Tuesday, May 17, 2011

தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?

(கம்ப. குகப்படலம். 2405)
          பரதன் பெரும்படையுடன் வருவதைத் தூரத்திலே இருந்து பார்த்து, ராமனை எதிர்க்கத் தான் வருகிறானோ என்று நினைத்து குகன் சொல்வதாக இந்தக் கம்பராமாயணப் பாடல்.  சந்தத்திற்காக மனதிலே தங்கிய பாடல் - இதன் ஒரு வரியைத் தான் தலைப்பில் பார்த்திருப்பீர்கள்.
         இன்று நண்பர்கள் தினம் இல்லை.  ஆனாலும் என் நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவு.
          சின்ன வயதில் நான் மிகுந்த தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன்.  குடும்ப சூழலும் எதிர்காலம் குறித்த பயமும் முக்கிய காரணங்கள்.  பள்ளியிலும் யாரோடும் நெருங்கிப் பழகவில்லை, கூட்டுக்குள் சுருங்கும் நத்தையாகவும் புத்தகப் புழுவாகவும் இருந்தேன். இதை மாற்றியது முதலில் பள்ளி இறுதி வகுப்பில் கிடைத்த ஒரு தோழி.  விளையாட்டாக அவள் கண்களை நான் பொத்தி யாரெனக் கேட்டபோது, அருகில் இருந்தவள், "அதான், நேத்து அவளோட ஃப்ரெண்டாக இருக்க ஆசைன்னு சொன்னியே" என்று க்ளூ கொடுத்தாள்.  பிறகு கேட்பானேன் - அந்தத் தோழி என் வாழ்க்கையில் முதல் நம்பிக்கைப் பூ;  அவள் குடும்பமும் என் குடும்பமும் பழகும் அளவு நண்பர்கள் ஆனோம்.

         மேலே படிக்கும்போது இருவரும் வெவ்வேறு துறைகளை மேற்கொண்டாலும் நட்பு தொடர்ந்தது.  ஆனாலும் ஒரு சின்னப் பிரிவு இருந்தது. 
         கல்லூரியில் நான் விரும்பிய பாடப்பிரிவு நான் விரும்பிய - என் குடுமபச் சூழலுக்கு ஒத்து வரக்கூடிய  கல்லூரியில் ரிசர்வேஷன் காரணமாகக் கிடைக்கவில்லை - வழிகாட்ட ஆளில்லாமல் மனம் நொந்து, தெரிந்தெடுத்த வேறு பிரிவில் என் கவனத்தைச் செலுத்தியிருந்தேன்.  புது அறிமுகங்களில் ஒருத்தி தன் காதலைப் பற்றியெல்லாம் என்னிடம் பகிர்ந்து கொண்டாள்.  ஒரு நாள், தான் எழுதியதாக ஒரு கவிதையை என்னிடம் கொடுத்தாள் - அவள் காதலனுக்கு எழுதிய கவிதை என்று  நினைத்து வாங்கிப் படித்தால், அது என் நட்பை விழைந்து எழுதிய கவிதை!  அன்று முதல் நாங்கள் இணைபிரியாத நண்பர்கள் ஆனோம் - எந்த அளவுக்கு என்றால் என் கல்யாணத்தில் மூன்றாம் முடிச்சு போட நாத்தனார் ஸ்தானத்தில்  அவள் நிற்கும் அளவுக்கு! அவளால் தான் எனக்கு ஓரளவாகவாவது என் மேலேயே நம்பிக்கையும் வாழ்க்கையை எதிர்நோக்கும் தைரியமும் வந்தது.

         இதையெல்லாம் கடந்து, குடும்பத்தில் இறங்கி, குழந்தைகள் ஓரளவு வளர்ந்து, என் எழுத்துக்கனவுகளுக்காக வலைப்பூவில் நான் எழுத ஆரம்பித்த பின் தான் எனக்கு இன்னும் confidence வந்திருக்கிறது.  போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் இடையே என் தன்னம்பிக்கை வளர்ந்திருப்பதை நான் நன்றாக உணர்கிறேன்.  இதற்கு என்னை ஊக்கப்படுத்தும் நீங்கள் தான் காரணம்.  உங்கள் அனைவருக்கும் நன்றி! 

