Tuesday, December 6, 2016

புரட்சித் தலைவிக்கு அஞ்சலி!


நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அபிமானியும் இல்லை. அரசியலில் அவ்வளவு ஆர்வமும் இல்லை. ஆனாலும் என் மனதில் சோகத்தைக் கவிய வைத்தது இந்த மரணம்!!
புரட்சித் தலைவி என்ற பெயரை முதன்முதலில் கேட்ட போது என்ன புரட்சி செய்து விட்டு இந்தப் பட்டம் என்றே நினைத்தேன். புரட்சித் தலைவர் பட்டத்துக்குச் சமமாகக் கொடுக்கப்பட்டதே எனவும் நினைத்தேன்.  ஆனாலும் இந்தப் பட்டத்துக்கு தகுதியானவர் என்று தன் பல்வேறு தைரியமான விரைவான முடிவுகளாலும், அணுகுமுறையாலும், நீரூபித்திருக்கிறார்.  இனி ஒரு தலைவி இப்படி இருப்பாரா என்று சந்தேகம் தான்!  
கட்சி பாகுபாடின்றி அனைவராலும் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டப்பட்டவர். அரசியல் எல்லைகளைத் தாண்டி இன்று அனைவரும் இரங்கல் தெரிவிக்கும் போது மிக நெகிழ்வாக உணர்கிறேன் - அந்த வார்த்தைகளின் பின்புலத்தை ஆராய வேண்டாத அளவு! வரலாற்றில் சுவடு பதித்த ஒரு நபர் மறைந்தார்.  
குறைகளாகத் தெரிந்த பலதும் இப்போது சொல்வது சரியாய் இராது. இருந்தாலும், .. பதவியில் இருந்த போது அவர் காலில் மற்றவர் விழுந்ததும் கூனிக் குறுகி வணங்கியதும் தம் அரசாங்கம் செய்தது என்பதற்கு பதில் 'நான் செய்தேன்' என்றதும் அபசுரமாய்ப் பட்டது. ஆனாலும் இத்தனை பேரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவருக்கு இந்தக் கவசம் தேவைப்பட்டிருக்கலாம்.
இரும்பு மனிதராக இருந்து கடைசியில் எமனுடன் போராடி மீண்டும் வந்து திரும்பவும் சென்றார்!!  நாட்டின் முதல் குடிமகன் முதல் அனைவரையும் தமக்கு மரியாதை செய்ய வைத்த சரித்திர நாயகிக்கு ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் பெண்மணியின் வணக்கம்.  அஞ்சலி.

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கொஞ்சமும் சந்தேகமே இல்லாமல் சாதனைப் பெண்மணியேதான்.

தமிழக அரசியலில் இவருக்கு எதிராக ஆயிரம் பிரச்சனைகளும், அச்சுறுத்தல்களும், சோதனைகளும், வேதனைகளும் வந்திருப்பினும், ஓர் மிகச்சிறந்த தைர்யமுள்ள பெண் சிங்கமாகத் திகழ்ந்து, தனிப்பட்ட முறையில் தானாகவே ஆணித்தரமான முடிவுகள் எடுத்து, அவற்றிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல், தன் கட்சிக்காரர்கள் + எதிரிகள் என அனைவருக்குமே, கடைசிவரை ஓர் சிம்ம சொப்பணமாக விளங்கிய அற்புதமான தலைவி என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

அவரின் இந்த திடீர் மறைவு, இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்துக்கும், அவருடைய கட்சிக்கும், இங்கு வாழும் ஏழை எளிய மக்களுக்கும் ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.

மேலும் மேலும் சிகிச்சை என்ற பெயரில் சித்திரவதை பட்டுக்கொண்டே இருக்காமல், கெளரவமாகவும் சீக்கரமாகவும் இறைவன் திருவடிகளை அடைந்து விட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

இந்தியாவின் மூத்த குடிமகனான குடியரசுத்தலைவர், பிரதம மந்திரி, மத்திய அமைச்சர்கள், இருபதுக்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள், பல்வேறு எதிர் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் முதலியோர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்துள்ளதும், கோடானுகோடி மக்கள், வெள்ளம் போல சென்னையின் தெருக்களில் கூடியிருப்பதும் .... இதுபோல யாருக்கு நடக்கும்?

‘புரட்சித்தலைவி’ என்பது மிகவும் பொருத்தமான பெயர் மட்டுமே.

அவருக்கு என் இரங்கலைத்தெரிவித்துக்கொண்டு, அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் தன்னைப் பற்றி பேசுமளவு சாதித்த இரும்புப்பெண்மணி.

சிவகுமாரன் said...

இரும்புப் பெண்மணிக்கு இதய அஞ்சலி

ஸ்ரீராம். said...

இப்போது நடப்பவைகளை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.