Showing posts with label ரிவர்ஸ் மார்ட்கேஜ். Show all posts
Showing posts with label ரிவர்ஸ் மார்ட்கேஜ். Show all posts

Sunday, November 13, 2011

ம்னாமடஅ!! (Reverse mortgage)

சமீபத்தில் ஒரு நாளிதழின் வரிகள் பற்றிய சந்தேகங்கள் கேட்கும் பகுதியில் ஒருவர் தாம் ஒரு சீனியர் சிட்டிசன் என்றும் பணத்தேவை காரணமாக, தாம் 20 வருடங்களாக வாழும் தம் சொந்த வீட்டை விற்றால், வருமான வரி கட்ட வேண்டுமா என்றும் கேட்டிருந்தார்.  பதிலளித்தவர் இதற்கு கேபிடல் கெயின்ஸ் என்ற வருமான வரி செலுத்த வேண்டி வரும் என்றும், அதற்குப் பதில் அவர் ரிவர்ஸ் மார்ட்கேஜ் செய்யலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

நம் அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே இது பற்றி சொல்லியிருந்தாலும் இதைக் குறித்த தகவல்கள் இன்னும் நிறைய பேரைச் சென்றடையவில்லை. 

முதலில் மார்ட்கேஜ் - அடமானம் என்றால் என்ன?  நம்மில் பலர், கடன் வாங்கி வீட்டைக் கட்டியிருப்போம்/வாங்கியிருப்போம்; இல்லை, அதற்கான முயற்சியிலாவது இருப்போம்!! அப்படி வீட்டுக்காக கடன் வாங்கும் போது, கடன் கொடுக்கும் நிறுவனமோ, வங்கியோ, தம்மிடம் அடமானமாக அந்த வீட்டையோ அல்லது மனையினையோ வைத்துக் கொள்கிறார்கள்.  நாம் வட்டியும் முதலுமாக(!) திரும்பச் செலுத்துகிறோம்.

நகை அடமானம் எல்லாம் மணப்புரத்திலிருந்து கோவாபரேடிவ் பாங்க் வரை தரும் விளம்பரங்களினால் மற்றும் விளம்பரப் பலகைகளினால் தெரியும்.  இந்த மார்ட்கேஜ்களில் பல வகை இருக்கின்றன.

இம்மாதிரி அடமானம் வைக்கும் போது,   சொத்தின் மீதான நம் உரிமை, கடனை அடைக்க அடைக்க, படிப்படியாக அதிகமாகும்.  கடனை முழுமையாக அடைக்கும் போதுதான் சொத்தின் மீதான உரிமை நமக்கு முழுமையாகத் திரும்ப வரும்.  

ரிவர்ஸ் மார்ட்கேஜ் என்பது 60 வயது அதிகமானோருக்காக இந்தியாவிலும் நம் அரசு கொண்டு வந்திருக்கும் ஒரு திட்டம்.  60 வயதுக்கு மேற்பட்டோர், அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டை வங்கிகளில் ரிவர்ஸ் மார்ட்கேஜில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.  இம்முறையில், ஏற்கெனவே சொந்தமான சொத்தை அடமானம் வைத்து, பணத்தைப் பெறுகிறோம்.  அதான் ம்னாமடஅ!! (Reverse mortgage)

கணவர், மனைவி இருவர் பெயரிலும் வீடு இருந்தால், கணவர் 60 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும்; மனைவி வயது 58க்கு மேலிருந்தால போதும்.  அவர்கள் சேர்ந்து ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் முக்கிய பயன் என்னவென்றால், பணத்தேவைக்காக தாம் குடியிருக்கும் சொந்த வீட்டை விற்க வேண்டாம். வீட்டைக் காலி செய்யவும் வேண்டாம். விதிமுறைகட்கு உட்பட்டு, தேவையான பணத்தை ஒரே முறையாகவோ, இன்ஸ்டால்மென்ட்களிலோ தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.  இந்தக் கடனை வாங்கியவர், வேண்ட் கடனை அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.  இல்லாவிடில், அதே வீட்டிலேயே தம் காலம் முடியும் வரை வாழலாம்.  ஒரு வேளை அவர் கடனை அடைக்காமல் இறந்து விட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகள் (legal heirs) கடனை வட்டியுடன் அடைத்து வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.  இல்லாவிடில், வீட்டை விற்றும் கடனை அடைக்கலாம்.  கடன் போக மிகுதி வாரிசுகளுக்குப் போகும்.  கடன் கொடுக்கும் போதே, வீட்டின் மதிப்பை வைத்துத் தான் கடன் கொடுப்பார்கள் என்பதால், நிச்சயமாக கடன் வீட்டு மதிப்பைத் தாண்டாது!! 
வருமான வரிச் சட்டத்தில் ரிவர்ஸ் மார்ட்கேஜுக்கு வரி விலக்கு உள்ளதாம் - இம்முறையில் வீட்டை வைத்து வாங்கும் பணத்துக்கு வரி கிடையாது. காபிடல் கெயின்ஸும் வராது.

ஆகவே, சொந்த வீடிருந்தும் ஆதரவில்லா முதியவர்களிடம் இந்தத் திட்டம் பற்றிச் சொல்லுங்கள்.  பல வங்கிகளில் இந்தச் சேவை இருக்கிறது. அருகாமையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகினால் நல்லது.  உதாரணத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் இந்தச் சுட்டியைப் பாருங்கள்.

இந்தக் கட்டுரையின் நீதி என்னவென்றால், இது வரை இல்லாவிட்டால், உங்களுக்கென்று கட்டாயமாக சொந்தமாய் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளுங்கள்/ வாங்கிக் கொள்ளுங்கள்!

டிஸ்கி: மேலும் இத்திட்டத்தைப் பற்றிச் சொல்ல, வங்கிகளிலும் வருமான வரி சம்பந்தப்பட்ட துறையிலும் இருக்கும் பதிவர்களை அழைக்கிறேன்!