Thursday, October 6, 2011

ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!

     அது ஒரு ஞாயிறு மதியம். அப்பா ராஜா, அம்மா தேவி, மகன் ஆனந்த், மகள் ஆர்த்தி நால்வரும் மதிய உணவு முடிந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். நடுவில் தொலைகாட்சிப் பெட்டியும் பேச்சுக்குத் தீனி கொடுத்துக் கொண்டிருந்தது. ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயினோடு திடீர் ம்யூஸிக்கோடு வெளிநாட்டுக் காட்சிகள் வர, ஆர்த்தி "பாட்டு வரப் போகுது!" என்று தன் ஞானத்தை வெளிப்படுத்தினாள். ஆனந்த், " அப்பா, சானல் மாத்துங்க!" என்றான்.

     ராஜா, "ஏன்ப்பா, உன் வயசுப் பசங்க SS Music, Sun Music அது இதுன்னு தான பார்க்கறாங்க, நீ ஏன் மாத்தச் சொல்றே?" என்றவாறே டைம்ஸ் நவ்விற்கு சானலை மாற்ற, ஆர்த்தி, "அப்பா, அவன் எமினம் பாட்டெல்லாம் ஐபாடில டவுன்லோட் செய்து கேட்டுட்டுத் தான் இருக்கான்!" என்று போட்டுக் கொடுத்தாள்! ஆனந்த சட்டென்று, "அப்பா, நம்ம சினிமால தான் மரத்தச் சுற்றி, மலையைச் சுற்றி பாட்டு வருது, நிஜ வாழ்க்கையில யாராவது டூயட் பாடுவாங்களா?" என்றான். தேவி உடனே, "ஆமாங்க, நாம டூயட் பாடியிருக்கோமா என்ன, அதுவும் வெளிநாட்டுக்குப் போய்?" என்றாள்!

     ராஜா, "குட்டீஸ், இசையை எந்த மொழில வேணும்னாலும் ரசிங்க, தப்பில்லை; ஆனந்த், நம் நாட்டில் இயல், இசை, நாடகம்னு இருந்தது. இயலும் இசையும் நாடகத்தில் கலந்தது, இந்த நாடகத்திலருந்து தான் நம் நாட்டில் சினிமா வந்தது. அதனால தான் இன்னமும் நம் சினிமால பாட்டு" என்று விளக்கினான். தேவி, "அவனுக்கு விளக்கம் சரி, என் கேள்விக்கென்ன பதில்?" என்று கடைசிப் பகுதியைப் பாட்டாகவே கேட்டாள்!

     ஆர்த்தி, "அம்மா, அப்பாவை ஏன் சண்டைக்கு இழுக்கறே, நாங்க ரண்டு பேரும் சண்டை போட்டா மட்டும் திட்டறே?" என்று கேட்க, "ம், இப்போ என் பெண் கேள்விக்கென்ன பதில்?" என்று சிரித்துக் கொண்டே ராஜா தேவியைக் கேட்டான். தேவி, "ஆர்த்திக்குட்டி, இது சண்டையில்லம்மா, சும்மா விளயாட்டு வம்பு. ரண்டு பேர் இருந்தா கருத்து வேறுபாடு வரத்தான் வரும், சண்டை -ஆர்க்யுமென்ட் வரும். ஆனால், ஒருத்தரொருத்தர் கருத்தைத் தெரிந்த பிறகு, ஒருத்தர் மற்றவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இத நீங்க செய்யாத போது தான் நான் திட்டறேன்!" என்றாள்.

     ஆனந்த், "ஆர்த்தி எப்பவுமே விட்டுக் கொடுக்க மாட்டேன்றாள், நானே விட்டுக் கொடுக்கணுமா? நான் மட்டும் உங்கள் பிள்ளயில்லயா?" என்று முறையிட, தேவி, "விட்டுக் கொடுக்கறதில எப்பவும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி தான் இருக்கணும் - ரண்டு பேரும் விட்டுத் தரணும்! ஆர்த்தி, இனி உன் அண்ணன்கிட்டயிருந்து இந்த மாதிரி புகார் வரக் கூடாது, சரியா?" என்று சொல்ல, ஆர்த்தி சரியென்று தலையாட்டினாள். ஆனந்த், "ஹை, அம்மா, அதனாலத் தான் எங்களுக்கு அடிக்கடி ஃபிஃப்டி-ஃபிஃப்டி பிஸ்கெட் வாங்கித் தரயா?" என்று கேட்க, "குறும்பு!" என்று சொன்னபடி அவன் காதைத் திருகிய தேவி, "என் குழந்தைங்க ரண்டும் ஜெம்ஸ்னுட்டு அடிக்கடி ஜெம்ஸும் வாங்கித் தரேனே" என்று தன் பங்குக்குக் 'கடி'க்க, 'ரம்பம்!" என்று சொன்னபடி எல்லாரும் சிரித்தனர்.

