நம்பிக்கை இந்தியர்கள்!
என் நண்பர் சொன்ன சம்பவம் இது. அவர் டூரிஸ்ட் பேருந்துகளும் வாகனங்களும் நிறைய நிற்கும் இடத்தின் அருகே தான் தினமும் நகரப் பேருந்துக்காகக் காத்திருப்பார். அப்போது 'வாடிக்கை'யாக அங்கே நிற்கும் வாகனங்களிடம் 'மாமூல்' வாங்கும் ஒரு போலீஸையும் கவனித்திருக்கிறார்.
அன்று மஹாராஷ்ட்ரா மாநில பேருந்து ஒன்றில் ஒரு போலீஸ்காரர் மாமூல் கேட்க, உள்ளிருந்து மூன்று, நான்கு பேர் இறங்கி வந்துள்ளனர். அவர்கள், 'அண்ணா ஹஸாரே ஜிந்தாபாத்!" என்று முழக்கமிட்டனராம்! பின்னர், ஹிந்தியில், 'ராம் லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார். நாடே அவருக்கு ஆதரவு தருகிறது! நீ லஞ்சமா கேட்கிறாய்?' என்று எகிற, லஞ்சம் கேட்டவர் எஸ்கேப்!
சகோதர உணர்வு எங்கே?
மேற்கண்ட சம்பவத்தில் சந்தோஷப்பட்ட சில நாளிலேயே, டில்லி ஹைகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து சக இந்தியரைச் சாகடித்த துயர சம்பவம் வருத்தப்பட வைத்தது.
ராஜீவ் கொலை வழக்கில் அண்மையில் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஒற்றுமையாக அனைவரும் எதிர்க்க முக்கிய காரணம், அது நியாயமா, இல்லையா என்பதை விட, இருபது வருடங்களாக அவர்கள் சிறையில் வாடி விட்டனர்; மனித உயிரை மனிதரே பறிக்கக் கூடாது என்பதினால் தானே!
சம்பந்தமே இல்லாத அப்பாவி மக்களை, அதுவும் நியாயத்திற்காக நீதிமன்றம் வருபவர்களை, அதிகம் மக்கள் நடமாடும் தினமாகப் பார்த்து, குண்டு வைத்து அவர்தம் உயிரினைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்? இப்படிப்பட்ட தீவிரவாதச் செயலகளுக்கு எதிரான விழிப்புணர்வு வருவது எப்போது? அதற்கும் யாராவது ஒரு முக்கியப் பிரமுகர் உண்ணாவிரதம் இருக்கக் கூடாதா?!
இன்று செப்டம்பர் 11ந் தேதி இந்தப் பதிவு - தீவிரவாதச் செயல்களத் தீர ஒழிக்க வகை செய்வோம்!
இன்று செப்டம்பர் 11ந் தேதி இந்தப் பதிவு - தீவிரவாதச் செயல்களத் தீர ஒழிக்க வகை செய்வோம்!
லீலைகள் புதிது!
குழந்தைகள் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே கடினம் தான். அதுவும் என் குழந்தைகள், "காக்கா ஏன் கறுப்பா இருக்கு?" என்று கேட்டு, "அது வெயிலில் அலைவதினால்" என்று பதில் சொன்னால் ஒத்துக் கொள்ளும் ஸ்டேஜைத் தாண்டி விட்டனர்! இருந்தாலும் வீட்டில் அடிக்கும் கூத்துகளால் தான் மற்ற வருத்தங்களைத் தாண்டி வாழ்க்கை இனிமையாகப் போகிறது.
என் இளைய மகன் சொன்னால் சொன்ன வேலையை மட்டும் சரியாகச் செய்வான். ஒரு விஷயத்தைக் கேட்டு வரச் சொன்னால், அதை மட்டும் கேட்டு வருவான்; கூடுதல் விவரங்கள் வராது!அவனை "நீ கம்ப்யூட்டர் மாதிரி!" என்று (வஞ்சப் புகழ்ச்சி அணியில்) சொல்வேன்!
இந்த வாக்கியத்தையே திருப்பி இன்னொரு நாள் சொன்னவுடன் இதை ஏன் சொல்கிறேன் எனக் கேட்டான்; 'கம்ப்யூட்டர் கொடுத்த கமாண்ட்ஸ் மட்டும் சரியாகச் செய்யும். ப்ரொகிராமில் இல்லாத கட்டளைகளைச் செய்யாது. நீ நான் சொன்ன வேலைகளை மட்டும் செய்கிறாய்!' என்று சொன்னேன். 'அப்போ தவறு ப்ரொகிராம் செய்தவர் மேல் தான்!' என்று சொல்லிவிட்டான்!
இன்னொரு நாள், நான் காலை நேர அவசரத்தில் வேலைகளைச் செய்து கொண்டே அவனிடம், 'கொஞ்சம் ந்யூஸ்பேப்பரில் ஹெட்லைன்ஸ் படிச்சுச் சொல்லு!' என்று கேட்டேன். அவனும் சில தகவல்களை படித்துச் சொன்னான். எட்டிப் பார்த்த போது நாளிதழின் மேல் பக்கம் உள்ளவற்றை மட்டும் சொல்லியிருந்தான் - 'ஏன் கீழே உள்ளதைச் சொல்லவில்லை?' என்று கேட்டதற்கு, 'ஹெட்டர்(Header) பக்கம் இருப்பவற்றைச் சொல்லிட்டேன்; நீ ஃபுட்லைன்ஸ் படிக்கச் சொல்லி எங்கிட்ட கேட்கலை, அதனால் நான் ஃபுட்டர்(footer) பக்கம் போகலை! நான் தான் கம்ப்யூட்டராச்சே!' என்றான்!! நான் என்ன சொல்ல?!!


