குழந்தைகளின் தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்க பெற்றோர் என்ன செய்யலாம் என்ற என் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளேன். குழந்தைகள் என்று இந்தப் பதிவில் சொல்லியிருப்பது சிறிய குழந்தைகளுக்கு மட்டுமன்றி வளர்ந்த குழந்தைகளுக்கும் பொருந்தும்.
பள்ளிகளின் தேர்வு முடிவுகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. பொதுத் தேர்வுகளின் முடிவு வரும் தேதியும் சொல்லப்பட்டு விட்டது. குழந்தைகள் தேர்வு முடிவினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இது ஏன்? பெற்றோர் தாம் நினைத்து செய்ய இயலாமல் போனதை, தம் குழந்தைகள் செய்ய வேண்டும் என நினைப்பது ஒரு முக்கிய காரணம். நான் பட்டப்படிப்பு முடித்தவுடன் (IAS தேர்வு முடிக்கும்வரை!) முதுகலைப் பட்டமும் அதற்கு மேலும் பெற்று ஆசிரியை ஆக விரும்பினேன். படிக்க நினைத்ததை படிக்க முடியாமல் போனது காலத்தின் கட்டாயம். (சிவில் சர்வீஸஸ் தேர்விலும் வராமல் வேறு பணியில் ஈடுபட்டிருப்பது ஜனங்களின் நல்ல காலம்!) இதற்காக என் குழந்தைகள் மேல் இந்த ஆசைகளைத் திணிப்பது நியாயமா? அவர்களுக்கு எந்தத் துறையில் (படிப்பிலோ விளையாட்டிலோ) எந்த ஸப்ஜெக்டில் ஈடுபாடு உள்ளதோ அதில் அவர்களை வளர்த்து விட்டு அவனியில் முந்தியிருப்பச் செய்வது தான் பெற்றோரின் கடமை. இதை விட்டு விட்டு மதிப்பெண் குறையக் கூடாது, ரேங்க்/கிரேட் குறையக் கூடாது என்று குழந்தைகளை வற்புறுத்தினால்... மனம் நொந்து தற்கொலை முடிவை அவர்கள் தேடிக் கொள்கிறார்கள்.
தற்கொலை என்ற எண்ணம் வருவதற்கு தொலைக்காட்சி (ந்யூஸ் சானல் உட்பட), செய்தித் தாள்கள், சில வலைத்தளங்கள், ஏன் சில கம்ப்யூட்டர் கேம்ஸ் - எல்லாமே தூண்டுகோலாய் இருக்கின்றன. குழந்தைகள் பார்க்கும்/படிக்கும் எல்லாவற்றையும் நாம் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. மிகுந்த கட்டுப்பாடு கூடவும் கூடாது - அது வெறுப்பைத் தான் திணிக்கும். குழந்தைகள் கூடவே பெரியவர்கள் உட்கார்ந்து நேரம் செலவிடுவதும், செய்திகள்/நிகழ்ச்சிகள் பற்றி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இயன்றவரை உண்மையான பதிலைச் சொல்வதும் நல்லது. அவர்களின் கவலைகளைப் புரிந்து கொண்டு அதற்கு தீர்வைச் சொன்னால் - என் அம்மா, அப்பாவைப் போல் உண்டா என்று நம் பேரக் குழந்தைகளிட்ம் கட்டாயம் சொல்வார்கள்! Good touch, bad touch பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்லும் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் செவிமடுப்பது அவசியம்.
தற்கொலைகளுக்கு அடுத்த காரணமாக இருப்பது காதல். டீனேஜில் நுழையும் குழந்தைகளிடம் இது பற்றி பெற்றோர்கள் பேச வேண்டியது தற்போதைய காலகட்டத்தில் மிக இன்றியமையாதது. காதலுக்கும் infatuationக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.
வளர்ந்து விட்ட குழந்தையா, அவர் காதலில் உண்மையும் அவர் தேர்ந்தெடுத்த துணை நல்லவராகவும் இருக்கிறாரா - காதலுக்கு பச்சைக் கொடி காட்டினால் தான் என்ன? அந்தத் துணை நல்லவர் இல்லையென்றால் அதை மகனோ, மகளோ புரிந்து கொள்ளும்படி எடுத்துரைக்க வேண்டியதும் பெற்றோரின் கடமை தான்!
