Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Tuesday, October 25, 2011

தீபாவளி - சிறப்புப் பேட்டி!!

அந்தக் காலத்தில் என் அப்பா ஒவ்வொரு தீபாவளிக்கு முதல் நாளும், 'விடிந்தால் தீபாவளி, பௌர்ணமி நிலவு ஒளி வீசிக் கொண்டிருந்தது' என்று கடி ஜோக் அடித்துக் கொண்டிருப்பார்!   இப்படி எழுதிக் கொண்டிருந்த போது, சக பதிவர்களின் அன்றைய தீபாவளி - இன்றைய தீபாவளிப் பதிவுகள் பலவற்றைக் கண்டேன்.  சரி, தொலைக்காட்சி பாணியில் சிறப்புப் பேட்டி எடுக்கலாம் என்று கிளம்பி விட்டேன்!  கேள்விகளை எழுதித் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

அந்த முக்கியமான மனிதரிடம் பேட்டி வேண்டும் என்று கேட்டவுடன் ரொம்பவும் தான் அலட்டிக் கொண்டார்!  மிகவும் கெஞ்சிக் கேட்ட பின் ஐந்து நிமிட பேட்டிக்கு ஒத்துக் கொண்டார்!  இனி மினி பேட்டி:

கேள்வி 1: பேட்டியை ஆரம்பிக்கலாமா? உங்களைப் பற்றி...
பதில்:   'லோக க்ஷேமம் வஹாம்யகம்'!!  எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ இறைவன் அருளட்டும்!  

கேள்வி 2: தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
பதில்:    இப்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களில் விதவிதமான பட்டாசுகள் வந்து விட்டன.  வாண வேடிக்கைகளை, வானத்தில் பார்த்து மகிழ நன்றாகத் தான் இருக்கிறது.  தொலைக்காட்சி பார்ப்பதும் வெடிகளின் சத்தத்தில் கடினம் தான்; அதனால், புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து,   சுற்றம், சொந்தத்தோடு, இனிப்புகள் பரிமாறி, பண்டிகையைக் கொண்டாடுவோம்!!      

கேள்வி 3: ம்,... உங்கள் முதல் தீபாவளி நினைவுகளைச் சொல்லுங்கள்
பதில்:   தீபாவளி என்றால் குடும்பத் தலைவனுக்கு செலவுகள் தான் ஞாபகம் வரும்! குழந்தைகளுக்கு பட்டாசும் புத்தாடையும் ஞாபகம் வரும்!  

கேள்வி 4:  தலைதீபாவளி..?
பதில்:  எங்கள் குடும்பத்தில் அப்போது 8 குழந்தைகள்.  அப்பா ஐம்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கி, எல்லாருக்கும் பங்கு பிரிச்சுத் தருவார்! ஒரு சர வெடி, ஒரே ஒரு கலசம், சக்கரம், ஒத்தை வெடி பாக்கெட் என்று என் பங்குக்கு வருவதை சந்தோஷமாக வெடிப்பேன்.  எல்லாருடனும் சேர்ந்து வெடிகளை வெடித்து, ஜாலியாகப் பொழுது போகும். 

கேள்வி 5: இப்போதைய தீபாவளி.?
பதில்:  தலை தீபாவளியை மறக்க முடியுமா?  ஆமாம், அந்த தீபாவளிக்கு என் மனைவி பணியின் காரணமாக வெளியூரில் இருந்ததால், அந்த ஒரு நாள் மட்டும் வந்து போனாள்; சொந்தக்காரர்கள் அவளுக்கு முன்பே வந்திருந்தனர்!! 
 
கேள்வி 6: மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: வணக்கம்.  என்னைப் பற்றித் தெரியாதா என்ன? நான் என்ன பெரிய ஆளுன்னு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்?


பேட்டி கொடுத்த முக்கிய நபர் என் கணவர்!  பதில் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று என் மேல் பரிதாபப்படும்முன் (!!)   என் கேள்விக் குறிப்புகளின் கீழே, பதில்களை நான் தான் மாற்றி எழுதி விட்டேன்!!  முதல் மற்றும் கடைசிக் கேள்விகளின் விடைகள் அப்படியே மாறி விட்டன. இரண்டாம் கேள்விக்கான பதில்   மூன்றில்,  மூன்றாம்   கேள்விக்கான பதில்   நான்கில்,   நான்காம் கேள்விக்கான பதில   ஐந்தில் , ஐந்தாம் கேள்விக்கான பதில்    இரண்டில் !!


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! முடிந்த வரை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தீபாவளியைக் கொண்டாடுவோம்!.  ராக்கெட் போன்ற வெடிகளை அதற்கான  உரிய இடத்தில் தகுந்த பாதுகாப்போடு வெடிப்போம்!   கீழே இருக்கும் வாணத்தை மட்டும் இங்கேயே விடலாம்!! :-))

Saturday, November 6, 2010

ரஜினிகாந்தின் 'தீபாவளி'?

சபாஷ்! சரியான போட்டி! சன் டிவியில் எந்திரன் உருவான கதை, கலைஞர் டிவியில் சிவாஜி.  என் பிள்ளைகள் எதைப் பார்க்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது, இரண்டில் எது முதலில் ஆரம்பிக்கிறதோ, அதை என்றும், 'மிகப் பெரிய' விளம்பர இடைவேளையில் மற்றது என்றும் உத்தரவாதம் அளித்தோம், நானும் என் கணவரும்.

எந்திரன் உருவான கதை பார்க்க முக்கிய காரணம் தொழில்நுட்பம் எப்படி உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள - உண்மையான hero or heroes யார் என என் மகன்கள் புரிந்து கொள்ள.  கடைசியில் சன் டிவி தான் பார்த்தோம். 6.45 மணியளவில் என் மக்கள் rocketஐ மொட்டை மாடியில் விடும் அழகைப் பார்க்க மாடிக்குச் சென்றோம்.  பிறகு மொட்டை மாடியிலிருந்து அனைவர் வீட்டிலும் விட்ட fancy பட்டாசுகளின் அணிவகுப்பைப்  பார்த்தோம்.

கீழே வர மனமே இல்லை.  மிக அழகாக இருந்தது வானம்.  பெரிய மகன் தான் கீழே போய் fancy பட்டாசுகளைக் கொளுத்துவதாகவும், எங்களை மேலிருந்து பார்த்து ரசிக்கும் படி சொல்லி, மேலும் எங்களுக்கு திகிலுடன் கூடிய thrillஐக் கொடுத்தான்.

ரஜினிகாந்தின் 'தீபாவளி'யாக மாற இருந்த மாலைப் பொழுதை செலவே இல்லாமல் வாண வேடிக்கையுடன் ஆனந்தமாகக்  கழிக்க வைத்த என் மக்களுக்கும், அக்கம்பக்கத்து 'மக்களு'க்கும் நன்றி.