     மாலையானதும் குழந்தைகள் விளையாடிவிட்டு, ஹோம்வொர்க் செய்ய, தம் அறைக்குச் சென்றனர். ராஜா, இசையுலகில் உலவ, கணிணிக்குச் சென்றான். வீட்டு வேலைகளை முடித்த தேவி அயர்வுடன், திரும்பத் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தாள். சானல் சர்ஃபிங்கில் மசாலாப் படங்களில் மாறுபட்டுத் தெரிந்த அந்த படத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். குழந்தைகள் இரவு உணவு உண்டு, மிச்ச ஹோம்வொர்க் எழுத்து வேலையை அங்கேயே முடிப்பதாகச் சொல்லி எழுத ஆரம்பித்தனர்.
    ராஜா, "குழந்தைங்க சாப்பிட்டாச்சா?" என்று கேட்டபடி சாப்பிட வர, ராஜாவும் தேவியும் சாப்பிட ஆரம்பித்தனர். "என்ன சினிமா பார்க்கறே?" என்று ராஜா கேட்க, தேவி, "ஏதோ மதுரை டு தேனின்னு பஸ் ரூட் போட்டு படம்; வித்தியாசமா இருக்கு" என்று ரிமோட்டில் தன் உரிமையை நிலைநாட்டினாள்!. சாப்பிட்டு முடித்தாயிற்று.

    ஒரு பாட்டு ஓட ஆரம்பிக்க, தேவி, "இந்த ட்யூன் தெரிஞ்சா மாதிரி இருக்கே, ம்...." என்றவள், "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" என்று பாட ஆரம்பித்தாள். ராஜா, "இல்லை, இது 'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க'ங்கற பாட்டு, நீ சொல்ற பாட்டு இல்ல!" என்றான்!
 
     "என் அப்பா பாடி நான் கேட்டிருக்கேன், நான் சொன்ன பாட்டுத் தான், M K தியாகராஜ பாகவதர் பாடினது" என்றாள். ராஜாவோ, "இது MGR பாட்டு, மதுரை வீரன் படம்" என்று சொல்ல, அங்கு ஒரு கருத்து வேறுபாடு - சண்டையானது. திரையில் பாடல் முடிவுக்கு வந்தது, "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே"என்ற வரிகளோடு! தேவியின் கொண்டாட்டத்தைக் கேட்க வேண்டுமா! ராஜாவோ தான் சொன்ன பாட்டு சரி தான் என்றும், இந்தப் பாடல் முடிந்தது வேண்டுமானால் - தேவி சொன்ன பாட்டில் என்றும் சொல்லிக் கொண்டிருந்தான்!

    குழந்தைகள் பெற்றோரிடம் வந்து, "அம்மா, எங்களை சண்டையில் விட்டுத் தரச் சொன்னியே, இப்ப நீ விட்டுத் தாம்மா! அப்பா, நீயும் தான்ப்பா" என்று கேட்க, தேவி "விட்டுத் தரதில ஃபிஃப்டி-ஃபிஃப்டி வேணாமா?" என்று சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர, சண்டை ஒருவழியாக ஓய்ந்தது.

     தேவி அடுத்த நாள் ராஜா, குழந்தைகள் கிளம்பி அலுவலகம், பள்ளி என்று சென்றபின் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கணிணியில் வலைத் தளங்களில் தங்கள் பிரச்னைக்குரிய பாடல்கள் பற்றியத் தகவல்களைத் தேட ஆரம்பித்தாள்.

     1939-ல் வெளியான 'திருநீலகண்டர்' படத்தில் M K தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே". இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறாக இருந்தது.

     இசை மேதை திரு G.ராமனாதன் அவர்கள் M K தியாகராஜ பாகவதரின் தீவிர அபிமானி. அவர் இந்தப் பாடலின் இசையில் கவரப்பட்டு, தான் இசையமைத்த M G R நடித்த மதுரைவீரன்(1956-ல் வெளியானது) படத்தில் இதே ட்யூனில் "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க" என்று TMSஐயும் ஜிக்கியையும் பாட வைத்தார்!

    தேவிக்குத் திகைப்பு - ஜெயித்தது யார், - இருவரும் ஆளுக்கு ஒரு பாடல் - அவரவருக்குத் தெரிந்ததைச் சொன்னோம், இருவரும் சரி!, ஜெயிச்சதிலயும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!! ராஜாவுக்குக் கைப்பேசியில் விவரத்தைச் சொல்ல, ராஜா, "அப்போ, நான் ஆஃபிஸ் விட்டு வரும்போது ஸ்வீட் காரம் வாங்கி வரவா, ஜெயிச்சதுக்கும் தோத்ததுக்கும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!" என்றான்!!
குறிப்பு: பாடல்கள் இதோ:

1. 'மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி' படத்தில் இவர்களுக்குப் பிரச்னையான பாடல் 'கலகலக்கும் எங்க காலேஜ்..'(கடைசி வரிகள் சினிமாவில்):


2.  "தீனக் கருணாகரனே, நடராஜா, நீலகண்டனே" பாடல்:
3. "'ஏச்சுப் பொழக்கும் தொழிலே சரிதானா, எண்ணிப் பாருங்க" பாடலுக்கு: 


வீடியோவில் பார்க்க http://www.youtube.com/watch?v=VdDyCcros6g

டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு - பெயரிலேயே காரணம் இருக்கு!  உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி!
Thank You Graphics, Scraps and CommentsOrkut Scraps - Butterfly

25 comments:

suryajeeva said...

