டு – செல்வம், வெற்றி, புகழ், அதிகாரம் – நாள்தோறும் இவற்றைத் தொழுது, இவற்றின் அடிமையாகவே வாழ்ந்தாள். ஒவ்வொரு நாளும் இந்தக் கடவுள்களின் தேடல் தான்.
நம்பவே முடியவில்லை. பிஞ்சு மனதின் பக்குவம் ஆச்சரியமாக இருக்கிறது.
கதை கதையாம் காரணமாம்.
குழந்தைகளை நாம் கவனித்துக் கொள்வது நம் கடமை. அவர்கள் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டுமென்பது முறையற்ற எதிர்பார்ப்பு என்பது என் கருத்து. பிள்ளைகள் மீது நாம் அன்பு செலுத்துவது அவசியம்; அவர்கள் நம் மீது அன்பு செலுத்தவேண்டுமென்பது முறையற்ற எதிர்பார்ப்பு தானே?
நாளைக்கு நம்மைக் கவனித்துகொள்வார்கள் என்ற எண்ணத்துடன் செயல்படுவதைப் போல சுயநலம் வேறெதுவும் இல்லை. முதிர்ந்த மனங்களிடையே (நண்பர்கள்.. தம்பதிகள் என்று வைத்துக் கொள்வோம்) quid pro quo பாங்கு இயல்பு. அறிவிலும் வயதிலும் முதிர்ந்த அப்பா அம்மா அறியாப் பிள்ளையிடம் இப்படிப்பட்ட எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வது என்னளவில் அயோக்கியத்தனம் என்று படுகிறது.
பத்து வயதுப் பிள்ளையிடம் "நாளைக்கு நான் கிழவனானதும் நீ என்னை நன்றாகக் கவனித்துக் கொள்வாய் என்ற எதிர்பார்ப்புடன் இதோ இந்த சட்டை, சாப்பாடு, விடியோ கேம் வாங்கித்தருகிறேன்" என்று தினசரி சொல்லி நடந்து கொண்டால்.. வேஷமாவது இல்லை எனலாம்.
பற்றறுக்கும் அவசியத்தை வலியுறுத்தும் தத்துவங்களைக் கொண்டக் கிழக்கத்தியக் கலாசாரம் இப்படி சந்ததிப் பிடிப்பை ஒழுக்கமாக எண்ணும் முரண் வியக்க வைக்கிறது.
கதையில் காரணம் பார்த்தால் ரணம் :)
Post a Comment