Showing posts with label மாவீரன். Show all posts
Showing posts with label மாவீரன். Show all posts

Saturday, June 25, 2011

மாவீரன் - திரைப்பட விமர்சனம்



          
          ஒரு சரித்திர காலத் திரைப்படத்தை வெகு நாட்களுக்குப் பிறகு பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்துடன் படம் பார்க்கத் தயாரானேன். தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த படம் (தெலுங்கில் - மகதீரா); சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்த படம் என்ற கூடுதல் காரணங்களும் ஆர்வத்துக்கு காரணம்.

          ஆனாலும் கதை இவ்வளவு காமெடியாக இருக்கும் என நினைக்கவில்லை. காதில் முழம் முழமாகப் பூவைச் சுற்றப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தே படத்தைப் பார்க்கப் போனாலும், பூமாலைகள் நிறையக் கிடைத்தன!

         400 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறுநில மன்னனின் மகளுக்கும் வீரர் படைத்தலைவனான ராஜ பார்த்திபனுக்கும் இடையே நிறைவேறாத காதல், இக்காலத்தில் என்ன ஆகிறது, நிறைவேறியதா இல்லையா என்ற கதை. முற்காலத்தில் வந்த வில்லன் சேனாதிபதி, இக்காலத்தில் அரச வம்ச வாரிசாக வருகிறான்!! ஹீரோ, ஹீரோயின் கைவிரல்களை யதேச்சையாகத் தொட, அவனுக்கு முற்பிறப்பு ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. ஆனால் ஹீரோயினுக்கு கிளைமாக்ஸில் தான் முற்பிறப்பு ஞாபகம் வருகிறது!!! வில்லனுக்கு இடைவேளை சமயத்தில்!!! ஆனாலும், வில்லன் ஹீரோயினை மணம் முடிக்க எல்லா வில்லத்தனமும் வழக்கம் போலச் செய்கிறான் - ஹீரோயினை நெருங்கும் போது, (பழைய) காதலனின் ஆவி வந்து தடுப்பதாக உணர்கிறான் - அதான் அந்த காதலன் மறுபிறப்பு எடுத்துவிட்டானே, இது என்ன ஆவின்னு யாரையாவது கேட்கலாம்னு பார்த்தேன். அப்புறம் எல்லாரையும் போல நானும் மூளையைக் கழற்றி வைத்து விட்டேன்!

           முற்பிறப்புக் கதையின் ஷேர்கான் பாத்திரம் நல்ல படைப்பு. இப்பிறப்பில் அவன் ஒரு மீனவனாகப் பிறந்து அனுமாரின் வேலையைக் காமெடியுடன் செய்கிறான்.

           சண்டைக்காட்சிகள் நடக்கும் இடம் அழகாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்கிறது. பெரிய காலபைரவர் சிலை. மலைகள் மேல்பரப்பு சமதளமாக உள்ளது - இரண்டு மலைகளையும் இணைப்பது ஒரு பாதை. முற்பிறப்பு வீரன், தன்னந்தனியாளாக 100 பேரை வீழ்த்த சவாலை ஏற்கிறான். முக்காலேமூணுவாசி பேரை வீழ்த்திய பின், சோர்வுற்ற தருணத்தில் இரண்டு வீரர்கள் பாய்ந்து வருகின்றனர். உடனே நம் ஹீரோ, ஒரே ஈட்டியின் மூலம் இருவரையும் குத்திக் கொல்லும் காட்சி இருக்கிறதே... சொல்ல வார்த்தைகளே இல்லை!! என்னையறியாமல் நான் கைதட்டி, 'ஆஹா, விஜயகாந்தால் கூட முடியாத காரியம்' என்று வியந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் சிலர் சிரித்தனர், சிலர் முறைத்தனர்!!

          நான் ரசித்த இன்னொரு காட்சி, கிளைமாக்ஸில் இதே மலைத்தொடர் - இக்காலத்தில்.  இடையில் உள்ள மலைப்பாதை சண்டைக்கு நடுவில் துண்டாகி விடுகிறது.  ஹீரோ, ஹீரோயின், வில்லன் மட்டும் ஒரு பக்கம்!.  வில்லன் ஹீரோவை அடித்துப் போட்டுவிட்டு ஹீரோயினை தனக்கு துணைக்கு வந்த ஒரு ஹெலிகாப்டர் மூலம் கடத்தப் பார்க்கிறான். அப்போது நம் மீனவ நண்பன் தான் வந்த காரைப் பறக்க விட்டு, ஹெலிகாப்டரின் மேல் மோதி, வில்லனை வீழ்த்தி, ஹீரோ-ஹீரோயினைக் காப்பாற்றுகிறான். என்ன ஒரு டெக்னிக்!! என் வியப்பு இன்னும் அடங்கவேயில்லை!

          ஹீரோயினைப் பற்றிச் சொல்லவில்லையே என்பவர்களுக்காக - காஜல் அகர்வால் அழகான மெழுகு பொம்மையாக வந்து போகிறார். எப்போது தான் ஹீரோயின்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவார்களோ?!!

          கடைசியாக, இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதியதன் காரணம், உலகத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒளிபரப்பபடும்போது இத்திரைப்படத்தைக் காணத் தவறி விடாதீர்கள் என்று சொல்லத்தான்!!