சுண்டைக்காய் மேட்டரு.... சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம் - இப்படி நம் அன்றாட வாழ்வில் பேச்சில் உபயோகப்படுத்தும் சுண்டைக்காயைச் சமையலில் உபயோகிக்கலாமா?
'அதான், எனக்குத் தெரியுமே! சுண்டைக்காய் விஷயம்!! - சுண்டை வத்தல், வத்தல் குழம்பு..', என்றெல்லாம் சொல்பவரா நீங்கள்? என் அம்மா செய்யும் சுண்டை வதக்கல் இதோ!
தேவையான பொருட்கள்:
நாட்டுச் சுண்டைக்காய் - 1/4 கிலோ (காம்புகளை நீக்கிக் கொள்ளவும்)
தாளிக்க - எண்ணை (வேண்டுமளவு)
கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு
வறுத்துப் பொடி செய்து கொள்வதற்கு:
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வத்தல் மிளகாய் - 4/5 தேவைக்கேற்ப
தனியா - 2 டீஸ்பூன்
எள்ளு- சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
அப்புறம் அடுப்பு, பாத்திரங்கள், கரண்டி, லைட்டர்/தீப்பெட்டி, மிக்சி எட்செட்ரா
சுண்டைக்காய்களை நாலாகவோ அல்லது இளசாக இருந்தால் இரண்டாகவோ நறுக்கிக் கொள்ளவும். இந்த சமையலில் கஷ்டமான விஷயம் இது தான். நறுக்கும் போது விரலை வெட்டிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் சாமர்த்தியம். விரல்கள் விதைகள் ஒட்டி, சாறு ஒட்டி - கொஞ்சம் கஷ்டம் தான்!! :-)) சுண்டைக்காய் நறுக்கும் போது ரொம்ப சுலபமாக நறுக்க வந்தால் - அது அழுகி விட்டது; நறுக்கும் போதே கறுப்பாய் இருந்தால் - அது கெட்டுப் போய் விட்டது; இத்தகையவற்றைத் தூக்கிப் போட்டு விடவும்
சுண்டைக்காய் நறுக்கியவுடன் மிக விரைவில் பிரவுனாகி விடும். நோ ப்ராப்ளம்! கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அலம்பிக் கொள்ளவும். விதைகள் நீரில் தங்கும் - கொட்டி விடலாம்!!
ஏற்றிய அடுப்பில் வெறும் வாணலியைப் போட்டு, கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், எள்ளு இவற்றை வறுத்து, ஆறியபின் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். பின்னர், வாணலியை திரும்பவும் ஏற்றிய அடுப்பில் வைத்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள சுண்டைக்காயைப் போட்டு வதக்க ஆரம்பிக்கவும். பாதி வதங்கிய பின்னர், வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து, வதக்கவும். நடுவில் மூடி போட்டு வைத்தால், சீக்கிரம் வதங்கும். இந்த ஸ்டேஜில் கமகமவென்று வாசனை பரவும்!! குட்டீஸ் வந்து எப்போது சாப்பிட வரலாம் என்று கேட்பார்கள்!! (எங்கள் வீட்டு நடப்பை வைத்துச் சொன்னேன்!) நன்றாக சுருள வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விடவும். சுண்டை வதக்கல் ரெடி! இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட சுவையோ சுவை! தேவைப்பட்டால், நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளலாம். தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், இரண்டு நாட்கள் உபயோகிக்கலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், இரண்டு நாட்கள் உபயோகிக்கலாம்.
நாட்டுச் சுண்டைக்காய் என்று எழுதியிருக்கிறேனே, என்ன என்று கேட்பவர்களுக்கு - சுண்டையில் நாட்டுச் சுண்டைக்காய், மலைச் சுண்டைக்காய் என்று இரு வகை உள்ளது. வீடுகளில், தோட்டங்களில் வளர்வது நாட்டுச் சுண்டை. மலையில் வளர்வது - யெஸ்! கரெக்ட்!! மலைச் சுண்டைக்காயில் வற்றல் போடுகிறோம்.
சுண்டைக்காய் கசக்கும் - இதில் என்ன பலன் என்று கேட்பவர்களுக்கு - சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்; வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். மெலும், அஜீரணக் கோளாறுகளை நீங்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.
முக்கியக் குறிப்பு: செய்து பார்த்து நல்லா இருந்தா, பாராட்டுகள் என் அம்மாவுக்கு! அவர் சொல்லிக் கொடுத்த ரெசிபி தான் இது. நல்லா வரவில்லையென்றால், நான் தான் சொல்வதில் எங்கோ தப்பு செய்திருக்கிறேன். :-)). தாங்க்ஸ் அம்மா!
முக்கிய முக்கிய குறிப்பு: முன்னேயே சொல்ல விட்டுட்டேன் பாருங்க! சுண்டைக்காயின் இயல்பு கசப்பு. ஆனால், இந்த முறையில் செய்து சாப்பிட்டால், அவ்வளவு கசப்பு இருப்பதில்லை பாகற்காய் சாப்பிடாத என் மூத்த மகனும் இந்த சுண்டை வதக்கலை விரும்பிச் சாப்பிடுவான்.
முக்கிய முக்கிய குறிப்பு: முன்னேயே சொல்ல விட்டுட்டேன் பாருங்க! சுண்டைக்காயின் இயல்பு கசப்பு. ஆனால், இந்த முறையில் செய்து சாப்பிட்டால், அவ்வளவு கசப்பு இருப்பதில்லை பாகற்காய் சாப்பிடாத என் மூத்த மகனும் இந்த சுண்டை வதக்கலை விரும்பிச் சாப்பிடுவான்.