எல்லாவற்றிற்கும் மேலே நம் குழந்தைகளின் நல்வாழ்வை விட - அவர்கள் வாங்கும் மதிப்பெண்ணோ, காதல் திருமணத்தால் பாதிக்கப்படுமோ என்று நினைக்கும் குடும்ப கௌரவமோ முக்கியமில்லை என பெற்றோர் தெளிவதுடன், இந்த எண்ணத்தை குழந்தைகளுக்கும் உணர்த்த வேண்டும்.
இவை தவிர கடன் தொல்லை, குடி - குடும்பத் தகராறு என்றும் தற்கொலைகளுக்கு காரணங்கள் இருக்கின்றன. இவை பெற்றோரின் பிரச்னைகள். இவற்றை பெற்றோர் தன்னம்பிக்கையுடன் தாமே களைய வேண்டும்- குழந்தைப் பருவத்தை குழந்தையாகவே கழிக்க விடுங்கள்!
என் வாழ்வில் நான் சந்தித்த அனுபவத்தைச் சொல்கிறேன். என் இளைய மகனுக்கு அப்போது 3 வயதிற்குள் தான். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் என் அம்மா அப்போது வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், என் உறவினர் ஒருவர் என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள என் வீட்டிலேயே வந்து தங்கியிருந்தார். அவருக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது புது அனுபவம். மூத்த மகன் பள்ளி சென்று விடுவான்; இளையவனைப் பார்த்துக் கொள்வது தான் கடினம். நானும் என் கணவரும் பணிக்குச் செல்லும் வேளைகளில் A.R.Rahman பாடல்கள், கார்ட்டூன் என்று பொழுதைக் கழித்த அவன், ஒரு நாள் நான் வீடு வந்தவுடன் "நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்றான். அதிர்ந்து போனேன் நான்! வெளிக்காட்டிக் கொள்ளாமல், "அப்படியா, நானும் துணைக்கு வருகிறேன்" என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு எங்கே போக வேண்டுமோ அங்கே கூட்டிப் போகச் சொன்னேன். அவன் தெருவைக் கடந்து எதிரே இருந்த வெட்டவெளிக்கு கூட்டிப் போனான். "இப்போ என்ன செய்யணும்?" என்று கேட்டேன். "ஒரு கல்லை எடுத்து நம் தலையில் நாமே போட்டுக் கொள்ளணும்" என்றான்!! எனக்கு சிரிப்பு ஒருபுறம், நிம்மதி ஒரு புறம். "எல்லாம் சின்னக் கல்லாயிருக்கு, அழுக்காவும் இருக்கு; வா, வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் நாளைக்கு வரலாம்" என்று சொல்லி சமாளித்தேன். Enquiry commission நடத்தியதில் சாட்சி சொன்ன மூத்த மகன், சின்னவன் பார்த்த 'the mask' கார்ட்டூனில் அந்த ஹீரோ பேசும் வசனம் அது எனத் தெளிவுபடுத்த, இது பற்றி தனி வகுப்பு என் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது!!
21 comments:
நியாயமான காலத்திற்கேற்ற நல்லதொரு பதிவு.
நீங்கள் உங்கள் சின்னக்குழந்தையைக் கையாண்டு சமாளித்து, உண்மைக்காரணத்தை கண்டுபிடித்த விதம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.
மிகவும் தேவையான, தவிர்க்க முடியாத பதிவு நானே போடலாம்னு இருந்தேன்.............நீங்க முந்திடீங்க....................வாழ்த்துக்கள்.
எல்லாவற்றிற்கும் மேலே நம் குழந்தைகளின் நல்வாழ்வை விட - அவர்கள் வாங்கும் மதிப்பெண்ணோ, காதல் திருமணத்தால் பாதிக்கப்படுமோ என்று நினைக்கும் குடும்ப கௌரவமோ முக்கியமில்லை என பெற்றோர் தெளிவதுடன், இந்த எண்ணத்தை குழந்தைகளுக்கும் உணர்த்த வேண்டும்.
...rightly said! Please highlight this message in red color, so that the point will not be missed.
ஒரு கார்ட்டூன் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிற அவலத்தை என்னவென்று சொல்வது.