ஆஹா

MANO நாஞ்சில் மனோ said...

ஜெயிச்சதுக்கும் தோத்ததுக்கும் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!"//

ஹே ஹே ஹே ஹே டச்சிங் டச்சிங்...!

r.v.saravanan said...

வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுகள் ஃபிஃப்டி-ஃபிஃப்டி!!

மாய உலகம் said...

50 - 50 nifty யில் fiftyஐ அடைந்தது போல்.. அருமை

கோகுல் said...

ஸ்வீட் காரம் கிடைச்சுதா பிப்டி பிப்டி கிடைச்சுதா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

பகிர்வுக்குப்பாராட்டுக்கள்
50-50 இல்லாமல் முழுசாகவே.

Prabu Krishna said...

ஹா ஹா உங்கள் வீட்டுக் கதையில் 50-50 மாற்றங்களோடா?

ஸ்ரீராம். said...

இரண்டும் ஒரே ட்யூனில்தான் இருக்கின்றன. இது போலவே "சாமி சத்யபாமா கதவைத் திறவாய்" என்ற பாடலும் இதே போல எம் கே டியின் இன்னொரு பாடலான "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" பாடல் அப்படியே மறுபடி டி எம் எஸ்ஸினால் பாடப் பட்டுள்ளது. நல்ல பதிவு. உங்கள் பதிவு எம் கே டியின் பாடல்கள் சிலவற்றைக் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டது. அவர் பாடல் செலெக்ஷன் எல்லாமே ஒரு உருக்கமான ராகத் தேர்வில் இருக்குமோ என்று தோன்றும் வண்ணம் இருக்கும். "சிவபெருமான் கிருபை வேண்டும்", "உன்னையே அன்புடன் வாரியணைத்து.." இன்னொரு சாரமதி ராகப் பாடல் ஆரம்ப வரி 'சட்'டென நினைவுக்கு வரவில்லை.ஆ...உனையல்லால் ஒரு துரும்பசையுமோ ஓ...பாண்டு ரங்கா... நினைவுகளை திளைக்க வைத்ததற்கு நன்றி.

raji said...

என்னடா மீள்பதிவு வந்திருக்கேனு படிக்க ஆரம்பிக்கும்போதே நினைச்சேன்.விஷயம் இதுதானா?
வாழ்த்துக்கள் நூறு சதம் :-))

RAMVI said...

மீள் பதிவாயிருக்கேன்னு பார்த்தேன்.கடைசியில் விஷயம் தெரிந்தது. வாழ்த்துக்கள் மாதவி.

middleclassmadhavi said...

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி!

Madhavan Srinivasagopalan said...

ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

middleclassmadhavi said...

@ Madhavan Srinivasagopalan - Aamam, enakkum vijay tv-yil, 'athu ithu ethu' program pidikkum!
----- sangath thalaivi post enakku thanE?

செங்கோவி said...

ஆமாம் சகோ, இந்த இரண்டு பாடல்களையும் முன்பு இலங்கை வானொலியில் போடுவார்கள்..ஒரே மெட்டு..


நல்ல பகிர்வு.

அப்பாதுரை said...

பிடிச்சீங்களே ஒரு middleclass பிடி.

Madhavan Srinivasagopalan said...

உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்

புதுகைத் தென்றல் said...

50க்கு வாழ்த்துக்கள்

thirumathi bs sridhar said...

உங்க 50,50 க்கு வந்து 100 வது ஃபாளோயர் ஆகியிருக்கேன்.வாழ்த்துகள்.

middleclassmadhavi said...

வாழ்த்தியவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி!

@ thirumathi bs sridhar - உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி!

M.R said...

பகிர்வுக்கு பாராட்டு + நன்றி

பிஃப்டி பிஃப்டி

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அதானே இது மீள் பதிவா..இந்த பாட்டை நீங்களே முன்னே எழுதின மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்..:)

ஆயிஷா அபுல் said...

வாழ்த்துக்கள் மாதவி.

Prabu Krishna said...

அவ்வ்வ்வ் இந்த மூளைக்கு இன்னிக்குதான் இது புரிஞ்சது.

வாழ்த்துகள் அக்கா.

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு