Friday, December 23, 2016

வெண்டைக்காய் புளி குத்தின கறி!

வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் 
வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்றால் பொடியாக நறுக்கி ஃப்ரை செய்தால் என் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்டஃப்ட் கறி என்றால் என் கணவருக்கும் பெரிய பையனுக்கும் மிகவும் பிடிக்கும். நேரம் இருப்பதைப் பொறுத்தும், வெண்டைக்காயின் தன்மையைப் பொறுத்தும் இன்ன மாதிரி செய்யலாம் என்று முடிவு செய்வேன்.
என் மாமியார் மிக அருமையாக சமைப்பார். ரசம் வைப்பதன் பேசிக் எல்லாம் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். என் கணவர் தம் அம்மா செய்யும் வெண்டைக்காய் புளி குத்தின (விட்ட) கறிமேது பற்றி சிலாகித்து (சொல்லாடலுக்கு நன்றி - கலைஞரின் ராமானுஜர்!!)  சொல்ல, அவரிடம் இந்தச் செய்முறையைக் கற்றுக் கொண்டேன். சாதாரணமாக வெண்டைக்காய் வதக்கும் போது, அளவு கம்மியாகி விடும்.  இந்த முறையில் அளவு அவ்வளவு குறைவதில்லை. இம்முறையில் புளித் தண்ணீரில் வெண்டைக்காயை வேக விட்டு செய்வதால் இந்தப் பெயர்.   மற்ற  வெண்டை கறிகளுக்கு நான் சிறிதளவு ஆம்சூர் பவுடர் போடுவேன். 
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் -  அரை கிலோ அல்லது தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு
வத்தல் மிளகாய் - 6
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
பெருங்காயத் தூள் - சிறிது
எண்ணை - தாளிக்க
மற்றபடி அடுப்பு, வாணலி, கரண்டி இத்யாதி.....
செய்முறை: வெண்டைக்காயை அலம்பி துணியில் துடைத்து வைத்துக் கொள்ளவும்.   ஒரு சின்னக் கொசுவத்தி: சின்ன வயதில், என் அப்பா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டிருந்த ஒரு முறை, என் அம்மா அப்பாவுக்குத் துணையாக அங்கேயே தங்கி இருந்தார்.  வெண்டைக்காய் தான் இருந்தது வீட்டில் சமைப்பதற்கு. அதற்கு முன் அம்மா என்னை சமையல் அறைக்குள் அனுமதித்ததே இல்லை - சமையலறை ஒரு ஆள் இருக்கும் அளவு தான் இருக்கும் என்ற முக்கியமான காரணமும் இருந்தது!! -  அம்மா என்னிடம் கொடுக்கும் காய்கறியை நறுக்கித் தரும் அளவு தான் அனுமதிக்கப் பட்டிருந்தேன் - இதனால் அப்போது சமைக்கும் போது, வெண்டைக்காயை நறுக்கிய பின் அலம்பி - இன்னமும் எனக்கு அந்த பிசினாக வந்த காட்சியை மறக்க முடியவில்லை!! கூட்டு கம் கறியாக அது பின்னர் பரிமளித்தது!! ஹாஸ்பிடலில் இருந்த அப்பாவுக்கு சாப்பிட ஈஸியாக இருந்தது!!!!

அதனால், வெண்டைக்காயை நன்றாக அலம்பி, நல்ல துணியால் ஈரம் போக துடைத்துக் கொள்ளவும்.  இந்த செய்முறையில் சிறிது ஈரம் இருந்தாலும் நோ ப்ராப்ளம்.


புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பின், வடிகட்டி புளித் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பு ஏற்றி, வாணலியை வைத்து, எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும். வெண்டைக்காயையும் புளித் தண்ணீரையும் விட்டுக் கொதிக்க விடவும். மஞ்சள் பொடி, பெருங்காயத் தூள் இப்போது போட்டுக் கொள்ளலாம்.