இது பற்றி தனி வகுப்பு என் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது!!
அருமையாய் சூழ்நிலையைக் கையாண்ட்த்ற்குப் பாராட்டுக்கள்.
@ வை.கோபாலகிருஷ்ணன் - பாராட்டுக்கு நன்றி!
@ Abu Sana - இந்த வலைப்பூவிற்கு முதல் வரவு - நல்வரவாகுக! நீங்களும் பதிவிடுங்க! பெரிய டாபிக் - தேவையான சப்ஜெக்ட். நன்றி
@ Chitra -//Please highlight this message in red color, so that the point will not be missed. // செய்துடலாம்! நன்றி!
@ தமிழ் உதயம் - //ஒரு கார்ட்டூன் நம் வாழ்க்கையை தீர்மானிக்கிற அவலத்தை என்னவென்று சொல்வது.// ஆமாங்க, அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் கூடப் புரியாத வயசில்...!! பெற்றோர்/பெரியோரின் கவனிப்பு அவசியம்!!
@ இராஜராஜேஸ்வரி - பாராட்டுக்கு நன்றி!
எல்லோரும் வாசிக்க வேண்டிய பதிவு இது.....
மிகவும் தேவையான தகவல். இப்பல்லாம் குழந்தைங்க பார்க்கற கார்ட்டூன்களிலும் எக்கச்சக்க வன்முறை, எதிர்மறை எண்ணங்களும் கூடுதல் :-(
அவசியம் படிக்கவேண்டிய நல்ல பதிவு
மிகவும் தேவையான பதிவு..கார்ட்டூன்களில் வரும் வன்முறையை அவர்கள் தவிர்க்கலாம்!
மிகவும் தேவையான பதிவு. தற்கொலை சுயப்பச்சாதாபத்தில் விளைவது. ஆனாலும் மன்னிக்க முடியாததும் கூட. அழகாக் காரணங்களை விளக்கி இருக்கீங்க. +ve ஓட்டு போட்டாச்சு!!
அச்சோ, //சின்னவன் பார்த்த 'the mask' கார்ட்டூனில் அந்த ஹீரோ பேசும் வசனம்// பையன் அப்படி சொன்னவுடன், டென்ஷனாகி இருக்கும் இல்ல?
//Enquiry commission // பயபுள்ளங்க்களை நல்லா வளர்க்கிறாங்கப்பா, போலீஸ் ஸ்டைல்-ல..:-) அமெரிக்காவில குழந்தைகள் பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளில் இவை இருக்காது. "ஓடிப் போகப் போறேன்" என்று எங்க சின்ன வாண்டு சொல்லிச்சா, "உனக்கு அமெரிக்காவில யாரு இட்லி செஞ்சு போடுவாங்க, அதுனால நீ எப்ப ஓடிப் போகணும்னாலும் நானும் கூடவே ஓடி வரேன்"ன்னு சொல்லி வச்சிருக்கேன்...
Well said. First, parents have to change.
@ MANO நாஞ்சில் மனோ - நன்றி
@ அமைதிச் சாரல் - குழந்தைகள் விளையாடும் கணிணி கேம்ஸ் பார்த்திருக்கிறீர்களா? மனிதமே மாய்ந்து விடுமோ என்று பயமாய் இருக்கும்.
@ கே.ஆர். விஜயன் - நன்றி
@ செங்கோவி - //கார்ட்டூன்களில் வரும் வன்முறையை அவர்கள் தவிர்க்கலாம்! // கூடவே உட்கார்ந்து இது மாதிரி நடக்காது, ஏன் என்ற விளக்கமும் கொடுக்க வேண்டியது தான்!
@ கெக்கே பிக்குணி - நன்றி!
//"உனக்கு அமெரிக்காவில யாரு இட்லி செஞ்சு போடுவாங்க, அதுனால நீ எப்ப ஓடிப் போகணும்னாலும் நானும் கூடவே ஓடி வரேன்"ன்னு சொல்லி வச்சிருக்கேன்... // :-))
@ vanathy - //First, parents have to change. // - well said!!
பயனுள்ள சமூக அக்கறையுள்ள நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@ Ramani - வருகைக்கும் கருத்துரை தந்து ஊக்கப் படுத்துவதற்கும் நன்றி
Post a Comment