என் மகன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறான். அவனுக்கு லேப்பில் போட்டுக் கொள்ள காக்கி சீருடை வேண்டும் என்று கேட்டான், அதுவும் அடுத்த திங்கட்கிழமைக்குள்! நகரின் ஒரு கோடியிலிருந்த புகழ்பெற்ற ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தோம். துணிகள் பிரிவுக்கு நாங்கள் போவது இதுவே முதல் முறை. கூட்டம் குறைவாகவே இருந்தது. காக்கி டிரஸ் கிடைக்குமா என்று விசாரிக்க, முதல் மாடிக்கு அனுப்பப்பட்டோம்!
காக்கி உடை வாங்குவதுவதும் எங்களுக்கு இது தான் முதல் முறை. . அங்காடியின் விற்பனையாளர் எங்களிடம் ஒரு துணியைக் காண்பித்தார். அது மிகவும் மொத்தமாக - அதாவது தடியாக இருப்பது போல எனக்குத் தோன்றியது. "இது பாண்ட் துணியா, ஷர்ட்டுக்கு?" என்று கேட்க, அவரோ, "இதிலேயே தான் ஷர்ட்டும் தைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். ஏற்கெனவே என் மகன் விதவிதமான வொர்க் ஷாப்பில் கஷ்டப்படுவானே என்று மனம் வருந்திய எனக்கு, இவ்வளவு கெட்டியான ஆடையில் வியர்த்துக் கொட்டுமே என்று தோன்றியது. வேறு துணியும் ஸ்டாக் இல்லை என்று சொன்ன அவர், "மேலே ரெடிமேட் ஆடை இருக்கு, அங்கே கேட்டுப் பாருங்கள் -பாண்ட், ஷர்ட் இரண்டும் கிடைக்கலாம்! இல்லை, ஷர்ட் மட்டும் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், பாண்ட்டுக்கு வேண்டுமானால் இந்தத் துணி வாங்கித் தைத்துக் கொள்ளலாம்" என்று ஐடியாவும் கொடுத்தார்!
பிறகென்ன - அடுத்த மாடிதான்! - அங்கே இருபது வயதுக்குள்ளே இருந்த ஒரு விற்பனையாளர், எங்கள் தேவையைக் கேட்க, என் மகன், "காக்கி டிரஸ் - வொர்க் ஷாப்புக்கு..." என்று இழுத்தான். விற்பனையாளர் முதலில் ரெடிமேட் பாண்ட்டை எடுத்துக் காண்பிக்க ஆரம்பித்தார். பாண்ட்டில் டிசைன் போட்டிருக்க, என் மகனோ, "இதுல டிசைனெல்லாம் போட்டிருக்கக் கூடாது, காலேஜில் திட்டுவாங்க!" என்றான். நானோ, நான் சொன்ன போதெல்லாம் கேட்காத மகன், கல்லூரிக்காவது பயப்படுகிறானே என்று வாய்விட்டு வியந்து கொண்டிருந்தேன். தேவையானது இல்லையென்று தெரிந்த பின், "ஷர்ட் காண்பியுங்கள், பாண்ட் தைத்துக் கொள்கிறோம்" என்று விற்பனையாளரிடம் சொல்ல, அவர், அக்கம்பக்கம் பார்த்து, பின் தயங்கியபடி, "இங்கு நீங்கள் கேட்கும் காக்கி ஷர்ட் இல்லை; நான் ஒன்று சொல்கிறேன். நகரின் மையப் பகுதியில் சரஸ்வதி என்ற பெரிய ஜவுளிக்கடை இருக்கிறது. அதில் கேட்டுப் பாருங்கள்!" என்று சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு லிஃப்ட் பக்கம் நகர்ந்தோம்.
பின்னாலேயே அந்த விற்பனையாளர் வந்தார்
- என்னவென்று பார்க்க, அவர் என் மகனிடம், "தம்பி, நீ தப்பாக நினைக்கவில்லையென்றால், என் காக்கி ஷர்ட் இருக்கிறது; நான் பக்கத்தில் உள்ள சிவா பாலிடெக்னிக்கில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து, முதல் வருடத்திலேயே படிப்பை விட்டு விட்டேன். ஒரே ஒரு முறை தான் அந்த ஷர்ட்டைப் போட்டிருப்பேன். பாண்ட்டை பிறகு அடிக்கடி போட்டு பழசாக்கி விட்டேன்! அந்த ஷர்ட்டை வேண்டுமானால் நாளை கொண்டு வந்து தரட்டுமா?" என்று கேட்டார்!