முக்கால் பதம் வெண்டை வெந்தவுடன் அடுப்பை அணைத்து, காயை வடிகட்டிக் கொள்ளவும்.
புளித் தண்ணீரை ஒட்ட வடிகட்டியபின், மீண்டும் ஏற்றிய அடுப்பில் - வாணலியில் இதை இட்டு, தேவையான உப்பும் போட்டு வதக்கவும்.  நான் இந்த நேரத்தில் மிளகாய் வற்றலை எடுத்து விடுவேன், இல்லையென்றால் சாப்பிடும் போது கடிபடும். (பிடித்தவர்கள் மிளகாயோடு பரிமாறலாம்) வெண்டைக்காய் பதமாக வெந்த பின் அடுப்பை அணைத்து விடலாம்.

சூப்பர் லேசான புளிப்பு சுவையோடு கூடிய வெண்டைக்காய் புளி குத்தின கறி தயார்!!  

என் மாமியாரிடம் கற்றுக் கொண்டபின் முதல் முதலாக சமைத்த போது,  வேக வைத்த பின்  கரண்டியில் சிறிது எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். அவர் 'நாங்கள்ளாம் மஞ்சள் பொடியும் பெருங்காயமும் போடுவோம்' என்று சொன்ன பின் அதையும் சேர்த்தேன்!!  இப்போது எழுதின பிறகும் அதை முதலில் விட்டு விட்டு பின்னர் தான் சேர்த்தேன். :-))  மாமியார் தாம் கற்றுக் கொடுத்தது என்பதை மறக்காமல் அவருக்கு உடனே நினைவு படுத்தி விட்டேன் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன!!

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த முறையும் நல்லாயிருக்கு...

கொடுத்து வைத்த மாமியார்...! வாழ்த்துகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெண்டைக்காயில் புளிக்குத்தின கறி இதுவரை செய்ததோ சாப்பிட்டது இல்லை. ஒரு நாள் செய்து பார்க்கணும்.

பகிர்வுக்கும், செய்முறை குறிப்புகளுக்கும் நன்றிகள்.

middleclassmadhavi said...

@ திண்டுக்கல் தனபாலன் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!! வாழ்த்துகளுக்கும்....

middleclassmadhavi said...

@ வை. கோபாலகிருஷ்ணன் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! செய்து பாருங்கள், நன்றாகவே இருக்கும் :-))

ஸ்ரீராம். said...

வெண்டைக்காயை அரைவேக்காட்டில் கறி செய்து சாப்பிடப் பிடிக்கும். இப்படியும் செய்து பார்க்கிறேன்.

இராய செல்லப்பா said...

வெண்டைக்காயை விடுங்கள்; "சில மனித மனங்களின் வன்மத்தையும் வக்ரத்தையும் போட்டு வந்த வேஷத்தையும், பல மனிதர்களின் சக மனித நேயத்தையும்..." பற்றி எப்போது எழுதத் தொடங்குவீர்கள்?

- இராய செல்லப்பா நியூஜெர்சி
(http://ChellappaTamilDiary.blogspot.com)

middleclassmadhavi said...

@ ஸ்ரீராம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. செய்து பார்த்தபின் எப்படி இருந்தது எனச் சொல்லுங்கள்.

middleclassmadhavi said...

@ Chellappa Yagnasamy - தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - எனது புது வருட கொள்கைப்படி இன்னா செய்தாரை மன்னித்து விட்டு விடலாம் என்றிருக்கிறேன். :-)) ஆனால் அந்தப் பதிவில் எழுதியதைத் தேடி இங்கே கேட்டதுக்கு நன்றிகள் பல!! :-))அனுபவங்களை எழுதுகிறேன்.

நெல்லைத் தமிழன் said...

எனக்கு வெண்டைக்காயில் புளி விட்டுப் பண்ணினால் பிடிக்காது. என் ஹஸ்பண்ட அதில் புளிவிட்டு கூட்டு பண்ணுவா (நான் இருக்கும்போது பண்ணமாட்டா.). வெண்டைக்காயில் எனக்குப்பிடித்த பாசிப்பருப்பு கூட்டு என் வீட்டில் யாருக்கும் பிடிக்காது. இந்தச் செய்முறையை மனதில் வைத்துக்கொண்டேன்.

