Showing posts with label பெயர்க் காரணம். Show all posts
Showing posts with label பெயர்க் காரணம். Show all posts

Tuesday, March 8, 2011

மிடில் கிளாஸ் மாதவி - ஏன்?

முன்னுரை: பெயர்க் காரணத்தை விளக்கித் தொடர் பதிவு போட கோபி ராமமூர்த்தி அழைத்தமையால், இந்த விளக்கக் கட்டுரை.

பொருள் விளக்கம்:
பெற்றோர்:  என் சொந்தப் பெயர் மாதவி இல்லை.  வலைப்பூவிற்கான பெயர் தான் மிடில் கிளாஸ் மாதவி.  அதனால், மிடில் கிளாஸ் மாதவி பெயரைப் பெற்றவர்(!) என்றால் அவர் நான் தான்!

பிறப்பு: என் நலன் விரும்பி ஒருவரிடம் ஒருநாள் பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, எழுத்தாளராக விரும்பிய என் நிறைவேறாத ஆசையைப் பற்றிச் சொன்னேன்.  அவர்தான் என்னிடம் Blog-களைப் பற்றிச் சொல்லி, என்னையும் ஒரு வலைப்பூவைத் தொடங்கச் சொல்லி, எழுதிப் பார்க்கச் சொன்னார்.  அவர் கொடுத்த (அசட்டு) தைரியத்தில் ப்ளாக்கராகலாம் என்று முடிவு செய்தேன்.  இந்த வலைப்பூவைத் தொடங்கினேன்.  (என் நலன் விரும்பி யாரென்று (உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லையாயினும்) அவர் நலன் கருதி நான் சொல்லப் போவதில்லை!!)

பெயர் சூட்டு விழா: என்ன பெயர் வைக்கலாம் என்று ஒரே குழப்பம்.  என் சொந்தப் பெயரைச் சொல்ல முடியாத சூழ்நிலை! (நல்ல வேளை! சொந்தப் பெயருக்குப் பின்னால் இன்னும் பெரிய சோகக் கதை இருக்கிறது!).  என் பெயரே எனக்கு் ஒரு அறிமுகமாக இருக்க வேண்டும் என எண்ணினேன்.
     எனக்குத் தமிழில் புலமையில்லை; கடின வார்த்தைப் பதங்களையெல்லாம் பிரயோகிக்கத் தெரியாது. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை- நான் நினைப்பதும் செய்வதும் சரியே எனும் ஹை கிளாஸ் மென்டாலிட்டியும் கிடையாது.  மோப்பக் குழையும் அனிச்சத்திலும் மென்மையாய் - சொல் பொறுக்காத, இடம், பொருள், ஏவலுக்குப் பயந்த - மிடில் கிளாஸ் மென்டாலிட்டி கொண்ட சாதாரணப் பெண்மணி.
     உலகில் அதிகப்பட்சமான ஜனங்கள் மிடில் கிளாஸ் தான்.  இந்த வர்க்கத்தில் உள்ள ஒரு சாதாரணமான பெண்மணி எனப் பொருள் கொள்ளும் வகையில் - 'மிடில் கிளாஸ் மாதவன்' படப் பெயரிலிருந்து 'மிடில் கிளாஸ் மாதவி' பெயரைப் பிடித்தேன்!. 

மிடில் கிளாஸ் மாதவி - இதில் மிடில் என்றால் நடு; கிளாஸ் என்றால் வகுப்பு என்று பதங்களைப் பிரித்துப் பார்க்காமல், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்றே கொள்ளல் வேண்டும்!!.  என் சொந்தப் பெயர் மாதவி இல்லையே,  நான் ரொம்பத் தவம் பண்ணியிருக்கேனா- 'மா'தவியா, இல்லை யாரையாவது ரொம்பத் தவிக்க விட்டேனான்னு கேட்கக் கூடாது! மேலே சொன்ன மாதிரி அது திரைப்படப் பெயரிலிருந்து எடுத்த பெயர்தான்!  ப்ளாகை மே 2010 இறுதியில் தொடங்கினாலும் எழுதும் தைரியம் வரவில்லை. வணக்கம் என்று மட்டும் போட்டு அழகு பார்த்தேன்!!

சவாலே சமாளிபரிசல்காரன் நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ளச் சொல்லி என் நலன் விரும்பி என்னைக் கட்டாயப் படுத்தினார்.  டெட்லைன் அக்டோபர் 15ந்தேதி 12 மணிக்கு என்றால் அதற்குச் சிறிது முன்னே 11.16க்கு என்னுடைய மின்னஞ்சல் மூலமாகவே ஒரு 'சிறு'கதையை போட்டிக்கு அனுப்பினேன்.  பெயர் வைக்க வேண்டுமென்று கூடத் தெரியவில்லை, பரிசல்தான் நினைவுபடுத்தி, பெயர் வைக்கச் சொன்னார்!  இதையே பின்னர் என் முதல் பதிவாக வலைப்பூவில் வெளியிட்டேன், நிறைய பிழைகளோடு!.  இதன் பின்னர் நடப்பது வரலாறு(?)!!
முடிவுரை: ஏற்கெனவே சில பின்னூட்டங்களில் மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன், கே.ஆர்.விஜயன், அப்பாவி தங்கமணி இவர்களோடு என் பெயரைப் பற்றி அளவளாவியுள்ளேன்!.   middleclassmadhavi என்று பெயரை ஆங்கிலத்திலேயே பதிவிட்ட என்னை, தமிழில் பெயர் மாற்றச் சொல்லி Philosophy Prabhakaran சொன்னதால் தமிழுக்கு மாறி விட்டேன்.   நான் பதிவிடும் விஷயங்களில் மட்டும் லோ கிளாஸ் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்!.:-))

நீதி: What is in a name?!

டிஸ்கி: 1.மகளிர் தின வாழ்த்துக்கள்.  ஆனாலும் இன்று ஸ்கூட்டி விளம்பரத்தில் வந்த வாசகம் தான் எனக்கு ரொம்பப் பிடித்தது - Why womens' day when we rule 24*7*365? !! :-)))

2.தொடர்பதிவுக்குப் பலரையும் திரு கோபி அழைத்து விட்டார்.  விடுபட்ட, விருப்பமுள்ள அனைவரும், தொடரலாம்!!