என் மகன் என் முகத்தைப் பார்த்து, தயங்கிய குரலில் "அம்மா.. என்ன சொல்றது?" என்று கேட்டான். நான் என் கலங்கிய கண்களை மறைத்து, ஒரு வலுக்கட்டாயப் புன்னகையுடன், "வேண்டாம்ப்பா, ரொம்ப தாங்க்ஸ். எப்படியும் இவனுக்கு பாண்ட் வாங்கியாகணும். அதனோட சேர்த்து வாங்கிக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு மகனுடன் கடையை விட்டு வெளியே வந்தேன்.
"ஏன்மா அழறே?" என்றான் மகன். "அந்த விற்பனையாளருக்கு என்ன பிரச்னையோ, படிப்பை விட்டு விட்டு இந்த உத்யோகத்துக்கு வந்திருக்கிறாரே - உன்னை விட இரண்டு மூன்று வயது தான் ஜாஸ்தியாயிருக்கும்! நம்மை முன்ன பின்ன தெரியாது.. ஆனால் இப்படிக் கேட்க வேண்டும்னு தோன்றி கேட்டார் பாரு..." என்று சொன்னேன் நான்.
பேசிக் கொண்டே ஆட்டோ ஸ்டாண்ட் தேடி நடந்து கொண்டிருந்தோம், சரஸ்வதி ஜவுளிக்கடல் செல்ல. பேச்சைத் தொடர்ந்த என் மகனோ, "ஏம்மா, அவர் தன் சட்டையைக் கொடுத்து ஒரு விலையைக் கூடக் கேட்டிருக்கலாம் இல்லையா, நீ ரொம்பத் தான் ஃபீல் பண்றே?!" என்று சொன்னான். "அப்படியே கேட்டிருந்தாலும், ஒரு ப்ராபளத்தைப் புரிந்து கொண்டு, அடுத்தவர் பக்கத்திலிருந்தும் யோசித்து ஒரு முடிவையும் சொன்னாரே, அந்தப் பையன் கட்டாயமாக முன்னுக்கு வருவான், என் ப்ரார்த்தனைகள் அவனுக்குத் துணையாயிருக்கும்" என்று சொன்னேன் நான். "என்னம்மா, என்னை எல்லாருக்கும் மரியாதை கொடுக்கச் சொல்லுவாய், நீ திடீர்னு மரியாதை இல்லாம பேசறே" என்று மகன் வியக்க, "ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள்ளையையும் தன் பிள்ளையாக அவளால் பார்க்க முடியும்!" என்று பதில் சொன்னேன்! புரிந்ததோ இல்லையோ!! ஆட்டோவில் ஏறினோம் சரஸ்வதி ஜவுளிக்கடல் செல்ல!!
25 comments:
Sentimental touch.
கடவுள் துணை இருப்பார்
// "ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள்ளையையும் தன் பிள்ளையாக அவளால் பார்க்க முடியும்!//
ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு மாதவி
வாழ்த்துக்கள்.
அண்மையில் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைக்கு எம்.பில், எம்.பி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற செய்தியை வாசித்தபோது ஏற்பட்ட சங்கடம் இந்தப் புனைவை வாசிக்கும்போதும் ஏற்பட்டது. நன்று!
சில நேரங்களில் நாம் இது போன்ற தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு.
படிப்பைப்பாதியில் நிறுத்திய அவனுக்கு என்னென்ன பிரச்சனைகளோ? குடும்பச்ச்சூழ்நிலை எப்படியோ? பொருளாதார நிலமைகள் எப்படியோ? பாவம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
அவன் உண்மையாகவே உங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நேரத்தில் உதவ வேண்டும் என்றும் கூட நினைத்திருக்கலாம்.
உங்கள் தாயுள்ளம் அவன் மேல் இரக்கப்பட்டதும் அவனைப்பற்றிய சிந்தனையிலேயே இருந்ததும் கூட மிகவும் யதார்த்தமானதே.
திறமையிருந்தும் வாய்ப்பும், வசதியும், ஊக்குவிக்கவும் ஆதரவு தரவும் ஆளின்றி, படிப்பில் ஆசையிருந்தும் படிப்பைத்தொடரமுடியாமல், இதுபோல இளைஞர்கள் நம் நாட்டில் பலபேர் இருக்கிறார்கள்.
1966 to 1969 இல்,நான் கூட அந்தக் கடைப் பையனின் நிலையில் இருந்தவன் தான் என்பதால் அவன் மேல் எனக்கும் ஒரு பச்சாதபம் ஏற்படுகிறது.
நல்ல அனுபவப் பதிவு. பாராட்டுக்கள்.
அந்தப் பையனை நினைச்சா கஷ்டமா இருக்கு.