எனக்கு ரொம்பப்பிடித்த புளிமிளகாய், அதே வித்த்தில் செய்திருந்தீர்கள். எங்கம்மா மிளகாயை நீங்கள் எழுதியபடி கட் பண்ணிப்போடுவார். நான் நீளவாக்கில் கீறி விதையை எடுத்துட்டு லைட்டா உப்புல பிசறிட்டு தயார்செய்வேன். அதற்குப் பாராட்டுக்கள் (கந்தசாமி சார் இடுகை பின்னூட்டத்தில் பார்க்கத் தவறியிருந்தால் நான் செய்து அனுப்பியிருப்பேன்)

middleclassmadhavi said...

@ நெல்லைத் தமிழன் - முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! வெண்டைக்காய் புளி விட்ட கூட்டை புளிப் பச்சடின்னு எங்க வீட்ல சொல்வோம். கடைசியில் கொஞ்சம் வெல்லம் போட்டு இறக்கினால், சூப்பரா இருக்கும்!!
புளி மிளகாய் என் அம்மா செய்யும் போது ஒரு முறை வம்படியாக கூட பார்த்து கத்துக் கொண்டது. பாராட்டுக்கு நன்றி!!

சிவகுமாரன் said...

என் மனைவி கருவுற்றிருந்த போது, உதவி செய்வதாக நினைத்து வெண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு அவஸ்தைப்பட்ட அனுபவம்... இப்போதும் சொல்லில் சிரிப்பாள் என் மனைவி

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் வெண்டைக்காய்ப் புளி குத்தின கறி என்னும் தலைப்பைப் படிச்சதுமே எங்க பெரியம்மா நினைப்பு வந்து விட்டது. அவங்க தான் அடிக்கடி இந்தக் கறி பண்ணுவாங்க. தேங்காயும் சேர்ப்பாங்க. ஆனால் புளி ஜலத்தை வடிகட்டியதில்லை. கொஞ்சமாகப் புளி ஜலம் சேர்த்துக் கொண்டு வதக்கிப் பின் புளி ஜலம் சுண்டியது, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் பண்ணி இருப்பாங்க. நான் எப்போவுமே வெண்டைக்காய் வதக்கல் தான். சப்பாத்திக்குச் சில சமயம் குடைமிளகாய், தக்காளியோடு சேர்த்து வதக்குவேன்.

Thenammai Lakshmanan said...

புளிக்கறி செய்ததில்லை. ஆனால் மண்டி என்று அரிசி கழுவின நீர் விட்டு பச்சைமிளகாய், பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கி புளி ஊத்தி செய்வோம் :)

அப்பாதுரை said...

வெண்டை முக்கால் பதம் வெந்ததை எப்படிக் கண்டுபிடிப்பது?
செய்து பார்க்கிறேன். வெண்டைக்காய் எப்படிச் செய்தாலும் பிடிக்கும். பச்சைக் காயாகவே சாப்பிடுவேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹை எங்கள் வீட்டிலும் வெண்டைக்காயைப் புளி விட்டு இப்படியே செய்வதுண்டு....இது பிறந்த வீட்டில்...

மாமியார் வீட்டில் புளிக் கூட்டு செய்வார்கள். அதுவும் நன்றாக இருக்கும்...

கீதா

Thenammai Lakshmanan said...

இதற்குப்பின் போஸ்டே இல்லையே ஏனம்மா. பிஸியா.

middleclassmadhavi said...

என் அம்மாவின் உடல்நலமின்மை, அவரது எதிரிபாரா திடீர் மரணம் என்னைப் புரட்டிப் போட்டு விட்டது! அம்மா, இத்தனை வருடமாய் என் கூடவே இருந்தவர்.... 8 மாதங்களாயின அவர் போய்... மற்றும் குடும்ப சூழ்நிலை... இப்போது சற்றே தெளிந்திருக்கிறேன்... வருவேன்!!

நெல்லைத்தமிழன் said...

புது இடுகையும் காணோம். பதிவுகளிலும் தலைகாட்டவில்லை சமீபமாக...

middleclassmadhavi said...

@ நெல்லைத் தமிழன் - உங்கள் கமெண்ட் ஒரு இனிய ஆச்சரியம்!! அப்பப்போ தலைகாட்டும் மனக்குழப்பம் தான்! :)) வருகிறேன்!