20 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகான பொருளுறை...

தமிழ் உதயம் said...

தோழிக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நெஞ்சத்து அக நக நட்பான தோழிகளுக்கு வாழ்த்துக்கள். படங்கள் அருமை. பாராட்டுக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துகள்....

Ram said...

சிறப்பு.!! இதற்கு எங்களுக்கு நன்றிகள் சொல்லி மாற்றானாக பார்க்க விரும்புகிறீரா.? உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வர காரணமான அந்த தோழியை நீங்கள் சொல்லியிருப்பது சிறப்பு. தொடருங்கள்..!! உங்களை confidenceஇன் உச்சிக்கே கொண்டு போய்டுறோம்..

r.v.saravanan said...

வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

நட்புக்கு மரியாதை மாதவி.. அருமை..:)

ஸ்ரீராம். said...

நட்புக்கு நன்றியும் மரியாதையும்...பலே!

ரிஷபன் said...

நட்பு எனும் மந்திரச் சொல் போதும்..
சுருளும் மனதின் இருளும் அகலும்..
உங்கள் நட்பு வட்டம் எப்போதும் நீடித்திருக்க வாழ்த்துகள்..

pichaikaaran said...

நட்புக்கு நீங்கள் செய்யும் மரியாதை நெகிழ்ச்சி ... அதை வெளிப்படுத்த ஓர் இனிய தமிழ் பாடலை பயன்படுத்தியது மகிழ்ச்சி

Unknown said...

இப்போ தான் பார்த்தேன், நெகிழ்ச்சியா இருக்கு படிக்க. உங்கள் நண்பர்களுக்கு பெரிய "ஓ".

தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் சின்ன இடைவெளி தான். சிலரின் தன்னம்பிக்கை கர்வம் போலத் தோணலாம், அல்லது கர்வம் தன்னம்பிக்கை போல. ஆனால், அதைக் கண்டடையும் வரை, உள்ளுக்குள்ளே போராட்டம்:-) நாங்க தான் நட்பு வட்டம் பெரிசா இருக்கோமே, படைக்கஞ்ச வேண்டாம்:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீங்கள் சொல்வது யாவும் எனக்கும் பொருந்துவதாகவே உள்ளது. வலைப்பூ நண்பர்கள் தந்திடும் உற்சாகம் உண்ம்மையிலேயே தன்னம்பிக்கை தருவதாகவே நானும் உணர்கிறேன். நல்ல நட்புகள் எல்லோருக்குமே அமைந்திட வாழ்த்துக்கள். தங்களின் இந்தப்பதிவு மிகவும் அருமையாகவும் யதார்த்தமாகவும் உள்ளதை உள்ளபடி மனம் திறந்து உரைப்பதாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.

எல் கே said...

நட்புக்களை போற்றி இருக்கும் நீங்களும் நல்ல தோழிதான் அனைவருக்கும்

middleclassmadhavi said...

@ நண்பர்கள் எல்லாருக்கும் -
வந்தனம்;
கருத்து தந்ததுக்கும், வாழ்த்துக்கும், இன்ட்லி, தமிழ்மணத்தில் ஓட்டு போட்டதற்கும் thanks!

Prabu Krishna said...

மேலும் உங்கள் தன்னம்பிக்கை வளர வேண்டும்.
தொடர்ந்து இது போல பகிர்ந்து கொள்ளுங்கள்.

R. Gopi said...

\\சந்தத்திற்காக மனதிலே தங்கிய பாடல்\\

இப்போது அதன் பொருளிற்காகவும் என்று சொன்னால் அது மிகையில்லை என்று நம்புகிறேன்.

middleclassmadhavi said...

@ Gopi Ramamoorthy - thanks again!

வல்லிசிம்ஹன் said...

Hi Madhavi,
congratulations on oppening out and sharing your valueaable thoughts.
so many of us are like you.

I am gald I visited your blog today. sorry to comment in english. still to download fonts.

Unknown said...

Nice to recollect Golden memories.

middleclassmadhavi said...

நன்றி!
உங்கள் பெயருடன் கருத்திட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்! :))