உங்களை நினைச்சா நெகிழ்ச்சியா இருக்குக்கா.
நல்ல பகிர்வு.
பொருத்தமான தலைப்புதான். இந்த மாதிரிக் கடைகளில் எத்தனை இப்படி பிள்ளைகளோ...
நல்ல கதை ..அப்புறம் அங்கேயாவது காக்கி சட்டை கிடைத்ததா..?
நெகிழவைத்த பகிர்வு.
//"ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள்ளையையும் தன் பிள்ளையாக அவளால் பார்க்க முடியும்!" என்று பதில் சொன்னேன்//
ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.. நெகிழ்ச்சியா இருந்தது.
அங்காடித்தெரு படம் போல உங்கள் பதிவும் நெகிழ்ச்சி...
@ Madhavan Srinivasagopalan - //Sentimental touch// - இது உண்மைச் சம்பவமே!! நன்றி
@ HajasreeN - //கடவுள் துணை இருப்பார் // என் வலைப்பூவில் முதல் கமெண்ட்? - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
@ RAMVI - //ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு மாதவி
வாழ்த்துக்கள். // நன்றி!
@ சேட்டைக்காரன் - //அண்மையில் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைக்கு எம்.பில், எம்.பி.ஏ. படித்தவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்ற செய்தியை வாசித்தபோது ஏற்பட்ட சங்கடம் இந்தப் புனைவை வாசிக்கும்போதும் ஏற்பட்டது. நன்று! // ஒரே சமயத்தில் கடவுளை நோவதும், நன்றி சொல்வதும் இந்த மாதிரி பொழுதுகளில் தான்!
@ வை.கோபாலகிருஷ்ணன் - //1966 to 1969 இல்,நான் கூட அந்தக் கடைப் பையனின் நிலையில் இருந்தவன் தான் என்பதால் அவன் மேல் எனக்கும் ஒரு பச்சாதபம் ஏற்படுகிறது.
நல்ல அனுபவப் பதிவு. பாராட்டுக்கள். //
ஐயா, அந்தப் பையரும் தங்களைப் போல வாழ்வில் சாதிப்பாராக!!
@ செங்கோவி - //அந்தப் பையனை நினைச்சா கஷ்டமா இருக்கு.
உங்களை நினைச்சா நெகிழ்ச்சியா இருக்குக்கா.
நல்ல பகிர்வு. // நன்றி செங்கோவி
@ ஸ்ரீராம் - /பொருத்தமான தலைப்புதான். இந்த மாதிரிக் கடைகளில் எத்தனை இப்படி பிள்ளைகளோ... / ஆம்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ கோவை நேரம் - //அப்புறம் அங்கேயாவது காக்கி சட்டை கிடைத்ததா..? // ஓ, வாழ்வின் ஆச்சரியங்களில் சில அன்று கிடைக்கப் பெற்றன. புதுக் கடையின் விற்பனையாளர், சரியான அளவு மற்றும் தைக்க வேண்டிய முறை எல்லாம் அவரே சொன்னார்; நேரே தையற்காரரிடம் போன போது, எங்களைப் பார்த்தவுடனே, போன வருடம் வரை ஸ்கூல் யூனிஃபார்மை என் (மூத்த) மகனுக்குத் தைத்த அவர், 'என்ன காக்கி யூனிஃபார்மா' என்று கேட்டார்!! குறித்த நேரத்தில் தைத்தும் கொடுத்து விட்டார்!!
@ இராஜராஜேஸ்வரி -
@ அப்பாவி தங்கமணி -
@ அமைதிச் சாரல் -
@ Reverie -
உங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றிகள் பல!!
நைஸ்
ஒரு தாயின் குணாதிசயமே இது தான், எந்தப் பிள்ளையையும் தன் பிள்ளையாக அவளால் பார்க்க முடியும்!
அருமையான கருத்துக்கள்.
வாழ்த்துக்கள்.
நல்ல மனம் வாழும்... அதுவும் தாய் மனம் அருமை
அருமை. என் நண்பர்கள், ஊர்ப் பையன்கள் நிறைய பேர் இது போல உள்ளனர். அவர்கள் நினைவுதான் வருகிறது.
குறிப்பாக நீங்கள் கூறியுள்ள கடையின் (சரஸ்வதி) பெயரில் தொடங்கும் கடையில் நிறைய பேர் நான் அறிந்தவர்கள், உறவினர்கள்.
தாய் மனசு அருமை.
அந்தக் கடைக்காரருக்கும் அதே மனசு..
நல்ல மனசுக்காரர்களைப் பார்க்க, படிக்க நமக்குள்ளும் ஊற்றெடுக்கிறது..
Post a Comment