நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அபிமானியும் இல்லை. அரசியலில் அவ்வளவு ஆர்வமும் இல்லை. ஆனாலும் என் மனதில் சோகத்தைக் கவிய வைத்தது இந்த மரணம்!!
புரட்சித் தலைவி என்ற பெயரை முதன்முதலில் கேட்ட போது என்ன புரட்சி செய்து விட்டு இந்தப் பட்டம் என்றே நினைத்தேன். புரட்சித் தலைவர் பட்டத்துக்குச் சமமாகக் கொடுக்கப்பட்டதே எனவும் நினைத்தேன். ஆனாலும் இந்தப் பட்டத்துக்கு தகுதியானவர் என்று தன் பல்வேறு தைரியமான விரைவான முடிவுகளாலும், அணுகுமுறையாலும், நீரூபித்திருக்கிறார். இனி ஒரு தலைவி இப்படி இருப்பாரா என்று சந்தேகம் தான்!
கட்சி பாகுபாடின்றி அனைவராலும் அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டப்பட்டவர். அரசியல் எல்லைகளைத் தாண்டி இன்று அனைவரும் இரங்கல் தெரிவிக்கும் போது மிக நெகிழ்வாக உணர்கிறேன் - அந்த வார்த்தைகளின் பின்புலத்தை ஆராய வேண்டாத அளவு! வரலாற்றில் சுவடு பதித்த ஒரு நபர் மறைந்தார்.
குறைகளாகத் தெரிந்த பலதும் இப்போது சொல்வது சரியாய் இராது. இருந்தாலும், .. பதவியில் இருந்த போது அவர் காலில் மற்றவர் விழுந்ததும் கூனிக் குறுகி வணங்கியதும் தம் அரசாங்கம் செய்தது என்பதற்கு பதில் 'நான் செய்தேன்' என்றதும் அபசுரமாய்ப் பட்டது. ஆனாலும் இத்தனை பேரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவருக்கு இந்தக் கவசம் தேவைப்பட்டிருக்கலாம்.
இரும்பு மனிதராக இருந்து கடைசியில் எமனுடன் போராடி மீண்டும் வந்து திரும்பவும் சென்றார்!! நாட்டின் முதல் குடிமகன் முதல் அனைவரையும் தமக்கு மரியாதை செய்ய வைத்த சரித்திர நாயகிக்கு ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் பெண்மணியின் வணக்கம். அஞ்சலி.
